‘அங்கிருந்தவர்’ – ஓற்றோ டிக்ஸ் சிறு அறிமுகம்
someone who was there.
வில்ஹேம் ஹைன்றிச் ஓற்றோ டிக்ஸ் | Wilhelm Heinrich Otto Dix [1891 – 1969]
ஜேர்மனிய ஓவியரான வில்ஹேம் ஹைன்றிச் ஓற்றோ டிக்ஸ் அவர்களது வாழ்க்கைக்காலம் ஜேர்மனியின் பல முக்கிய வரலாற்று நிகழ்வுகளை உள்ளடக்கியது. முதலாம், இரண்டாம் உலக யுத்தங்கள், யுத்த வீழ்ச்சியின் பின்னான ஜேர்மனியின் பிளவு வரையிலும் அவர் அங்கு வாழ்ந்திருந்திருக்கிறார். இதனால் அழிவுமிகுந்த அக்காலகட்டங்களில் வாழ்ந்ததன் பிரதிபலிப்பை அவரது ஓவியங்களெங்கிலும் எதிரொலிக்கக் காணலாம்.
கலை இயக்கங்களுள் குறிப்பாக German Expressionism உடன் தொடர்புபடுத்தப்படும் அவரது ஓவியங்களில் அனேகமானவை ஒரு பீரங்கி சுடுநராக, இயந்திர துப்பாக்கியை இயக்கியவராக யுத்தமுனையில் அவரிருந்து பெற்ற நான்காண்டு அனுபவத்திலிருந்து எழுந்தவை. மனித இழப்புகளை பேரழிவை அர்த்தமற்ற வன்முறைகளது பலாபலனை அங்கே அவர் கண்டார் – அவ்வனுபவங்களையே பின்னர் அவநம்பிக்கைகளின் கட்புல வெளிப்பாடுகளாக மொழிபெயர்த்தார்.
போர்தொடங்கிய பத்தாண்டுகளுக்குப் பின் அதன் நினைவாக அவர் படைத்த ‘போர்” என்கின்ற 50 படைப்புகள் யுத்தமுனையில் அவர் கண்ட – மரணத்தை, செத்துக்கொண்டிருத்தலை, ஷெல்-அதிர்ச்சிக்குள்ளான சிப்பாய்களை, ஷெல்லடிகளில் சிதறிய நிலப்பரப்புகளை, மண்ணில் அது ஏற்படுத்திய பள்ளங்களை, கல்லறைகளை – அக் கோரக் காட்சிகளை தத்ரூபமாய் வெளிப்படுத்தின. யுத்தத்தின் புகழ்பாடவோ சிப்பாய்களை மகாவீரர்களாக காட்டுவதற்கோ மாறாக அந்த ஐம்பது ஓவியங்களிலும் அத்தகைய ஒரு சூழலின் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட கொடிய யதார்த்தத்தை படைப்பதே அவரது இலக்காகவிருந்தது. நேரடியாக அங்கிருந்து அதை – யுத்தத்தின் சிதைவை – கண்கூடக் கண்ட ஒருவராக, எப்போதும் அவர் போர் அகழிகளிலும் ஒவ்வொரு சண்டைக்கும் பின்னருமான விளைவுகளை வரைவதிலேயே கவனம் செலுத்தினார். தப்பித் தவறி யுத்தமுனை காட்சிப்படுத்தப்படின் அங்கே சாவின் அல்லது அழிவின் நடனம்தான் இருந்ததேயன்றி வேறெந்த வீர பிரதாபங்களுமில்லை.
போரில் கண்ட காட்சிகளால் மிக ஆழமாகப் பாதிக்கப்பட்டிருந்த அவர் சிதிலமடைந்த வீடுகளுக்குள்ளால் தான் தவண்டு தவண்டு வரும் தொடர் கனவொன்று தன்னை தொடர்ந்து வந்து அலைக்கழிப்பதாக ஒருமுறை கூறினார். அவரது யுத்தகால ஓவியங்கள் முழுக்கவும் அவரிடத்தில் கொடுங்கனவுகளை தரவல்ல அவரதேயான போர் நினைவுகளை அடிப்படையாய் கொண்டு ஆக்கப்பட்டவையே. ஏனையவை கிடைத்த அரிதான போர்முனைப் புகைப்படங்களையும் – குறிப்பாக போர்ப் புகைப்படங்களது சுழற்சி போரின் வீச்சைக் குறைக்கும் என்பதால் பொதுநபர்களுக்குத் தடைசெய்யப்பட்டிருந்த காலம் அது – அடிநிலக் கல்லறைகளையும் அடிப்படையாய்க்கொண்டு படைக்கப்பட்டன. சாவின் முன் பின் நொடிகள் – செத்தவர்களுள் இருத்தல், அகழிகளுள் அழுகும் பிணங்களுடன் இருத்தல் என உயிரின் சிதைவு மீண்டும் மீண்டும் அவரது படைப்புகளைச் சூழ்ந்திருக்கின்றது. குறிப்பாக உடல்களின்/சூழலின் சிதைவை தத்ரூபமாக்க etchings, aquatints, drypoints போன்ற உத்திகளை உபயோகித்திருப்பார்.
முதலாம் உலக யுத்தத்துக்குப் பின்பான உருவக ஓவியங்களிலும் சற்றே கேலிப்பாணியை கடப்பிடிக்கும் ஒவியங்களை தந்திருந்தாலும் Die Skatspieler (Skat Players)போன்ற ஓவியங்களில் மீண்டும் யுத்தத்தின் கோரத்தையே கொண்டுவருகிறார். இந்த ஓவியத்தில் முதலாம் உலக யுத்தத்தின் முன்னாள் சிப்பாய்கள் சீட்டு விளையாடியபடி வரையப்பட்டிருப்பார்கள். யுத்தம் சிதைத்த அவர்களது உடல்பாகங்களை மறைப்பற்று வலியுறுத்துமுகமாய் அவர்களது துண்டிக்கப்பட்ட மற்றும் செயற்கை அங்கங்கள் முன்னிறுத்தப்பட்டு வெகுவாய் சிதைந்த தோற்றத்தில் அவர்கள் காணப்படுவர். மனிதச் சதையதும் செயற்கை அங்கங்களதும் ஒரு கலப்பாக அந்த உருக்குலைந்த முன்னாள் சிப்பாய்கள் பேரழிவுகரமான யுத்தத்தின் விளைவையே கண்முன் கொண்டுவருவர்.
சொல்லப் போயின் டிக்ஸ் போரினை மூன்றாம் நபராக பார்க்க முடியாதவாறு அவர் அங்கிருந்தவராக இருந்தார். அது கண்முன் நிகழ்ந்தது, அதற்கென எந்த நியாயத்தையும் வழங்கவியலாத சிதைவுடன்.
முழுப் படைப்புகளையும் காணலாம் இங்கே!
Posted on: July 31, 2020, by : admin