சந்திரா நல்லையா கவிதைகள்
கனவும் நிஜமும்
அடுக்கு மாடிகள்
இடிந்து விழ- நான்
நசிந்து மரணித்த
நாட்களோ ஏராளம்
நான் போடும்
மரண ஓலம் கேட்டு
என் உறவுகள்
ஓடிவரும் என்னருகில்
கண் விழித்தால்
கனவு என
கொண்டாடும் மனசு……
இன்று
அலுவலகத்தில்
அதி குளிரூட்டியில்
அடைபட்டுப்போனேன்
அதிர்ச்சி மேலிட
நான் போட்ட
ஓலத்தின் ஒலி
வெளிச்சிதறவில்லை
மீண்டும் மீண்டும்……
அடுத்த கணத்தில்
எழுந்த தெறிவினை
இழுத்து பெட்டியால்
இடித்து உடைத்தேன்
உட்பூட்டை…….
பல நிமிடங்கள்
பறந்தோடியது
ஆனாலும்
என் மனசு
கொண்டாடியது
இடிந்த கட்டிடத்தில்
இருந்து
வெளி வந்தது போல….
கனவும் நிஜமும்
சில சமயம்-என் வாழ்வில்
கலந்துதான் போகிறது.
பெண் எழுத்துகளை
புறக்கணிக்கும்
பெரிய மனிதர்களே
வணக்கம்!
சொல் ஒன்று
கேள் என்கிறேன்
பெண் எழுந்தால்
உங்கள் ஆதிக்கம்
ஏன் எழுகின்றது……?
பெண்களை
பூட்டிவைத்த
காலங்களோ ஏராளம்
கல்வியில் உரிமையின்மை
அரசியலில் உரிமையின்மை
இப்படியே……..
விடியலை நோக்கி
பெண்கள்
வெளியே வந்தால்
விமர்சனம் என்ற பெயரில்
வெளுத்து வாங்குகிறார்களே
இது
அறிவுஜீவித்தனமா…..?
இல்லை
ஆதிக்க வெறியா……?
உங்கள்
உழுத்துப்போன விமர்சனங்கள்
எங்களுக்கு
அலுத்துப்போய் விட்டது
நாங்கள்
வரையறையைத் தாண்டியவர்கள்
வழிவிடுங்கள்
அணையைத் தாண்டிய
வெள்ளம் என
கரைபுரண்டோடும்
காலம் வந்துவிட்டது
♦