எமது வட்டங்களிலிருந்து வெளியேறுதல்
சுதந்திரமின்மை, வேலையின்மை, விலைவாசிஉயர்வு, குறைந்தசம்பளம் இவற்றினால் 23 வருடங்களுக்கு மேலாய் பாதிக்கப்பட்டிருந்த ஒரு சர்வாதிகார நாட்டில், வேலையற்ற பட்டதாரி இளைஞன் ஒருவனின் தற்கொலை தொடக்கிய சிறு பொறி, அந்த நாடான துனிசியாவிலிருந்து, எகிப்து என்பதாய் பற்றி பெரும் மக்கள் எழுச்சியாக தமக்கான மாற்றத்தை வேண்டி தெருவில் எரிந்தது. ‘சூடான” செய்திகளை ஏந்திவரும் ஊடகங்களில் அதன் அமெரி்க்க மற்றும் மேற்கத்தைய சார்புக்கமைய திரிக்கப்படும் நடப்புகளையும் தாண்டி, இன்று அப் பொறி எகிப்பை அண்டிய நாடுகளை நோக்கி பரவுவதை அறிய முடிகிறது.
விடுதலை இயக்கங்களை அடக்க முடிகிற அரசுகளால் நெஞ்சுக்கு நேரே சுடுமாறு நிற்கும் கணக்கற்ற மக்களை எதிர்கொள்ள முடிவதில்லை (இராணுவ வண்டிகளுக்கு மண்ணள்ளி எறியும் தாய்மாரைப் பெண்களை, கற்களை எறியும் சிறுவர்களை ஏதும் செய்ய முடியாது போவது போல் ‘இந்திய இராணுவமே! எங்களை பாலியல் வன்முறை செய்!’ என நிர்வாணமாக மணிப்பூரில் பெண்கள் எதிர்ப்பைப் பதிவு செய்த போது, இராணுவத்தால் அங்கொன்றும் செய்ய முடிவதில்லை).
இதனர்த்தம், இந்த எழுச்சிகளில் உயிரிழப்புகள் குறைவு என்பதல்ல; ஊடகங்களில் தெரிய வருவது போக, மேலதிகமாகவும் நூற்றுக்கும் மேற்பட்ட உயிர்கள் அநியாயமாக அதிகாரத்துக்கு அதன் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியாயிருக்கிறார்கள், துனீசியாவில் தலைவர் வெளியேறிய பிறகும், காவல்துறையினால் கொலைகள், பாலியற் தாக்குதல்கள் அதன் மக்கள்மீது அதிகம் வெளியில்த் தெரியாமல் மேற்கொள்ளப்பட்டது.
இன்றைய காலத்தில் விலைமதிப்பற்ற ஏழைப்பெற்றோரது பிள்ளைகளது உயிர்களது வீழ்ச்சியை வேண்டாத ‘இரத்தமற்ற’ புரட்சியையே மனம் எதிர்பார்த்தாலும் —
வறுமையும் வாழ்வாதாரத் தேவைகளும் மக்களை தமது அடிப்படை உரிமை வேண்டிப் போரிடவும் தம்மை இழந்து – நிகரற்ற விலைகொடுத்து – உரிமைகளை வெல்ல விழைபுறவும் உந்துகிறது.
சக ஒடுக்கப்பட்ட இனமாய், தம் சனத்தொகையில் பெரும் எண்ணிக்கையைப் போருக்கும் பொரினாலும் இழந்த இனமாய் கிளர்ந்தெழும் இந்த மக்கள் எழுச்சிகளை நாம் எவ்வாறு உள்வாங்கிக் கொள்ளலாம்? ஒடுக்கியே பழகிய, உயிரின் பெறுமதி அறியாத, மேற்கின் மைந்தர்கள் போல வெறுமனே தொலைதூர செய்திகளாய்ப் பார்த்துக் கடப்பதா அல்லது அதற்கான எமது ஆதரவுகளை வழங்குவதா?
கடந்த தை 29, சனிக்கிழமை 1 மணியிலிருந்து 4 மணி வரை எகிப்தியர்கள், இங்கே யங்-டண்டஸ் சதுக்கத்தில் (Yonge-Dundas Square) எகிப்து மக்களுக்கான ஆதரவு ஊர்வலம் ஒன்றை ஒழுங்கு செய்திருந்தார்கள். (லண்டன் போன்ற ஐரோப்பிய நகரங்களிலும் ஒரே நாளில் இவை ஒழுங்கமைக்கப்பட்டிருந்திருந்தன). 30 வருடங்களாய் சர்வாதிகார ஆட்சியில் இருக்கிற தமது நாடு குறித்தும் அங்கு வாழுகிற தமது மக்கள் குறித்தும் அக்கறை மிகுந்த புலம்பெயர்-எகிப்திய மக்கள் – எந்த தலைவர்களுக்காகவும் அன்றி – மாற்றத்தை வேண்டும் அந்த தம் மக்களுக்காக மட்டுமாக, அவர்களது குரலை ஆதரித்து நிற்கிற காட்சி உணர்ச்சி மிகுந்ததாய் இருந்தது. அங்கிருக்கிற அங்கு வாழுகிற மக்களின் விருப்பம் என்பதறிந்து அதற்கு துணையாய் ஆதரவளித்து அவர்கள் இங்கே நின்றுகொண்டிருந்தார்கள்.
ஆனால்: இந்த ஆதரவு ஊர்வலத்தில் வழமைபோல எம்மவர்கள் என்று அல்ல பொதுவாகவே வேறு இனத்தவர்களைக் காணக் கிடைக்கவில்லை.
தான் ஆண்ட முன்னைய நாள் காலனித்துவ நாடுகளில் பிரித்தானியாவின் பிரித்தாளும் தந்திரம் (Divide & Rule) பேசப்படுவதுண்டு — தானே தன் படைகளை அனுப்பிப் போரிட அவசியமற்று, விட்டுவந்த நாடுகளில் அந்தந்த நாடுகளுள் இருந்த இனங்களின் முறுகல்களை அவதானித்து அதைத் தூண்டி விட்டு, தன் காரியத்தை அவர்களூடாகவே சாதிக்கவும் செய்த (செய்கிற) அந்த ஆண்ட பரம்பரைக்கு யார்தான் ஈடாக முடியும்?
இதன் கூறுகளை கனடாவில் ரொறன்ரோ போன்ற பல்-கலாச்சார (multi-cultural) எனப்படுகிற நகரங்களிலும் காணலாம். புலம்பெயர்ந்த பெருவாரியான இனங்கள், மற்றைய இனங்களுடன் உத்தியோகபூர்வமான பொது உறவுகளையன்றி இணைந்து செய்யும் ஏனைய அரசியல் சமூக வேலைகள் அரிதாகவே நிகழ்கின்றன.
(ஜேர்மனியில் அகதித் தமிழர்களை வேறு வேறு மாநகரங்களில் இதனாலேயே பிரித்துப் பிரித்துப் போட்டிருப்பதாக நண்பர்கள் கூறக் கேட்டிருக்கிறேன். தூரத் தூர இருக்கிறபோது ‘குழு’ செயல்பாடுகள் குறையும், இதனால் ‘குழு அரசியல்’ ‘மக்கள் ஒருங்கமைப்பு’ என்பன உருவாகாமல்த் தடுத்தல் என்பதே நோக்கம்).
அதனாற்தான் ஏறத்தாள 30 வருடமாக இந்த நகரத்தில் புலம்பெயர்ந்திருக்கும் மக்கள் ரொறன்ரோவின் தெருக்களில் பதாகைகளுடன் நின்ற போது அது பல்லின இணைவை அதன் ஆதரவைப் பெற்றுக் கொண்டிருக்கவில்லை. அந்த பதாகை ஊர்வலங்கள் நடந்து முடிந்த பிறகும் (30 வருட யுத்தமுங் கூட அழிவுகளின் மேலாக நடந்து முடிந்தபிறகும்) எமது வேலைத்தளங்களில் ‘உங்கள் நாட்டில் என்ன பிரச்சினை’ என்கிற அடிப்படைக் கேள்விகளையே மறுபடி மறுபடி கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
இங்கே பெரும்பாலும் தமக்குள்ளேயே சுருங்கியதாகவே இனரீதியான செயல்பாடுகள் உள்ளன. பர்மிய அல்லது மியான்மீர் மக்கள் தெருவிற்கு வந்து நின்றதை ஆதரித்து பர்மிய மக்கள் இங்கு நடத்திய ஆதரவு நிகழ்வுகளில் அவர்களுடன் போய் விளக்கை ஏந்தியபடி பர்மியர்கள் அல்லாதவர்கள் நின்றதில்லை (முக்கியமாக உலக அரசியலில் ஆர்வங் காட்டவேண்டியவர்களான எம் இளம் மாணவர்கள் கூட நின்றதில்லை). தம் நிலங்களிலேயே தண்டிக்கப்படுகிற, போராட்டமே தினசரி வாழ்வென்றான பாலஸ்தீனியர்களுக்காகவும் நின்றதில்லை. இங்குள்ள அவர்களது அமைப்புகளுடன் இணைந்து பரஸ்பரம் ஒருவரை ஒருவர் தம் போராட்டங்கள் குறித்து கல்வியூட்டுகிற வேலைகள் அவசியமாகப் பட்டதுமில்லை.
ஒரு தனிமனிதரின் செழுமை மற்றவர்களை புரிந்துகொள்வதிலேயே தொடங்குகிறது. ‘நான், எனது வாழ்க்கை, எனது குடும்பம், எனது கல்வி’ என்கிற சுயநலமான சிந்தனையிலிருந்து சக மனிதர்கள் அடங்கிய சமூகம் மீதான அக்கறை அங்கிருந்தே ஆரம்பிக்கிறது. ஆகவே, தன்னுடைய துயரத்தை ‘மட்டுமே’ பேசுகின்ற, தன்னுடைய வலியை மட்டுமே பிறர் உணர வேண்டுமென நினைக்கிற தனிநபர்கள் நியாயமானவர்கள் அல்ல. அவர்களில் எந்த மதிப்புக்கும் உரியவர்கள், இல்லை. தனது வலியூடாக இன்னொருவருடையதை உணர்வதும், முடிந்தால் அதற்கு ஒரோருவர் ஆறுதலாய் இருப்பதும் – இவையே மனிதப் பண்புகள் நிறைந்த பொது மனிதர்களது செயற்பாடாய் இருக்க முடியும். ஒரு இனத்தின் செழுமையும் இன்னொரு இனத்தை அதன் வரலாற்றைப் புரிந்து அதனுடன் முடிந்தளவு தன்னை இணைத்துக் கொள்வதிலேயே தங்கி இருக்கிறது.
எனது வலியூடாக நான் உலகின் பிறரது வலிகளுடன் இணைக்கப்படுகிறேன். ஒரு துவக்கு எனது தகப்பனை/தாயை நோக்கி நீழுகிற போது அது இன்னொருவருக்கு எதிராய் நீண்டிருந்தாலும் நியாயமற்றதே என்பதைக் கற்றுத் தருகிறது. அதிகாரத்துக்கு எதிராயும், இரத்தத்தின் கொடூரத்தை நியாயமின்மையை இராணுவ அத்துமீறல்களை அவை எங்கு நிகழ்ந்தாலும் எதிர்க்க சொல்கிறது. மக்களுக்கு எதிரான எந்த செயல்கள்மீதுமான எதிர்ப்பை அது வேண்டுகிறது.
மாறாய்; தனது தகப்பனுக்கு/தாய்க்கு நடந்ததே துயரமெனில் அந்த ஒருவர்தான், தனது துயரத்தை தனியே இருந்து அழுது தீர்க்க வேண்டும் – அதை – அவரைப் போலவே தன் துயரில் ‘மட்டும்’ ஆழ்ந்திருக்கிற யாரும் உணரவும் முடியாது!
ரொறன்ரோவில் இடம்பெற்ற எகிப்திய எழுச்சி ஆதரவு ஊர்வலத்தில் பற்பல கோசங்களுடன் மக்கள் நின்றிருந்தார்கள். ‘எகிப்தின் ஜனநாயக இயக்கத்துக்கு ஆதரவளியுங்கள்; முபாரக் வெளியேறு!’; Mubarak & Zine in ONE BIN, ‘துனிசியர்களின் சக்தி ஒருபோதும் தோற்கடிக்கப்படாது’; ‘அந்நிய அரசுகளே உங்கள் இரட்டை மதிப்பீட்டை நிறுத்துங்கள் (‘(“Foreign governments’ don’t be double standard”); “I want to call my mother”; ’30 வருட அநீதி போதும்’; ‘A RIGHT… IS “NOT’ WHAT SOMEONWE GIVES YOU; IT’S WHAT NOW ONE ‘CAN TAKE’ FROM YOU!!!) (ஒரு உரிமை என்பது யாரும் தருவது அல்ல, அது யாராலும் உங்களிடமிருந்து ‘எடுக்கப்பட முடியாதது); ‘எகிப்தின் இளைஞர்கள், நாங்கள் எங்களது பெற்றோர் வாழ்ந்தது போல வாழ வேண்டியதில்லை, அல்லாவின்விருப்பின்படி!’; ‘சகல சர்வாதிகாரிகளும் வெளியேறுக!’ என்பதான கோசங்களுடன் ‘எகிப்தின் நிலமும் அதன் வளங்களும் அதன் மக்களுக்குரியது, தலைவர்களுக்குரியது அல்ல’ (Land & its resources belongs to its’ PEOPLE> not the leaders) என்கிற பதாகையுடன், நாட்டுச் சொத்துக்கள் தலைவர்களின் குடும்பச் சொத்துகளாகுவதை விமர்சித்தவாறு ஒருவர் வர அது இலங்கை நாட்டுக்கும் பொருந்துவதை உணர முடிந்தது.
அரசியல்வாதிகள் மக்களை அவர்தம் சொத்துக்களை உறிஞ்சுவதும் தம் வாக்குறுதிகளை காற்றில் விடுவதுமாக மக்களது சொத்தில் தமது குடும்பங்களை வளர்த்தவாறு இருக்கிறார்கள். அவர்களை எதிர்க்க வழி – ஏமாற்றக் கூடிய எந்த தலைவர்களின் பின்னாலும் போகாமல் தமக்கான மாற்றத்தை தாமே வேண்டி –அதை ஆதரிக்கும் தொழிலாளர் இயக்கங்கள் இன்ன பிறவுடன் கைகோர்த்து – நிற்கும் நிலையே ஆகும்.
போருக்குப் பிந்தைய நாடுகள் வன்முறையைக் கைவிட்டு, வன்முறையிலிருந்து பாடங் கற்று, ‘தமது’ நாடுகளை முன்னேற்றிய கதைகளை, நாம், யப்பான், இஸ்ரேல் என வரலாறுகள் விதந்தோதக் கேட்டிருக்கிறோம். எதிர்மறையாய், மனித மற்றும் இனஅழிவிலிருந்து எழுந்த அவை, தமது நாடுகளின் நலன்களுக்காய் பிற நாடுகளில் யுத்தங்களை ஆதரிப்பவனவாய், பிற இனங்களின் அழிவுக்கு (மனித அழிவுக்கு) துணை போவனவாய்க் ஆகக் கண்டிருக்கிறோம்.
பெரும் அழிவுக்கு ஆற்பட்ட இனமாய், புலம்பெயர் தேசங்களில் வாழும் நாம், ஒடுக்கப்படுகிற மக்கள் போராட்டங்களில் இணைந்து கொள்கிறவர்களாய் இருக்கிற போது, இத்தகைய எழுச்சி ஆதரவு பேரணிகளில் ‘தமிழர்களாகிய நாம், எகிப்திய மக்களின் ஒருங்கிணைவுக்கு ஆதரவளிக்கிறோம்’ (We are Tamils in Solidarity with Egyptian People’)’ என்றோ; ‘ருனீசியர்களுக்கு ஆதரவாக தமிழர்கள்’ (”Tamils United to Support Tunisians’)’ என்றோ கோசங்களை ஏந்தி செல்கிற போது, செழுமையுற்ற இனமாக, நியாயமற்ற மனிதஅழிவுக்கு ஒருபோதும் துணைபோகாத இனமாக, இதுவரையில் விலைமதிப்பற்ற உயிர்களை இழந்தபோதும், சகோதரத்துவத்தையும் மனிதப் பண்புகளையும் ஒருபோதும் இழக்காதவர்களாக, அறியப் படுவோம் என்று தோன்றியது. அறியப்படுவது மாத்திரமல்ல நோக்கம், உண்மையில் உலக நாடுகளில் இடம்பெறுகிற எழுச்சிகளதும் அதன் அரசியல் முக்கியத்துவத்தையும் விளங்கிக் கொள்வதூடாகத் தான் நாம் எமது பிரச்சினைகளையும் புரிந்தகொள்ள முடியும்.
|.
பிரதீபா கனகா – தில்லைநாதன்
Flickr = Egyptian Protest in Toronto
Published in February issue of ‘thaiveedu’ – News monthly, Toronto. [http://thaiveedu.com/publications/pdf/mar-11.pdf] – pg 5-6.