Reviews

  1. உயிர்

_____________________________________________________________________

தமிழின் மிக முக்கிய எழுத்தாளர்களுள் ஒருவரும் சமூக அரசியல் செயற்பாட்டாளருமான ப.சிவகாமியின் சமீபத்திய நாவல் “உயிர்” (2016, அணங்கு பதிப்பகம்). அது: ஆட்கள் ஒருவனைத் தேடி வருவதிலும், ‘தாழ்வாரமும் வீடும் இருளில் மூழ்கியிருந்ததால், கதவைத் திறந்த நபரை அவனாலும் அவர்களாலும் அடையாளங் காணும் முன்பே ஈரக்குலையில்’ செருகிய ஈட்டியினால் எழுந்த அலறலில் அவன் தவறானவன் எனக் கண்டு அவர்கள் பின்வாங்கி தாம் தேடி வந்தவனை பிடிக்க அவ் வீட்டின் பின்புறம் செல்வதிலும் தொடங்குகிறது. கிணற்றின் சுற்றுப்பாரில் தன் மனைவி, குழந்தைகளுடன் அச்சத்துடன் ஒளிந்திருந்த அத் தேடி வந்தவனை காணாததால் ஆத்திரமடைகின்ற அவர்கள், பாதையில் வந்த வேறொருவன் அவனைத் தப்பிக்க வைத்தவனாய் இருக்கலாமென்று அவனை வெட்டிச்சாய்க்கின்றனர். இவ்வாறாய் நாவலின் தொடக்கமே எம்மேல் இரத்தத்தைத் தெளித்து, அங்கே – அந்த நடக்காத கொலை ஏற்படுத்திய நடக்கப்போகிற வன்முறைகளுக்கான முன்னோட்டம் – பதட்டம் – நாவலின் பக்கங்களைப் படபடக்க வைக்கிறது.

மனிதர்கள் உட்பட – எமைச் சூழவும் சகல உயிரினங்களும் உயிர் வாழவே இறுதி மூச்சுவரையும் முயலுகின்றன. வாழ்வின் நெருக்குதல்கள் நகுலன் எழுதியது போல,
“வாழ்வதற்கென்றுதான் வருகிறோம்
வாழாமல் போகிறோம்” எனும் நிலைக்குள் தள்ளப்படினும் உயிர்காவிகளாகவே நாம் திரிகிறோம். உயிர் பலம்மிகுந்தவர்களுக்கு பாதுகாப்பின் உத்தரவாதம் நிரம்பியதாக இருக்க ஒடுக்கப்படும் சமூகங்கள் அதற்கான உத்தரவாதமற்று உயிர்காக்க ஓடுகின்றன.

அந்தவகையில் நிலம் – தலித் அரசியலில் முக்கிய பங்காற்றுகிற ஒன்று. நிலம் இருப்பவர்கள் நிலம் இல்லாதவர்களை தமக்கு பிரச்சினையானவர்களை வெட்டிச்சாய்க்கவும் ஒரோருவர் ஒற்றுமையாய் தமக்கெதிராய் வேலை செய்யாமலிருக்கப் பார்த்துக்கொள்வதிலும் கவனமாய் இருக்கிறார்கள். காய்களைக் கவனமாக நகர்த்துகிறார்கள். இருப்பினும் தலித்துகளை அடிமைகளாகவே வைத்திருக்க எண்ணும் ஒடுக்கும் ஜாதிகளின் சதித்திட்டங்களால் வெட்டிச் சாய்க்கப்படுவதாக மட்டுமன்றி, கவனமான காய் நகர்த்தல்கள் தாண்டியும், எந்த சமிக்ஞையும் தாராது உயிர் சட்டெனப் போய்விடுகின்ற வாழ்வின் முரண்நகையையும் நாவல் சொல்லிப் போகின்றது.

எம்மிடம் நாவலின் முன்பக்கங்களில் ஆசிரியரால் ஏற்படுத்தப்பட்ட பதட்டநிலையும் பதைபதைப்பும் பின்பகுதிகளில் சாதிய கட்டுமானத்தில் மேல்நிலையிலுள்ள சமூகங்களுள் அடுத்த தலைமுறை மனநிலைகளில் -வெளிநாட்டுவாசம், கல்வி என்பவற்றினால் – ஏற்படுகிற மாற்றங்கள் குறித்து விரிவாய் பேசப்படுவதில் தொய்வடைகின்றது. ஒடுக்குகின்ற தரப்பின் உளவியல் அலசப்படுவதில் தவறில்லை. ஆனால் இந் நாவலில் அது பலகீனமான பகுதியாகப் பட்டது. ஏனெனில் சிவகாமியே ஒரு நேர்காணலில் குறிப்பிட்டதுபோல நவீன காலங்களுக்குத் தகவாய் பாகுபாடுகள் தமது நிறங்களை மாற்றிக்கொள்கின்றனவே (Discrimination changes its colour according to modern times) தவிர சாதிய மனநிலை படித்த கல்வியால் பல்தேசம் செல்வதால் மாற்றத்துக்குள்ளாவதாய் தெரியவில்லை. வெவ்வேறு வடிவங்கள் எடுத்து சாதி தன்னைத் தக்கவைத்துக்கொள்வதையே காணக் கூடியதாய் உள்ளது. ஆனால் கதையில் வருகின்றவற்றில் ஒடுக்கப்படும் சமூகங்கள் தரப்பில் இவர்களை நம்பி வாழவேண்டிய தேவை குறைந்துகொண்டு வருவதும், “வீட்டு வேலைக்கு ஆள் பிடிக்க முடியேல்ல இப்பவெல்லாம்” என்பதான மேட்டிமையின் புலம்பல்களும் மாறும் காலங்களின் சாட்சிகளாய்ப் பதிவாகின்றன.

ஐ.ஏ.எஸ் பணியிலிருந்து பணிஓய்வுபெற்ற சிவகாமி, எழுத்து மட்டுமன்றி பல்வேறுபட்ட சமூக அசைவியக்கங்களிலும் தொடர்ந்தும் ஈடுபட்டு வருபவர். அவரது படைப்புகள் கிராமிய நகரப் பெண்களது நிலை, சாதிய ஒடுக்குமுறை, சாதி குறித்த இளைஞர்களது மனப்பான்மைகள் (வேறுபடுகின்றதா?) போன்றவற்றை சமூகநோக்குடன் கலைபாங்கு குறையாது அணுகியவை, அணுகுபவை. அத்துடன் அவர் எழுதத் தொடங்கிய ஆரம்பங்களிலிருந்தே ஒடுக்கப்படும் சமூகத்துள் இருக்கும் – தலித் பெண்கள்மேல் இரட்டை சுமையை அழுத்தும் – ஆணாதிக்கத்தையும் பேசியது உவப்பானதாக இருக்கவில்லை. சூழவும் தாம் காண்கிற உண்மைக்கு நேர்மையாய் இருத்தல் என்பதானது வரலாற்றில் கறுப்பின பெண்ணியவாதிகளையும் தமது ஆண்களின் எதிர்ப்பை எதிர்கொள்ள வைத்தது என்பதை இதனுடன் ஒத்ததாய் இங்கே குறிப்பிடலாம்.

P. Sivakami <3

பலவகையிலும் – “உயிர்” – சிவகாமியின் ஏனைய நாவல்களிலிருந்து வேறுபட்ட வாசிப்பனுபவத்தை தருகின்றது. இத்தகைய பலப்பல பிரதிகள் எழுதப்படுவதற்கான தேவை தமிழிலக்கிய சூழலில் இன்னும் நிறையவே உண்டு. இதுவரைகால் இலக்கிய சாம்பவான்களால் எழுதப்பட்ட ‘புனித” இலக்கியங்களது சாதிய-ஆணாதிக்க நெடியை கழுவும், முகமூடியை நீக்கும் வீச்சு அப்போதுதான் நிரந்தர சாத்தியமாகும்.

0

by பிரதீபாதி
_____________________________________________________________________

Posted on: August 19, 2020, by :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *