மை.தா கவிதைகள்
01
அனல் கவியும்
சான்ரோ கிளாராவில்
உனைக் காண்பதென் பாக்கியம்.
சிலுப்பிய தலையும் சிரிக்கும் கண்களுமாய்
சினக்கும் போது கூட
சிரிப்பின் சுவடுகளை
மறைக்கத் தெரிவதில்லை உனக்கு.
இந்த ஜாலமெல்லாம்
என்னிடம் செல்லாது.
பற்றைக் காடுகளெங்கும்
நண்பர்களுடன் சுற்றித் திரிந்திருப்பாய்.
தகிக்கும் பொழுதில்
ஒரு பிடி சாப்பிட்டிருப்பாயோ
என ஏங்கும் மனத்தினளை
உதாசீனம் செய்திருப்பாய்.
நீண்ட இக் கரும்புக் காடுகள் அறியும்
நானறியாத உன் சுவாசங்களை… எண்ணங்களை…
எவ்வாறோ ஒவ்வொருவரையும்
வசீகரிக்கக் கற்றுக்கொண்டுள்ளாய்
உலகின் ஏதோ ஒரு மூலையில் இருந்து
வந்துள்ளேன்
வியர்வையிலும் வேதனையிலும் கசங்கியவளாய்
கண்ணீரும் நம்பிக்கையும் கொண்டுனை யாசிக்கிறேன்
எதுவும் நடக்காதது போல
காற்றில் தலையை சிலுப்பி
மாறாத புன்னகையுடன்
மெதுவாக நீ
எனை உள்வாங்கத் தொடங்குகிறாய்.
மை/ கூபா 2013
02
அலை நனைத்த பாதங்கள்
அந்தரத்தில் தொங்க
நிர்வாணத்தின் அதிருப்தியும்
சங்கேதமுமற்று
ஆன்மாவையும் உடலையும்
இணைக்கின்ற படுக்கையில்
நீ தூங்கிக் கொண்டிருக்கின்றாய்
கனவுகளுள் துருத்தாத
குழந்தைகளின் முகத்துடன்
எட்டிப் பார்கின்ற காதல் முகமும்
கூடவே எழுகின்ற வரடேரோ கடலின் மணமும்
கடந்த காலத்தை எடுத்துக் கொண்டு
நாளையை மறக்கடித்தபடி
உறக்கத்தில் கூட சிரித்துக் கொண்டிருக்கின்றாய்
அக்கணத்தில் நீ விட்டு வந்த குழந்தைகளை
உன்னிடத்தில் கண்டபடி
முழித்திருக்கிறேன்