கொரோனா பேரழிவு ஒன்றினை ஆபிரிக்காவில் அனுமானிப்பதில் உள்ள பிரச்சினைகள் –
ஏப்ரல் மாதம் நடந்த சீ.என்.என் நேர்காணல் ஒன்றில் அமெரிக்க பரோபகாரி (philanthropist) மெலின்டா கேற்ஸ் அவர்கள் கொரோனா நோய்த் தொற்றானது ‘வளரும்’ நாடுகளில் படுபயங்கர விளைவுகளை ஏற்படுத்தும் எனும் அவரது நம்பிக்கையை வெளிப்படுத்தினார். ஆபிரிக்க நாடுகளின் தெருக்கள் எங்கும் உடல்கள் விழுந்துகிடப்பதை தான் முன்அனுமானிப்பதாகவும் அவ் நேர்காணலில் தொடர்ந்து அவர் தெரிவித்திருந்தார். அவர் அதனை கூறிய மறுநாளே மெலின்டாவின் சொந்த நாடான அமெரிக்காவின் கொரோனா மரணங்கள் இத்தாலியின் தொகையை தாண்டிவிட்டதாக அறிவிப்பு வந்தது.
ஐக்கிய அமெரிக்காவிலும் ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் மருத்துவமனைகளும் மருத்துவப் பணியாளர்களும் கணக்கற்ற நோயாளர்களுடனும் இறந்த உடல்களுடனும் தள்ளாடுவதையும் இந்நோயால் இறந்த பற்பல உடல்கள் வீடுகளில் அழுகிற நிலைக்கு விடப்பட்டுள்ளமையும் செய்தி அறிக்கைகள் ஊடாக எமக்கு வந்துகொண்டிருக்கின்றன. அதிர்ச்சிதரும் இத்தகைய அறிக்கைகள் வந்துகொண்டிருந்த பொழுதில் கேற்ஸை ஒத்த கோடீஸ்வர பரோபகாரிகளும் ஏனையவர்களும் தமது சொந்த நாட்டினதையன்றி ஆபிரிக்காவில் விழக்கூடிய சாவுகளைப் பற்றிக் கதைப்பதையே தேர்வு செய்தார்கள் என்பது பெரும் ஆச்சரியமே.
தாம் எதிர்கொண்டுவருகின்ற இம்மாபெரும் நெருக்கடியை விடுத்து மிகத் தெளிவாக மேற்குலக சிந்தனை மையங்களது சில தலைமைகள் இந்நோயின் விளைவாய் 54 நாடுகளைக் கொண்ட ஆபிரிக்க கண்டம்தான் முழுமையாகவும் தவிர்க்கவியலாதவாறும் மாபெரும் அழிவைச் சந்திக்க நேரிடும் என்பதைத் தொடர்ந்தும் வலியுறுத்தி வந்தார்கள்.
உண்மை என்னவெனில் இப்படியொரு தொற்றுநோய்ப்பரவல் மேற்குலகை ஆட்டிப்படைக்கிற இந்நேரத்திலும் வெள்ளைமைய பார்வைக்கு ( white gaze) அவர்கள் ஓய்வு தரவில்லை என்பதுதான்.
தரவுகளுக்கமைகிற அச்சங்களுக்கும் தரவுகளற்ற அனுமானங்களுக்கும் இடையில் கணிசமான வேறுபாடுகள் உண்டு. ஆபிரிக்காவில் இந்நோயின் சொல்லத்தக்க பாதிப்பை ஒட்டி நிகழும் பெருவாரியான உரையாடல்கள் தரவுகளற்ற அனுமானங்களின் அடிப்படையில் நிகழ்கின்றன என்றே படுகிறது.
ஆபிரிக்கக் கண்டத்தில் மொத்த அழிவை ஊகிப்பவர் கேற்ஸ் மட்டுமல்ல. ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஆபிரிக்காவிற்கான பொருளாதார ஆணையம் [United Nations Economic Commission for Africa (UNECA)] ஏப்ரல் மாதம் அளித்த அறிக்கையிலும் “கொவிட்-19இன் நேரடி விளைவாய் சுமார் 300,000 இலிருந்து 3.3 மில்லியன் வரையான ஆபிரிக்க மக்கள் தமது உயிர்களை இழக்க நேரலாம்” என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நோயால் ஆபிரிக்க கண்டம் காணப்போகிற பெரும் மரணங்களது எண்ணிக்கை குறித்து இதுவரையில் பற்பல கணிப்புகள் செய்யப்பட்டிருக்கிறபோதும், அவற்றில் பொருளாதார ஆணயத்தின் இந்த சமீபத்திய கணிப்புத்தான் மிகவுமே குழப்பகரமானது.
குறிப்பாக கோடிக்கணக்கானவர்கள் ஆபிரிக்காவில் இறப்பார்கள் என்கிற இவர்களது கணிப்பு எமது வளர்ச்சி விகிதம் மற்றும் கள நிலவரம் என்பனவுடன் ஒத்துப்போகக் கூடியதாக இல்லை.
இந்தக் கட்டுரையின் பிரசுரம்வரை இக்கண்டத்தில் சுமார் 50,996 வரையான நோய்த் தொற்றும் 1,998 வரையான மரணங்களும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.
மே 28 2020 வரையான நோய்த் தொற்று: 124, 733 – மரணங்கள்: 3,700 – நோய் தேறல்: 51,059
ஜீன் 28 2020 வரையான நோய்த் தொற்று: 371, 611 – மரணங்கள்: 9,485– நோய் தேறல்: 178,524 (~மொ-ர்)
இதுகுறித்தொரு தெளிவான படத்தைத் தருவதானால் ஆபிரிக்காவிற்கான பொருளாதார ஆணையத்தின் ஆகக் குறைந்த இழப்புக் கணிப்பினையும் தற்போதைய வளர்ச்சி விகிதத்தையும் பார்ப்பின் 300,000 வரையான உயிரிழப்பைக் காணுவதற்கு ஆபிரிக்க நாடுகளில் குறைந்தது 7.6மில்லியன் வரையான உறுதிப்படுத்தப்பட்ட நோய்த்தொற்று ஏற்பட வேண்டும்; அத்துடன் 84 மில்லியன் வரையான கண்டம்தழுவிய நோய்த்தொற்றே ஆபிரிக்காவிற்கான பொருளாதார ஆணையத்தின் 3.3 மில்லியன் உயிரிழப்புகளை ஏற்படுத்த ஏதுவாக முடியும்.இங்கே குறைந்தளவிலான தொற்றுக்கள் அறிவிக்கப்படுவதற்கான காரணமாக கேற்ஸ் உட்பட பலரும் கொரோனா நோய் இருப்பதைக் கணிக்கும் சோதனைக் கருவிகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஆபிரிக்காவில் இருப்பது காரணமாக இருக்கலாம் என அனுமானிக்கிறார்கள். இது ஆபிரிக்க கண்டத்தின் பல நாடுகளைப் பொறுத்தவரையில் பொய்யில்லை என்கிற போதும் கேற்ஸ் இன் அறிக்கை கொரோனா சோதனையின் கொள்ளளவை தம் நாடுகளில் அதிகரித்துள்ள கானா, செனகல், தென்னாபிரிக்கா, மொரீசியஸ் போன்ற நாடுகளை இலகுவாகப் புறந்தள்ளிவிடுகிறது.
ஒரு நாட்டில் நோய்த் தொற்றின் குறைந்த எண்ணிக்கை என்பது குறைந்தளவிலான சோதனைகள் காரணமாக எனில் ஆபிரிக்க நாடுகளில் நோயாளிகள் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படும் விகிதமும் நாட்டில் மரணங்களது தொகையும் அதிகரித்திருக்க வேண்டும். இதுவரை அப்படியான நிலமை வரவில்லை.
ஆபிரிக்காவில் பாரிய உயிரிழப்புகளை இவ்வகையாய் அனுமானிப்பது என்பது ஒரு தவறான கணிப்பு என்பதைவிடவும் பிரச்சினைகளைக் கொண்டது. இவற்றினூடாக ஆபிரிக்க நாடுகள் செய்கின்ற எந்த செயல்பாடுகளும் நோய்த் தடுப்புக்கும் பாரிய உயிரிழப்புகளைத் தவிர்ப்பதற்கும் உதவாது என்று அவர்கள் கருதிக் கொள்கிறார்கள். அவர்கள் முன்னதாகவே இப்படியான இன்னுமொரு பாரிய நோய்த்தொற்றிலும் ஆபிரிக்கர்கள் செயலற்ற பாதிக்கப்பட்டவர்களாக மட்டுமே இருப்பர் என முடிவெடுத்துவிடுகிறார்கள்.ஆனால் மேற்கத்தைய நாடுகளைவிட, பல்வேறுபட்ட தொற்றுநோய்களுடனான தமது நீண்டகால அனுபவம் காரணமாக பல ஆபிரிக்க நாடுகள் அவற்றை எப்படி எதிர்கொள்வது என்பது தொடர்பில் – அவ்வனுபவங்களை அடிப்படையாய் கொண்ட வழிவகைகளை உருவாக்கி வைத்துள்ளன. அத்துடன் சில மேற்கத்தைய நாடுகளைப் போலன்றி பல ஆபிரிக்க தலைவர்கள் தமது பலகீனமான சுகாதாரத்துறை குறித்த அறிவற்றவர்களாகவும் இருக்கவில்லை. கொரோனா தொடர்பில் ஆபிரிக்க கண்டத்தின் செயல்திறன்மிக்க முன்நடவடிக்கைகள் இதன் அடிப்படையில்தான் நிகழ்ந்தன. எப்படி நீரழிவு நோயுள்ள ஒருவர் இனிப்பைத் தவிர்க்க வேண்டும் என்பதை அறிந்திருப்பாரோ அப்படித்தான் ஆபிரிக்க நாடுகளது அரசாங்கங்களும். கொரோனாவை எதிர்கொள்ளும் மூலோபாயமாக ஆபிரிக்க அரசாங்கங்கள் நோய் தடுப்பையும், அதற்கு, முந்தைய மற்றும் தாம் இன்னுமே எதிர்கொள்ளும் பிற நோய்த்தொற்றுக்களின்போது கற்ற பாடங்களை செயற்படுத்துவதுமே பயனாற்றும் என்பதை நன்கு புரிந்துள்ளன.
இதனாலேயே, தான் ஏலவே இபோலா (Ebola)நோய்த்தொற்றின்போது பயன்படுத்திய சோதனைமுறைகள் தற்காப்புபொறிமுறைகளை கோவிட்-19இனை எதிர்கொள்ள உகாண்டா உடனடியாக பயன்படுத்தத் தொடங்கிவிட்டது. நாட்டில் முதலாவது நோய்த்தொற்று எற்பட முன்னரே ஜனாதிபதி யூவேரி மூஸவனி (Yoweri Museveni) பயணக் கட்டுப்பாடுகள் விதித்ததுடன் மக்கள் சமூக விலகல்களை பேணுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார் – இது நாடு துரிதமாக முழுமையான முடக்குதலிற்குள் வர ஏதுவாகியது.
முதலாவது நோய்த்தொற்று மார்ச் 22இல் அறிவிக்கப்பட்டபோதிருந்து இதுவரையில் உகாண்டாவில் 100 நோய்த்தொற்றும் 55 நோய்த்தேறலும் தவிர யாரும் மரணமடையவில்லை.
றுவாண்டாவும் துரிதமாக எதிர்வினையாற்றியது. யனவரியில் நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட உடனேயே அரசாங்கம் ஒரு குழுவை ஒழுங்கமைத்தது. நாடுதழுவிய தொற்றுநோயாகும் அபாயமுடைய இந்நோயை எதிர்கொள்ளுவதற்காக ஏற்படுத்தப்பட்ட இக் குழுவூடாக நிலமையை மதிப்பிடவும் நோய்த்தொற்றுக்கான தமது தயார்நிலையையையும் பதில்நடவடிக்கைகளையும் மேம்படுத்தவும் முனைந்தது. அத்துடன் ஆய்வக தொழில்நுட்பவியலாளர்கள் உட்பட 500 சுகாதார பணியாளர்களுக்கு இந்நோயை எதிர்கொள்ளப் பயிற்சி கொடுத்தது.
இத்தொற்றுநோய் காலத்தில் உள்ளூர் நிபுணர்கள் எவ்வாறு நோய்க்கெதிரான முக்கியமான தலையீடுகளை செய்வதற்கு வழிநடத்துகிறார்கள் என்பதற்கு செனகல் இன்னொரு உதாரணம். இந்த மேற்காபிரிக்க நாடு எச்.ஐ.வீ எயிட்ஸ் மற்றும் இபோலாவை எதிர்கொண்ட தமது அனுபவத்தை வைத்து குறைந்த செலவும் தேவையானதுமான ‘கொவிட்-19 சோதனை கிற்றை’ உருவாக்கியிருக்கிறது. தனது கண்டத்தின் ஏனைய நாடுகளுடன் அதைப் பகிரவும் திட்டமிடுகிறது.
நைஜீரியாவில் ட்றைவ்-துறூ ஊடாக கொவிட்-19 சோதனைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. அங்கே தமக்கு நோயிருப்பதாக சந்தேகிக்கிறவர்கள் இணையத்தில் தமது பெயர்களை பதிவு செய்துகொள்வார்கள் – அதைத் தொடர்ந்து அவர்கள் கொவிட்-19 சோதனை தேவையானவர்களா என்பது பரிசீலனைக்குள்ளாகும்- அவர்கள் தகுதியானவர்களாக கொள்ளப்பட்டால் வாகனமோட்டிச் சென்று ட்றைவ் துறூ சோதனை மையங்கள் ஒன்றில் தங்களை பரிசோதித்துக்கொள்ளலாம். பின்னர் அவர்களது சோதனை-முடிவுகளை இணையமூடாகவே பெற்றுக்கொள்ளவும் செய்வார்கள்.
மொரீசியசில் முழுமையான முடக்கம் கட்டாயப்படுத்தப்பட்டதோடு பாரிய அளவில் நோய் சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இரண்டுவார காலத்துள் சுமார் 100, 000 வரையான மக்கள்மீது (கிட்டத்தட்ட நாட்டின் சனத்தொகையின் 10 விகிதமானவர்) சோதனை செய்யப்பட திட்டமிட்டுள்ளார்கள். இந்த தீவு வலுவான சமூக நல இடையகங்களை நிறுவி, அதன் சுகாதார வசதிகளை அணிதிரட்டியுள்ளது. இங்கே 1,000 பேருக்கு 3.4 மருத்துவமனை படுக்கைகளைக் கொண்டிருப்பதில் பெருமையும் கொள்கிறது. 1000 பேருக்கு 3.4 படுக்கைகள் என்கிற அளவு இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் கனடா உள்ளிட்ட சில மேற்கத்திய நாடுகளை விடவும் அதிகமானது.
ஊடகங்களின் தன்மீதான வழமையான பிம்பத்தை மீறி
சோமாலியா மார்ச் மாத இறுதியில், தான் இருபது வைத்தியத் தொண்டர்களை இந்நோயால் அவதியுறும் இத்தாலிக்கு அனுப்புவதாய் அறிவித்தது.
நிச்சயமாக சில ஆபிரிக்க நாடுகளில் கொரோனா நோய்த்தொற்றினால் மிக மோசமான விளைவுகள் ஏற்படும் என்பது உண்மைதான். ஆனால் 54 நாடுகளைக் கொண்ட ஒரு முழுக் கண்டத்துக்குமே ஒரே வர்ணத்தைப் பூசுவதும் இதனை எதிர்கொள்ள ஆபிரிக்க அரசுகள் செய்யும் முன்முயற்சி நடவடிக்கைகளை மறுதலிக்கும் செயலும் ஏற்புடையதல்ல.
வட அமெரிக்கா அல்லது ஐரோப்பியக் கண்டங்களுக்கு இதேபோல ஒரே வர்ணம் அடிக்கப்படுவதை ஏன் நமக்குக் காணக் கிடைப்பதில்லை? தம்மிடையேயான நுண்ணிய வேறுபாடுகளை மேற்கத்தைய நாடுகள் தெரிந்து வைத்திருப்பதுடன், தம்மிடையே எந்த இரு நாடுகளும் ஒரே மாதிரி இருக்கமுடியாது என்பதை ஏற்றுக்கொண்டுமுள்ளன. ஐரோப்பிய மற்றும் வடஅமெரிக்காவில் கோரோனா நோய்த்தொற்றின் விளைவுகள் நாடுகளுக்கு நாடு மாறுபடுமெனில் ஆபிரிக்காவிலும் அதுவே யதார்த்தம் என்பதை ஏற்றுக்கொள்தல் ஏன் சாத்தியப்படவில்லை?
சகல ஆபிரிக்கர்களும் ஒரே விதமாய் சிந்திப்பார்கள் என்கிற எண்ணமும் சகல ஆபிரிக்க நாடுகளும் ஒரே விதமாய் பாதிக்கப்படுவார்கள் என்கிற எண்ணமும் ஆழமான காலனிய சிந்தனையில் வேர்கொண்டிருக்கின்றது. அதுவே ஒரு முழு கண்டத்தையுமே இயல்பாகவே பின்தங்கிய ஒன்றாகவும் செயலற்றதாகவும் நிறுவவும் செய்கிறது.
கறுத்த உடல்கள் என்றென்றைக்கும் தங்களது உதவிக்கும் பரிதாபத்துக்கும் உரியன என்கிற பொய்யை காலனிய மரபு தொடர்ந்து நிலைத்திருக்கச் செய்திருக்கிறது. என்றும் அடங்கிப்போகின்ற பாதிக்கப்படுபவர்களாக பார்க்கப்படுவதை அன்றி நிபுணத்துவம் பெற்றவர்களாக ஆபிரக்க மக்கள் பார்க்கப்படுவது சாத்தியம் தானா?
கேற்ஸ் மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஆபிரிக்காவிற்கான பொருளாதார ஆணையத்தினதும் ஆபிரிக்காவில் கொரோனாவின் பாதிப்புக் குறித்த கணிப்பிலுள்ள பிரச்சனை இதுதான்: ஏற்கனவே ஆபிரிக்க நாடுகளில் நோய்த்தொற்று தொடர்பில் செயற்பாடுகளிலுள்ள அமைப்புகளுக்கு ஆதரவளிப்பதற்குப் பதிலாக அவை ஆபிரிக்க நாடுகளை அவற்றின் தமதேயான செயலூக்கத்திலிருந்து களைந்து, கவனத்தை தமது நிதியுதவி வழங்குவதில் குவிக்கின்றன.
சகல நாடுகளுக்கும் கலாச்சாரங்களுக்கும் ஒன்றில் நிபுணத்துவம் பெற்றிருக்கவும் முன்னணியில் நிற்கவும் காலமும் இடமும் இருக்கிறது. உலகின் எந்தப் பகுதிகளைப் போலவும் ஆபிரிக்க நாடுகளும் சிக்கலும் நுணுக்கமும் சுயஅதிகாரமும் கொண்டவையாய் அறியப்படுவதற்கான சகல தகுதிகளையும் தம்மகத்தே கொண்டிருக்கின்றன.
- கேலப் ஓகீய்றகீய் (Caleb Okereke) – உகாண்டாவில் வாழ்கின்ற நைஜீரிய பத்திரிகையாளர்.
- கெல்சி நீல்சன் (Kelsey Nielsen) – தொழில்நிமித்தம் உகாண்டாவில் வாழ்கிறஅமெரிக்க சமூக சேவகர், செயற்பாட்டாளர்.