‘கொடி’
‘கொடி’ திரைப்படத்தில் திரிசாவை வில்லியாக்கிய தார்ப்பரியத்தை யோசிக்க வேண்டியது முக்கியமானது. ஏனெனின், தமக்கான இடத்தை பிடிக்க ஆண்-மைய்ய கட்சிகளுள் பெண்களுக்கு ஏற்படும் சிக்கல்களோ கேள்விகளாக எழுகின்றது: ஏன் அவள்களுடைய காதல், கல்யாணம் மற்றும் அவர்களது எல்லாஉணர்வுகளையும் பூர்த்தி செய்து தமக்கு பிடித்தமான அரசியலில் செயற்பட முடியாமலிருக்கின்றது, ஏன் அரசியலில் வெற்றிபெற்றிருக்கின்ற பெண்கள் சிங்கிளாக இருக்கின்றார்கள், உண்மையில் இது அவர்களது தேர்வா? ஏன் அவர்கள் மட்டும் முழுநேர பங்களிப்பாளராக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது?
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கில்லாரியிடம் ஆரம்பங்களில் கேட்கப்பட்ட கேள்வி ‘உங்களுக்கு பேத்தியிருக்கின்றது. உங்களுக்கு நேரம் இருக்குமா நாட்டுக்காக கொடுக்க’ என்பது. இது டொனால்ட் றம்பிடம் கேட்கப்படவில்லை – ‘உங்களுக்கு பேரப்பிள்ளைகளும் சிறிய மகனும் இருக்கின்றனர். நாட்டுக்கு கொடுக்க நேரம் இருக்குமா’ என? ஏன் பெண்களால் ஆண்கள் போல் அரசியலில் இறங்கமுடியவில்லை; ஏன் இன்னொருவரின் துணையாகயோ, மகளாகவோ தான் வர முடிகின்றது?
இங்கு திரிசாவோஅறியப்பட்ட குடும்பப் பின்னணியற்று முழுநேரமாக சிறுவயதிலிருந்து அரசியலில் ஈடுபட்டவர். எத்தகைய கேள்விகளும் இன்றி வெறுமனே வில்லியாக மட்டுமே தோன்றுகின்றார். பெண் தனக்கான இடத்தை
பிடித்தல் என்பது ஏன் இன்னமும் வில்லத்தனமானதாக்கப் படுகின்றது. ‘எனக்கு திருமணம் குழந்தை என்கின்ற கனவொன்றும் இல்லை. அதைவிட பெரிய இலட்சியம் இருக்கின்றதென்கின்றார்’ திரிசா. அது சமூகத்தை அச்சுறுத்தவல்லது. ஒரு காதலனை அடைவதை விட பெரும் இலட்சியம் ஒன்று பெண்களுக்கு இருக்குமா
என்ன? (காதலன் ஒருவனைக் கைபிடித்து அவன் காரியம் யாவிலும் கைகொடுத்தல் தானே பெண்ணுக்கு முக்கியம்).
கதாநாயகனோ அரசியலும் தமது தனிப்படவாழ்வும் வேறானதென்ற போதும், தனக்கான துணையாக அவள் குடும்பத்தை நடத்தியபடி இருக்க விரும்புகின்றான். இத்தகைய ஆணின் விருப்பங்கள் றொமன்ரசைஸ் பண்ணப்படுகின்றது. இன்னமும் தன்னை நம்பாத பெண்ணை கதாநாயகன் அடிப்பதென்பது எழுதியவனுக்கு உறைக்கவில்லை… இது பெண்களுக்கெதிரான வன்முறை என்று தோன்றவில்லை… இதை பெண்களால் செய்யமுடியுமா என கேள்வி எழவில்லை… ஆனால் அவள் சிறுவயது முதல் வளர்த்துக்கொண்ட அரசியலில் ஒரு இடத்தை அடைவதற்கான சிரமங்களை எவ்வித சிக்கலுமின்றி நாயகன் அடைகின்றான். அது அவனுடைய கனவாக இல்லாத போதும்.
மக்களைக் கொள்ளையடித்தவன்கள் – கட்சித் தலைவர்கள் ‘இரவில்’தண்ணியடிக்கையில் தம்முடைய கட்சியிலுள்ள பெண்ணை வீட்டுக்கழைத்து வீட்டு வேலை செய்விப்பவனாகவும், அவளுடைய குடும்ப நடத்தையை கேள்விக்குட்படுத்துபவனாகவும் இருக்கின்றார்கள் (அது பெண்ணின் சுயமரியாதையை சீண்டுமென்பதில்லை). இன்னும் மேலாக இவர்கள் அவளை பாலியல் ரீதியான வன்முறை செய்யக்கூடிய இடத்தில் இருப்பவர்கள் (இங்கு அது
காட்டப்படாதபோதும்). தமது தொழிலைப் பாதுகாக்க கொலைசெய்கின்ற பொலிஸ்,காசுக்காக வாழ்விடங்களை அசுத்தப்படுத்தி மக்களின் வாழ்வை சிதைக்கின்ற கட்சித் தலைவர்கள் வில்லன்களில்லை ஆனால் தன்னுடைய இளமையிலிருந்து வளர்த்துக்கொண்ட விரும்பியதை அடைய – கல்வித் தகுதியோ, மக்கள் சார்ந்த சிந்தனையோ அற்ற ஆண்களிடம் போராடுவதும் தனதிடத்தைப் பிடிக்க முனைவதும் தான் வில்லத்தனமாய் இருக்கின்றது. மசாலா தமிழ்ச் சினிமா மினக்கெடுவது ”புது”வகையான வில்லனைக் கொண்டு வரத் தான். ஆனால்
அவ் வில்லத்தனமாய் எடுத்துக் கொள்வதென்னவோ சமூகத்தில் அதிகம் வெறுப்புக்குள்ளாகின்ற சிறுபான்மையானவர்கள் தான் (பெண்கள், திருநங்கைகள்,பாலியல் தொழிலாழிகள், சமபாலுறவாளர்கள்).
தாம் அடைய நினைக்கின்ற இடத்தை – தம்மை விட எந்தவிதத்திலும் முன்னேறியிராதவர்கள் ஆண்களாக இருக்கின்ற ஒரே சலுகையால் / காரணத்தால் அடைகிறபோது – அச் சலுகைகளை உடைக்கப் பிரயத்தனப்படுகின்ற பெண்கள் வில்லிகளாகத்தான் இருக்க முடியும். திரிசா வில்லியா என எம்மை நாமே கேட்க வேண்டும் ஏனெனின் தங்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டியவை மறுக்கப்படுகின்ற போது அவர்களின் ஆசைகளின் மீதான கல்லெறிதல்களை இப்படித்தான் வில்லத்தனமாய் எதிர்கொள்ளவேண்டியிருக்கின்றது. இதுவே மற்றப் பெண்களுடன் போட்டிபோடுவதாக காட்டப்பட்டிருந்தால் அவர்களுக்கு உறைத்திராது ஆனால் இங்கு இவள் மொத்த ஆண்களுடன் போராடுகின்றாள். அது தான் அவளை வில்லியாக முன்னிறுத்துகின்றது.
- தான்யா