கவிதைகள் 7 – 9

 7
மிக ஆழ்ந்ததூக்கத்தில்
எழுகிறது
அந்த நுண்விழிப்பு
கடும் துக்கத்தின் ஆழத்தில்
சுனையெனப்
பெருகிச் செல்கையில்
மகிழ்வின் குமிழ்கள்
உரசிச் செல்லும்
உன் உரையாடல்கள்
ஒலியற்றவை
மிகப்பிடிவாதமாகப்
புறந்தள்ளுபவை
கடும் நாட்கள்கொண்ட
கோடைகாலத்தில்
இடிமின்னிப் பிரியும்
சிறு தொலைவில்
அவள்
துயருற்றுருகுவாள்
சலிப்பற்றவளே
கறுப்புத்தேனீர் உண்டு
பிதற்றித்திரிபவளே
கடந்து போ
முறுகிய மாலை நேரங்களில்
அவள் கண்களிலிருந்து
ஏதொவொன்று
பசிதீர்க்கப் புறப்பட்டது
போலப்
பெருகித் தீர்க்கும்
சரியேதுமற்ற
பிழையேதுமற்ற
கணப்பொழுதுகளில்
ஒரு சன்னதத்தைத் தவிர்க்கத்
திராணியற்றுதிரும்
துயரே
உன்னை
எழுதிச் செல்கிறேன்
வெறும்பாடலை அவள்
பாடும் பொருட்டு
0

 
 
8
உனக்கு
ஒளி கிளர்ந்தால்
இங்கே நிலவுதிரும்
பனிக்காலம்
'உம்'கொட்டுதலில்
அதீதப்பிரயத்தனம்
சொற்களைப்பற்றிக்
குறைகூறுகிறாய்
இவை
உன்னுடனான
குறைந்தபட்சத் தொடர்பு
சொற்களுக்கப்பால்
ஒரு வெளியுண்டு
விரவிப்பரவும் வலியுடன்
காயப்படும்
காயப்படுத்தும்
குற்றமற்ற வார்த்தைகள்
உன் கர்வத்தால்
அவை சிறிது
நஞ்சூட்டப்படுபவை
உருவழியா
என் அறைவாயில்
ஒளி ஓவியமே
பொறுத்துக்கொள்
உனைத் தீண்ட மறுத்து
புறந்தள்ளும்
கடினமனத்தினள் இவள்
0


9
கொடுஞ்சொற்கள்
முடிவேயற்றுப்போன
குற்றம் சுமத்துதல்
விவரிக்கத்
திராணியற்றவள்
சம்பவங்களை
மறந்து போகிறவள்
உனது வியூகங்களில்
ஒவ்வொருமுறையும்
இடறி விழுகிறேன்
நெடுவழியெங்கும்
ஒரு யுத்தத்துக்காகத்
தயார்ப்படுத்தப்படவில்லை
கடும் கோபக்காரனே
ஒளியற்ற தேவனே
கண்ணீர் உமிழ்பவளை
ஏன்
காதலின்றிப் புணர்கிறாய்
மடி தழுவி
மலையுருகும்
அப்
பெரு நதி கடந்தவள்
பிரிந்து போகட்டும்
தூரமானது
என்றும்
துயரமானது
0

- மைதிலி
மாசி 2018
Posted on: August 1, 2020, by :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *