Generation Y Notes (1)
by Thanya
(1) முதல் சேலையும் மோகமுள் “ஜமுனாவும்”
அம்பாவுக்கு சேலைகட்டத் தெரியாது. அன்றுதான் முதல்முதலாக மேடை ஏறுவதற்காகத் தோழியைப் பிடித்து சேலைகட்டியிருந்தாள். அவள் மேடையிலிருந்து இறங்கியபோது தோழியின் அம்மா சொன்னார் “மோகமுள் ஜமுனா.” அப்போ அவளுக்கு பதினாறு வயது. பாபுவுக்கு ஜமுனாவில் அந்த வயதில்தான் காதல் ஏற்பட்டிருந்தது. அவளுக்கு ஞாபகமில்லை ஆனால் அந்நாவலைப் படித்திருந்தாள். அவளுக்கு சேலையையும் மெலிவையும் ஒற்றைப் பின்னலையும் தவிர வேறெதுவும் ஜமுனாவிடன் பொருந்தியதாய் இருக்கவில்லை. அப்படி அவளைப் பார்ப்பது எரிச்சலாகவும் இருந்தது. அவள் தனக்கென ஒரு இயல்புத்தன்மையைக் கொண்டிருக்க விரும்பினாள், எவரோடும் ஒப்பிடாமல். அப்போ அவள் சார்ந்த சூழல் கதைமாந்தர்களை வைத்தே அதிகம் பேசினார்கள். ஆனாலும் ஜானகிராமனின் பிராமண பெண் உருவத்தின் உடலின் அழகியலரசியலுடன் இணைய அவள் விரும்பியதில்லை.
அவளுக்கு “மோகமுள்” ஒரு ஆணின் பார்வையூடாக பெண்ணை நுகர்கின்ற கதையாகவே இருந்தது. வயது வந்த பெண்களை அவள்களின் விருப்பமின்றி தொடர்கின்ற ஆண்கள் அவள் வயதுக்கு பழக்கமற்ற போதும், அது அவளை அக்கதையிலிருந்து விடுபட்டுப் பார்க்க வைத்தது. பாபு ஜமுனாவுக்காக உருகியும் தொடர்ந்தும் கொண்டிருக்க ஜமுனாவோ இதற்குள் ஒட்டிக் கொள்ளாமல் தனித்திருந்தாள். அவள் உணர்வென்ன..? பக்கத்து வீட்டில் அழகிய இளம் மனைவியை – கங்காவை (?) – வைத்துப் பூட்டிவிட்டுப் போகின்ற கணவனைப்போல நாவலில் ஜானகிராமன் ஜமுனாவின் உணர்ச்சிகளை பூட்டி வைத்திருந்தார். பூட்டுக்குள் இருக்கின்ற கங்காவுக்குக்கூட தனக்கு என்ன வேண்டும் என்பது தெரிந்திருந்தது. ஜமுனாவுக்கு அப்படியேதும் பூட்டுக்கள் இல்லாத போதும் அவள் உணர்ச்சிகள் ஜானகிராமனால் பூட்டப்பட்டிருந்தன, அவளின் விருப்பங்களுக்கெதிராக. தனக்கு விரும்பியதை தொடர்கின்ற கங்காவுக்கு பூட்டு அவளுடைய கணவர் ரங்கண்ணா என்றால் ஜமுனாவுக்கு பூட்டு யார் போட்டது? பாபு அவளைவிட ஒன்பது வயது குறைந்தவன். அவள் அவனை குழந்தையிலிருந்து தூக்கி விளையாடியதாலும் பழகியதாலும் அவளுக்கு அவன் சின்னவனாகவே இருக்கின்றான், அது பாபுவின் தொடர்காதலாலும் மாறமலிருந்தது. பாபு சங்;கீதத்தில் முழுமையாய் வித்துவம் அடையவோ தன்னை அர்ப்பணிக்கவோ முடியாது ஜமுனாவில் மீதமான மோகத்தால் தன்னை இழந்து கொண்டிருந்தான். அவனது மோகம் அவனுடைய ‘அதி உன்னத’ கலையிலிருந்து அவனை அதலபாதாளத்துக்குள் இழுத்துக் கொண்டிருந்தது. அவனுடைய வாழ்வை அடைய, அவன் வெற்றி பெற ஜமுனா தன்னை அர்ப்பணிக்க வேண்டும், அவளுடைய தேர்வு அதுவாக இல்லாத போதும்! அதேசமயம் பக்கத்துவீட்டு இளம்பெண் கங்கா பாபுவின்மேல் மோகம் கொள்கின்றாள். அவளுடைய இருண்ட வாழ்விற்கு பாபுவின் மீதமான காதல் பெரும் ஒளியைப் பரப்புகின்றது. அவளை உள்ளே வைத்து பூட்டிப் போகின்ற கணவனை மீறி பாபுவைத் தொடர்கின்றாள். அவளுக்கும் பாபு இல்லையென்றால் வாழ்வதற்கான நம்பிக்கைகள் கிடையாது. ஆனால் அவள் வாழ பாபுவால் தன்னை அர்ப்பணிக்க முடியாது. வாழ்தல் சங்கீதத்தை விடவும் பெரிதல்லவா? இந்த முரண், யாருக்கானது வாழ்க்கை என்பதையும், இங்கு யாருடைய காதல்/காமம் பெரிதென்பதையும் மிகத் தெளிவாய் உணர்த்துகின்றது.
இவளை அந்த இரண்டாவது பெண்தான் இழுத்துக் கொண்டிருந்தாள். ஜமுனாக்கள் ஆண்களின் உருவாக்கங்கள். ஆண்;கள் பெரிதாக கருதுகின்ற ஒன்றை அடைய, தங்களை முன்னேற்ற, அவ்வளர்ச்சிக்குத் தங்களை அர்ப்பணிக்கக் கூடிய ஜமுனாக்கள் தேவையாக இருக்கின்றனர். உடல் புனிதத்தை கற்பைப் பற்றியது அல்ல தான். ஆனால் பெண் தன் உடலை யாருக்கும் தானம் கொடுக்க வேண்டியதில்லை. அவள் உடல் அவளுடையது. விரும்பியபோது அது தன் துணையைத் தேடும், விரும்பியபோது இணைந்தும் கொள்ளும். அது காதலாலோ அல்லது காமத்தாலோ கூட இருக்கலாம் ஆனால் அது யாருடைய காமத்தையும் நிவர்த்தி செய்ய அல்ல.
ஜானகிராமனின் பெண்கள் பெண்களுக்குரியதாக கணிக்கப்பட்ட வாழ்விலிருந்து மாறுபட்டவர்களாக இருப்பார்கள். “அம்மா வந்தாள்” – பிரதான பாத்திரம், பெரும் ஆளுமையாக, அகங்காரத்துடனும் தெளிவுடனும் உயர்ந்து நிப்பார். அலங்காரம் அம்மாவுக்கு எதைப் பற்றியும் யாரைப் பற்றியும் கவலைகள் கிடையாது. அவருக்குப் பிடித்த சிவசு அவர் வீட்டில் வந்து போவது கணவனுக்கோ பிள்ளைகளுக்கோ மருமகளுக்கோ தெரிவதைப்பற்றிய சிக்கல்கள் கிடையாது. ஆனால் அவருடைய அநுமதியில்லாது வீட்டுக்கு வருகின்ற சிவசுமேல் எரிச்சலடைகின்ற அலங்காரம் அம்மாள் தன் மகனுக்கு வேதம் படிப்பிப்பார், தன் பாவங்களைக் கழுவ. அது நடக்காது போனபோது காசிக்குப் போகின்றார். தன் வீட்டில் தன் அறையில் தான் விரும்பியவனுடன் இருக்கக்கூடிய பெண,; தன் உறவை “பாவமாக” பார்ப்பதென்பது அதில் முரணாக இருக்கின்றது. எழுத்தாளரது நாவல்கள் காமத்தைப் பேசினாலும் அதனூடாக அவர்கள் பாவம் செய்தவர்களாக அவர் பார்க்கின்றார். “மரப்பசு” அவர் அழகியலாக பெயர் வைத்தாலும் அது ஒரு கட்டை மாடு (மாட்டுக்கட்டை, பெட்டைநாய் போன்ற பதம்) என்பதுதான் அதன் அடித்தளம். அந்நாவலிலும் முப்பது வயதிலேயே அம்மணியை நரைவிழுந்த கிழவியாக்கி விடுவார். ஏனெனில் அவள் அதிக ஆண்களுடன் உறவு வைத்ததால் அவளுக்குத் கெதியாக முதுமை வந்துவிடும். இந்நாவல் எழுதப்பட்ட எழுபதுகள் தீவிரமான பெண்ணிய முன்னெடுப்புக்கள் எடுக்கப்பட்ட காலம். ஜமுனா தன்னைப் பாபுவிடம் பொருளெனக் கொடுப்பதும், அம்மணியை (முதியவள்) கிழவியாக்கியதும், அலங்காரம் அம்மாளைப் பாவங்களைக் கழிக்க காசிக்குப் அனுப்பியதும் அவர்களது இயல்பெனப் பின்னப்பட்டது – அக்கதைகளுக்குரியவர்களதான வாழ்வுக்கான தீர்விலிருந்து மாறுபட்டிருக்கும் அது – எழுத்தாளர் அவர்களுடைய அவர்களது வாழ்வுக்கான தீர்விலிருந்து வருகின்றது.
எனவே தான் திருமணமாகாத முப்பதுகளின் நடுவிலிருக்கின்ற பெண்ணுடல் வீணாகப் போவதைவிட பாபு என்கின்ற சாதிக்கப் பிறந்தவரிடம் ‘ஒப்படைப்பது’ அவருக்கு உன்னதமாக இருக்கின்றது. இதுவே அலங்காரம் அம்மாளுக்கும் பொருத்தமாகின்றது. விரும்பிய மாதிரி வாழ்ந்த பாவப்பட்ட உடலுக்கு புனிதமான கங்கை தேவைப்படுகின்றது, பாவத்தைக் கரைக்க. முதலாமவளோ உபயோகிக்காத துருப்பிடித்த உடலுக்குரிய பெண், ஏன் அவ்வுடல் வீணாகவேண்டும், (அதனால்) அது பரிசளிக்கப்படுகின்றது. அடுத்தவரோ உடலைப் பாவப்படுத்தியவர். ஒன்று உன்னத கலைஞனுக்குச் சமர்ப்பிக்கவும் இன்னொன்று காசியில் பாவத்தை தீர்க்கவும் அநுப்பிவைக்கப்படுகின்றது.
இக்கதைகள் அக்காலத்துக்குரிய இயல்பை மீறிய கதைகளாக பின்னப்பட்டாலும் இக்கதைகள் அக்காலத்தைய மரபை மீறாத எழுத்தாள மனத்தின் தீர்வுகளைக்கொண்ட படைப்புகளாகவே இருக்கின்றன. இப்படைப்புகளில் எல்லாக் காலத்துக்குமானதாக இருப்பது இதிலுள்ள மீறுகின்ற பெண் கதாபாத்திரங்கள். ஆனால் அவை பாவமாக்கப்பட்ட பெண் உடலிருந்து எழுப்பப்பட்டவை. . அவர்களது இந்தக் கதைகளூடாக ஜானகிராமன் எல்லாக்காலங்களிலும் வீடுகளுக்குள் மறைவாக நடக்கின்ற, குசுகுசுக்கின்ற கதைகளை வெளிக்கொணர்ந்து அதற்கான முடிவாக இவைக்கு வீடுகளில் பேசுகின்ற தண்டனைகளையே வழங்கியிருக்கின்றார். அக்காலத்தில் பொதுவெளியில் பேச விரும்பாத கதைகளை எடுத்தாண்டபோதும் அக்காலத்துக்குரிய மரபிலிருந்து மாறுபடாதவையாகவே அவர் படைப்புக்கள் இருக்கின்றன.
Posted on: September 20, 2020, by : admin