எடுக்கப்படாத சுதந்திரம் (சிறுகதை)
|| ஜோஆன் நெஸில் ||
மாக் ஒரு பென்னம்பெரிய ஆண். பாலங்கள் கட்டுகிற, சதுர தாடையையுடைய, ஒரு பொறியியலாளர். பார்த்தால் பாலங்களை அவையவைக்குரிய இடத்தில் அடைந்துவிடக்கூடியவர் போன்றதொரு தோற்றம். அம்மா அருகினில் இருக்க ஒரு வருத்தக்காரனைப் போல எமது சாய்மனைக் கட்டிலில் அவர் அகண்டு படுத்திருந்தார். ஒரு நல்ல கௌரவமான வேலையில் இருக்கின்ற ஒருவர் தன்னை செவிமடுத்துக் கொண்டிருப்பது தொடர்பில் அம்மா திருப்திப்பட்டுக் கொண்டிருந்தாள் என்பது தெரிந்தது. அவருக்கு முன்னால் அமைதியாக நின்றவாறு, அவரது சப்பாத்தின் அடிப்பாகங்களையே பார்த்தவண்ணம், பதிலளித்துக் கொண்டிருந்த எனக்கு அங்கு தெரியாதவொரு பரீட்சையில் தேறுவதற்காக நான் வரவழைக்கப்பட்டிருந்தேன் என்பது தெரிந்திருந்தது. அவரது கேள்விகள் தொலைவிலிருந்து வருவதுபோல வந்துகொண்டிருந்தன. எனது குரல் அவரை அடைந்தது என்பதைத் தெரிவிக்க வெகு அரிதாகவே அவர் தனது தலையினை அசைத்தார். அப்போதில் எனக்குப் புரிந்தது என்னவெனில் அவர் ஒன்றும் வருத்தக்காரன் அல்ல. மாறாக, அவரை ஒரு அரசனைப்போல அசையாமல் வைத்திருந்த இரு பெண்களாகிய எம்மீதில் அவர்செலுத்திய அதிகாரம் அது. அவர் யார் என்பதோ எவ்வாறு அவர் எம்மீது இவ்வாறான அதிகாரத்தை கொண்டிருந்தார் என்பதோ எனக்குத் தெரிந்திருக்கவில்லை. அந்த எனது பதின்மூன்றாவது வயதில் நான் அறிந்திருந்தது ஆண்கள் தான் அம்மாவின் இரகசியம் என்பதே.
அவரது விசாரணையின் இறுதியில் அக் கோடை விடுமுறை காலத்தை அவரது மனைவி ஜீனுக்கு அவர்களது ஐந்து பிள்ளைகளைப் பராமரிக்கத் துணையாய் -அவளுக்கு ஒரு உதவியாளாக – கிராமப்புறத்தில் கழிப்பதற்கு எனக்குச் சம்மதமா என வினாவினார். அவர்கள் இருவருக்கிடையிலும் சில கதைகள் போய்க்கொண்டிருந்ததை ஏலவே நான் அறிந்திருந்தேன். எங்களது நிலமைகள் குறித்த சோகக்கதை. நான் ‘தேவையில்லாத’ பிரச்சனைகளுக்கு(ள்) போகிறேன் என்கின்ற எனது அம்மாவின் (ஓயாத) கவலை. ஏற்கனவே எனது பாடசாலையில் நான் ஒரு சண்டையில் சம்பந்தப்பட்டிருந்தேன். இதுதான் ஒரு ‘உண்மையான குடும்பம்” எப்படி இருக்கும் என்பதை நான் கண்கூடாய் காண்பதற்கான அரிய சந்தர்ப்பம். நான் அவ்வழைப்பை ஏற்றுக்கொண்டதுடன் பிறத்தியாரின் வாழ்க்கையை காணும் ஒரு பயணத்துக்காய் என்னைத் தயார்படுத்தியும் கொண்டேன்.
ஒருவாறாக அடுத்த வாரத்தின் ஆரம்பத்தில் ஓர் உடைந்த பழங் காரில் அவர்களது கிராமப்புற விடுமுறை வீட்டுக்கு நாங்கள் கிளம்பினோம். அவர்களது இரட்டை பிள்ளைகளுக்கும் மூத்த சிறுவனுக்கும் இடையிலிருந்த நான் – ரீசேட்டுகளாலும் சப்பாத்துக்களாலும் நிறைந்து தடுமாறிக்கொண்டிருந்த அவர்களது பயணப்பைகளுக்குள் – எனது பையையும் சிரமப்பட்டுப் பிடித்துக்கொண்டிருந்தேன். மாக்கும் ஜீனும் எனக்கு தெரியாதவர்களாக இருந்தார்கள் என்பதுடன் இந்தக் குடும்பச் சச்சரவுகளுக்குள் ஓர் ஒழுங்கைக் கொண்டுவர எப்படி உதவுவது என்பதும் நிச்சயமற்றிருந்தது. அந்த விடுமுறை வீடானால் சிறிய அறைகளுடன் சக்குமணத்துடன் வெறுமனே தட்டையாக இருந்தது. இரவில் அவ்வீடு எங்கள் அனைவரையும் மென்று விழுங்கிவிடும் – பின்னர் பகலில் திரைபோடப்பட்ட அதன் தாழ்வாரத்தின் நிழல்மிகுந்த ஏரிக்கரையின் முன் கொண்டுபோய் அப்படியே எங்களைத் தளர்த்தி விட்டுவிடும்.
ஜீனும் நானும் பிள்ளைகளுடன் தனித்திருந்த முதல் நாளிலேயே மிக விரைவில் எனக்கு விளங்கிவிட்டது. என்னிடமிருந்து என்ன வேண்டும் என்பது ஜீனுக்கு வடிவாய்த் தெரிந்திருந்தது. அவளுக்கு நான் சமையலில் வீட்டைத் துப்பரவு செய்வதில் உதவ வேண்டும். பின்னேரங்களானால் ஏரிக்கரையில் விளையாடுகிற பிள்ளைகளை மேற்பார்வையிட வேண்டும். இவற்றை மிருதுவான தொனியில் என்னிலிருந்து தன் விழிகளை அகற்றாமல் வேகமாகச் சொல்லி முடித்தவள், சொல்லியபிற்பாடு ‘நீந்தப் போறியா?’ என்று கேட்டாள்.
‘என்ன வந்துவிடப் போகிறது’ என அமைதியாக எண்ணிக்கொண்டு அவளது நெடிய மெல்லிய உடலின் பின்னால் ஏரியை நோக்கி நான் அவளைப் பின் தொடர்ந்தேன்.
அங்கே கிடந்த மரஏணியைப் புறக்கணித்து மிதவையை நோக்கி மிகவேகமாக விரைந்த அவள், தானே எக்கி மேலே ஏறிக் கொண்டாள்.
நான் இன்னும் ஏரியின் ஆழமற்ற கரையில்தான் புதைசேற்றுக்குப் பயந்தவாறு, முழங்கால் ஆழத்தில் நின்றுகொண்டிருந்தேன். என் பாதங்களின் கீழே காய்ந்த இலைகளை, தளர்ந்த தடிகளை, சிறு ஓடுடன் கூடிய உயிரினங்களை உணர்வது இதுவே எனக்கு முதல் முறை. அவள் என்னை நோக்கி திரும்பிய போதும், பின்னர் மிதவையில் நடந்து வந்து தன் சமநிலையை அதன் அதிநுனியில் பெற்றுக்கொண்டு நீரிற்கு முகம் கொடுத்து நின்றபோதும், அவள்மேல்தான் என் கண்கள் குவிந்திருந்தன. தலைக்குமேல் தன் கைகளை உயர்த்தி – குலைக்கமுடியாத நீள்வரிசையொன்றினைப் போல – மிக நேராகவும் உயரமாகவும் அவள் நின்றிருந்தாள். நான் கண்டது உண்மைதானா என என்னால் நம்பவியலாத வேகத்தில், காற்றில் எம்பிப் பாய்ந்து, தீடீரென அவள் அந்த சாம்பல் நீரினுள் ஆழ மூழ்கினாள். அதில் கச்சிதமும் கூர்மையும் திடமும் மிகுந்திருந்தது.
திரைப்படங்களில் நடிகை *எஸ்தர் வில்லியம்ஸ் தவிர்த்து, வேறொரு பெண்ணும் இவ்வாறு செய்து நான் கண்டதில்லை. களைப்பு மிகுந்த நகரப் பெண்களை கண்டிருக்கிறேன் தான். என் அம்மாவைப் போன்ற – தம் உடலை வேலைக்கு இழுத்துச் செல்கிற பெண்கள். உடல்களை மிக இறுக்கமான சப்பாத்துகளுக்குள்ளும் உள்ளாடைகளுக்குள்ளும் அடைந்து செல்கிற பெண்கள். எனக்கு பெண் உடல்கள் பாலுறவுக்கானது என்பது தெரியுமே தவிர அவை நீரினை வெட்டி செல்ல முடிகின்றவை என்பதோ நேரே காற்றில் எம்பிப் பாயக்கூடியவை என்பதோ தெரிந்திருக்கவில்லை.
இப்பொழுது என்னிலிருந்து அவ்வளவு தூரமில்லை, ஜீன் நீரிலிருந்து மேலெழுந்தவள், எனக்கு கையசைத்துவிட்டு வெளியே குன்றை நோக்கி வேகமாய் நடந்து, திரும்பி, வீட்டுக்குள் சென்று விட்டாள். நான் மிக மிக அதிசயமிகுந்த ஒன்றினைக் கண்டுகொண்ட அமைதியில் — இத்தகைய ஒன்றைச் செய்கிற சாகசம் மிகுந்தவோர் பெண் என்னால் மறக்க முடியாத பல விடயங்களை எனக்கு கற்றுத்தரப் போகிறாள் என்றுணர்ந்தவாறு — அங்கேயே நின்றுகொண்டிருந்தேன்.
நாட்கள் சென்றன. நான் பாத்திரங்கள் கழுவினேன், அவ்வீட்டின் சிறு சதுர அறைகளைத் தட்டிக் கூட்டி அள்ளினேன். கலிபோர்னியாவுக்கே உரிய வெளிப்புற விளையாட்டுக்களில் உற்சாகம் மிகுந்த நான்கு சிறுவன்களையும் ஒரு சிறுமியையும் கவனித்துக்கொள்வது என்னை அயர்ச்சியடையச் செய்தது. இவை எல்லாவற்றுடனும் ஜீன் கதைப்பதைச் செவிமடுப்பவளாயும் நான் இருந்தேன். மாக்கைச் அவள் முதன்முதலில் சந்தித்தபோது அவர் நேவியிலும் இவள் வேவ்ஸ் பெண்கள் கடற்படையணியிலும் இருந்திருக்கிறார்கள். அவர்களது திருமணத்தின் பின்னரும்கூட அவளுக்குப் பிடித்தமான இரவு உலாவல்கள் அவளது தோழிகளுடன் தொடர்ந்திருக்கிறது. தனது நீண்ட வார இறுதிகளை சான்பிரான்சிஸ்கோ மதுக்கடைகளில் அவர்களுடன்தான் இவள் கழித்திருக்கிறாள். தனது கண்ணாடிக் கண்களை மதுக் குவளையுள் போடுவதில் உவகைகொள்ளும் – அச் செய்கையால் வாடிக்கையாளர்களை அருவருப்புடன் திரும்பிப் போக வைக்கும் – ஒரு பிரத்தியேகமான தோழி ஜீனுக்கு அங்கே இருந்திருக்கிறாள். அவர்களது மாலைப்பொழுது முடிவுக்கு வந்துகொண்டிருக்கையில் அம்பர் நீருள்ளிருந்து அந்தப் பொய்க் கண் அவர்களைப் வெறித்துக் கொண்டிருக்கும். ஈற்றில் மாக் புயலென நுழைந்து அவளை இழுத்துக்கொண்டு போவான். அவ்விரவுகளில் – அவர்களது ஆழம்மிகுந்த பெண் சிரி(லிர்)ப்புகளை அவளது வயிற்றிலிருந்து அகற்றிவிடுபவனைப்போல – அவளை அவ்வளவு வன்மத்துடன் அவன் புணர்வான். ஆனாலும் அக்காலங்களில் அதே மதுக்கடைக்கும் அவளது அந்தப் பிரத்தியேக தோழியிடமும் ஜீன் தொடர்ந்தும் திரும்பிக் கொண்டுதான் இருந்திருக்கிறாள். ஐந்து பிள்ளைகள் பிறந்தபிறகு மாக் அவளை அவளிடமிருந்தே காப்பாற்றவென நியூயோர்க்கில் தனக்கொரு புது வேலை எடுத்துக்கொண்டு குடும்பத்தை இடம்மாற்றினான். ஒரு குறுகிய காலம் எங்களைப்போலவே அவர்களும் அப் பாழடைந்த அரசு வீட்டுமேம்பாட்டுத் திட்டத்திலும் இருந்திருக்கிறார்கள்…
எனக்கு இவற்றை அவள் சொல்லும்போதெல்லாம் ஏதோ இவ்விடயங்களை என்னால் புரிந்துகொள்ளமுடியும் என்பதுபோல நினைத்தாள். என்னாலும் அவற்றைப் புரிந்துகொள்ள முடிந்ததுதான். இவை தவிர, எனக்குப் போக்கர் விளையாட்டு சொல்லித் தந்தாள். நான் பிழைவிடும்போது என்னிடம் கோபித்தும் கொண்டாள். எனக்கு அந்தக் கோபந்தான் பெருமையாக இருந்தது. அழுக்குச் சாலைகளில் அவள் என்னிடம் கார் ஓடத் தந்ததும் உண்டு. என் தலையை அவளது மடியில் சாயவிட்டவாறும் நான் எனது கால்களைக் கண்ணாடிக்கு வெளியே தொங்கப் போட்டவாறும் ஒருமுறை என்னைக் கார் உலாவலுக்கு அழைத்துப் போனாள். அன்றைக்கென்று அடக்க முடியாதளவுக்கு எனக்குச் சிரிப்புக் காட்டிய அவள், என்னைக் குனிந்து பார்த்துவிட்டு, தானும் என்னுடன் சேர்ந்து சிரித்தாள். நான் அவளது சிரிப்பை அவளது எலும்புகளின் ஆழத்துள் உணர்ந்தேன். வயிறு இல்லாத அவளுக்கு அவ்விடத்தில் எலும்புகள்மேல் போர்த்திய வெறும் தோல்தான் இருந்தது. அவளது சிரிப்புடன் சேர்ந்து எனது தலையும் சுழன்றது. பின்னம் நான் அவளது கரங்களை எனது முகத்திலும் தலைமுடியிலும் உணர்ந்த அப்போதில் ஓர் இனிமை என்னை நிறைத்தது. அக் கணத்தில் தலையை அவளது மடியிலிருந்து ஒருபோதும் அகற்றாதிருக்கவும் அவளது சிரிப்பு என்றென்றும் என்மேல் ஊற்றெடுத்து விழவுமே நான் மிகவும் விரும்பினேன். ஏனெனில் அச் சிரிப்புடன் சேர்ந்து வந்தது ஒரு பிரத்தியேக அக்கறையும், காலம் எடுக்க விடமுடியாதளவு மிக இனியதும் பெரியதுமான நிறைவுணர்ச்சியும் ஆக இருந்தது.
அதே காலத்தில் அவ்வப்போது அவர்கள் வீட்டுக்கு வந்து போகும் சமபாலுறவாளனான அவளதொரு மருமகனுக்கு என்னை அறிமுகம் செய்து வைத்தாள். அத்தர் மணக்கின்ற, **அனாயிஸ் நீன் போன்ற (பெண்) எழுத்தாளர்களை வாசிக்கின்ற, சூட் ஜக்கட்டை தோள்களுக்கு மேல் அணிந்திருக்கிற அந்த இளைஞனை மாக் என்னமாய் வெறுத்தார்! ஜீன் எங்களிருவருக்கிடையேயும் ஒரு தனிச்சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தாள். வீடு திரும்பமுன்னம் தாராளமான நேரம் ஒரு வாடகைக் காரினுள் இருவரும் உட்கார்ந்திருந்தோம். ஒரு நோக்கத்துக்காகத்தான் நாங்கள் தனியே அனுப்பப்பட்டிருக்கிறோம் என்பதை அறிந்திருந்தோம்; ஆனால், எங்கள் ஏக்கங்களைப் பகிரும் சொற்களை நாங்கள் இன்னும் கொண்டிருக்கவில்லை. என்னை ஒரு சமபாலுறவாளர் என நான் அழைக்கத் தொடங்கியிருக்கவில்லை. அப்போதில் ஒரு மூன்று வருடங்களுக்கு மேலாக என் உற்ற நண்பியான றோஜ் றொபினோவிச்சுக்கு நான் காதல் செய்துகொண்டிருந்தேன். லெஸ்பியன் என்ற சொல்லை ஏலவே அறிந்திருந்தாலும் சமூகத்தில் அதற்கிருந்த உட்குறிப்புகள் குறித்த பயங்கள் இருந்ததால் வெளிப்படையாய் அவ்வாறு சொல்லிக்கொள்ள முடியவில்லை.
ஆனால் ஜீனுடனோ வேறு மாதிரி. ஜீனைப் போல இருப்பதில் – அவள் மாக்கின் மனைவியாய் இருக்கிறாள் என்கின்ற ஒன்றைத் தவிர – எது குறித்தும் எனக்கு பயமிருக்கவில்லை. நீண்டதான வார நாள் இரவுகளில் – தெருதள்ளி இருக்கிற வயதான பெண்களுடன் போய் சீட்டாடுவோம். ஒவ்வொரு இரவும் நாங்கள் படுக்கப் போகுமுன் தனக்கு முதுகுபிடித்துவிடுமாறு ஜீன் கேட்பாள். அவளது உற்ற துணையாய் இருந்த – தசைகள் எலும்பின்மீது மெலிந்து கிடக்கிற அவளுடலை வியந்தவாறு அகட்டி கால் ஊன்றி நின்று முதுகில் கைகளால் அழுத்துவேன். அப்போதெல்லாம் எனது கைகளால் அவளைச் சுற்றிக்கொள்ளவும், கூர்ந்த சிறுமார்பை ஏந்தித் தொடர்ந்திடவும் ஏங்குவேன். அவளது உடலில் என் விரல்களின் பயணத்தை நீட்டித்தவாறு வந்து, மிக மென்மையாக அவளுள் என் விரல்களைச் நுழைத்து, எனது பதின்மூன்று வயது கற்பனைகளில் வரக்கூடிய சகல சுகத்தையும் அவளுக்குத் தந்துவிட விரும்பினேன். அவள் தனது நீளக் கால்களை என்னைச் சுற்றிப் போட்டுக்கொள்ளவும், அவளது சுதந்திரத்துக்கான பாய்ச்சல்களில் தன்னுடன் சேர்த்து என்னையும் ஏந்திச்செல்ல வேண்டுமெனவும் ஏங்கியவாறு அவளருகில் கிடக்கவே விரும்பினேன். அவற்றைச் செய்வதுக்கோ எனக்கொருபோதும் தைரியம் வந்ததில்லை. அவள் எனது கைகளுக்குக்கீழ் நெட்டி முறிக்கிறபோது வெறுமனே ‘ஐ லவ் யூ” – “எனக்கு உங்கள செரியாப் பிடிக்கும்” என்று மட்டுமே கிசுகிசுக்க முடிந்தது.
வாரஇறுதிகளில் மாக் வருகிறபோது அவர்கள் வராந்தாவில் இருக்கிற இரட்டைக்கட்டிலுக்கு மாறிவிடுவார்கள். அவர்களது வாக்குவாதங்கள் –ஜீன் ”எனக்கு விருப்பமில்ல. என்னைத் தனிய விடு” என்பது எல்லாம்– எனக்குக் கேட்டுக்கொண்டிருக்கும். அதைத் தொடர்ந்து அவள் புணரப்படும் சத்தம் கேட்கும். அவளை நிசப்தமாக்கும் கொடும் அவசரம்மிகு சத்தம். அவ்வளவு நாளும் அவளிடம் நான் கண்ட திடம் எல்லாம் எங்கே போனதென எனக்கோ பெரு வியப்பாய் இருக்கும். எல்லாம், அவளுக்கு எது நல்லதென்பது சர்வ நிச்சயமாகத் தெரிந்திருந்த மாக் என்கிற மனிதனது பென்னம்பெரிய உருவம் என் கண்முன் வரும்வரைக்கும் தான்.
அப்படியாக அவர்கள் இருவரும் இன்னும் கடுமையாய் சண்டைபிடித்த பிறகான ஒரு வார இறுதியில் நாங்கள் எல்லோரும் ஒன்றாக ஏரிக்குள் இருந்தோம். நான் இனியில்லையென்ற குழப்பங்களுடன் இருந்தேன் ஆனால் ஜீன் அருகில் இருந்ததால் என்னிடம் பயம் இருக்கவில்லை. திடீரென்று, என்னிலிருந்து சில அடிதான் தொலைவிலிருந்த மாக், “நீ ஒருக்காலும் உன்ர அப்பாவ முத்தமிடேல்ல என? உனக்கு அது எப்பிடியிருக்குமெண்டு காட்டிறன் பார்” என்றவாறு என்னை நோக்கி நீந்த ஆரம்பித்தார். அது: அதிகாரம் அதன் மேற்பரப்பில் ஒளிந்துள்ள, திறந்த வாயுடன் கூடிய, ஒரு பென்னம்பெரிய நகரும் தலை. நான் தரையை நோக்கி விரைந்து நீந்தி ஓடிட முயன்றேன். ஆனால் அதற்குள் அவர் என் தலையை இழுத்துப்பிடித்து தனது நாக்கை எனது வாயின் ஆழத்துள் தள்ளினார். நான் மூழ்கிவிடாதிருக்க எனது கால்களையும் கைகளையும் அதிவேகமாக அசைத்துத் தத்தளிக்கவும் அவர் என்னை விடுவித்தார். ஜீனின் முகத்தை – அவளின் தோல்வியைப் பார்க்கப் பிடிக்காது மிகுந்த வருத்தத்துடன் நான் கரையை நோக்கி நீந்தலானேன்.
இதற்கு முன்பும் இவ்வாறு நான் பலவந்தமாய் முத்தமிடப்பட்டிருக்கிறேன். புதிதாய்ப் பிறந்த அவர்களது மகவை வீட்டுக்குக் கொண்டு வந்த தீயணைப்புவீரர் ஒருவரால், தனிமையில். மாடியில் அவள் – அவரது மனைவி அவர்களது குழந்தையை ஏனைய சிறுமிகளுக்குக் காட்டிக்கொண்டிருக்கையில், அவர் ஷோபாவில் எனக்குப் பக்கத்திலிருந்து ஹவாயிப் பெண்ணொருத்தியின் நிர்வாணப் படத்தை காட்டிக்கொண்டிருந்தார். பிறகு அவரது நாக்கை என் வாயினுள் தள்ளி என்னை முத்தமிட்டார். அப்போது எனக்கு 10 வயது.
இரண்டு வருடங்களின் பின் எனது அம்மாவின் காதலன் ஒருத்தர் பலவந்தமாக எனக்கு ‘உண்மையான நல்லிரவு முத்தம்’ என்று ஒன்று தந்தார். அதே நாக்குடன் இம்முறை மேலதிகமாக எனது 12 வயது கால்களுக்கிடையில் அவரது முழங்காலும் அவரது கை எனது நெஞ்சைக் கசக்கியவாறும் இருந்தது. பலவருடங்களுக்குப் பின்னும் இது நடந்தது. பிரபலமான ஒரு இளம் வைத்தியன் ஒருவன் எனது காதலியின் முன்னால், எனக்கு ‘உண்மையில்’ தேவை என்ன என்பதைக் காட்ட முற்பட்டபோது. எப்போதும் எனக்கே தெரியாத ஏதோ ஒன்றை எனக்குக் காட்டவும் என்னைக் காப்பாற்றவும் என்றுதான் அது செய்யப்பட்டது. ஆனால் எப்போதும் அது என்னை (அதலபாதாளத்தில்) மூழ்கடிக்கின்ற வேலையைத்தான் செய்தது. இதன் அர்த்தம் நான் மோகம் இல்லாமலிருந்தவள் என்பதல்ல: நான் ஜீனின் உதடுகளுக்கே ஏங்கினேன். நான் ஜீனிடம் எனது ஏக்கமும் வேட்கையும் மட்டுமன்றி எனது தேர்வும் தான் அவளைத் வேண்டிற்று என்பதை – நல்ல ஆழமிகா எனது 13வயது அறிவுடன் – மிகத் தெளிவாக அவளிடம் சொல்ல இயலாது போனதால் எங்களுக்குள் ஒன்றுமே நடக்கவில்லை. ஆனால் மாக் என்னை பலவந்தமாக முத்தமிட்டதுடன் ஜீனைப் புணரவும் வேறு செய்தார்.
அக் கோடை காலம் முடிந்துகொண்டிருந்தது. இப்போது வீட்டு வேலைகளிலிருந்து ஜீன் எனக்கு நிறைய விடுதலை அளித்தாள். பதின்ம வயதினளான நான், கடற்கரையிலிருந்து சில கெஜம் தொலைவிலிருந்த யூத சோசலிஸ முகாமின், தொண்டர்களான கவுன்சிலர்களுடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டேன். கோடை கால முகாம் காதல்களால் நிறைந்திருந்த அவர்களது உலகத்துள் வெகு சீக்கிரமே நானும் இணைந்து கொண்டேன். கோடையோ இறந்து கொண்டிருந்தது. அரைமனத்துடன் அவ்வப்போது நான் கண்டுகொண்டிருந்த கல்லூரி முதலாமாண்டு மாணவனான ஸ்ரான்லி என்னை தெருக்கள் தள்ளி இருக்கிற காபினில் ஒரு விருந்துக்கு வருமாறு ஒருவாறு சம்மதிக்க வைத்தான். தாமதமாகத்தான் தொடங்கியது அம் முதிர் கோடையின் பின்னிரவு. பியர், சீக்கரட்டுகள், ஸ்கொச் என பதின்மரின் வாசனைகளால் நிறைந்த ஈர முத்தங்கள்… கொஞ்சல்கள்… போர்வைகளுக்குள் புரளல்களுடன் தீ பற்றிச் சுவாலையிட்டு எரியவும், ஜோடிகள் -இளைஞர், யுவதிகள் – தம் பருத்த தேவைகளை ஓரோருவரில் காய்ந்தவாறு இருந்தனர். எனக்கு அவற்றில் விருப்பம் இருக்கவில்லை. ஆகவே எனது இளம் நண்பனிடமிருந்து பின்னடித்து வந்து, மெதுவாக ஆடிக்கொண்டிருந்த படகிலிருந்து கொண்டு, கோடை முடிவுக்கு வருவதை உணர்ந்தவாறு எனக்கும் விடுதலை வருமா என யோசித்துக் கொண்டிருந்தேன். அவன் என்னைப் பின்தொடர்ந்து வந்தவன் நாம் இருவரும் நெருங்குவதற்கான சந்தர்ப்பத்தைக் கைவிட்டு நான் வந்ததில் கோவத்தில் இருந்தான். நான் சில்லென்ற இரவுக் காற்றில் அசையாமல் இருந்து, அவன் உதடுகள் அசைவதைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அவனது சொற்கள் என் காதில் விழவில்லை.
எனது உடல் முழுவதுமே வேறொரு ஒலிக்காகவே காத்திருந்தது. அவள் வருவாள்… இது எனக்கு நிச்சயம். எனது வித்தியாசத்தை நான் கண்டுகொண்டேன் என்பதை உடனடியாக அவளுக்குக் காட்டிவிட விரும்பினேன். அவள் என்னைத் தொடப்போகும் கணம் வரும் வரை, நான் நேரத்தை போக்காட்டுவேன். அவளது கரங்கள் என் உடலிலும் அவளது நாக்கு எனது அதரங்களிலும் வேண்டுமாய் இருந்தது. அவள் முகத்தை என் முகத்துக்கெதிரே பிடித்தவாறு பாய்ந்து அவளைச் சுற்றி எனது கால்களால் கட்டிக்கொள்ள விரும்பினேன். அச் சமயத்தில் அவளது ஓடம் வரும் சத்தம் கேட்டது. மெதுவாக போடப்படும் துடுப்பின் ஓசை. பிறகு அவளது விளக்கு வெளிச்சம் ஜோடி உடல்களில் என்னைத் தேடுவதும் தெரிந்தது. நான் நினைத்ததிலும் வேகமாக அவள் என்னில் முழுதாக தனது விளக்கின் ஒளியைப் பரப்பினாள். அவளது சிறிய முகத்தில் இருண்டிருந்தன கண்கள். ஓடத்தில் இருந்த மற்றவர்கள் அவளுக்குப் பின்னாலிருந்த நிழலுள் உட்கார்ந்திருந்தார்கள். ஆனால் அவர்கள் இருப்பதை அவள் மறந்துவிட்டிருந்தாள். அவள் ஏதும் பேச முன்னமே நான் பதிலாய் குரல்கொடுத்தேன்: ‘ஜீன்! நான் இங்க இருக்கிறன்! சும்மா கதைச்சுக்கொண்டு மாத்திரம் இங்க காத்துக் கொண்டு இருக்கிறன்.”
பிணைந்திருந்த உடல்களில் எதிரிகள் வீழ்ந்திருந்த கொலைக்களத்தை கணக்கெடுக்கின்ற ஒரு ஜெனரல்போல விளக்கை அடித்துக் காட்டி “நீ அங்க கிடந்திருந்தா உன்னக் கொன்றிருப்பன்” என்று மட்டும் அவள் சொன்னாள்.
இல்லை ஜீன். எனக்கானதைத் தேர்வு செய்வதற்கான சுதந்திரத்தை நீ எனக்கு வழங்கினாய். ஆனால் உனக்கே தெரியாத அளவுக்கு அதே சுதந்திரத்தை இட்டு நீ பயமும் கொண்டிருந்தாய். என்னால் முடிந்தளவு சிறந்த முறையில் நான் விரும்பியது உன்னுடைய தொடுகையைத்தான் என்பதை உனக்கு உணர்த்தினேன். பதிலாய் எனக்கு உன்னால் தரமுடிந்ததெல்லாம் உன்னையும் உனது கதைகளையும் நான் செவிமடுக்கவில்லை, எமது தேர்வின்/வித்தியாசத்தின் பெருங்கொடையை நான் விளங்கிக்கொள்ளவில்லையோ எனும் சந்தேகங்களையே. நீ ‘அவர்களின்’ குரலுக்குத்தான் செவிமடுத்தாய். என்னுடையதை அல்ல. நான் ஒரு சிறுமியாக இருந்ததால் என்னைத் தொடுவது ஒரு ஆபத்தான விடயமாக இருந்தது உனக்கு. ஆனால் வேறு எத்தனையோ சந்தர்ப்பங்களில் எனது சிறுவம் தொடர்பில் சிந்திக்கவோ கலவரப்படவோ மாட்டாத பென்னம் பெரிய ஆண்களால் அத்துமீறி பலவந்தமாய் நான் தொடப்பட்டிருக்கின்றேன். (அதற்கு மாறாய்) உனது தொடுகை என்னை ஆற்றியிருக்கும். ஆனால் நாங்களோ சமூகத்தால் தூய்மையற்றவர்களாக மதிப்பிடப்பட்டிருந்தோம். அவர்கள் ‘பாவம்’ என்று சொன்ன ஒன்றின் அதிகாரத்தால் உன்னால் என்னை காயப்படுத்தி இருக்க முடியாது.
அந்தக் கோடை ஒருவாறு முடிவுக்கு வந்தது. மீண்டும் எமது வாடகை வீட்டினை அம்மா இழந்தாள். நான் பிள்ளைகளில்லாத எனது சித்தி-சித்தப்பா வீட்டின் சாம்பல் அறைகளில் வாழப் போனேன். பிறகு நான் ஜீனைக் காணவில்லை. ஆனா(ல்) எனது அம்மா கண்டிருக்க வேண்டும். ஐந்து வருடங்கள் கழித்து அவள் என்னிடம் சொன்னாள், ஜீன் மார்புப் புற்றுநோயால் செத்துப் போனாள் என்று. என் உயர், ஆழச் சுழியோடி! நான் உன்னைத் தொட்டிருப்பேனடி!
======== ======== ======== ======== ======== ========
சிறு குறிப்புகள்:
*எஸ்தர் வில்லியம்ஸ் [Esther Williams (1921 – 2013)] – நீச்சல் வீராங்கனை; ஹொலிவூட் நடிகை. அனேகமான இவரது திரைப்படங்களில் நீச்சல் சார்ந்த அனைத்து ஸ்ரன்ருகளையும் (stunt) அவரே செய்திருக்கிறார்.
**அனாயிஸ் நீன் [Anaïs Nin (1903 – 1977)] – கியூபப் பெற்றோருக்கு பிரான்சில் பிறந்த இவர், தினக்குறிப்புகள், கட்டுரைகள், நாவல்கள், சிறுகதைகள் என பரந்த பரப்பில் இயங்கிய அமெரிக்க எழுத்தாளர். குறிப்பாக காமத்தை தன் படைப்புகளில் இயல்பாக எழுதியவர். 1960வரை கவனம் பெறாத இவர் பின்னர் மிக முக்கிய எழுத்தாளுமையாகவும் தன் வாழ்நாளில் வரையறுக்கப்பட்ட பாலின அடையாளங்களைக் கட்டுடைத்த ஆதர்சமாகவும் பார்க்கப்பட்டார். காலவாரியாகப் பதிப்பிக்கப்பட்ட இவரது தினக்குறிப்புகள் சர்வதேச கவனிப்புக்குள்ளானவை.
======== ======== ======== ======== ======== ========
“Liberties Not taken” by Joan Nestle
சிறுகதை (ஆங்கிலம்): மொழிபெயர்ப்பு: பிரதீபாதி