ஆமைகளின் காலம்

எல்லாவற்றையும் 
உள்ளிழுத்துக் கொள்கிற சடுதிச் செயல் 
பூர்த்தியாகும் முன்பே 
சட்டென்றொரு கெக்கலிப்புடன்  
வெளியே கிளம்புகிறது மனச்சாட்சி

ஆமையாவதன் அவசியம் குறித்து 
சொல்லித் தரப்படுகிறது 
ஆமைகளே 
எப்போதும் வெற்றி பெறுகின்றன என்கிறார்கள்
 
காத்திருக்க வேண்டும். 

நீங்கள் 
பந்தயத்தின் வெற்றிக்காக 
பயிற்சியில் ஈடுபடவேண்டாம்
மாறாக
முயல் தூங்குவதற்காக காத்திருக்கத் 
தெரிந்து கொள்ளுங்கள்
அல்லது
முயலைப் புகழ்ந்து பாடுவது
விரும்பத்தக்கது
இல்லையெனில் அவதூறு செய்யலாம்
எல்லாவற்றிலும் 
ஆகச்சிறந்ததாய் 
நகரும் எல்லைக்கோடுகளை 
ஆட்டவிதிகளிலொன்றாய்ச் சேர்த்துக்கொள்ளுங்கள் 

நான் அவதூற்றிலிருந்தே தொடங்கினேன்
முதலில் மனச்சாட்சியின் மூக்கை பொத்தினேன்
பொங்கும் குரூரத்துடன் 
அதன் திணறலை ரசித்தபடி 
மெல்ல மெல்ல ஆமையாகினேன்.
0

த.அகிலன்
January 2020
Posted on: August 16, 2020, by :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *