4. உடைவுற்ற கண்ணாடியில் தோன்ற மறுத்துச் சிதறிபோயிற்று பல முகங்களென உருவெடுத்த சினமூறிப் பொருமிய உன் சிறு வதனம் முன்னொருபோதில் என் கனவுகளில் கிளர்ச்சியுற்று பேரிரைச்சல் பொங்கிற்று வாவென வருந்தியழைத்தது காடு இப்போது நுரை நலிந்து போயிற்று சேறும் சகதியுமாய் வாழ்தலின் சாத்தியங்களைக் கரைத்து மவுனங் கொண்டுள்ளது இந்தக் கிழநிலம் நெடும்பாதையெங்கும் துயர்செறிய தேடித்திரிந்தேன் கருமிதழ் சொரியும் முத்தங்களும் எச்சில் துளிகளும் அன்றிக் காய்ந்துபோயிற்று நினைவூறித் திரும்பல் கொள்கையில் தென்பட்டதென்னவோ கருக்கு மட்டைகளுக்கடியில் விரிகிற மசுக்குட்டிகளால் கட்டுண்டவொரு சிறு உலகம். 0
5. வானமற்று இறங்கி வந்தது நிலவு கடும்பனியில் இலைகளற்று வரண்ட கிளைகளை உரசித் தவித்திற்று காற்று கூடல் முடிந்து இறக்கைகளைத் தெருவெங்கும் உதிர்த்துச் செல்கின்றன இந்தப் பறவைகள் முறுகிய பனிப்பாளங்களின்மீது வழுவிச் செல்கிறது என் நிலவு கோடைகாலம்வரை பூக்கள் சொரிந்திருந்தது நிலம் கனவூதிப்பருத்திருந்தது காலம் கன்னங்கள் சுருக்கமுற்று கடும்வலியின் தகிப்பு வன்மம் மிகுந்துருகும் உன் நினைவுகள் கிளர்ந்தெழுதலின் முன் நெரிந்து போயிற்று நிலவு நம் பிரிதலின் கண நேரத்தின் பின். 0
6. வர்ணங்களன்றிக் கோடுகள் நெரிந்தன பெருங்கவனமாக உணர்விக்கப்படுகிறாள் தியானத்தின் முதற் கால்சுவடுகள் தழுவும் ஆளுமையின் அதியுச்சம் மலையுடைத்து அவ்வெளியில் செல்கிறது ஆளரவமற்றவொரு அதிசயப்பாதை பிடியிறுக முதலில் தெரிந்தது சிவப்பு பின்னர் ஒளியுமிழும் தங்க நிறம் வர்ணக்கிழைவில் வனப்புற்றதெனதுடல் பின் ஒளிர் நீலம் உறிஞ்சிற்று கருநீல உதடுகளின் கடுமையின் பின் குறிஞ்சா இலைக்களியினுள் இதமான புதைவு ஊதாவின் கடுமையில் கனன்று உளறியது தெரிந்தது கோடையின் மல்லிகை மணத்தது சந்தனமும் திருநீறும் எதுவெனக் கேட்டேன் கன்னக்கதுப்பில் இழைந்து சிரித்தாய் உறக்கம்போல் மயங்கித் தணிகையில் ஒருக்களித்தென்னில் ஆழமாய்ப்புதைந்திருந்தாய் நீ. 0