தான்யா கவிதைகள்
1.
ஒருபோதும் சலிப்படையாது
எவ்வொழுங்கும் தளும்பாது
வண்ணம் பூத்த இலைகள்
உயிர்ப்பூட்டுகின்றன
முதிர்வேனிற்கால
நடைபாதைகளை…
மீண்டும் மீண்டும்
மீட்டிக் கொண்டிருக்கின்றன
கனவும் மனதை
தாண்டு போகாமல்.
இவ்வெளியில் என்னிருப்பும்
வண்ணக் கலவையாய்
திட்டுத் திட்டாய்
வரைந்து கொண்டிருக்கிறது
புதிரான ஓவியத்தை.
குழந்தைகளைப் போல
வண்ணங்களின் இலயிப்பில்
பார்த்துக் கொண்டிருக்கின்றேன்
அர்த்தமற்ற வாழ்வின்
ஒழுங்குகளை
கண்டடைய விரும்பாமல்
*
2.
சத்தமும் ஒளியுமற்ற
இரவுகளில்
காற்றில் மிதந்து
பறக்கும் சிறு குருவியாய்
அலைந்து கொண்டும்
சாகசங்கள் காட்டியும்
தன்னை நிறுவ முனைகின்றது
பறவை
வெளிச்சமும் இருட்டும்
பொருட்டற்று மறைய
கனவால் பின்னப்பட்ட
ஈரலிப்பான வெளியில்
காதல், வெறுமையில்
உருவாக்கப்பட்ட ஆடையாய்,
உடலை நனைக்க
அழகியலுள் தொலைந்த
பூர்வீகத்தின் வாழ்வியலை
தட்டத் தனியே பிடிவாதத்துடன்
இசைக்கின்றது
யாராலும் இயற்றப்படாத
தனதான வாழ்வின் எளிமையை.
பார்வையாளராய் வெளியிலிருந்து
விளையாட்டைப் போல
பந்தாடிக் கொண்டிருக்கின்றார்கள்
உன்னதங்களால் வகுக்கப்பட்ட
வாழ்வை.
குருவியோ வால்கொண்டு
அளக்க எத்தனிக்கின்றது
பெரும் பிரமாண்டங்களுள்
அழிந்துகொண்டிருக்கின்ற
மாண்புடன் கூடிய
பேரன்பை
*
3.
மகிழ்ச்சியையும் துக்கத்தையும்
ஒருங்கே தருகின்றது
திடீரென்று வந்து மறைகின்ற
பனி.
உடல் முழுவதும் படிந்து
மெதுமையான
இதமான
கதகதப்பான தொடுகையாய்
அதுவரையான
ஸ்பர்சங்களையெல்லாம்
எடுத்துக் கொண்டு
இறுக்கமான இருதயத்தை
மகிழ்ச்சியால் நிரப்புகின்றது.
குளிர்ச்சியாய் முகத்தில் இறங்கி
உடலை நனைத்து
கிசுகிசுப்பூட்டுகின்றது
பின்னர் வந்ததற்கான
அடையாளங்களேதுமின்றி
அழிந்து
நிரப்ப முடியாத வெற்றிடத்தை
விட்டுச் செல்கின்றது
*
4.
புறவெளியில் நானாகவும்
அகவெளியில் யாரோவாகவும்
நகரும் கால வெளியில்
நாட்களைப் பின்தள்ளி
தழுவிக் கொள்ள விரும்புகிறேன்
இன்றை நேற்றின் சாயங்களற்று.
மீளவும் எடுத்துவருகின்ற
தங்கிப்போதலின் அசமத்துவத்தை
நீராவியாய் படியவிடாது
அழித்துக் கொள்கிறேன்
காலத்தை களிம்பாய் பூசி
கடந்து கொண்டிருக்கிறேன்
தொடர விரும்பாத
நிகழ்வின் துல்லியத்தை.
மறைதலை அதன் சுதந்திரத்துடன்
பருக விரும்பினும்
துளைத்துவிடுகின்றது
ஆற்றுப்படுத்தமுடியாத துயரமாய்.
மாறிக் கொண்டிருப்பதாய்
சொல்லி நகர்கின்ற வார்த்தைகளுள்
உலர்ந்த உணர்வும் கூட
காயப்பட்டு நிக்க
இயக்கமற்றிருத்தலை
மறுத்துக் கொண்டேயிருக்கிறது
சாகச மனது
*
5.
என்றென்றைக்கும் மாறாத
தெருவென்றொன்றிருக்கின்றதா?
நான் நடந்தளந்த தெருக்கள் கூட
கற்பித்துக் கொண்டிருக்கின்றன
மூப்படைவதை.
இளமை ததும்பும் வாலிபத்தைத்
தாங்கிப் பிடிக்கும்
கற்பிதங்களைக் கேட்டதில்லை.
இவ்வாழ்வின்
வல்லபத்தைக் கொண்டாட
ஆண்டுகள் செரிக்கும்
வயதைக் கொண்டாடும்
தருணங்கள் இனிது.
இனியொருபோதும்
என் தடம் பதித்த
பழைய தெருக்களில்
மறைந்த பொழுதை
தேடப்போவதில்லை.
இக்கணம் பதியும் தடத்தின்
அழிவைப் பற்றியுமில்லை.
இக் காலம்
இந்நிமிடம்
இவ் வாழ்வு
புதுப்பித்துக் கொண்டிருக்கின்றது
என் கால்கள் பதிய விரும்பும்
அட்லாண்டிக் கடலைப் போல
***
நவம்பர் 2020