பொதுவான ஒடுக்குமுறைகளும் பிரத்தியேக ஒடுக்குமுறைகளும்
பல்வேறான ஒடுக்குமுறைகள் காலங்காலமாக பேசப்பட்டு வருகின்றன. எனிலும் எக்காலத்திலும் ஒடுக்குமுறைகள் தனியே (முதலாளி – தொழிலாளி, வெள்ளையர் – கறுப்பர், ஆதிக்க ஜாதி – தாழ்த்தப்பட்ட ஜாதி) துருவ எதிர்நிலைகளை கொண்டவை அல்ல. அவை வர்க்க, இனத்துவ, சாதிய, நிற அடிப்படையிலானவை மட்டுமாகவன்றி தன்னளவில் பல அடுக்குகளை வடிவங்களைக் கொண்டிருப்பவை. சிறுபான்மைக் குழுக்கள் பொதுவான ஒடுக்குமுறைகளுடன் பிரத்தியேகமான பிற ஒடுக்குமுறைகளாலும் பாதிக்கப்படுகிறார்கள். அந்தந்தக் காலங்களில் தொழிற்சாலைகளிலும் வீட்டிலும் தொழிலாளர்களாக இருப்பவர்களாக – வேலைப்பளுக்களைப் பொறுத்தவரை – இரட்டைச்சுமையை அனுபவிப்பவர்களாக பெண்கள் இருப்பதை மார்க்சிய பெண்ணிய விமர்சனங்கள் சுட்டிக்காட்டின. தொழிற்சாலைகளில் முதலாளிகளால் சுரண்டப்படுகிற ஆண்கள் வீட்டில் தமது துணைகளது உழைப்பைச் சுரண்டுவதையும் ஒருகாலத்தில் நாஜிகளால் இனப்படுகொலைக்குள்ளான யூதர்கள் இன்னொரு இனமான பாலஸ்தீனர்களை ஒடுக்குவதையும் காலம் நகைமுரணென கண்டு வருவதும், எப்போதும் ‘எரியும் பிரச்சினை’யைப் பேசவென இதர பிரச்சினைகள் புறந்தள்ளப்படுவதும் நடப்பதுதான். விடுதலை வேண்டிப் புறப்படுகிற இனங்களில் தம்முடன் துணைநிற்கும் பெண்கள் வீடுகளில் எப்படி நடத்தப்படுகிறார்கள்? பலஸ்தீனப் பெண்களை, அல்லது விடுதலைப்போராளிகளாய் பெண்களைக் கொண்டிருந்த ஈழச் சமூகம் தனது வீட்டின் பெண்களை எப்படி நடத்தியது எனவெல்லாம் பார்த்தால், ஒடுக்கப்படுகிற சமூகங்களிலுள்ள (ஆண்களின்) பெண்மீதான வெறுப்பின் விளைவுகள் என்பது ஆதிக்க/ஒடுக்கும் சமூகங்களிலுள்ள பெண்கள் எதிர்கொள்வதை விடவும் பாரதூரமானது என்பதை அறியலாம். இராணுவங்களின் அடக்குமுறைக்குள் தமது ஆண்களை பாதுகாக்கும் அழுத்தங்களுடன் தமது வீடுகளுள் அவர்கள் அதே ஆண்களாலும் ஆணாதிக்க அழுத்தங்களுக்கு உள்ளாகின்றார்கள். பொருளாதாரரீதியான தமது இயலாமைகளையோ அல்லது சாதீய/இனத்துவ அடக்குமுறைகளுக்குள் உள்ளாகிற ஒரு ஆண் சாதீயத்தை/இனத்துவேசத்தைக் காக்கும் சமூகக் கட்டமைப்பு தொடர்பான தனது இயலாமைகளையோ வீட்டிலுள்ள ஒருவரில்தான் (பெண்கள், குழந்தைகள்) காட்ட முற்படுகிறான், அவர்களில் காட்டுவதே அவனது இயலுமைகளுக்குள் சாத்தியமானது.
இத்தகு வன்முறையையே தம்தம் வீடுகளில், வெள்ளை இனத்துவேசங்களால் பாதிப்படைகிற கறுத்த ஆண்களை ஆதரிக்கின்ற பெரும்பான்மைக் கறுப்பினப் பெண்கள் எதிர்கொள்கின்றார்கள். வெள்ளை ஆண்களின் பெண் வெறுப்புக்கு உள்ளாகிற வெள்ளைப் பெண்ணுக்கு வெள்ளை ஆண் ஒரு முன்னேற்றத் தடையாக நின்றாலும் கூட, அவளுக்கு, தனது நிறத்தால் பெறக்கூடிய ஏனைய சலுகைகளை தனது நாட்டின் பிற நிறுவனங்களுள் பெறக்கூடிய சாத்தியமுண்டு. ‘பெண்களுக்கு’ வேலைக்கான இடஒதுக்கீடு உள்ளவிடத்தில் அவளா ஒரு கறுத்தப் பெண்ணா என வருகிறபோது அவளுக்கே அது கிடைக்கும். இன்ன பிற வேலைத்தளங்களிலும் பிற இன பெண்களுக்குள் அவளுக்கே பதவிஉயர்வுக்கான முதன்மை உத்தரவாதம். (அதேபோல கறுத்தஆணா வெள்ளை ஆணா என வருகையிலும் கறுத்தஆணா வெள்ளைப்பெண்ணா என வருகையிலும் ஆண்களோ பெண்களோ வெள்ளையர்கள் இனத்தின் சலுகைகளைப் பெற்றவர்களாக முதன்மை வாய்ப்பைப் பெறுகின்றனர்). முன்னேறும் படிகளில் உள்ள கறுப்பினப் பெண்களோ பொதுவெளியில் தம்மீதான வெள்ளை ஆண்களின் வெறுப்பு, அத்துடன் வெள்ளைப் பெண்களின் வெறுப்பு, கூடவே வீட்டில் தமது ஆண்களுடைய வெறுப்புடனும் மல்லுக்கட்ட வேண்டியிருக்கிறது. அவைதரு அழுத்தங்களை மீறி அவர்கள் எழமுடிகின்ற சந்தர்ப்பங்கள் அரிதாக இருக்கும். அதனால்தான் பெண்களுக்கெதிரான வெறுப்புணர்வைச் சுட்டப் பயன்படும் misogyny என்கிற ஆங்கிலச் சொல் பாவிக்கப்படுகிற இடத்தில் இன்னும் ஆழம் போய் பெண் வெறுப்புடன் சேர்ந்து அதிலும் கறுத்தப் பெண்களுக்கெதிரான பிரத்தியேக வெறுப்பை misogynoir என வகைப்படுத்திக் குறிப்பிடுகிறார்கள்.
கறுத்தப் பெண்கள்மீதான வெறுப்புணர்வை – அவர்களது ஆண்களிடமிருந்து வெளிப்படுவது உட்பட – ஊடகங்களில் அன்றாடம் நாம் காணலாம். கொல்லப்பட்ட பிரபல கறுப்பினப் பாடகனான ரூபாக் தனது சில பாடல்களில் தம் வாழ்வில் பொறுப்பெடுக்காத ஆண்உறவுகள், ஏழ்மை இவற்றுள் தனது தாய் ஒரு தனிப்பெண்ணாய் (single mother) தங்களை வளர்த்ததை, சிரமங்களுக்குள்ளும் தங்களை கைவிடாது இருந்ததை அந்த வயதில் தான் புரிந்துகொள்ளாமல் அவரின்மீது கோபம் கொண்டதை சண்டைபிடித்து பேசி வீட்டை விட்டு ஓடிப்போனதை எண்ணி, அதற்காய் வருந்தி எழுதியிருப்பார். ( ♫♫ You always was committed /A poor single mother on welfare, /tell me how you did it/ There’s no way I can pay you back/ But the plan is to show you that I understand/ You are appreciated ♫♫) (♫♫Now, ain’t nobody tell us it was fair/ No love from my daddy, because the coward wasn’t there ♫♫)
ரூபாக்கின் தாய் அஃபேனி சாகூர் அவர்கள் 60களின் கறுப்பின சிவில் உரிமைகள் இயக்கத்தின் ஒரு முன்னாள் போராளி. சக துணையின்றி தனியளாக ரூபாக்கை வளர்த்து உருவாக்கியவர். இருந்தபோதும் சூழலின் அழுத்தங்களுடன் வளரும் மகனின் வசைகளுக்கும் ஆளாகத் தவறவில்லை. பின்நவீனத்துவம், தலித் அரசியல் பேசும் ஆண்கள் தம் துணைகளை வசைச்சொற்களில் அழைப்பதுபோல அதற்கு வருந்துவதும் இல்லை. ஆனால் அவரது இளைய மகன் மன்னிப்புக் கேட்டதுடன் அது அவரை வருத்தியதையும் தெரிவித்தது அப்பாடல். துயரமான வகையில் அமெரிக்காவில் கறுப்பின ஆண்கள் எதிர்கொள்ளும் அமைப்பியல் வன்முறைக்கு (Structural Violence) மகனை – ரூபாக்கை – அவர் பறிகொடுத்தார். அப்பின்புலத்தை யோசிக்கையில்தான் தோன்றுகிறது: வெளியில் அவ்வாறு இலகுவில் பறிக்கப்பட்டுவிடும் உயிர் என்பதால் தானா கறுப்புப் பெண்கள் தமது ஆண்களின் தம்மீதான வெறுப்பை தாங்கி கடக்கிறார்கள்? தம் கடின பயணத்தில் தம்மை வருத்தி தம் ஆண்களைப் பாதுகாக்கிறார்கள்?
எல்லைப்புறங்களில் எக்கணமும் தமது பிள்ளைகளை துணைகளை இழக்கும் கிலியுடன் கழியும் நாட்களில் தமது ஆண்களுக்காய் தெருவில் இஸ்ரேலிய அரசுக்கெதிரானப் போராடும் அதே பலஸ்தீனப் பெண்கள் வீட்டிலும் ஆணாதிக்க எல்லைகளால் (குடும்ப வன்முறைகள் உட்பட) பாதிக்கப்படுவது போலவே, தலித் பெண்கள், கறுத்தப் பெண்கள், பூர்விகக்குடிப் பெண்கள் அவர்களுக்கான போராட்டங்களில் தமது ஆண்களால் பாதிக்கப்படுகிறார்கள்; கைவிடப்படுகிறார்கள். பலவகைகளிலும் தம் பெண்களது இருப்பை இன்னும் நெருக்கடிக்குள்ளாக்கும் வேலைகளையே ஆண்கள் செய்துவருகிறார்கள். அமெரிக்காவில் கறுத்த உயிர்களை மதிக்கவேண்டி மறுபடியும் அம்மக்களிடமிருந்து எழுச்சி கிளம்பியிருக்கிற இவ்வேளையில் தமது ஆண்களின் இத்தகைய போக்கையும் விமர்சிக்கும் குரல்கள் வெளியாகின்றன. அவற்றில் ஒன்று இங்கே – எமக்கும் பொருந்திப் போவதால்!
English: dear black men
தமிழில்: கறுத்த ஆண்களுக்கு
- மொழிபெயர்ப்பாளர்