ஒரு தலைமுறைக்கான பிரியாவிடை

kizhavi-painting-number-01

“ஒரு முதியவர் இறந்து போவதென்பது, ஒரு நூலகம் முழுவதுமாய் எரிந்து போவதற்கு சமானம்” – ஆபிரிக்க பழமொழி

ஒன்று

அந்த புகைப்படக் கலைஞரின் இணைய அல்பத்தில் இருந்தது ஒரு வீட்டின் நிழற்படம்; அது அவரது பாட்டன், பாட்டி வாழ்ந்த வீடு. 103 வயது வரை அவரது பாட்டன் அங்கு வாழ்ந்தாராம் என்கிற குறிப்புடன் அது இருந்தது. நான் அந்த வீட்டைப் பார்த்துக் கொண்டிருந்தேன், நீண்ட நேரம். அவரது மரணத்துக்குப் பிறகு அங்கு யாரும் போவதில்லை. அதற்குப் பிறகு அது தொலைதூரக் கிராமத்து வீடு; வருடாவருட நீத்தார் கடமைகள் செய்ய உறவினர் கூடுகிற இடம்.

எனது மனம் 103 வருடங்களை பின்தொடர்ந்தது. எனை ஒத்த வயதினரான அந்த நண்பருக்கு நினைவறிந்த ஒரு 25 வருடங்களின் முன்பிலிருந்து பாட்டனின் வாழ்வு தெரியும். நண்பரின் பெற்றோருக்கு அதற்கு முந்தைய ஓர் 25 வருடங்கள் வரை அவரது வாழ்வு தெரிந்திருக்கும். அதற்கு முந்தைய, அதற்கும் முந்தைய 50 வருடங்களை யாரறிந்திருப்பார்?

அவர்களது வாழ்க்கைக் காலமான இந்த ஒரு நூற்றாண்டுக்குள் அவர்களது மொழியில் வழக்கிலிருந்த எத்தனை சொற்கள் காணாமற் போயிருக்கும்? அதில் எத்தனை ஆங்கிலக் கலப்புகள்? எத்தனை பிற மொழிக் கலப்புகள்? தம் பால்யத்தில் அவர் நாவுகள் உச்சரித்துத் திரிந்த எத்தனை சொற்களை இறுதியில் அவர்களுமே மறந்திருப்பார்கள்?
(அவை குறித்த விமர்சனங்களுக்கு அப்பால்) வழக்கிழக்க வழக்கிழக்க அழிகின்ற சம்பிரதாயங்கள் போல அவர்களது வாழ்வு எத்தனையை இழந்திருக்கும்?

எனது சிந்தனை நான் காணாத அவர்களது வாழ்வில் அறியாத வரலாற்றில் திகைத்து நின்றது. எந்தப் புத்தகத்திற் போய்த் தேடுவது அவர்களது வாழ்க்கைக் கதையை? அவர்களது இளம் முகத்தை? சிறுவத்தை, குமரிமையை?

இரண்டு

நிசாந்த் றட்னாகர் பெங்களூரைச் சேர்ந்த புகைப்படக்கலைஞர். அவரது தாத்தாவின் அந்த 103 வருட வாழ்வின் சீரும் சிறப்பும் அவ் வரலாற்றில் புதிய தலைமுறைக்கு நிச்சயமாய் இருக்கக் கூடிய (இருக்க வேண்டிய) சமத்துவமின்மைகள் குறித்த கேள்விகளும் விமர்சனங்களும் பதியப்படாமல் அவருடனே போகப் போகின்றன; அவர் வாழ்ந்த வீடோ உதடுகளற்ற சாட்சியாக நிற்கிறது.

அதைப் பார்த்துக் கொண்டிருக்கிற என் கண் முன், எனது பாட்டர்களின் மரணம் நிகழ்ந்த விதங்கள் நினைவாடுகிறது. கொடும் இடப்பெயர்வில், குண்டுவீச்சில், அகாலத்தில் அவர்களுடன் அவர்களது வீடுகளும் வாழ்வின் உயிர்ப்பை  இழந்து நிர்மூலமாகின. கைவிட்டுச் சென்றவையும் கூரைகளற்றுப் போக, காணிக்குள் இன்று பற்றைகள் வளர்ந்து நிற்கின்றன. யன்னல்களும் கதவுகளும் களவாடப்பட்ட – வாழ்வின் தடங்கள் அழிக்கப்பட்ட –  வீடுகள். பிள்ளைகள் வெளியேறிய நிலங்களில் அவருக்காய்க் காத்திருந்த முதிய பெற்றோர் ஒவ்வொருவராய் தம் ஆயுளை முடித்துக் கொண்டிருக்கிறார்கள்; முடித்துக் கொண்டும் விட்டார்கள்.

நிசாந்துக்கு தனது பாட்டர்கள் வாழ்ந்த வீடு என்கிற ‘நினைவைத்’ தர ஒரு வீடு இருக்கிறது. சிலவேளை புகைப்படங்கள் இருக்கலாம் (அவை எரிந்தும் அழிந்தும் போவதற்கான போர்ப் புலமும் இல்லை). சிலவேளை ‘அவரது சினிமா’வில் அவரது பாட்டனை ஒத்த ஒரு கதாபாத்திரம் பேசிக்கொண்டிருந்த ‘பதிவு’ம் இருக்கக் கூடும்.

(முதிய தலைமுறை மட்டுமன்றி, போரினுள்ளும் அதன் இடப்பெயர்வுகள் இதர அழிவுகளுக்குள்ளும் வாழ்ந்த குடும்பங்கள் – உயிரைக் காப்பாற்ற ஓடிய அலைவில் இன்ன பிறவற்றுடன் அந்தந்தக் காலத்தைய தம் குடும்ப வரலாறுகளைக் கொண்டிருந்த புகைப்படங்களை  இழந்தன என்பது இன்னொரு புறமிருக்க,) ஈழத்தைச் சேர்ந்த முதிய தலைமுறை குறித்து எம்மிடம் என்ன இருக்கிறது? எமது முதியவர்களது வாழ்க்கைப் பதிவுகள், வாய்மொழி வரலாறு, அவர்களுடன் சம்பந்தப்பட்ட சிலருடன் தானே தங்கி பின்னர் அவர்களதும் அழிவுடன் அழியப் போகின்றன?

இந்தக் கேள்வியுடனே,  இந்த மேற்கோளை இங்கு எழுத விரும்பகிறேன். “ஒரு முதியவர் இறந்து போவதென்பது ஒரு நூலகமே எரிந்து மண்ணோடு மண்ணாவது போன்றதாகும்” – ஆம் அவர்கள் தம்வரலாற்றை தம்முடன் எடுத்துப் போகிறார்கள். தம் அனுபவங்களது பெருங்கதைகளைத் தம்முடன் எடுத்துப் போகிறார்கள். அதிலிருந்து நாம் கற்கவேண்டிய எமக்கான பாடங்களை எடுத்துச் செல்கிறார்கள்.  சாகசங்களும் துயரங்களும் நீச்சலடித்து வென்ற வாழ்க்கைச் சாதனைகளும் போராடி வென்ற உரிமைகளும்….. இங்கே அவர்களை புகழாரங்களால் நிரப்பி ‘(அவர்களுடைது) அது ஒரு உன்னத காலம்!’ என நிறுவுவது அல்ல நோக்கம்.
அவர்களது காலம் அனுஸ்டித்த இழிவு மிகுந்த சாதீயமனநிலைகளும் (இன்று வரைத் தொடரும் அதன்), ஆதிக்க, ஆணிய, நிலபுரபுத்துவ மனநிலைகளும் நிச்சயம் விமர்சனத்துக்குரியதும் ஏற்கவியலாததும் எதிர்ப்புக்குரியதும் தான். ஆனால்:
எமது பாட்டர்கள் என இங்கு குறிப்பீடுவது ஒரு குறிப்பிட்ட ஜாதிப் பிரிப்பை அல்ல.  நிலமற்ற எமது பாட்டர்கள், அவர்களை சுரண்டிய எமது பாட்டர்கள், இருவர்க்கத்தாலும் சுரண்டப்பட்ட பெண்கள். இவர்கள் எல்லோருடைய பக்கங்களும் கதைகளும் அதன் வரலாறும் தான் அவர்களுடைய மரணத்துடன் அழிந்து போகிறது. சுரண்டப்பட்ட, ஒடுக்கப்பட்ட, அதற்கெதிராய் போராடி வாழ்ந்தவர்களது கதைகள்; ஒடுக்கிய, சுரண்டிய இழிவுகளுடனும், மனிதர்களே ஆனவர்களது வரலாறுகள்.

மூன்று

“ஆகாஷ குஸீம்” என்கிற தனது திரைப்படத்தினது திரைக்கதையின் தமிழாக்கமான “ஆகாயப் பூக்கள்” நூல் முன்னுரையில் பிரசன்ன விதானகே சொல்கிறார்:
“63ஆவது வயதில் அடியெடுத்து வைத்துள்ள நமது நாட்டின் திரைப்படத் துறையை நாம் இலங்கைத் திரைப்படத்துறை என அழைத்த போதிலும் அது ஆரம்பம் தொட்டே சிங்களத் திரைப்படத் துறையாகவே இருந்து வந்துள்ளது.  கடந்த காலத்தில் மொத்தம் 1040 சிங்களத் திரைப்படங்களை நாம் உருவாக்கியிருந்த போதிலும் மொழி மாற்றம் செய்யப்பட்ட திரைப்படங்கள் உள்ளடங்கலாக இந் நாட்டில் 40 தமிழ்த் திரைப்படங்கள் மாத்திரமே இதுவரை உருவாகியுள்ளன. நாட்டின் மொத்த சனத்தொகையில் 19 வீதமானோர் தமிழ் பேசும் மக்களாக இருக்கின்ற நிலையில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பில் இவ் எண்ணிக்கையானது எந்த வகையிலும் போதுமானதல்ல என்பதை அடித்துக் கூற வேண்டியதில்லை.”

பிரசன்ன கூறுவது போல: இதுவரை வெளியிடப்பட்ட 1000 சிங்களத் திரைப்படங்களில் நிச்சயம் சிங்கள முதியவர்கள், அவர்களது வாழ்க்கை, பேச்சு முறைமை என (ஒரு வர்க்கத்தைப் பிரதிபலிப்பதாய் இருப்பினும்) இருப்பார்கள். அவர்களது ஒரு தலைமுறை பதியப்பட்டிருக்கும்.

இதுவரை எமக்கான சினிமா என ஒன்று அதற்கான அழுத்தமான முகவரியுடன் வளர்ந்திராத நிலையில், போருக்குள் சிக்குப்பட்ட மக்கள் தாம் வாழ்ந்த வாழ்வென ஒன்றை எல்லாவகையிலும் இழந்தவர்களாயே ஆகி விட்டார்கள். இதன் விளைவு: போரினில்
முதியவர்களுடன் பரதரப்பட்ட சமூகபடிநிலைகளின் பேச்சுமொழியும், சுயவரலாற்றுக் கதைகளும் மடிகின்றன. போரே அநியாயத்துக்கு பணிவது என்கிற போது, போரிடம் எந்த நியாயமும் கேட்க முடியாது. எனது தாத்தாவின் பால்ய கால மொழிவழக்கை இன்னும் 10-15 வருடங்களுள் அவரைப் போலவே அவரது தலைமுறை முழுவதும் மெளனித்த பிறகு சொல்வதற்கு யாரும் இருக்க மாட்டார்கள்.

**
2007 யுத்தம் தொடங்கிற போது, தனிப்பட்ட உரையாடல் ஒன்றில், இந்திய கல்வியாளர் ஒருவர் இப்படிக் கூறினார் “இலங்கையில் யுத்தம் நடக்கிற பகுதிகளில் உள்ள ஓலைச்சுவடிகள் அழிந்து போகாதா, அதை யாரும் கவனிப்பார்களா” என. கொடும் யுத்தத்தில் சிக்கப்போகிற சனங்களை, தெரிந்த தோழமை முகங்களை யோசித்துக் கொண்டிருந்த நாம், “மனுசரே அழியப் போகினம், இதில ஓலைச்சுவடிகளோ” என நினைத்துக் கொண்டது ஞாபகம்.  அவரொத்த கல்வியாளர்களது  அக்கறையை கொண்டிராதவர்கள் என்கிற போதும், அவரது யோசனையை இப்போது அதே விதமாய்ப் பார்க்க முடியவில்லை. அவருக்கு முக்கியமாய்ப் பட்டதை ஒத்த வேலைகளை, வேறு சமூக பங்களிப்புகளை தம் முதன்மை நோக்கமாய்க் கொண்டு இயங்குகிறவர்கள் முன்னெடுக்க வேண்டியதில்லை; ஆனால் அப்படியல்லாத கல்வியாளர்கள், அவற்றைக் காப்பாற்றுகிற ‘வேலை’யையாவது – தம் சமூக மானுடவியலை அறிய விரும்புகிற எதிர்கால சந்ததியின் பொருட்டு – செய்ய வேண்டிய தேவை இருக்கிறது.

**
தனியே இதுவென்று அல்ல, எல்லா வகையான அரசியலுக்கும் இடமிருப்பதான எங்களுடைய வரலாற்றைத் தேடிச் செல்வதூடாக, அதன் பல்வேறு கூறுகளை அடையாளங் காணுவதூடாக, அவற்றை ஆவணப்படுத்துதலின் ஊடாக, நாங்கள் என்ன செய்யலாம்? எம் தவறுகளை
ஒரு முறை திரும்பிப் பார்க்கலாம். எளியோரை அடிமைகளாய் நடத்திய சக மனிதரை சாதிப் பிரிவினைகளால் அடக்கி ஆண்ட, போன்றதான பல அற்ப, வெட்கப்பட வேண்டிய விடயங்களுக்காகவன்றி, உரிய விடயங்களுக்காக, போராடி வென்ற சமூக நீதிகளுக்காகப் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்; சாமத்தியவீடு, சங்கீத வகுப்பு, பஜனைகள் என்பவை அல்லாத ‘எம் பண்பாட்டைப்’ பேசத் தொடங்கலாம்.

குறிப்பு:
இப்படியான ஒரு நோக்கத்தோடு ஏற்பாடு செய்த  நிகழ்வே “farewell to our grandparents” [ஒரு தலைமுறைக்கான பிரியாவிடை; டிசம்பர் 4ம் திகதி மிட் ஸ்காபரொ சனசமூகநிலையம்] என்கிற சிறு நிகழ்வு. நீங்கள் உங்களுக்குத் தெரிந்த முதியவர்களது கதைகளை வரலாற்றை உங்களுக்குத் தெரிந்த முறையில் பதிவுசெய்யவும், அவர்களைத் தமது கதைகளை எழுதவும் தூண்டுகிறபோது சமூக வரலாறு என்கிற அளவில், அது ஒரு முக்கியமான செயற்பாடாக இருக்கும். எந்தெந்த வகைகளில்,  வடிவங்களில் அவர்களது கதைகளது வரலாற்றைப் பதிவுசெய்யலாம் என்பன குறித்த தொடர் நிகழ்வுகள் ஊடாகவே நாங்கள் இச் செயற்பாட்டை முன்னெடுக்கலாம்; சாத்தியப்படுத்தலாம்.

=)

பிரதிபா கனகா – தில்லைநாதன்

(=

மேலுள்ள ஓவியத்தின் தலைப்பு  “‘வெறுங் கிழவீ’ “; ஓவியர்: நிலா.சாயினி (இலங்கை)

Posted on: March 21, 2016, by :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *