செனேகா போல்ஸ் மகாநாடு
பிரான்சு, இந்திய ( பூர்விக மக்கள்) யுத்தத்தின் பின்னர் ஏற்பட்ட அதீத செலவுகளின் நிமித்தம் பிரிட்டன், அமெரிக்க மக்களுக்கு வரி செலுத்துமாறு கட்டளையிடுகிறது. இத்தகைய பல வரிகளினால் அதிருப்தியுடன் இருந்த அமெரிக்க மக்கள் ஒன்றுசேர்ந்து தமது எதிர்ப்பு நடவடிக்கையில் செயற்பட்டனர். இதுவே அமெரிக்க சுதந்திரத்திற்கு வித்திட்டது எனலாம். 1776ல் அமெரிக்க மக்கள் தமது மனக்குறைகளைக் கூறி தீர்வாக சுதந்திர நாட்டை பிரகடனம் செய்கிறார்கள். பின்னர் அமெரிக்காவிற்கும், பிரிட்டனுக்கும் போர் நடந்து 1790 ல் அமெரிக்கா சுதந்திரம் அடைந்தது.
அமெரிக்க சுதந்திரத்தின் பின்னர் ஏறக்குறைய அறுபது ஆண்டு இடைவெளியில் பெண்கள் விழிப்புணர்வு பெறுகிறார்கள். இதேகாலகட்டத்தில் உலகளாவிய ரீதியில் தொழிற்சங்கங்களும் வளர்ச்சியடைந்து 1848ல் கம்யூனிச கட்சி அறிக்கை வெளியிடப்படுகிறது. இத்தொழிற்சங்கங்களில் பல பெண்களும் பங்களிப்பு செய்தார்கள். இதே ஆண்டிலேயே அமெரிக்க பெண்களும் அமெரிக்க சுதந்திர பிரகடனத்தை ஒத்த மாதிரி, தமது மனக்குறைகளை அட்டவணைப்படுத்தி அதற்கான தீர்வுகளையும் பிரகடனம் செய்கிறார்கள். இம்மகாநாடே செனேகா போல்ஸ் கென்வன்சன் (Seneca Falls Convention) என அழைக்கப்படுகிறது. தொழிலாளர்கள் மத்தியில் கம்யூனிச கட்சி அறிக்கை பிரபல்யம் அடைந்த அளவிற்கு பெண்களுடைய அறிக்கையான செனேகா போல்ஸ் கென்வென்சன் மக்களிடையே பேசப்படாத விடயமாக இருப்பது வருத்தத்திற்குறிய விடயமேயாகும்.
1840இல் ஸ்ரான்ரன் (Elizabeth Candy Stanton ), மொற்றி (Lucretia Mott ) இருவரும் முதன்மதலில் இலண்டனில் அடிமைத்தனத்திற்கு எதிரான மகாநாட்டில் தமது கணவன்மார்களுடன் பங்குபற்றியபோது சந்தித்துக் கொண்டார்கள். அங்கு பெண்கள் கலந்து கொள்வதற்கும், பேசுவதற்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனை எதிர்த்து இவ்விரு பெண்களும் ஆட்சேபனை தெரிவித்தனர். நீண்ட விவாதத்தின் பின்னர் கட்டிடத்தின் மேற்தளத்தில் (பல்கனியில்) இருந்து பார்வையிட அனுமதி வழங்கப்பட்டது. இவ்வாறு புறக்கணிக்கப்பட்டமையால் வேதனையுற்ற, மனக்கசப்பு கொண்ட பெண்கள் தமது பிரச்சனைகளை ஆராய்வதற்கும் அதற்கான தீர்வுகளை முன்வைப்பதற்குமான மகாநாட்டிற்கு அழைப்பு விடுத்தார்கள்.
உலகில் முதன்மதலில் பெண்கள் பிரச்சனை குறித்து ஆராயப்பட்ட மகாநாடு இதுவேயாகும். இம்மகாநாடு 1848 இல் யூலை மாதம் பத்தொன்பது இருபதாம் திகதிகளில் நீயோர்க்கில் செனேகா போல்சில் நடைபெற்றது. இம்மகாநாட்டில் 300 பேர்வரை கலந்து கொண்ட போதிலும், முதல்நாள் பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டார்கள். இரண்டாம் நாள் ஆண்களும் அனுமதிக்கப்பட்டார்கள். இம்மகாநாட்டை ஒழுங்கு செய்தவர்களில் முதன்மையானவர் எலிசபெத் கேடி ஸ்ரான்ரன் (Elizabeth Cady Stanton) ஆவார். இவருடன் லுக்ரீசியா மொற் (Lucretia Mott), மேரி மக்கிளின்ரக் (Mary M’Clintock), மார்தா காஃபின் றய்ற் (Martha Coffin Wright), யேன் ஹன்ட் (Jane Hunt) ஆகியோர் சேர்ந்து செயற்பட்டார்கள்.
இம் மகாநாட்டிற்கான அறிக்கையினை பற்றி அறிவிப்பு செய்கையில் பெண்களுக்கான சமூக, குடிமை, சமய உரிமைகள் (social, civil, and religious rights) குறித்து விவாதிக்கும் மகாநாடு என்றே அறிவித்தார்கள். இம்மகாநாட்டில் முதலில் பத்தொன்பது விடயங்கள் குறித்து ஆராயப்பட்டது. அதாவது பெண்கள் மீது துஷ்பிரயோகம், உடமை பறிமுதல் போன்ற செயற்பாடுகள் காணப்படுகிறது. இவை பெண்களது ஆளுமையின் பலத்தையும், சுயமரியாதையையும், தங்கியிருத்தலுக்கான எதிர்ப்பை தெரிவிக்க முடியாத வகையில் இயலாமையினையும் உருவாக்கிறது. அங்கு தெரிவிக்கப்பட்ட பெண்களது மனக்குறைகள் கீழ்வருமாறு:
*பெண்களும் சமமாகவே படைக்கப்பட்டார்கள் என்பது வெளிப்படையான உண்மை என்றபோதிலும் பெண்கள் வாழ்வதற்கானதும், சுதந்திரத்திற்கானதும், பாதுகாப்பதற்கானதும் உரிமையற்றவர்களாகவே உள்ளார்கள். இந்த நிலைக்கு காரணம் பெண்களுக்கு வாக்குரிமை இல்லாமையே ஆகும். இதனால் ஆண்கள் பெருமளவில் பெண்களை புறக்கணிக்கிறார்கள்.
*அரசை அமைப்பதில் பெண்கள் தமது சம்மதத்தை அளிக்காத போதிலும் அரசால் உருவாக்கப்பட்ட சட்டங்களுக்கு கீழ்படிய வேண்டும் என வலியுருத்துவது அநீதியானது.
*பெண்கள் தகுதியுடையவராக இருந்தாலும்கூட அவர்கள் தேவாலயத்தில் தாழ்வான பதவிகளையே வகிக்கிறார்கள்.
*திருமணத்தின் பின் பெண்கள் ஆண்களுக்கு கீழ்படிதல் வேண்டும் என உறுதி செய்வதுடன் சொத்துக்கள் வைத்திருப்பது மறுக்கப்படுகிறது.பெண்களது உழைப்பு ஊதியம் ஆண்களால் கையாளப்படுகிறது.
*பெண் உயர்கல்வி மறுக்கப்படுவதும், பொதுவெளியில் பேசுவது இழிவானதாகவும் கருதப்படுகிறது.
*சமத்துவமற்ற திருமண முறிவுகளில் பெண்கள், குழந்தைகள் பற்றி எந்த பொறுப்பும் சொல்லாது ஆண்களுக்கு சாதகமாகவே சட்டங்கள் உள்ளது.
இவ்வாறு பெண்களது உரிமைகள் மறுக்கப்படுவது நீதியற்ற செயலேயாகும். ஆதலால் அமெரிக்க மக்களுக்கான எல்லா உரிமைகளும் பெண்களுக்கும் வழங்குதல் வேண்டும். இவ்வாறு பெண்கள் தமது மனக்குறைகளை வைத்து அதற்கான தீர்வு என பல தீர்மானங்களை முன்வைத்தார்கள்.
அங்கு பதினொரு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. அவற்றில் சில:
கடவுள் ஆண்களையும், பெண்களையும் சமமாக படைத்துள்ளார். எனவே ஆண்களுக்கு சமமான உரிமைகள் பெண்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
கடவுளால் அளிக்கப்பட்ட பெண்களுக்கான மகிழ்ச்சி என்பது இயற்கையானது. அதனை நிறைவேற்றுவதே உயர்வான கடமையாகும்.
ஆண்கள் அறிவு சார்ந்தவராகவும், பெண்கள் அறம் சார்ந்தவராகவும் கருதப்படுகிறது. பெண்கள் கிறிஸ்தவ சமயநிகழ்வுகளில் பேசுவதற்கும், கற்பித்தலுக்குமான சந்தர்ப்பத்தை அளித்தல் ஆண்களின் கடமையாகும்.
பெண்களை நீண்டகாலமாகவே கீழ்நிலைப்படுத்திய ஊழல் நிறைந்த வழக்கம் காணப்படுகிறது. இது படைத்தவரால் மறுக்கப்படுகிறது.
பெண்கள் கீழ்பட்ட நிலையில் இருக்கும்போது அதனை நியாயப்படுத்தி எந்த கருத்துக்களும் வெளியிடக் கூடாது. பெண்கள் பொதுவெளில் பேசுவது இழிவாகவும், பண்பற்ற செயலாகவும் கருதப்படுகிறது. இது பெண்களின் பேச்சு சுதந்திரத்தை மறுக்கிறது. எனவே பெண்கள் பொதுவெளியில் பேசுவதற்கான உரிமை வேண்டும்.
பெண்கள் திருமணத்தின் பின் சொத்துகள் வைத்திருப்பதற்கும், உயர்கல்வி கற்பதற்கான வாய்ப்புகளுக்குமான உரிமை வேண்டும்.
வேலைவாய்ப்புகளிலும், தேவாலயத்திலும் பெண்களுக்கு சமஉரிமை அந்தஸ்து அளிக்கப்பட வேண்டும்.
ஒன்பதாவது தீர்மானம் பெண்களுக்கு வாக்கு உரிமை அளித்தல் வேண்டும் என்பதாகும்.
இத்தீர்மானங்கள் நிறைவேறும்வரை தொடர்ச்சியான போராட்டங்களை மேற்கொள்வது அவசியமாகும்.
அவ்வாறே பெண்கள் தமது தொடர்ச்சியான போராட்டத்தின் ஊடாகவே ஈற்றில் 1920 இல் வாக்குரிமையை வெற்றி கொண்டார்கள். இங்கு குறிப்பிட வேண்டிய விடயம் மார்க்சினால் வெளியிடப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை (The Communist Manifesto) வெளியிடப்பட்ட ஆண்டிலேயே செநேகா போல்ஸ் மாநாட்டு அறிக்கையும் வெளிவந்துள்ளது. ஆனால் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை மக்கள் மத்தியில் பிரபல்யமாக பேசப்படுவதுபோல் இந்த சினேகா போல்ஸ் மாநாடு (Seneca Falls Convention ) அறிக்கை அறியப்படாமலே இருப்பதானது இன்றுவரை பெண்கள் புறக்கணிக்கப்படும் நிலையிலேயே உள்ளார்கள் என்பதையே வெளிப்படுத்துகிறது.
Posted on: November 30, 2020, by : admin