சந்திரா நல்லையா கவிதைகள் 02
நாங்கள்
காத்திருக்கிறோம்
புதிய விடியலுக்காய்
அவர்கள்
தூசு துடைக்கிறார்கள்
தூர்ந்து போகும்
துளைகளை பெருப்பிப்பதற்கு…..
கண்ணகிக்கு சிலையாம்
பத்தினி தெய்வமாம்
இந்த மகுடங்களை
சூட்டித்தானே
பெண்களை
இரண்டாம் படிக்கு
புறம் தள்ளினீர்கள்
இன்னுமா… இன்னுமா…
நெறி தவறிய
கோவலனுக்காய்
கண்ணகி
மதுரையை எரித்தது
நீதி என்றானபோது
ஏன்
முள்ளிக் கடலில்
தனி ஒருவனுக்காய்
நாற்பதாயிரத்தை
கொன்றது
அநீதியானது….
மன்னன் நீதி
தவறினால்
மக்களுக்கு
தண்டனை
இந்த
வேடிக்கை மனிதரை
நினைக்கையில்
வெட்கமாய்.. வெட்கமாய் ..
நான்
சிறகு வெட்டப்படாத
சிட்டுக்குருவியே
ஆனாலும் என்னால்
பறக்க முடிவதில்லை
உலகத்தை சுற்றிவர
கனவு காண்பேன்
ஆனாலும்
ஒருநாளும் முடிவதில்லை
எனக்கு கால்கள் கட்டப்படவில்லை
சங்கிலியும் இணைக்கப்படவில்லை
ஏன்… கூண்டுக்குள் அடைக்கப்படவும் இல்லை
ஆனாலும்
என்னால் பறக்க முடிவதில்லை
முற்போக்கு சிந்தனைகள்
ஓங்கிவர ஓரம் கொள்வேன்
பறந்து போக
அவையும்
சிலநாளில் சிதைந்து போகும்
ஏதோ தடைகள்
தடுக்கி விழுத்தும்
அழுது முடிப்பேன்
எனக்குள்ளே
சமூக வரையறைகள்
எனக்குள் வறண்டுவிடவில்லை
ஒட்டிக்கொண்டிருப்பதை
உணர்ந்து கொள்ளும்போது…..