கனகசபாபதி சரவணபவன் அவர்களுடன்………
கிமு 5 ம் நூற்றாண்டில் கிரேக்க அறிஞர், வரலாற்றின் தந்தை எரோடோட்டசு (Herodotus) மேற்குலகின் வரலாற்றைத் (Histories) தொகுத்து வைக்கிறார். அதே நூற்றாண்டில் சீனாவின் வரலாற்று நூல் (Book of History) தொகுக்கப்படுகிறது. கி.மு 3 ம் நூற்றாண்டில் இருந்து இலங்கையின் சிங்கள அரசர்களின் வரலாற்றை மகாவம்சம் கூறுகிறது. ஆனால் தொன்மையும், தொடர்ச்சியும் கோரும் தமிழர் தமது வரலாற்றையும் அறிவையும் முறையாக தொகுக்கத் தவறிவிட்டனர். இன்றுவரை தமிழர் வரலாறு முறையாக தொகுகப்படவில்லை, அதற்கான முறைமையும் இல்லை. இதுவே தமிழரின் அரசியல் அறிவுசார் பலவீனத்துக்குக் ஒரு முக்கிய காரணம். எனினும் இச் சமூகம் சார்ந்த பெரும் குறையை நிவர்த்தி செய்ய சில அறிஞர்கள் தம்மாலான முயற்சிகளை தொடர்ச்சியாக செய்து வந்திருக்கிறார்கள். அவர்களில் ஒரு சிறந்த எடுத்துக்காட்டே கனகசபாபதி சரவணபவன்.
சரவணபவன் திருகோணமலை பற்றி இரு ஆய்வு வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். வரலாற்றுத் திருகோணமலை, காலனித்துவ திருகோணமலை ஆகியன இந்த நூல்கள் ஆகும். ஆராய்ந்து, முறையான அடிக்குறிப்புகளுடன், மூல ஆவணங்களை மேற்கோள் காட்டி, சொந்தக் கருத்தை மட்டுப்படுத்தி இந்த ஆய்வு நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த நூல்களைப் பற்றி ஒர் அறிமுகம் செய்யவும், கலந்துரையாடலை செய்யவும் என ஒரு சந்திப்பு சனவரி 23, 2011 அன்று ஆறு மணி அளவில் 375 Baymills Blv அங்கு ஒழுங்கு செய்யப்பட்டது.
சரவணபவன், மற்றும் 12 வரையான ஆர்வலர்கள் கலந்து கொண்டார்கள். மயூரன் எழுது அனுப்பி இருந்த காலனித்துவ திருகோணமலை என்ற நூலுக்கான அறிமுகத்தோடு நிகழ்வு தொடங்கியது. இந்தப் பெறுமதி மிக்க நூல், “இன்றைய அரசியற்சூழலில் கதைக்கபடவேண்டியது” என்பது அவரின் சாரமாக இருந்தது. நூலாசிரியர் தான் கல்விசார் வரலாற்று ஆசிரியர் இல்லை என்பதைக் குறிப்பிட்டு தனது பேச்சைத் தொடங்கினார். வரலாறு இல்லாமால் எந்த விடயத்தையும் புரிந்த்கொள்வதோ, அல்லது இலக்குகள் நோக்கித் திட்டமிடுவதோ முடியாதது என்று வரலாற்றின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். கிபி 3 ம் நூற்றாண்டில் திருகோணேசுவர கோயில் தொடர்பான மகாவம்சக் குறிப்பு, கிபி 7 நூற்றாண்டு சம்பந்தரின் தேவாரக் குறிப்பு, கிபி 9-11 நூற்றாண்டுகளில் திருகோணமலையில் இருந்த “இலங்கைத் துறைமுகத்தை” சோழர்கள் தமது கடல் பயணத்துக்கு பயன்படுத்திய விதம் பற்றி நூலாசியர் விளக்கினார். சோழர்கள் இன்றைய மலேசியா, இந்தோனேசியா போன்ற தீவுகளுக்குப் படையெடுப்பதற்கு திருகோணமலையின் இலங்கைத் துறைமுகத்துக்கு வந்து அதன் காற்று, அலைகளின் இயல்பைப் பயன்படுத்தினர் என்று நூலாசியர் கூறினார். இரண்டாம் உலகப் போரின் போது திருகோணமலை மிக முக்கியத்துவம் வாந்த ஒரு இடமாக விளங்கியது. இதைக் கைப்பற்றினால், இந்தியா பறி போய் விடும் என்று நேச நாடுகள் பயந்தனர். ஒரு முறை 400 போர் வானூர்திகளை சப்பான் திருகோணமலை நோக்கி அனுப்பியது. அதை எதிர்த்து 400 வரையான நேச நாட்டு, குறிப்பாக கனடிய வானூர்திகள் சண்டை போட்டன. உலக வான் சண்டைகளில் மிகப் பெரியவற்றில் ஒன்று இந்தச் சண்டை ஆகும். இதை நூலாசியர் எடுத்துக் கூறினார்.
திருகோணமலை பற்றிய காலனித்துவ ஆதாரங்களை அவர் தற்போது வதியும் யேர்மனியில் எப்படிப் பெற்றுக் கொண்டார், எவ்வாறு பழம் ஒல்லாந்து மொழியைப் கற்று மூல ஆவணங்களை மொழி பெயர்த்தார் போன்ற செய்திகளை நூலாசியர் பகிர்ந்து கொண்டார். யேர்மனியில் 2.5 இலட்சம் தமிழ் சுவடிகள் Hull Archives இருப்பதைத் தெரிவித்தார்.
யாழ்பாணம் பற்றி வரலாற்று நூல்கள் ஓரளவு உள்ளன. திருகோணமலை பற்றிய வரலாற்று நூல்களை இந்த ஆசியர் ஓரளவு நிவர்த்தி செய்துள்ளார். ஆனால் வன்னி, மன்னார், மட்டக்களப்பு, அம்பாறை, மலையகம் என்று தமிழர்கள் வரலாறுகள் இன்னும் எழுதப்பட வேண்டி உள்ளன. வந்திருந்த ஆர்வலர்கள் சில ஊர் ஊராக பல வரலாறுகள் எழுதப்படலாம் என்றனர். பல ஊர்கள் துலைந்து போகின்றன என்று ஒருவர் குறிப்பிட்டார். அவர் பலாலியில் முன்னர் இருந்த ஊர்க்காரர். இரண்டாம் உலகப் போரின் போது பிரித்தானிய படைத்துறையினர் அங்கிருந்த பதின்நான்கு ஊர்களை மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் வெளியேற்றி விமான நிலையைத்தை அமைத்தனர் என்று கூறினார். இன்று எத்தனை எத்தனை ஊர்களை, நகரங்களை தமிழர்கள் இழந்துள்ளார்கள். அவை பற்றி வரலாற்று அடிக்குறிப்புகள் கூட இல்லாமல் தமிழர் வரலாறு அமைந்துவிடும் ஆபத்து உள்ளது. அங்குள்ள பல்கலைக்கழக பேராசியர்கள் அல்லது மாணவர்களுக்கு உதவி ஊர்களின் வரலாறுகளை எழுதும் வாய்ப்பு உள்ளது பற்றியும் நூலாசியர் குறிப்பிட்டார்.
நூற்றாண்டுகள் முன்னரான தமிழர்களின் வாழ்கைகளோடும் உணர்வுகளோடும், இன்றைய தமிழர்களின் வாழ்கைகளோடும் உணர்வுகளோடும் உரசிய உணர்வுகளோடு சந்திப்பு நிறைவு பெற்றது.
Posted on: March 29, 2016, by : admin