பெண்விடுதலை தொடர்பான சிக்கல்கள்

[Guest Column]
நாம் பொதுவாக பெண்விடுதலை பற்றிய விடயங்களை பேசும்போது சில விடயங்கள் திரும்பத் திரும்ப வருவதை அவதானிக்க முடிகிறது.
    • பெண்களே பெண்விடுதலைக்கு முதல் எதிரிகள்!
    • பெண்ணொடுக்குமுறை என்பது ஒரு ‘அமைப்புமுறை’ (System) சம்பந்தப்பபட்ட பிரச்சனை என்பதால் நாம் தனிப்பட்ட ஆண்களை இதற்கு காரணமாக கூறக்கூடாது!!
  • பெண்ணடிமைத்தனம் என்பது தனிச்சொத்துடை தோன்றியதுடன் உருவானதால், ஒரு சோசலிச புரட்சியில் தனிச்சொத்துடமை அழிக்கப்படும்போதே ஒழிக்கப்படக்கூடியது. ஆதலால் நாம் பெண் விடுதலை என்பதை வர்க்க விடுதலையின் மூலமாக மட்டுமே சாத்தியப்படுத்தலாம்.!!!
இந்த கேள்விகளுக்கு தெளிவான விடைகளை நாம் கண்டறிவதாயின் பின்வரும் விடயங்களில் கவனத்தை குவிப்பது அவசியமானதாகிறது.
    1. மார்க்சிய பெண்ணியத்தில் உள்ள பிரச்சனைகள்
    1. மார்க்சியம் பற்றிய பொருளாதாரவாதத்தின் பிரச்சனைகள் சித்தாந்தத்தின் பிரச்சனைகள்
    1. Intersectionality
    1. கோட்பாடும் பொதுப்புத்தியும்
  1. Structure vs Agency
மார்க்சிய பெண்ணியத்தில் உள்ள பிரச்சனைகள்
பால்வாதத்தை, பெண்ணொடுக்குமுறையை புரிந்துகொள்வதில் ஏங்கல்ஸ் எழுதிய ‘குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்’ என்ற நூல் மிகவும் முக்கியமானதாகும். மானுடவியலாளரான மோர்கன் எனபவரது ஆய்வுகளை, வரலாற்றுப் பொருள்முதல்வாத கண்ணோட்டத்தில் விளக்கும் விதத்தில் ஏங்கெல்சினால் எழுதப்பட்ட இந்த நூலில், ஏங்கல்ஸ், தனிச்சொத்தின் பிறப்புடன் பெண்ணடிமைத்தனம் தொடங்குவதை காட்டுகிறார். மனித வரலாற்றின் ஒரு கட்டத்தில், மனிதரிடம் குறிப்பிட்ட அளவு சொத்துக்கள் சேரத்தொடங்கியதும்,, தனக்குப் பின்னர் தனது சொத்துக்கள் தனது வாரிசுகளுக்கே சேர வேண்டும் என்ற எண்ணமே, ஆண்கள் ஒருதார முறையை பெண்களுக்கு வலியுறுத்தும் ஒரு நடைமுறைக்கு இட்டுச் சென்றதாக ஏங்கெல்ஸ் குறிப்பிடுகிறார். மேலும் பெண்விடுதலைக்கான வழியாக, பெண்கள் வீட்டில் இருந்து வெளியில் வந்து முதலாளித்துவ உற்பத்தியில் ஈடுபடுவது அவசியம் என்கிறார். அத்துடன் பொதுவுடமை சமுதாயத்தில் தனிச்சொத்து ஒழிக்கப்படும்போது பெண்ணடிமைத்தனம் முற்றாகவே ஒழிந்துவிடும் என்றும் கூறுகிறார்.
இன்று வரையில் பெண்ணியவாதிகள், பெண்ணடிமைத்தனத்தின் தோற்றத்தை விளக்குவதில் ஏங்கல்சின் நூலுடைய பங்களிப்பை உயர்வானதாகவே கருதுகின்றனர். ஆனால் பெண்விடுதலைக்கான வழியாக ஏங்கல்ஸ் முன்மொழிந்தவை குறித்து பல பெண்ணியவாதிகளிடம் தீவிரமான விமர்சனங்கள் உண்டு. குறிப்பாக முதலாளித்துவ சமுதாயத்தில் பெண்கள், ஆண்களில் முற்றிலும் தங்கியிருக்கும் நிலைமைக்கு, பெண்கள் வீட்டுக்கு வெளியில் வந்து நேரடியாகவே பொருளுற்பத்தியில் ஈடுபடுவது முடிவுகட்டும் என்றவகையில் பெண்களின் கரங்களை இவை பலப்படுத்தும் என்பதை மறுக்காதபோதிலும், பெண்கள் வீட்டை விட்டு உற்பத்திக்கு வரும் அதேநேரம், அதற்கு இணையாக ஆண்கள் வீட்டுவேலைகளில் பங்கெடுப்பது அறவே நடைபெறாத காரணத்தால், இந்த வெளிவேலைகள் என்பவை பெண்களைப் பொருத்தவரையில் ‘இரட்டைச் சுமையாக’ அமைந்துவிடுவதை பெண்ணியவாதிகள் சுட்டிக்காட்டுகிறார்கள். அத்தோடு பாட்டாளிவர்க்க புரட்சி நடைபெற்று, தனியுடமை ஒழிக்கப்ட்ட சமூகங்களில் பெண்ணடிமைத்தனம் தொடர்வதை சுட்டிக்காட்டும் பெண்ணியவாதிகள், வெறுமனே தனிச்சொத்து ஒழிப்பு என்பதற்கும் மேலாக, பெண்ணடிமைத்தனத்தின் வடிவங்களுக்கு எதிராக குறிப்பான போராட்டமானது முதலாளித்துவ சமுதாயத்திலும், சோசலிச சமுதாயத்திலும் அவசியமாவதை வலியுறுத்துகிறார்கள்.
இந்த வகையில் தீவிர பெண்ணியவாதிகள் (Radical Feminists) பெண்ணுடனல் மீதான கட்டுப்பாடுகள், பாலியல் (sexuality) கர்ப்பம், பிரசவம், குழந்தை வளர்ப்பு, வீட்டு வேலைகள், கலாச்சாரம், ஒழுக்கம், உடல் தொடர்பான விம்பங்கள் போன்ற பல்வேறு விடயங்களிலும் கவனத்தை குவிப்பதன் அவசியத்தை வலியுறுத்துகிறார்கள். மேலும் விஞ்ஞானம், மருத்துவம், மொழி, உளவியல், அரசியல், பொருளாதாரம், சித்தாந்தம், கலாச்சாரம், பொதுவெளி… போன்ற எல்லா விடயங்களிலும் பால்வாதம் நீங்கமற நிறைந்திருக்கும் நிலையில், பால்வாதத்தின் நிலைத்த தன்மையை வெறுமனே தனிச்சொத்துடமை மூலமாக மாத்திரம் இப்போதும் விளக்குவது சாத்தியப்படுமா? என்று கேள்வி எழுப்புகிறார்கள். சோசலிச சமுதாயத்திலும் தொடரும் பால்வாதத்தை வெறுமனே, “முதலாளித்துவத்தின் மிச்சசொச்சமாக” பார்க்காமல், பால்வாதத்தின் குறிப்பான பண்புகளாக புரிந்துகொள்ளப்பட்டு, அவற்றிற்கு எதிரான குறிப்பான போராட்டங்களின் அவசியத்தையும் வலியுறுத்துகிறார்கள்.
மார்க்சியத்தையும் ஏற்றுக்கொள்ளும் பெண்ணியவாதிகளின் ஒரு பிரிவினர், மேற்சொன்ன விமர்சனங்களையும் கருத்திற்கெடுத்து, தமது நிலைப்பாடுகளை மேற்கொண்டுள்ளார்கள். அவர்கள் பெண்ணடிமைத்தனமானது வெறுமனே தனிச்சொத்தின் ஒழிப்புடன் தானாகவே முடிவுக்கு வந்துவிடும் என்று நம்புவதில்லை. பால்வாதத்தின் குறிப்பான தன்மைகளையும், அதன் சார்பளவில் சுயாதீன தன்மையையும் (Relative Autonomy) கருத்திற்கெடுத்து, பால்வாதத்தின் குறிப்பான வெளிப்பாடுகளுக்கு எதிரான போராட்டங்களை நாம் முதலாளித்துவ சமுதாயத்திலும், தனிச்சொத்தின் ஒழிப்பைத் தொடர்ந்தும் நடத்தவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறார்கள். இவர்களே சோசலிச பெண்ணியவாதிகளாவர். இன்று மார்க்சிய பெண்ணியத்தை ஏற்றுக்கொள்ளும் பெண்ணியவாதிகள் ஒப்பீட்டளவில் குறைந்தவர்களேயாவர். பெரும்பாலான முற்போக்கான பெண்ணியவாதிகள் தங்களை சோசலிச பெண்ணியவாதிகளாகவே இனம் காட்டுகிறார்கள். ஆனால் மார்ச்சியவாதிகளான ஆண்களில் பலர் இன்னமும் மார்க்சிய பெண்ணிய நிலைப்பாடுகளை கொண்டுள்ளவர்களாகவே உள்ளனர். பெண்கள், தாம் முகம்கொடுக்கும் ஒடுக்குமுறைகளை புரிந்துகொள்வதும், ஆண்களின் புரிதலும் வேறுபட்டிருப்பது இதற்கான ஒரு காரணமாக இருக்கலாம்.
மார்க்சியம் பற்றிய குறுக்கல்வாத புரிதல்கள்
கார்ல் மார்க்ஸ் தனது முக்கியமான படைப்புகளில் ஒன்றான ‘அரசியல் பொருளாதாரம் குறித்த விமர்சனத்திற்கான பங்களிப்பு’ என்ற 1859 இல் எழுதிய நூலின் முன்னுரையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
“ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தில் உள்ள உற்பத்தி சக்திகளின் பௌதீக வளர்ச்சி நிலைமைகளுக்கு ஏற்ப, தமது பிழைப்பிற்கான சமூக உற்பத்தியில் ஈடுபடும் மக்கள், தவிர்க்க முடியாதபடி, ஒரு குறிப்பிட்ட விதத்திலான உற்பத்தி உறவுகளில் ஈடுபடுகிறார். இந்த உற்பத்தி உறவுகள் என்பவை, அவர்களது சித்தத்தில் இருந்தும் சுதந்திரமானவே. இந்த உற்பத்தி உறவுகளின் ஒட்டுமொத்தமே, சமுதாயத்தின் பொருளாதார கட்டமைப்பாக அமைகின்றன. இவை சமுதாயத்தின் அடித்தளம் ஆகும். சட்டம், அரசியல் போன்றவை இதன் மேல் எழும் மேற்கட்டுமானங்கள் ஆகும். இவற்றிற்கு இணைவாகவே சமூக பிரக்ஞையின் திட்டவட்டமான வடிவங்கள் உருவாகின்றன”.
ஒரு சமுதாயத்தின் பொருளாதார கட்டமைப்பானது ‘அடித்தளம்’ (Base) போன்றது என்றும், அதன்மேல் கட்டமைக்கப்படும் ‘மேற்கட்டுமானம்’ (Super Structure) போன்றவையே அந்த சமுதாயத்தின் அரசியல், சட்ட, சித்தாந்த அமைப்புகள் என்றும் கூறுகிறார். இந்த ‘அடித்தளம்’ – ‘மேற்கட்டுமானம்’ என்பவை வெறும் உருவகங்களே (metaphor) ஆகும். ஆனால் இந்த உருவகமானது, நேரடியான அர்த்தத்தில் (literal) எடுத்துக்கொள்ளப்படும்போது, அது ஒருவித ‘கொச்சைப் பொருளாதாரவாதத்திற்கு’ (vulgar economism) இட்டுச் செல்கிறது. இந்த பொருளாதாரவாதமானது, ‘அடித்தளமாகிய’ பொருளாதாரமானது, அப்படியே நேரடியாக ‘மேற்கட்டுமானத்தை’ சேர்ந்த சட்ட, அரசியல், சித்தாந்த வடிவங்களை நிர்ணயிப்பதாக புரிந்துகொள்ளப்படுகிறது.
இந்த விதமான புரிதலானது ‘மேற்கட்டுமானத்தின் அம்சங்களான அரசியல், சட்டம், சித்தாந்தம், கலை – இலக்கியம் போன்ற அனைத்தையும் பொருளாதாரம் அப்படியே, நேரடியாக நிர்ணயிப்பதான ஒரு புரிதலை ஏற்படுத்துகிறது. இது ஒருவித இயக்க மறுப்பியல் கண்ணோட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. அதனால் மேற்கட்டுமானத்தைச் சேர்ந்த அரசியல், மதம், சித்தாந்தம், கலை – இலக்கியம் போன்றவற்றின் சார்பளவிலான சுயாதீனத்தை நிராகரிக்கிறது. மேலும் இந்த மேற்கட்டுமானத்தைச் சேர்ந்த அம்சங்களில் ஏதாவது ஒன்றானது, அடித்தளத்தைச் சேர்ந்த பொருளாதாரத்தை மேல்நிர்ணயம் (over determination) செய்வதற்கான சாத்தியக்கூறுகளையும் மறுதலிக்கிறது. இதனால் இந்த ‘மேற்கட்டுமானத்தில்’ ஏற்படும் சிக்கல்கள், பிரச்சனைகள், மாற்றங்கள் அனைத்தையும் வெறுமனே பொருளாதாரத்தின் மூலமாக விளக்க எத்தனிக்கிறது. பல சந்தர்ப்பங்களில் இந்தவிதமான விளக்கமானது மிகவும் செயற்கைத் தன்மையுடன் தோற்றமளிக்கிறது. ஆயினும் சம்பந்தப்பட்டவர்கள் அவற்றை திரும்பத் திரும்ப ஒப்புவிப்பதற்கு தயங்குவதில்லை. இதற்குமேல், எமது கோட்பாடானது நடப்பு நிலைமைகளை விளக்குவதாக அமையாமல், ஒருவித வெற்று கோசமாக மாறிவிடுகிறது.
பால்வாதம் என்பது தனித்சொத்துடமையின் தோற்றத்துடன் உருவாகியிருக்கலாம், ஆனால், பால்வாதத்திற்கும் என்று ஒரு தனியான வரலாறு இருக்கிறது. இந்த வரலாற்று ஒட்டத்தில் அது தனக்கென ஒரு குறிப்பான இயக்க போக்கையும் (Dynamic), சார்பளவிலான சுயாதீனத்தை பெற்றுக்கொண்டுள்ளது. அது தோன்றிய காலத்தில் இருந்து ஏனைய கட்டமைப்புகளில் உருவான மாற்றங்கள் ஊடாகவும், அவற்றிற்கு எதிர்வினை ஆற்றுவதன் மூலமாகவும், பல புதிய வடிவங்களையும், வேறுபட்ட எண்ணக்கருக்களையும் அது தன்னுள் உருவாக்கி, இன்று சார்பளவில் சுயாதீனமான ஒரு முறையையாக (System ஆக) வளர்ந்துள்ளது. இன்றைய நிலையில் நாம் முகம்கொடுக்கும் பால்வாதத்தின் அத்தனை அம்சங்களையும், அவற்றின் சிக்கல்களையும் வெறுமனே பொருளாதாரம் என்ற ஒரு அம்சத்தின் மூலமே விளக்குவதில் பல சிரமங்கள் இருக்கின்றன.
பால்வாதம் தொடர்பான பிரச்சனையிலுங்கூட ‘பொருளாதாரவாதமானது’ பெண்ணடிமைத்தனத்தின் பல சிக்கலான பரிமாணங்களை விளக்க வல்லதாக அமையவில்லை. மாறாக பொருளாதாரம் ஒன்றே காரணம் என்று வறட்டுத்தனமாக கூறுகிறார்கள். தற்போதைய சமுதாயத்தில் பால்வாதத்தின் வெளிப்பாட்டுகளுக்கு எதிரான குறிப்பான போராட்ட வடிவங்களின் தேவைகளை இவர்களால் புரிந்துகொள்ள முடிவதில்லை. மாறாக, சோசலிச சமுதாயத்தில் தனிச்சொத்து உரிமை ஒழிக்கப்படும்போது, இந்த பெண்ணடிமைத்தனங்கள் ஒழிந்துவிடும் என்று அப்பாவித்தனமாக நம்புகிறார்கள். பெண்ணடிமைத்தனமானது ஏங்கெல்ஸ் கூறுவதுபோல தனிச்சொத்துடமையின் தோற்றத்துடன் உருவாகியிருந்தாலுங்கூட, அதன் நீண்ட வரலாற்றில் அது தனக்கென ஒரு சுயமான பண்பையும் பெற்று, சார்பளவில் சுயாதீனமான ஒரு அமைப்பாக உருவாகியிருப்பதை இவர்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை.
சித்தாந்தத்தின் பாத்திரம் குறித்து
தற்போது சமுதாயத்தில் உள்ள பல்வேறு சிக்கலான பிரச்சனைகளையும் விளக்குவதில் சித்தாந்தம் பற்றிய நவீன புரிதலானது முக்கியத்துவம் பெறுகிறது. அந்த வகையில் சித்தாந்தம் பற்றிய பின்வரும் குறிப்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
    • எந்தவொரு ஆதிக்க அமைப்பும் தன்னை நிலைநிறுத்த வெறுமனே பலப்பிரயோகத்தை (coercion) மாத்திரம் நம்பியிருப்பதில்லை. மாறாக, ஏதோ ஒரு விதத்தில், அது தன்னால் ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவினரின் சம்மதத்தையும் (consent) பெற்றுக்கொள்ள முனைகிறது என்கிறார், கிராம்சி. இதனை சித்தாந்தத்தின் மூலமாக சாத்தியப்படுத்துகிறது. இங்கு ஆதிக்கம் (domination) என்பதுடன், சித்தாந்த மேலாண்மை (hegemony) என்பதும் இணைந்தே செயற்படுகிறது. இதனையே சித்தாந்த அரச இயந்திரம் என்கிறார் அல்தூசர்.
    • சித்தாந்தம் என்பது எம்மிடமுள்ள நம்பிக்கைகள், கருத்துக்கள், விழுமியங்கள் ஆகியவற்றின் தொகுப்பாகும்.
    • சித்தாந்தமானது யதார்த்தமான உறவுகளுக்குப் பதிலாக கற்பனையான உறவுகளைக் கட்டமைக்கிறது. இதன் மூலமாக பல ஏற்றத்தாழ்வு மிக்க உறவுகளை “இயல்பானவை, நிலையானவை, மாற்ற முடியாதவை” என்றும் சித்தரிக்கின்றன.
    • ஒருவர் ஆதிக்க சக்திகளது சித்தாந்த மேலாண்மைக்கு முற்றாக ஆற்கொள்ளப்பட்டிருக்கும் நிலையில், அவர் ஆதிக்க சக்திகளை விட கூடுதலான அளவு அந்த அமைப்பிற்கு விசுவாசம் மிக்கவராக செயற்படுகிறார். இது எந்த அளவிற்கு செல்லும் என்றால், ஒரு சாதாரண கிறீஸ்தவர், கிறீஸ்தவ மக்கள் அனைவரதும் ஆன்மீகத் தலைவரான பாப்பரசரை விட தீவிரமான கத்தோலிக்கராக செயற்படச் செய்யும் அளவிற்கு இந்த சித்தாந்த ஆட்கொள்ளல் மிகவும் தீவிரமான விசுவாசத்தை ஆதிக்க கட்டமைபபின் மீது உருவாக்க வல்லது.
  • சித்தாந்தமானது தனது செயற்பாட்டிற்கு வெறுமனே சம்மதத்தை மாத்திரம் நம்பியிருப்பதில்லை. மாறாக, அது ஒருவித பரிசு – தண்டனை (reward and punishment) முறையையும் துணையாக கொண்டிருக்கிறது. ஆதிக்க சக்திகள் தனது நலன்களை காப்பவர்களுக்கு சில பரிசில்களை வழங்குவதுடன், தனது நலன்களுக்கு எதிராக செயற்படுபவர்களைத் தண்டிக்கவும் தயங்குவதில்லை.
இந்த வெளிச்சத்தில் பால்வாதமானது, பெண்களை முற்றாக ஆட்கொள்ள நேர்கையில், அவர்கள், ஆணாதிக்க சித்தாந்தத்திற்கு முற்றிலும் பலியான, பெண்ணிய விழிப்பு அறவே இல்லாவர்களாகவும், பால்வாத கட்டமைப்பை காப்பதில் ஆண்களிலும் பார்க்க தீவிரமாக செயற்படுபவர்களாக இருப்பதை நாம் அன்றாடம் காணமுடியும். வீட்டில் சிறுமிகளை அடக்கத்துடன் இருப்பதற்குக் கற்றுக்கொடுப்பது தந்தையல்ல, தாய்தான் என்பதை நாம் கவனிக்க வேண்டும். இவ்வாறு தனது பெண் குழந்தைகளை வளர்க்கத் தவறும் தாய்மார், தமது கடமையை தவறியவர்களாக பால்வாதமானது குற்றஞ்சாட்டும். சமுதாயத்தில் ஒரு தாய் என்ற வகையில் ஒரு பெண்ணுக்கு கிடைக்க வேண்டிய கௌரவத்தை மறுத்துவிடும். இது சராசரியான ஒரு பெண்ணுக்கு பெரிய தண்டனையாகவே அர்த்தம் பெறும். இதனால் பெண்களே பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பால்வாதத்தின் காவலர்களாக செயற்படுகிறார்கள்.
இதற்கு அர்த்தம் பெண்களே பெண்களை ஒடுக்குவதாக, பெண்களே பெண்விடுதலைக்கு எதிரிகளாக கருதப்பட வேண்டும் என்பதல்ல. மாறாக, பெண்ணிய விழிப்புணர்வை போதியளவு பெறாத பெண்களைப் பால்வாதமானது, தனது காவலராக நியமிக்கும் அளவிற்று வெற்றி பெற்றுள்ளது என்றே புரிந்துகொள்ளப்பட வேண்டும். இதற்கு மாறாக, பெண்களையே பெண்விடுதலையின் எதிரிகளாக சித்தரிப்பது தவறான செயற்பாடாகும். இது பல தவறான தார்ப்பரியங்களை சுமந்துள்ளது. பெண் விடுதலை பற்றிய விழிப்புணர்வை பெண்கள் மத்தியில் பரவலாக ஏற்படுத்தும் செயற்பாட்டில் இருந்து எம்மை திசை திருப்பிவிடக்கூடியதாகும்.
சில சந்தர்ப்பங்களில் பெண்களே சீதனத்தை தமக்கு தரவேண்டும் என்று வலியுறுத்துபவர்களாகவும், மாமியார் என்ற ஸ்தானத்தில் இருக்கும் பெண்ணே அதிக சீதனம் கொண்டுவரும் பெண்ணையே தனது மருமகளாக தேர்ந்தெடுப்பதையும் பார்க்கலாம். இதில் உள்ள விடயங்கள் சிக்கலானவை. யாழ்ப்பாணத்தில் உள்ள ‘தேசவழமைச் சட்டமானது’ தமிழ் குடும்பங்களில் உள்ள சொத்துக்களை மூன்று வகையானதாக பிரிக்கிறது. (1) சீதனம் -தாய் தனது வீட்டில் இருந்து திருமணத்தின்போது கொண்டு வருவது. (2) முதுசம் – இது தந்தை தனது குடும்பத்தில் இருந்து கொண்டு வருவது. (3) தேடிய தேட்டம் – இது குடும்பமாக தம்பதியர் இருந்த காலத்தில் சேர்க்கப்பட்ட சொத்துக்கள். தமிழ் சமூகத்தில் குடும்ப சொத்தானது பிள்ளைகளிடையே பிரிக்கப்படுவதற்கான வழிமுறைகள் பற்றி நாம் கவனிக்க வேண்டும். குடும்ப சொத்தானது பெண்களுக்கு திருமணத்தின் போது சீதனமாகவும், ஆண்களுக்கு பெற்றோரின் மறைவை அடுத்து முதுசமாகவும் பிரிக்கப்படுகிறது. தனக்கான சீதனத்தை வலியுறுத்தும் ஒரு பெண், குடும்ப சொத்தில் தன்னுடைய பங்கை, மரபின்படி தனது திருமணத்தின்போது பிரித்து தரும்படி கேட்பதாக இதனை புரிந்து கொள்ளலாம்.
இந்த காரணத்திற்காகவும், பொதுவாகவே எமது சமுதாயத்தில் ஓங்கியிருக்கும் பணத்தாசை காரணமாகவும் மாமியார் என்பவர் தனக்கு வரும் மருமகள் அதிக சீதனத்துடன் வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறார். இவ்வாறு கூறுவதானது, எமது சமூகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள சீதனக் கொடுமைகளை ஏற்றுக்கொள்ளதாக அர்த்தப்பட மாட்டாது. ஒரு திருமணத்தின் போது பெண்ணிடம் மாத்திரம் சொத்துக்களை எதிர்பார்க்கும்போது, அந்த திருமணத்தில் ஆண் – பெண் சமத்துவமின்மை ஏற்படுகிறது. இது தவறானது என்பது மாத்திரமல்ல, இப்படியாக பிரிப்பதற்கான சொத்துக்கள் எதுவுமே இல்லாத நிலையிலும் பெண் சீதனம் கொடுத்துத்தால்தான் திருமணம் ஆகலாம் என்பது ஆணாதிக்கத்தின் ஒரு தீவிரமான வடிவமாகும். அதே நேரம், குடும்ப சொத்துக்களை ஆண் – பெண் வாரிசுகளிடையே சமமாக பங்கீடு செய்வதற்கான வழிமுறைகள் இல்லாதவரையில், தேச வழமைச் சட்டப்படி பெண்கள் தமது திருமணத்தின் போது, குடும்ப சொத்தில் உள்ள தமது பங்கை கேட்பதை மாத்திரம் குறை சொல்வது சரியானதாக இருக்குமா என்பதை நாம் யோசிக்க வேண்டும். மேலும் திருமணமாகும் தனது மகனுக்கு, நல்ல சீதனத்துடன் மணமகளைத் தேடுபவரே எமது சமூகத்தில் சாமர்த்தியமான தாயாராக பார்க்கப்படுகிறார் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும் . இங்கும் மாமியார் என்ற ஸ்தானத்தில் ஒரு பெண், சீதனத்தை வலியுறுத்தும்போது, ஆணாதிக்கத்தின் கருவியாகவே செயற்படுகிறார் என்பதே எனது வாதமாகும்.
பெண்ணொடுக்குமுறையில் ஆண்களின் பாத்திரத்தை எவ்வாறு மதிப்பிடுவது?
ஒரு சமுதாயத்தில் உள்ள வர்க்கம், பால்வாதம், சாதியம், நிறவாதம்… போன்ற பல்வேறு ஏற்பாடுகளும் வெறுமனே தனிநபர்களால் உருவாக்கப்படுபவை அல்ல. அவை சமுதாயத்தின் ஏற்பாடுகளாகும். அந்த விதத்தில் நாம் அவற்றை நாம் சமூகத்தின் கட்டமைப்புகள், social structure. System என்றும் குறிப்பிடலாம். இப்படிப்பட்ட கட்டமைப்புகளில் ஏற்படும் முரண்பாடுகள், மோதல்களுக்கு சம்பந்தப்பட்ட தனிநபர்ளை, அவர்களது விருப்பு – வெறுப்பு போன்றவற்றை காரணமாக காட்டுவதும், அப்படிப்பட்ட தனிநபர்களின் அடிப்படையில் விடயங்களை விளங்க முற்படுவதும் காத்திரமான செயற்பாடுகளுக்கு வழிவகுக்க மாட்டாது. ஆதாலால் நாம் சமுதாயத்தின் கட்டமைப்புகளில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை புரிந்து கொள்வதன் மூலமாகவே, நாம் முகம்கொடுக்கும் பிரச்சனைகளை புரிந்துகொள்வதும், அவற்றிற்கான தீர்வுகளை கண்டறிவதும் சாத்தியமாகும் என்பதும் சரியான வாதங்களேயாகும்.
ஆனால் அதேவேளை இந்த பால்வாதம் என்றால் என்ன? என்பதில் எந்தவிதமான குழப்பங்களும் இருக்கக் கூடாது என்பதையும் கவனத்தில் கொள்வதும் முக்கியமானதாக ஆகிறது அல்லவா? இதனால் நாம் முதலில் பால்வாதம் என்றால் என்ன? என்பதை புரிந்து கொள்வது அவசியமானதாகிறது.
ஏனைய ஒடுக்குமுறைகள் எல்லாவற்றிலும் உள்ளது போலவே பால்வாதத்தையும் நாம் முதலில் வரையறுத்துவிட்டால் அதன் பின்னர், இதில் எழும் குழப்பங்களை தீர்ப்பது இலகுவானதாக இருக்கும். ஆதலால் பொதுவில் ஒடுக்குமுறைகள் பற்றிய ஒரு பொதுவான பார்வையை உருவாக்குவோம்.
    • வர்க்க முரண்பாடு என்பது ஒரு வர்க்கமானது, இன்னொரு வர்க்கத்தை சுரண்டுவதும், ஒடுக்குவதும் பற்றிய பிரச்சனையைக் குறிக்கிறது.
    • தேசிய பிரச்சனை என்பது ஒரு தேசமானது இன்னொரு தேசத்தை ஒடுக்குவது பற்றிய பிரச்சனை பற்றியதாகிறது.
    • சாதியம் என்பது குறிப்பிட்ட சாதியினர், இன்னும் சில சாதியினரைச் சுரண்டுவது, ஒடுக்குவதைக் குறிக்கிறது
    • பால்வாதம் என்பது ஒரு பாலினம், இன்னொரு பாலினத்தை சுரண்டுவது, ஒடுக்குவது பற்றிய பிரச்சனை என்றாகிறது.
  • நிறவாதம் என்பது ஒரு குறிப்பிட்ட நிறத்தை சேர்ந்ததாக கருதப்படும் ஒரு பிரிவினர், ஏனைய நிறத்தை சேர்ந்தவர்களாக கருதப்படும் மக்கள் கூட்டத்தினரை சுரண்டுவது, அடக்குவது பற்றிய பிரச்சனையாகும்.
ஆகவே பால்வாதம் என்பது ஒரு பாலினம், இன்னொரு பாலினத்தை ஒடுக்கும் ஒரு முறைமை (System) யைத்தான் குறிக்கிறது என்பதில் எந்தவிதமான சந்தேகமும் எமக்கு இருக்கக் கூடாது. ஆனால் பிரச்சனை எங்கு எழுகிறது என்றால், நாம் பால்வாதத்தை ஒரு ‘முறைமை’ என்று எடுத்துக் கொண்டால், அதற்கு மேல் அந்த System ஆல் நிர்ணயிக்கப்பட்ட ஆணின் நடத்தைக்கு நாம் தனிப்பட்ட ஆண்களை பொறுப்பாக ஆக்க முடியுமா? என்பதில்தான். இங்கு நாம் ஒரு முறைமைக்கும், அதனால் நிர்ணயிக்கப்படும் தனிநபருக்கும் இடையிலான உறவு பற்றி பேச முனைகிறோம். ஆங்கிலத்தில் இதனை Structure vs Agency Debate என்பார்கள். உண்மையில் இந்த உறவானது இயங்கியல்பூர்வமானதேயன்றி, இயக்க மறுப்பியல் சார்ந்ததல்ல. ‘நிர்ணயவாதம்’ (Determinism) கூறுவது போல, கட்டமைப்பானது தனிமனிதனது அனைத்து செயற்பாடுகளையும் அப்படியே, மாற்ற முடியாதவாறு நிர்ணயம் செய்துவிடும் என்றால், அதன் பின்னர் ‘மனித தன்னிலை’ (Subjectivity), மற்றும் மனிதரது ‘செயலாண்மை’ (Agency) என்பவற்றிற்கு எந்த விதமான பாத்திரமும் இல்லை என்றாகிவிடும் அல்லவா? இதற்கு மேல் மக்கள் போராடுவது, புரட்சி செய்வது எல்லாமே சாத்தியப்பட மாட்டாது என்று ஆகிவிடுகிறது அல்லவா? ஆதலால் கட்டமைப்பிற்கும், மனிதரது செயலாண்மைக்கும் இடையிலான உறவானது இயங்கியல் தன்மையானது: பரஸ்பரம் தாக்கம் நிகழ்த்த வல்லது என்பதை மனதிற் கொள்வது அவசியமானது. என்னதான் ஒருவரது பாத்திரமானது, அவர் சார்ந்துள்ள சமூக கட்டமைப்பினால் வரையறுக்கப்படுவதாக இருந்தாலும், அந்த வரையறுக்கப்பட்ட வெளிக்குள், ஒரு தனிநபருக்கான தேர்வுகளும் இருக்கவே செய்கின்றன. இந்த விதத்தில் ஒவ்வொரு தனிநபர்களும் சதுரங்க பலகையில் உள்ள வெறும் காய்கள் (pawn) அல்ல: மாறாக, சுயமான சிந்தனை, தெரிவுகள் என்பவற்றைக் கொண்டுள்ள ‘தன்னிலை’ (subject) களாகவும் இருக்கிறார்கள். குறிப்பிட்ட ஒரு வரையறைக்குள்தான் என்றாலும் தனிநபர்கள் தாம் அந்த கட்டமைப்பினால், தனக்காக முன்மொழியப்பட்டுள்ள பாத்திரத்தை ஆற்றுவதா? அல்லது அதனைக் கடந்து எதிர் தரப்பிற்கு போவதா என்பதை பல்வேறு சந்தர்ப்பங்களிலும் ஒருவர் தீர்மானிக்கும் வாய்ப்புகளும் இல்லாமல் இருப்பதில்லை. இதனை நாம் செயலாண்மை (Agency) என்று கூறுகிறோம்.
ஏற்றத்தாழ்வான சமூக கட்டமைப்புகளில் குறிப்பிட்ட ஒரு பகுதியினரின் செல்வமானது, பெரும்பாலான மக்களது வறுமையுடன் பிரிக்க முடியாதவாறு நேரடியாக தொடர்புடையதாகும். அவ்வாறே எல்லா சமூகங்களிலுமே ஒடுக்கப்பட்ட பிரிவினரிடம் இருந்து பறிக்கப்பட்ட உரிமைகளும், மறுக்கப்பட்ட வளங்களும், வாய்ப்புகளுமே (deprivation), ஒடுக்கும் பிரிவினரின் அங்கத்தவர்களின் கரங்களில் சலுகைகளாக (privileges)  பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. உதாரணமாக, ஒரு முதலாளியின் மகன்/ள், என்ன குற்றம் செய்தார் என்ற கேள்வி எழுகிறது அல்லவா? இப்படிப்பட்டவர்கள் நேரடியாக தொழிலாளரை சுரண்டவோ, அடக்கவோ செய்யாமல் இருக்கலாம். ஆனால், அந்த சமூக ஏற்பாட்டினால் விளையும், ஆனால் ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு மறுக்கப்பட்ட உரிமைகள், வளங்கள், வாய்ப்புகள் என்பவற்றை தமக்கான சலுகைகளை (Privileges) அனுபவிப்பவர்களாக இவர்கள் இருக்கிறார்கள். இதன் மூலமாக அந்த குறிப்பிட்ட ஒடுக்குமுறையில் மறைமுகமான விதத்தில் என்றாலும் பங்கு பற்றுபவர்களாக உள்ளார்கள். இப்படியாக தாம் அனுபவிக்கும் சலுகைகளை துறந்து, ஒடுக்கப்பட்ட மக்கள் தரப்பில் செயற்படாத வரையில் சம்பந்தப்பட்டவர்கள், இந்த ஒடுக்குமுறை கட்டமைப்பின் பங்குபற்றுபவர்களாகவே இனம் காணப்பட வேண்டும். இப்படியான ஒருவர், தான் ஒரு ஒடுக்குமுறையில் சம்பந்தப்படுவது பற்றி அறியாதவராக இருப்பதாக சமாதானம் (excuse) சொல்ல முடியாது. அதுவும் ஒடுக்கப்பட்டவர் தரப்பில் இருந்து பலமான ஆட்சேபனைகள் எழுந்த பின்னர், இப்படிப்பட்ட ஒருவர் ஒடுக்குமுறைக்கு எதிராக பகிரங்கமாக நிலைப்பாடு எடுக்காத வரையில், அந்த ஒடுக்குமுறையில் ஒருவிதத்தில் பங்குபற்றுபவராகவே கருதப்பட வேண்டும்.
இது வர்க்க, சாதிய, நிறபாகுபாடு, பால்வாதம்… போன்ற பல்வேறு ஒடுக்குமுறைகளிலும் கைக்கொள்ளப்படக்கூடிய நிலைப்பாடேயாகும். பால்வாதத்தில் இந்த பிரச்சனை இன்னும் நேரடியானதாக இருக்கிறது. எல்லா ஒடுக்குமுறைகளையும் போலவே பால்வாதத்திலும் பல்வேறு பிரச்சனைகள் ஒரு அமைப்புமுறை (System) சார்ந்ததாக இருப்பினும், இன்னும் பல பிரச்சனைகள் ஆண்கள் – பெண்கள் என்பவர்கள் நேரடியாக செயற்படும் தருணங்களாக இருக்கின்றன. தம்மோடு அன்றாடம் செயற்படும், வாழும் பெண்களை சமத்துவமாக நடத்தாமல் இருப்பது, அவர்களது தன்னிலையை மறுப்பது, அவர்களது சிந்தனை, செயல், விருப்பங்கள், வெளிப்பாடுகள் என்பவற்றை மதிக்காமல் இருப்பது, கண்டுகொள்ளமால் விடுவது அல்லது சிறுமைப்படுத்துவது, வீட்டு வேலைகள், குழந்தை வளர்ப்பில் பங்கெடுக்காமல் விடுவது, பாலியல்ரீதியாகத் தொல்லை செய்வது, பாலியல் வல்லுறவு-குடும்ப வன்முறை போன்றவற்றில் சம்பந்தப்படும் ஆண்கள் நேரடியாகவே ஆணாதிக்க செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களாவர். இவர்கள் நேரடியாகவே குற்றஞ்சாட்டப்பட வேண்டியவர்களே. அத்தோடு தாம் நேரடியாக செய்யாவிட்டாலுங்கூட, பொது இடங்களில் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள், சிறுமைகளுக்கு எதிராக குரல் கொடுக்காதிருப்பது, அதற்கு எதிராக போராடும் பெண்களுடன் ஒருமைப்பாட்டை தெரிவிக்காதிருப்பது என்பவை பால்வாதத்துடன் இணங்கிப் போவதாகவே அர்த்தப்படும்.
Intersectionality பற்றி கவனிக்க வேண்டியதன் அவசியம் குறித்து
வர்க்கம், பாலினம், சாதி, நிறம், தேசம்… போன்ற எந்தவொரு அம்சமும் முற்றிலும் கலப்பற்ற ஏகவினத்தினால் ஆனவை (monolithic) அல்ல. இப்படிப்பட்ட ஒவ்வொரு கட்டமைப்பும், “அடையாளமும்” ஏனைய கட்டமைப்புகளினால், “அடையாளங்களினால்” ஊடறுக்கப்பட்டவையாகவே இருக்கின்றன. இதனை ஆங்கிலத்தில் Intersectionality என்பர். உதாரணமாக உழைக்கும் வர்க்கத்தை எடுத்துக்கொண்டால், அதில் பாலின, நிற, தேச, சாதிய… போன்ற இன்னும் பல வேறுபாடுகள் இருக்கின்றன. அவ்வாறே சாதியிலும், பாலினத்திலும், நிறப்பிரிவினரிடையேயும், தேசங்களிலும் இந்த ஊடறுப்புகள் இருக்கவே செய்கின்றன. இவற்றில் மேல் நிலையில் இருப்பவர்கள் சில சந்தர்ப்பங்களில், இதே நிலைமைகளில் பாதகமாக உள்ள பிரிவினருடன் தம்மை இனம்காணத் தவறவும், சில சந்தர்ப்பங்களில் ஒடுக்கும் தரப்பினருடன் இணக்கமாகச் செயற்படவும் கூடும். இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் இவ்வாறு செயற்படுபவர்கள் தமது வர்க்கம், தேசம், பாலினம், சாதி… போன்றவற்றிற்குத் துரோகம் செய்பவர்களாக இனம் காணப்படுவார்கள். ஆனால் அதற்காக இவர்களே எதிரிகளாக, அல்லது ஒடுக்குபவர்களாக இனம்காணப்படலாமா? என்றால் அது தவறானது என்பதே பதிலாக அமைய முடியம்.
வெள்ளைப் பெண்ணியம், தலித் முதலாளி, வெள்ளையின தொழிலாளி, பணக்கார கறுப்பினத்தவர் போன்றவர்கள் இதற்கு சிறந்த உதாரணங்களாக இருப்பர். ஆனால் எந்த சந்தர்ப்பத்திலும் இவர்களை நாம், குறிப்பிட்ட ஒடுக்குமுறைகளை செய்பவர்களாக அடையாளப்படுத்திவிட முடியாது. அடிப்படையில் குறிப்பிட்ட ஒரு ஒடுக்குமுறையின் சாராம்சம் என்ன என்பதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும். எந்த சந்தர்ப்பத்திலும் நாம் எதிரியையும், எம்மிடையே இருக்கும் முரண்பட்ட நலன் கொண்டோரையும் போட்டு குழப்பிக்கொள்ளக் கூடாது, உதாரணமாக குடிபெயர்ந்த தொழிலாளர்களது போராட்டங்களுக்கு, அந்த நாட்டின் பிரஜைகளாக உள்ள தொழிலாளர் ஆதரவு தராமல் இருக்கலாம். ஆனால் அடிப்படை முரண்பாடு குடிவரும் தொழிலாளருக்கும், அவர்களை சுரண்டும் முதலாளிக்கும் இடையிலேயேதான். எதிரி எப்போதும் சுரண்டும் முதலாளியே அன்றி, போராட்டத்திற்கு ஆதரவு தர மறுத்த உள்ளூர் தொழிலாளர்கள் அல்லர். இவர்களை சந்தர்ப்பவாதிகளாக நாம் அடையாளப்படுத்தலாம். ஆனால் ஒருபோதும் எதிரிகளாக இனம்காட்ட முடியாது. அவ்வாறே தமிழ் தேசிய கூட்டமைப்பானது, தமிழ் மக்களது நலன்களுக்காக, முரணற்ற விதத்தில் அரசுடன் போராடத் தவறி, அரசுடன் இணக்க அரசியலை மேற்கொள்கிறது என்பதனால் அவர்கள் தமிழ் மக்களது எதிரிகளாக மாட்டார்கள். நம்பத்தகாத, சந்தர்ப்பவாத தலைமைகள், நிராகரிக்கப்பட வேண்டியவர்கள் என்பதுதான் இவர்கள் பற்றிய சரியான விபரிப்பாக அமையும். அவ்வாறே பெண்களை கட்டுப்படுத்தும், ஆணாதிக்கத்திற்கு விசுவாசமாக செயற்படும் பெண்கள் பால்வாதத்திற்கு பலியாகிப்போன எமது சகபாடிகளே அன்றி, எமது எதிரிகளாக மாட்டார்கள். இவர்களை எதிரிகளாக ஒருபோதும் அடையாளப்படுத்த முடியாது. இவர்கள் தீவிரமான போதனைகள் மற்றும் போராட்டங்கள் என்பவற்றின் ஊடாக நடுநிலைப்படுத்தப்பட, வென்றெடுக்கப்பட வேண்டியவர்கள். அடிப்படையில் எமது நலன்கள் பொதுவானவை. ஆனால் எதிரிகளுக்கும் எமக்கும் இடையிலான உறவுகள் பகைமை தன்மை கொண்டவையாகும். இவற்றை போட்டுக் குழப்புவது பல மூலோபாய – தந்திரோபாய தவறுகளுக்கு காரணமாக அமைந்துவிடும்.
பொதுப்புத்தியும், கோட்பாடும்
எம்மிடையே நடக்கும் விவாதங்கள் பல சந்தர்ப்பங்களில் பொதுப்புத்தி மட்டத்திலேயே நடப்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். பொதுப்புத்தி என்பது விஞ்ஞானபூர்வமான கோட்பாட்டினால் அறிவொளியூட்டப்பட்டதல்ல. மாறாக, ஆதிக்க சித்தாந்தததினால் அறிவுறுத்தப்படுவதாகும். விவாதங்களை நாம் பொதுப்புத்தி மட்டத்தில் அணுகும் வரையில் நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் ஆதிக்க சித்தாந்தத்தை மறுஉற்பத்தி செய்வதிலேயே போய் முடிவது தவிர்க்க முடியாதவாறு திரும்பத் திரும்ப நடைபெறும். ஆகவே இது போன்ற பிரச்சனைகளை அணுகும்போது நாம் இயன்ற வரையில் பிரச்சனைகளை கோட்பாட்டு மட்டத்திற்கு உயர்த்த முயல வேண்டும். இல்லாதவரையில் நாம் மீண்டும் பால்வாதத்தின் முடிவுகளை நோக்கியே திருப்பப்படுவோம் எனபதை கவனத்தில் கொள்வது பயனுள்ளதாகும்.
முடிவாக:
    • பால்வாதம் என்பது ஒரு System ஆக இருப்பினும், அதில் அன்றாடம் சாதாரண ஆண்களும் – பெண்களும் முகம்கொடுத்தே ஆகும் நிலைமைகள் ஏற்படுகின்றன. இந்த நிலையில் நாம் இந்த ஆண்களது பொறுப்புக்களை தட்டிக்கழித்துவிட முடியாது என்பது முக்கியமான விடயமாகும்.
    • பால்வாதத்தை அப்படியே நேரடியாக பொருளாதாரத்துடன் இணைப்பதும், சோசலிசத்தில் பெண்விடுதலை தானாக வரும் என்பதும் அபத்தமான நிலைப்பாடாகும். இன்றைய முதலாளித்துவ சமுதாயத்தில் நிலவும், இன்றைய முதலாளித்துவ ஜனநாயக வெளிக்குள் தீர்வு காணப்படக்கூடிய அடக்குமுறை வடிவங்களை நேரடியாக இனம்கண்டு, அவற்றுக்கு எதிராக போராடுவதும் விழிப்புணர்வு பெற்ற பெண்களது கடமை மாத்திரமல்ல. எல்லா முற்போக்கு ஜனநாயக சகத்திகளதும் கடமையாகிறது.
    • பெண்கள் அன்றாடம் முகம் கொடுக்கும் பல பிரச்சனைகள் சாதாரண ஆண்களுக்கு புரிவது கிடையாது. ஏனெனில் அவர்களும் இந்த கட்டமைப்பில் சலுகை பெற்ற ஒரு பிரிவினராக இருப்பதுதான். ஆகவே இந்த விடயத்தில் பாதிக்கப்பட்ட பெண்களது குரல்களுக்கு கவனமாக செவிமடுத்து, அவர்களது போராட்டங்களுக்கு முறையான ஆதரவுகளை தெரிவிப்பது சகல முற்போக்கு, ஜனநாயக சிந்தனை கொண்ட ஆண்களதும் கடமையாகும். இப்படிப்பட்ட பிரச்சனைகளை கண்டுகொள்ளாமல் விடுவது, அவற்றிற்கான தீர்வுகளை சோசலிசத்தில் தருவதாக வாக்களிப்பது போன்றவை ஆண்களிடம் காணப்படும் பால்வாத சித்தாந்தத்தில் வெளிப்பாடாகவே புரிந்து கொள்ளப்பட வேண்டும்.
    • பால்வாதத்தை நேரடியாகவே முகம்கொடுப்பது இடதுசாரி அமைப்புகளுக்குள் ஆண் – பெண் தோழர்களிடையே உள்ள உறவுகளை பாதிக்கும் என்று கருதுவது அபத்தமானதாகும். இப்படிபட்ட ஆதிக்க வடிவங்கள் எந்த வடிவில் அமைப்பினுள் வெளிப்பட்டாலும் – அது நிறம், குடிவரவு, சாதி, அறிவுத்துறை மேட்டிமை, பாலியல் தேர்வு போன்ற அம்சங்களில் வெளிப்படும்போது எவ்வாறு அறவே சகித்துக்கொள்ளப்பட முடியாதிருக்கின்றதோ, அவ்வாறே பால்வாதத்தின் வெளிப்பாடுகளையும் தீவிரமாக எதிர்ப்பதன் மூலமாகவே நாம் ஒரு உண்மையான புரட்சிகர அமைப்பை கட்ட முடியும் என்பதை நினைவில் கொள்வது அவசியமானது.
  • இன்றைய சமுதாயத்தில் ஆண்களிலும் பார்க்க பெண்கள் அதிகளவில் புரட்சிகர பண்பை வெளிப்படுத்துகிறார்கள். பால்வாதம் குறித்த பெண்களது விழிப்பானது அவர்களை எந்தவிதமான சமரசத்திற்கும் தயாராக இல்லாத, தீவிரமான புரட்சிகர தன்மை கொண்டவர்களாக ஆக்குகிறது. ஆகவே பால்வாதம் தொடர்பான பிரச்சனைகளில் திட்டவட்டமான நிலைப்பாடுகளை மேற்கொண்டு, போராடும் பெண்களுக்கு பெரும் பக்க பலமாக இருப்பது, புரட்சிகர அமைப்புகளுக்கு நல்லது. இதன் மூலமாக மிகவும் தீவிரமான, சமரசமற்ற பல பெண்களை புரட்சிகர அமைப்புகள் வென்றெடுப்பது சாத்தியமாகும். அத்துடன் அமைப்பிலுள்ள ஆண்களும் தம்மிடமுள்ள பால்வாத சிந்தனைகளை களைந்தெறிய இந்த வகையான போராட்டங்கள் அனைத்து ஆண்களுக்கு பயனுள்ள செயற்பாடாக அமையும்.
சோசலிசத்திற்கான போராட்டமும், பெண் விடுதலைக்கான போராட்டமும் ஒன்றோடு ஒன்று கைகோர்த்து செல்வவையாகும்.
எமது கண்முன்னே நடக்கும் பால்வாதத்தின் வெளிப்படையானதும், சற்று நுட்பமானதுமான அனைத்து சுரண்டல், அடக்குமுறைகள், உரிமை மறுத்தல் போன்ற அனைத்துக்கும் எதிராக போராடுவது முற்போக்கு – ஜனநாயக ஆண்கள் அமைவரதும் கடமையாகும்.
– ராகுல் சந்திரா
Original Post: URL

Posted on: January 28, 2017, by :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *