கொரோனா பேரழிவை ஆபிரிக்காவில்…. – மொழிபெயர்ப்பாளர் குறிப்பு

ஆபிரிக்க கண்டத்தில் கொரோனாவின் பாதிப்பானது பல வகைகளில் அதன்மீதான முன்அனுமானங்களைத் தகர்த்துள்ளது. மக்கள் வீட்டினுள் முடக்கப்பட்டுள்ளதால் ஏற்படும் பொருளாதார தாக்கங்கள் சகல நாடுகளையும் ஒத்ததே என்றாலும் மேற்குடன் ஒப்பிடவியலாதவாறு வறிய கண்டமாய் இருப்பதால் வறுமை அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தும் அபாயத்தைக் கொண்டிருக்கிறது. ஆனால் நோயைக் கட்டுப்படுத்துவதில் மேற்கு நாடுகளைவிட பல்மடங்கில் சிறப்பான முன் ஏற்பாடுகளை பல ஆபிரிக்க நாடுகள் செய்திருக்கின்றன. எப்போதும் அதன் வறுமையிலிருந்தும் யுத்தம் மற்றும் நோயிலிருந்தும் தம்மால் காப்பாற்ற வேண்டிய கீழ்நிலையில் இருக்கும் கண்டமாகவே ஆபிரிக்காவை மேற்கத்தைய மனநிலை புனைந்து வந்திருக்கிறது. கொரோனா காலத்திலும் நோய்த்தொற்று அறிவியல் தொடர்பில் தங்களது நிபுணத்துவத்தை மேற்கு நாடுகள் ஆபிரிக்க நாடுகள் மீது திணிக்கும் போக்குகள் வெளிப்படையாய்த் காணக்கிடைக்கின்றன. இப்போக்கில் விடுபட்டுள்ளது என்னவெனில் நோய்த்தொற்று அறிவியல் என்பது தனியே பல்கலைக்கழகங்கள்சார் ஆராய்ச்சிகள்பாற்பட்ட கல்வியூடாக கடத்தப்படுவது மட்டுமல்ல. ஆபிரிக்க நாடுகள் இபோலா உட்பட பல தொற்றுநோய்களால் ஏற்கனவே பாரிய பாதிப்புக்குள்ளானதால் அந்நாடுகள் தம்மை நோய்த் தொற்றிலிருந்து பாதுகாப்பது தொடர்பில் ஆழமான ‘அனுபவ அறிவை’ பெற்றிருக்கின்றன. பல்கலைக்கழக கல்வியூடான அறிவுடன் இந்த பட்டறிவும் இணைய அது  மேற்கத்தைய நாடுகளைவிட பாரிய நிபுணத்துவத்தை நோய்த்தொற்று தொடர்பில் பல ஆபிரிக்க நாடுகளுக்கு வழங்கியுள்ளது என்பது தெளிவாகிறது.

ஆனால் இந்நோய்த் தொற்றின் இடம் வலம் அறியாது தாம் நிற்கிற நிலையை மறந்து மேற்குநாடுகள் வழமைபோல ஆபிரிக்காவிற்காக அழுதன.

செழுமைமிகுந்த ஆபிரிக்க நாடுகளின் செல்வத்தை-வளங்களை இன்னுமே சுரண்டிக்கொண்டிருக்கும் மேற்கு நாடுகள் அவற்றை சுரண்டுமுகமாகவே யுத்தங்களை நடத்திக்கொண்டும் அதைச் செய்வதூடாக மக்களின் வாழ்வாதாரங்களை கீழ்நிலையில் வைத்திருந்து தங்களில் தங்கியிருக்க செய்துகொண்டிருக்கின்றன. அவற்றுக்கு ஆபிரிக்கா தனக்கேயுரிய நிபுணத்துவத்தை பயன்படுத்தி இவ் வைரசை கட்டுப்படுத்துவதில் வெற்றிகொள்ள முடியும் என்பதை ஏற்றுக்கொள்ளவியலாது. அதனால்தான் இம்முறையும் ஆபிரிக்காவில் கொரோனாவிற்கான தடுப்பூசிகள் பரிசீலிக்கப்படுமென பிரெஞ்சு வைத்தியர்கள் அறிவித்தபோது சமூகவலைத்தளங்களில் சமூக ஆர்வலரிடமிருந்து இதற்கு எதிர்ப்புக்குரல் கிளம்பியது. கொரோனாவால் மரணங்கள் கொத்துகொத்தாய் மேற்கத்தைய செல்வந்த நாடுகளான இத்தாலி இங்கிலாந்து என விழுந்துகொண்டிருந்தபோது அப்போது நூற்றைக் கூட தாண்டாத ஆபிரிக்காவில் தடுப்பூசிகளை பரிசீலிப்பதாய் சொல்வதிலிருந்த நகைமுரணும் இனவாத அரசியலும் பேசுபொருளாயின. “எம்மீது அக்கறை காட்டும் உங்களது நல்லெண்ணங்களை, பரிசோதனை நிலையிலுள்ள தடுப்பூசி நன்கொடைகளை கொரோனாவால் மிகமிக பாதிக்கப்பட்டுள்ள மேற்கத்தைய நாடுகளான இத்தாலி-இங்கிலாந்து-அமெரிக்காவிற்கு வழங்குங்கள், அவர்களில் பரீசிலியுங்கள்,” “ஆபிரிக்கா ஒன்றும் உங்களது பரிசோதனை எலி அல்ல” போன்ற குரல்கள் எழுந்தன. கடந்தகாலங்களில் போலவே இன்றும் தொடரும் நவகாலனிய அடக்குமுறைகளாக பல ஆரம்பநிலையிலுள்ள மருத்துவப் பரிசோதனைகள் ஆபிரிக்க மக்களில் செய்யப்படுவது பரவலாய் அறியப்படுகின்ற ஒன்றே. எமது சமகாலத்தில் மிருகங்களில் மருந்துகளுக்கான – அலங்காரப் பொருட்களுக்கான இரசாயன பரிசோதனைகள் செய்வதை எதிர்க்கிற மேற்கத்தைய கனவான்களுக்கு “கறுப்பு உடல்கள்” உபயோகிக்கவும் கழித்து எறியவுமான களமாக வெகுகாலமாக இருந்து வருகிறது. இந்த நாடுகளின் அறிவுலக செயற்பாட்டுக் குரல்கள் இதனை ஏற்கமறுப்பதையே கொரோனாக் காலத்தின் எதிர்ப்புக் குரல்கள் உரத்து அறிவிக்கின்றன.
நிவாரண நிதிகளை வழங்குகிறபோது இத்தகைய இடர்களின்போது அதை எதிர்கொள்வதற்கென ஒரு நாட்டில் ஏலவே இருக்கிற அமைப்புகளுக்கு அவற்றை வழங்குவதே சரியாகும். இன்னொரு புதிய நிறுவனம் அந்நாட்டினது சமூகக் கட்டமைப்புகளுள் ஊடுருவி உடனடியாக நோய்க்கெதிராகச் செயலாற்றுவது சாத்தியமற்றது. ஊடுருவ எடுத்துக்கொள்ளும் காலம் தொற்றுநோய் பரவலில் பாரிய பாதிப்புகளைத் தரவல்லதும்! ஆனால் கேற்ஸ் பவுண்டேஸன் [Gates Foundation] போன்ற நிறுவனங்கள் தம் உதவிகளினால் பதில்-பயனை எதிர்பார்ப்பதால், உதவும் நாடுகளில் தமது திட்டங்களை கொண்டு செல்ல புதிய நிறுவனங்களை உருவாக்கி அல்லது தமக்கு இலாபம்தரும் செயற்திட்டத்தைக் கொண்ட நிறுவனங்களுக்கே நிதிகளை வழங்குகின்றன. அந்தவகையில்
வளர்ந்த செல்வந்த நாடுகள் வறுமைக்கான நேரடி நிவாரணங்களை வழங்குவதை குறித்து பேசாமல், ஏற்கனவே அந்நாடுகளில் இந்நோய்க்கெதிராக போராடுகிற சமூக வலையமைப்புக்கு நிதி வழங்காமல், புதிய திட்டங்களுக்கு நிதி வழங்குவதாய் சொல்வதில் இவ்இடரிலிருந்தும் ஆதாயம் தேடும் மேற்கின் முகமே இங்கே  மீண்டும் வெளிக்காட்டப்படுகிறது, முன்வருகிறது.
அல்ஜசீராவில் வந்த – கொரோனா பேரழிவு ஒன்றினை ஆபிரிக்காவில் அனுமானிப்பதில் உள்ள பிரச்சினைகள் என்கிற இந்தக் கட்டுரை மேற்கத்தைய அவதானிப்பாளர்களால் கொரோனாவால் ஆபிரிக்காவில் எதிர்பார்க்கப்படும் பேரழிவு பற்றிய அனுமானங்களிலுள்ள சிக்கல்களை அதன் சமூக – அரசியல் – வரலாற்றுப் பின்னணியிலிருந்து பேசுகிறது.
மொழிபெயர்ப்பாளர்

Posted on: June 30, 2020, by :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *