பரியேறும் பெருமாள் Review & Conversation
…
Dalit Presence in Tamil Cinema
தொண்ணூறுகளில் தலித் எழுத்துக்கள் இலக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. தலித் மக்களுடைய வாழ்வுமுறை, இரசனை, கல்வி என்பன ஆதிக்க சாதிகளால் எப்படியெல்லாம் ஒடுக்கப்படுகின்றது என்பதையும் அவ்வடக்குமுறைகளுள் அடங்காத அவர்களுடைய வாழ்வுமுறையையும் அவை வெளிப்படுத்தின. இப் புதிய போக்கு ‘இலக்கியத்தில் இப்படித்தான் கதை சொல்லவேண்டும்’ என்கின்ற எழுத்து உயர்நிலையை (canon) உடைத்து வாழ்வுமுறையும் அது சார்த்த மொழியையும் முதன்மைப்படுத்தின. அதனூடாக கதை சொல்லும் முறையையும் மொழி நடையையும் மாற்றி, ‘இப்படியும் கதை சொல்லலாம், இந்த மொழியிலும் சொல்லலாம்’ என அவர்களது வாழ்வுமுறை பல்வேறு பேச்சு வடிவங்களில் எழுதப்பட்டது. அதேபோல் வழமையான சினிமாவிலிருந்து விலகி தன் கதை சொல்லும் முறையால் தமிழ்சினிமாவின் சாதிய மொழியிலிருந்து விடுவித்து பார்வையாளரை நகர்த்திச்செல்கின்றது மாரி செல்வராஜின் “பரியேறும் பெருமாள்.” நிலமும் அந்நிலம் சார்ந்த வாழ்வையும் அதன் கலகலப்பையும் வாழ்வுமுறையையும் அதனுள்ளிருந்து எழுகின்ற கோபத்தையும் படத்தின் ஆரம்பமே பேசிவிடுகின்றது. தனியவும் வறுமையும், வயிற்றுப்பாட்டை மட்டுமே நிரப்புகின்ற வேலையும் ஒரு வாழ்வுமுறையாக இருக்க முடியாதென்பதை பல திரைப்படங்கள் மறந்துவிடுகின்றன. ஆனால் இங்கு அந்த வாழ்வுமுறைதான் இந்தப் படத்தை தனித்து நிறுத்துகின்றது. பெரும்பாலான நகரங்களில் வசிப்பவர்களுக்கு சேரிகளைப் பார்க்கையில் கண்ணுக்குத் தெரிவது வறுமைதான் – கண்ணுக்குப் புலப்படாதது அவர்கள் வாழும் அந்த நகரங்கள் இயங்கக் காரணமாக இருக்கின்ற அதில் வசிக்கின்ற தொழிலாளர்கள் (ரஞ்சித்தின் ‘காலா’வின் கதைக்களம் இதையும் பேசியது) எங்கிருந்து வருகின்றார்கள் என்பதும் அவர்கள் வசிக்கின்ற குடியிருப்புக்கள் எது என்பதும். வல்லரசாக ‘தூய இந்தியாவை” வேண்டும் பிரச்சாரங்களுள், சூழலைச் சுத்தீகரிக்;க முதலில் பலிகொடுப்பது சேரிகளைத்தான். நகரமயமாதலில், சேரிகள் முன்நோக்கிப் போதலின் தடையாக நிறுவப்பட்டிருக்கின்றது. அதன் பின்னாலுள்ள வாழ்வரசியல் மறக்கடிக்கப்பட்டுவிடுகின்றது.
மாறாய் இங்கே தொடக்கத்திலிருந்து முடிவுவரை படம் தான் நம்புகின்ற சித்தாந்தங்களிலிருந்து விலகாமல் பத்திரிகையில் படித்த செய்திகள் – யாருடையதோ என நகர்ந்து விடுகின்ற கொலைச் செய்திகள் – அதன் பின்னணி அரசியலுடன் உயிர்பெறுகின்றன. காலவாரியாக அந்தக் காலத்தின் துயர்மிகு ஆணவக் கொலைகள், தலித் படுகொலைகள், கல்வி மறுப்பு மற்றும் சாதி இந்துக்களால் நிரம்பியிருக்கின்ற பல்கலைக்கழங்கள் என்பது வரை தலித் வாழ்வின் கண்ணுக்குத் தெரியாத திரைகளை அவிழ்த்து அவற்றையும் படத்தின் கதாபாத்திரமாக்குகின்றது.
ஆங்கிலக் கல்வி தனியவும் கிராமத்திலிருந்து வருபவர்களுக்கு மட்டுமல்ல அது எல்லோருக்குமே சிரமமானதாகத்தான் இருக்கின்றது. பரியனுக்கு தமிழில் புத்தகம் கிடைத்தால் அதை படித்து எல்லோருக்கும் சொல்லித் தருவேன் என்கின்றான். இது தாய் மொழியில் கல்வி கற்பது அழுத்தமாக சிந்திக்கவும் விளங்கிக் கொள்ளவும் கூடியதாக இருக்கும் இல்லாது விடின் விளங்கியது போல பாசாங்குடன் நகரத்தான் முடியும் என்பதைச் சொல்கின்றது. கல்வியைக் கைப்பற்றிக் கொள்ள வருபவர்களுக்கு கற்கப் புரியாத மொழி தடையாகின்றது, பட்டத்தை எடுக்க வருபவர்களுக்கு மொழி கடந்து போகின்ற ஒன்றாகின்றது. பெரும்பாலான நேரங்களில் கற்கின்ற கல்வி ஏன் சிந்தனையை மாற்றாது போகின்றதென்பது இக்கடத்தலில் இருந்தும் மனனம் செய்வதிலிருந்தும் தான் ஆரம்பிக்கின்றது.
இங்கே பரி, அவன் வயதொத்த மற்ற இளைஞர்களைப் போலவே வாழ்கின்றான், விளையாடுகின்றான் (என்ன, அவனது விளையாட்டு கபடியாக இருக்கின்றது), தனக்கு விரும்பியதைச் செய்கின்றான். அவனிடம் அவன் வாழ்வு குறித்தான எத்தக் குழப்பமும் இல்லை. அது அவனுக்கு யாரிடத்திலிருந்தும் குறைந்ததாக இல்லை. அதனால்தான் தன் கூடப் படித்த தோழி பத்திரிகை அழைப்புக் கொடுக்க அவளுடைய சகோதரியின் திருமணத்துக்கு யாரென்றும் இல்லாமல் அவனால் போக முடிந்தது. ஆனால் சாதியச்சமூகமோ அவன் யார் என்பதை கண்காணித்துக் கொண்டிருக்கின்றது, அவர்களுடைய கண்காணிப்பு அவனை விரட்டிக் கொண்டிருக்கின்றது. அவன் அவர்களை எதிர்கொள்ளும்போது சாதியச்சமூகம் அவனைக் காட்டானாக்குகின்றது. பல்கலைக்கழகங்கள் அவனைப் போன்றவர்களைத் தனிமைப்படுத்துகின்றது. நான் டாக்டராய் ஆவேன் என்கின்ற இளைஞனிடம் கல்லூரி முதல்வர் சொல்லுவார் இது சட்டக்கல்லூரி இதில் டாக்டர் ஆகமுடியாதென – இது அவர்களுக்கு ஒன்றும் தெரியாதென்கின்ற முன்அனுமானத்திலிருந்து வருகின்றது. பதிலாக பரி சொல்கின்றான் நான் டாக்டர் அம்பேத்கார் ஆவேன் என. அதை அவர் அவனது அநுமதிப்பத்திரத்தில் எழுதி வைக்கச் சொல்லுவார். சாதி-மையக் கல்விசாலைகள் படிக்க வருகின்ற சிறுபான்மையானவர்களை எவ்வாறு அடையாளப்படுத்தி, பிரச்சினைக்குரியவரென ‘முத்திரைகுத்தி’ அவர்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றது என்பதை இது தெளிவாகக் காட்டியது. இதுவே பின்னர் அவர்கள் வேலைக்குப் போகையில் சாதிய பிரதிநிதிகளால் அவர்களது திறமை பின்தள்ளப்பட்டு கண்ணுக்கு புலப்படாத அக்கண்ணாடிகளில் (glass ceiling) மோதி நுழைய முடியாமல் நின்றுகொண்டிருப்பார்கள்.
இதிலிருந்துதான் பண்பாட்டு வெளிப்பாடுகளில் (cultural production) பிரதிநிதித்துவம் (representation) என்பது ஏன் முக்கியம்வாய்ந்தது என்பதைப் புரிந்து கொள்ளலாம். பிரதிநிதித்துவப்படுத்துவதென்பது தனியே அரசியல்ரீதியாக பிடித்துக் கொண்டலைகின்ற விடயமல்ல. அது கறுப்பர்களையோ, தலித்துகளையோ, திருநங்கை/நம்பிகளையோ இஸ்லாமியர்களையோ சமபாலுறவாளரையோ திரையில் கொண்டுவருவதூடாக இச்சமூகத்தில் அவர்களுடைய இடத்தை நிலைநிறுத்துகின்றது. அதனூடாக அவர்களுடைய இருப்பை சமூகத்தின் இயல்பான அங்கமாய் பொதுப்புத்தியில் தக்க வைக்க முனைகின்றது. அவர்கள் இங்கே – இந்த உலகத்தில்தான் இருக்கிறபோதும் எங்கோ இருப்பவர்களாக புறம் தள்ளாமல் அவர்களது இருப்பை நிறுவுகிறது. கதையில் தனியவும் தலித் protagonist ஆக மட்டுமல்ல, தலித் வாழ்வுமுறையை ஆணவக்கொலைகளை பத்திரிகைச் செய்தியாகக் கடக்காமல் படத்தில் அவையும் ஒரு கதாபாத்திரமாகுவதூடாக அவற்றைப் பொதுவெளிக்கு கொண்டுவருதல் சாத்தியமாகியுள்ளது. அதனூடாக இயக்குநர், சாதி இந்துக்களால் கடந்துபோகின்ற வாழ்வின் அரசியலை முன்வைத்து அதைக் கடக்க முடியாத தலித் வாழ்வரசியலாக முன்வைக்கின்றார்.
கதாநாயகன் – ஒரு தலித் இளைஞனாக இருப்பதே சினிமாவில் புதிது. சமகாலத்தில் அசாதாரணமாகப் பேசப்படுகின்ற Article 15 போன்ற இந்திப் படத்திலும் கதாநாயகன் பிராமணராகத்தான் இருப்பார். இதில் காண்பிக்கப்படும் கற்பித்தல் உயர்சாதியெனப்படுபவரிலிருந்து வருவதொன்றும் புதிதான விடயமில்லை. அதை வெள்ளை மீட்பர் மனோபாவம் (White Saviour) என்று சொல்லலாம். பொதுவாக வறுமைபட்டவர்கள் இவர்கள் என குறிப்பிட்ட ஒரு இனத்தை/சாதியைக்காட்டுவதும் அதை மீட்க வருகின்ற நல்ல மனம் படைத்தவர்களாய் ஒடுக்கும் சாதியைச் சேர்ந்தவர்களைக் காட்டுவதும் சினிமாவில் தொடர்ச்சியாக கண்டே வந்திருக்கிறோம். இதில் ஒரு புள்ளியில் இந்த மீட்பர்களால் மீட்கப்படுகிற அம் மக்களை விடவும் அவர்கள் வாழ்வை அதிகம் தெரிந்தவர்களாய் மீட்பர்களே ஆவார்கள். அது அங்கே அதனுள்ளிருந்து எழுகின்ற குரலை உடைத்து ஆதிக்க சாதி ‘எடுத்துக் கொடுக்கின்ற’ உரிமையைப் பேசுவதாகின்றது. அதிலிருந்து மாறுபட்டு பரியேறும் பெருமாளில் பரி தன்னுடைய இடத்தை தானே கண்டடைகின்றான். இயக்குநர் அவனது இடத்தை-துயரத்தை அம்மக்களின் வாழ்க்கையை அவனூடாகப் பேசுகின்றார். அவன் வாழ்க்கையை அவன் கண்களூடாக பார்க்கின்ற போது அது மிக அழகானதாகவும் அதை சலனப்படுத்தாது இருந்தால் அவ்வாழ்கை மேன்மையானதென்பதையும் உணர்த்தி நிக்கின்றது. அது யாரும் வந்து கற்றுக் கொடுத்து மாற்றவேண்டியதல்ல. அவ்வாழ்கை மிகமிக அழகானது… அதைக் குலைக்காமல் இருக்கும்வரை, உரிமைகள் மறுக்கப்படாதிருக்கும்வரை.
Representation Matters
வெள்ளை இடத்தில் வாழ்கின்ற கறுத்த சிறுமிக்கு/சிறுவனுக்குத் தெரியும் தன் கைகள் எப்போதும் தனித்துத் தெரிவது எத்தனை துயரமென்பது. தனக்குப் பக்கத்தில் தன் கையை ஒத்த ஒரு கையை தேடிக்கொண்டே இருப்பார்கள். முழுமையாக வெள்ளைக் குழந்தைகளைக் கொண்ட பாடசாலையொன்றில் அப்பாடசாலையிலே படித்த ஒரு கறுத்தப் பையன் – குழப்படியான ‘கீழ்படியாத’ ஒரு சிறுவன் – தன் நிறத்தை ஒத்த ஒரு ஆசிரியரைக் காண்கின்ற நேரமெல்லாம் சொல்வான் “எனக்கு சந்தோசம்.. நீ எனக்காக இருக்கின்றாய்” என. அவனுக்கு அவளையோ அவள் வகுப்பையோ தெரியாது எனினும் அவள்தான் அவனுக்கு நெருக்கமான நிறத்தில் இருந்தாள். அவளால் எந்த சாகசமும் செய்யாமலே அவனுக்கு நெருக்கமானவளாக ஆக முடிந்தது. அவனுக்கு ஏதாவது பிரச்சனையென்றாலும் அவளைத் தான் கூப்பிடுவார்கள் அவனுடன் கதைக்க. அவள் எதுவுமே செய்ய வேண்டியதில்லை. அவன் உயரத்துக்கு முழங்காலில் நின்றால் அவன் அவளைக் கட்டியணைத்துவிட்டு எல்லாத்துக்கும் தலையாட்டிவிட்டுப் போவான். அவளை ஏனைய வெள்ளைச் சிறுவர்கள் அப்படித் தேடுவதோ அணைத்ததோ இல்லை. வெள்ளை ஆசிரியர்களின் முகத்தில் சலனத்தைப் பார்த்திருக்கின்றாள், அவன் அவள் சொல்வதைக் கேட்டும் அணைத்தும் போகின்ற போதில். அதை அவள் பலமுறை உணர்ந்ததுண்டு வெள்ளை ஆசிரியரைக் காண்கையில் எதுவுமே செய்யாமல் வெள்ளைக் குழந்தைகள் அவர்களை அணைக்கின்றபோது. அக்கறுத்தச் சிறுவனைக் காணும்வரை அவளது வேலை தொடர்பான மனச்சிக்கலைக் கொண்டிருந்தாள். பின்னர் அச்சிறுவன் அவனுடைய வெள்ளை ஆசிரியர்களுக்குமுன் அவளை அணைத்த போது – அதே குழப்பத்தை வெள்ளை வகுப்பாசிரியர்களிடம் காணும்வரையில் – அது பெரும் மனக்குழப்பத்தையே ஏற்படுத்தியது. இதிலிருந்துதான் கேள்வி எழுகின்றது. Fair and lovely போட்ட தன் கறுத்த நிறத்தை மாற்ற பாடுபடும் பெண்கள், தம் முகத்தைத் திரையிலோ விளம்பரங்களிலோ மாற்றத் தேவையில்லாத ஒரு முகமாகக் காணாத பட்சத்தில், எதிலிருந்து தன்னம்பிக்கையைப் பெற்று சாதி/நிற-மைய பாடசாலைகளை எதிர்கொள்வார்கள்? இங்கேதான் தேவதைகள் வெள்ளையாகவும் கதாநாயகியாகவும் இருப்பது சிக்கலைக் கொண்டுவருகின்றது. நம் காலத்தில் நாம் பார்த்து நேசித்த, ஆளுமை செலுத்திய, பிரமித்த பெண்கள் வெள்ளைத்தோல் பெண்கள் தானா?
இப்படத்துடன் இணைய முதன்மைக் காரணம் பரியன் (கதிர்) என்கின்ற கதாபாத்திரத்தின் இயல்பு – நாம் பார்த்து பழகிய கதாநாயக இயல்பிலிருந்து மாறுபட்டு இயல்பாக இருந்தது – சாதாரணமாக நாம் காண்கின்ற இளைஞர்களைப் பிரதிபலித்ததே. யாருக்காகவும் தன்னை மாற்றாமல் கல்வியே குறிக்கோளாய் படிக்கையில், பிடித்த தோழியுடனும் தோழர்களுடனும் பேசியபடியும் இணைந்தும் இயல்பாக இருக்கவிடாதவாறு, அவனை ஒரு தாழ்த்தப்பட்ட இளைஞனாய் சூழ உள்ள ஆதிக்க சக்தி மேலெழும்ப விடாமல் கீழ் நோக்கி இழுத்துக்கொண்டிருக்கின்றது. ஆதிக்கசாதி ஆசிரியர்களால் இருப்பு காயப்படும் பெரும்பாலான நேரங்களில் அதிகாரமிகு பல்கலைக்கழக சாதியச் சூழல் அவனொத்தவர்களது இருப்பை கீழே விழுத்தவும் ரோகித் வெமுலாக்கள் (Rohith Vemula) போல தற்கொலையை தூண்டவுமே அதிகமான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. இருந்தும் அமெரிக்காவின் பல்கலைக்கழக வளாகமொன்றில் தன்மீதான வன்முறையின் பாரத்தை தானே சுமந்து திரிந்த எமா சுல்கோவிச் என்கிற பெண்போல் பரியன் இப்பாரத்தை சுமந்தவாறு கீழிருந்து எழுகின்ற ஒருத்தன்.
**Emma Sulkowicz**
முதலாமாண்டில் அவளிருந்த பல்கலைக்கழக விடுதியில் எமா நன்கறிந்த சக மாணவனொருவனால் பாலியல் பலாத்காரப்படுத்தப்படுகின்றாள். இளைஞன் யாரென்பது உட்பட தனக்கு நேர்ந்த வன்முறையை அவள் வெளியே கொண்டு வந்தபோதும் அப் பல்கலைக்கழகமோ நியூயோர்க் காவல் துறையினரோ சாட்சிகள் அற்று கேசை எடுக்காது தள்ளி விட்டுவிட்டார்கள். அவள்மீது வன்முறை செய்தவனுக்கு எந்த தண்டனையும் இல்லாது அவனும் ஒரே பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்க அவள் தன்னுடைய இறுதியாண்டுவரை ஒரு எதிர்ப்பாக தோள்களில் மெத்தையைச் சுமந்து வகுப்புகளுக்குப் போய்க்கொண்டும் பின்னர் பட்டம் பெறும்வரையும் அதைக் சுமந்துகொண்டு போனாள். இதனால் மெத்தை பெண் (mattress woman) என்று அறியப்பட்டாள். அதனுடன் தன் அநுபவத்தையே தனது இறுதியாண்டு ஆய்வாக எழுதி, நிகழ்த்தி தனது உடல் மீதமான வன்முறையை கவனம் பெற வைத்தவள். குற்றவாளிகள் தம் வாழ்வை வாழ, அவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் சுமையை சுமந்தபடி கற்பதும் அந்தச் சுமையை தம்முயற்சியில் மட்டும் கடந்தும் போவதென்பது அத்தனை சுலபமானதில்லை. அதற்காக அவர்கள் ஒவ்வொரு நிமிடமும் போராடவேண்டி இருக்கும். போராடிக் கிடைக்கின்ற தீர்வென்பது வெறுமனே வெற்றிக் கதையுமில்லை. அதில் அவர்களைத் தாமாக வாழவிடாத, அவர்கள் இழந்த ஒவ்வொரு நாளின் துயர் மறைந்து கிடக்கின்றதென்பதை மறுக்க முடியாது. அத்துடன் எந்த தீர்வும் மெத்தையுடன் அலைந்த இளம்பெண்னொருவளின் பல்கலைக்கழக நினைவில் எதையும் தரப் போவதில்லை. குற்றத்தை நிகழ்த்தியவர்கள் குற்றத்தை நிகழ்த்திவிட்டு எந்த தண்டனையுமின்றி கல்வி கற்கையில் பல்கலைக்கழகம் அக்குற்றத்திற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காது திரும்பவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மெத்தையை சுமக்கின்ற தண்டனையை வழங்குகின்றது.
பரியும் அவளைப் போன்றே சூழவும் உள்ள வன்முறையுள் நசுங்கிவிடாது தன்னை நகர்த்திச் செல்ல அவன் ஆயிரம் மெத்தைகளை சுமப்பவனாகின்றான். தனக்குப் பிடித்த பெண் முதல், ஆசிரியர்கள்வரை எல்லோரிடமும் தன்னை பகிராது தனித்துப் பயணிக்கின்றான். எமாக்களைப் போலவே அவனுடைய வாழ்வில் அவன் சந்திக்கின்ற வன்முறை — அதற்கெதிராக விடாத அவனது போராட்டம் அவனுக்கு கல்வியை நிச்சயம் வழங்கும். ஆனால் பெரும்பான்மையானவர்களைப்போல பல்கலைக்கழகத்தை அதன் காலத்தை இனிய நினைவாக கொண்டாட முடியாது. அது, பின்னால் வருகின்றவர்களுக்கு பல்கலைக்கழகத்தை அநுபவித்து வாழக்கூடிய இடமாக்கும். அது மட்டுமே தொடர் போராட்டத்துக்கான பரிசு.
***
“குற்றத்தை நிகழ்த்தியவர்கள் குற்றத்தை நிகழ்த்திவிட்டு எந்த தண்டனையுமின்றி கல்வி கற்கையில் பல்கலைக்கழகம் அக்குற்றத்திற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காது திரும்பவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மெத்தையை சுமக்கின்ற தண்டனையை வழங்குகின்றது.”
***
பரி (கதிர்) கொண்டுவருகின்ற innocence – வெகுளித்தனம் – வயதான பழக்கப்பட்ட நடிகர்களிடமிருந்து வந்திருக்க முடியாது. அதுவே பார்வையாளரை அப்பாத்திரத்துடன் இணைய வைக்கிறது. அவனைத் தோற்கடித்து விடுவார்களோ எனப் பயம்கொள்ள வைக்கிறது. படிக்கின்ற இளைஞர்களைப்பற்றி அதுவும் அவர் பெண்களை நெருங்க முனையாது தம் பாட்டுக்கு இருக்கின்ற இளைஞர்கள் மீதில் எப்போதும் சமூதாயத்தில் மரியாதையுண்டு. இதனால் அவனுக்கு நடக்கின்ற வன்முறை பார்வையாளர்களுள் நுழைகின்றது. அது அக் குட்டையுள் தன் நாயைக் குளிப்பாட்டிக் கொண்டிருக்கின்ற நண்பர்களுடனான அரட்டையிலிருந்து “கறுப்பி’யைக் காணவில்லை என்கின்ற பதட்டம்வரை படர்ந்து அவன் உலகம் பார்வையாளர்களுக்கு பரிச்சயமானதாக மாறுகின்றது.
இங்கு ஏன் பிரதிநிதித்துவம் அவசியம் என்றால் தன்;னைப் போன்ற ஒருவர் என்று உணர… பெருமிதம் கொள்ள… தன்னை தன் சுயத்தை கொல்கின்ற சூழலிருந்து ஒதுங்கி தன்னை உயிர்ப்பித்துக்கொள்ள, தனக்கென்றிருக்கின்ற வாழ்வுமுறையை பூரணமாக்க இது அவசியமாகின்றது. இதுவேதான் மாற்று முயற்சிகளில் கறுத்தப் பெண்களை திரையில் காணாமல் போகின்ற சமயங்களில் சலிப்பை உண்டாக்குகின்றது. ஆண்களை மட்டும் கருப்பென்றும் அழகென்றும் காட்டுகின்ற சினிமாவில் கருத்தப் பெண்களை கண்ணுக்குத் தெரியாதவர்களாக ஆக்கிவிடுகின்றார்கள். இங்கிருந்து தான் கதாநாயகி ஜோதி மகாலக்சுமி வெள்ளையாக இருப்பதும் தேவதையாகுவதும் சிக்கலாகின்றது. பரியனைப் போலவே கல்லூரிக்கு கிராமங்களிலிருந்து படிக்க வந்த திராவிட, கறுத்தப் பெண்கள் யாரைத் திரையில் காண்பார்கள்? யாரில் தம்மை உணர்வார்கள்? எது அவர்களை அவர்களின் மீதமாக நிகழ்த்தப்படுகின்ற நிற வன்முறையிலிருந்து நகர்த்தும்?
தகப்பன்கள் – மகள்கள்
இப்படத்தை இரு தடவைகள் பார்த்தேன். முதலாவதாக நண்பிகளுடனும் இரண்டாவது தடவையாக அப்பாவுடனும். முதலில் பெரிய வித்தியாசமில்லாமல் ஒரே இடத்திலே முரண்பட்டு நின்றோம். அது: ஜோதி மகாலக்சுமி என்கின்ற ‘ஜோ.’ வன்முறையான சூழலில் வன்முறையறியாது “தேவதை’யாக ஒரு பெண் இருப்பதென்பது வன்முறையாகவே எமக்குப் பட்டது. ஆணாதிக்கச் சமூகத்தில் பாதிப்படையாத பெண்ணாக இருப்பது யாராக இருக்கமுடியும்? அப்படிப் பாதிப்பற்று ஒருவரால் இருக்கமுடியுமா? சாதியச் சமூகத்தில் சாதியற்று ஒரு பெண் இருப்பதென்பது சாத்தியமா… மிதிக்கின்ற சமூகத்தில் மிதி வாங்குகின்ற பெண்களால் மற்றவர் பற்றி யோசிக்காமல் இருக்க முடியாது. சாதியற்ற குடும்பங்களில் சாதியற்ற பிள்ளைகள் வளர்ப்பதே பெரும் சவாலாக இருக்கையில், சாதியக் குடும்பத்தில் சாதியத்தை அறியாத பெண்ணாக ஜோ இருப்பது எப்படிச் சாத்தியம்?
இரண்டாவது தடவையாக அப்பாவுடன் பார்த்தபோது அவருக்கு அப்பெண்ணின் கனவு சிதையாது அவள் அதே குழந்தையாக புறச்சூழல் பாதியாமல் இருப்பது முக்கியமானதாக இருந்தது. அவருடைய எண்ணத்தில் எல்லோரும் அவரவர் இயல்புடன் வாழ வேண்டும். அவனுடைய அழகான வாழ்வும் அவளைப் போன்றதே ஆனால் அது சிதைக்கப்படுகின்றது. சிதையாமல் இருக்கின்ற அவள் உலகு குழந்தைத்தனம் நிரம்பியதாய் இருக்கின்றது. அவ் அழகைச் சொல்லவே அந்த binary எனவும், தந்தையாய் குழந்தைகள் உலகு சிதைவதைக் காணமுடியாது – அச்சிதைவையும் மீறி எழுகின்ற நம்பிக்கை அவருக்கு முககியமானதாகப்பட்டது. அப்போது மாரி செல்வராஜ் ஒரு தகப்பனாக இப்படத்தை எடுத்ததாகப்பட்டது.
தலித் சினிமா
தமிழ்ச் சினிமாவைப் பொறுத்தவரை பெரும்பாலும் அதை பிரதிநிதித்துவப்படுத்துகின்றவர்கள் ஆதிக்க + இடைநிலைச் சாதியைச் சேர்ந்தவர்களாகவே இருக்கின்றார்கள். அதனால் திரைப்படங்களும் அவர்களையே பிரதிபலிக்கின்றன. இல்லாது போயின் ‘அசுரன்’ போன்று சாதியை விட்டு, வர்க்க ஒடுக்குமுறையோ மதவேறுபாடோ முதன்மை கொள்ளப்படும். ‘பரியேறும் பெருமாள்’ போன்ற திரைப்படங்கள் தலித் வாழ்வுமுறையைக் காணவும் அதுசார்ந்த கற்பிதங்களை – அதாவது இந்த இடங்களில் இந்தச் சாதியிலிருந்து வருகின்றவர்கள் வன்முறையாகவோ, கல்வியறிவற்றவர்களாக இருப்பார்கள் என்கின்ற மையக் கருத்தைத் தகர்த்துகின்றது. அதைவிடவும் அவர்கள் வாழ்வு எப்படி ஒரு தடிமேல் நடப்பது போன்றதென்பதை அழுத்தச் சொல்கின்றது. தொடர்ச்சியாக தலித் திரைப்படங்கள் தொண்ணூறுகளில் தமிழில் வெளிப்படத்தொடங்கிய தலித் இலக்கிய தாக்கத்தை சினிமாவில் ஏற்படுத்தவும் அதனுள் பல குரல்கள் எழவும் காரணமாக அமைவதற்கு ரஞ்சித்-மாரிசெல்வராஜ் கூட்டணியில் வந்த இத்திரைப்படமும் இனிவரப்போகும் தலித் சினிமா மொழியின் முன்னோட்டமாக இருக்கும். சினிமாவில் தலித்துக்கள், பெண்கள், முஸ்லிம்கள், சமபாலுறவாளர்கள். மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கென இருக்கின்ற திட்டவட்டமான கட்டமைக்கப்பட்ட இயல்புகள் (constructed behaviours) தகர்க்கப்படுவதூடாகத்தான் விரும்புகின்ற பெண்ணையோ ஆணையோ தேருகிற, தமக்கான தேர்வுகளை எடுக்க முடிகின்ற, தாம் விரும்பியதை படிக்கின்ற சாதி/ மத/நிறமற்ற நீதிமிக்க சூழலை உருவாக்க முடியும்.
- தான்யா