கறுப்பின ஆண்களுக்கு…
கறுப்பின ஆண்களே: நீங்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கிறபோது கறுத்தப் பெண்களாகிய நாங்கள்தான் உங்களை ஆதரித்துத் தாங்குகிறவர்களாய் இருக்கிறோம். ஆனால் நீங்கள் எங்களது பாடுகளின்போது ஏன் எம்மைத் தாங்குவதில்லை?
இதுவரையில் நாங்கள் பட்டது போதும்!
ஒருநாள் எனது சமூகவலைத்தளமொன்றில் பதிவுசெய்யப்பட்டிருந்த கேள்வியொன்று என்னை நெடுநேரம் யோசிக்கவைத்தது. அதில் ஒருவர் பதிவிட்டிருந்தார் – “வெள்ளையர்கள் கறுப்பர்களைப் பார்ப்பதுபோல, கறுப்புப்பெண்களை பார்ப்பதை கறுப்பின ஆண்கள் எப்போது நிறுத்துவார்கள்?” என்பதே அது.
இக்கேள்வியானது அதன் உண்மைத்தன்மை காரணமாக, செய்துகொண்டிருந்த சகல வேலைகளையும் கிடப்பில் போட்டுவிட்டு, இது குறித்து பலத்த சிந்தனைக்கு இட்டுச் சென்றது. ஆம், கறுத்தப் பெண்களைப் பொறுத்தவரையில் பலவகைகளிலும் இது ஒரு தடைசெய்யப்பட்ட தலைப்பு, பேசாப்பொருள். கறுத்த ஆண்கள் மீதினில் இருக்கின்ற இந்த உலகின் பெருவெறுப்பின் விகிதம் காரணமாக அவர்களுடன் எமக்கிருக்கிற முரண்களை எங்களுக்குள் வைத்திருக்கவே நாங்களும் முயல்கிறோம். எரிகின்ற தீயில் எண்ணெயை ஊற்றுவதுபோல், அவர்கள் தொடர்பான நியாயமான எமது விமர்சனங்களும் சேர்ந்து, ஏற்கனவே இச் சமூகக் கட்டமைப்பில் காக்கப்பட்டுவருகின்ற இனத்துவேச அடிப்படையிலான கறுப்பு-ஆண்கள்மீதான வெறுப்பிற்கு நியாயம் சேர்த்துவிடக்கூடாது என்பதால், பேசவேண்டிய தருணங்களிலும் அவற்றைப் பேசுவதைத் தவிர்த்தே வந்திருக்கிறோம்.
ஆகவேதான் ஒரு கறுப்பினப் பெண்ணாக இருந்துகொண்டு எமது ஆண்களை விமர்சிப்பதோ அவர்களை அவர்களது (தவறான) செயல்களுக்கு பொறுப்பெடுக்க வேண்டுவதோ பெரும் துணிச்சல் மிக்க செயலாகின்றது. தமக்கொரு நீதி தமது பெண்களுக்கொரு நீதி என இரட்டை நிலைப்பாடு கொண்டிருக்கும் கறுப்பின ஆண்கள், அதன் பிரகாரம் கறுத்தப் பெண்களின் குணங்களென சிலதை வரையறுத்து அவர்களைக் கீழ்மை செய்து தாக்குவதிலும், அதனூடாக எமது தன்னம்பிக்கையை கோடனுகோடி துண்டுகளாக போட்டு உடைப்பதிலும் கிஞ்சித்தும் பின்நிற்பவர்கள் இல்லை. வெளியில் இருந்து பார்க்கின்றவர்களுக்கு இது எப்படி இருக்கின்றதோ தெரியாது. ஆனால் உள்ளிருந்து எதிர்கொள்கிறபோது தமது சமுதாயத்திற்கு – குறிப்பாக தமது பெண்களிடம் – மிகவும் நச்சுத்தன்மையான வெறுப்பையும் இழிவையும் உமிழ்கிற ஒரு குழுவாக கறுப்பு ஆண்களே இருந்து வருகின்றார்கள்.
கறுப்பன்களது அழகாலும் அவர்தம் மகிமையாலும் வரலாற்றாலும் அச்சுறுத்தப்பட்ட இந்த உலகத்தில், நூற்றாண்டுகளாக கறுத்த ஆண்கள் நிமிர்ந்து நடக்க உதவும் முதுகெலும்புகளாக கறுத்தப் பெண்களே இருந்து வந்திருக்கிறார்கள் (அடிமைகளாக்கப்படுவதற்கு முன் நாங்கள் பேரரசர்களாகவும் ராணிகளாவும் இருந்தவர்கள் அல்லவா!). மிசக் சமீபமான தசாப்தங்கள்வரை அதற்காக நாங்கள் போற்றப்பட்டோம், எமது பெறுமதியுணர்ந்து மதிக்கவும் பட்டோம்.
ஆனால் பின் வந்த ஆண்டுகளில் கறுத்த சமூகம் எதிர்கொண்ட சிக்கல்கள் மாறின – அவை மாற்றம் பெற்றது போலவே கறுத்தப் பெண்களின் பாத்திரமும் சமூகத்தில் மாறி, வேறு பாத்திரத்தை எடுத்தது. இது கறுத்த ஆண்களில் பாதிப்பை ஏற்படுத்தியது என்பது உண்மைதான் என்றாலும், (அவர்களது நடத்தைக்கு) அது மட்டுமே காரணம் கிடையாது.
போதைப்பொருள் பாவனை பரவலான காலம், பில் கிளின்டனின் குற்ற மசோதா (1994 crime bill) காரணமாக அதிகளவிலான கறுப்பின ஆண்கள் சிறைக்கு சென்றமை, பொலிஸ் வன்முறைகள், அத்துடன் பிள்ளை வளர்ப்பில் எவ்விதத்திலும் பொறுப்பெடுக்க விரும்பாத கறுப்பினத் தந்தைமார்கள் – இவை யாவும் பாரியளவில் கறுப்பின வீடுகளில் கறுத்த ஆண்கள் குறைந்து போனமைக்கான காரணங்கள் ஆகின.
அதற்காக எப்போதும் இந்த அமைப்பை குற்றம் சொல்வதை விடுத்து, கறுத்த ஆண்கள், இந்த அமைப்பில் – மிக அற்பமான குற்றங்களுக்குக் கூட – தமக்கு நீதி கிடைக்காது என்பதை முதலில் உணரவேண்டும். நீதித்துறையைப் பொறுத்தவரை கறுப்பின ஆண்களுக்கு (கறுப்பின பெண்களுக்கும்தான்) அது வேறு தராதரங்களைக் கொண்டுள்ளது – அடிமைமுறையிலிருந்து வந்த தராதரங்கள் அவை. எங்களைக் காண்கின்றபோது இந்த இனத்துவேச அமைப்பானது எவ்வாறு எங்களை அகற்றலாம் என்பதையே யோசிக்கிறது. வேறெதையும் அல்ல.
எனினும், முன்னேறுவதற்கான அவர்களது வழியில் எத்தகு இடர்பாடுகள் நின்றாலும் கறுத்த ஆண்கள் இந்த அமைப்பை வென்று முறையான ஒரு பாதையை தேரவேண்டிய காலம் வந்துவிட்டது. இதற்குத் தீர்வு இலகுவானதல்லதான். ஆனால் இதற்கான தீர்வு எது அல்ல என்கிற ஒன்றை மட்டும் இங்கே அழுத்திக் கூற முடியும். ஆம், கறுத்த ஆண்களாகிய உங்களது துயர்பாடுகளுக்கு எப்போதும் கறுத்தப் பெண்களது சுயாதீன இருப்பை குற்றம்சாட்டுவது அல்ல தீர்வு.
வலிமை மற்றும் அவர்களது தகவமைக்கும் திறன் என்பனவால் கறுத்தப் பெண்கள் அறியப்படுகிறார்கள். இது எமது வரலாற்றிலிருந்து எமக்கு வந்தது. வேறொரு தோட்டக்கூலியாக விற்கப்பட்டோ கொல்லப்பட்டோ சிறைப்பிடிக்கப்பட்டோ எங்களது ஆண்கள் அருகில் இல்லாதுபோய்விடுகிற சமயங்களில் நாங்கள்தான் தொடர்ந்தும் எமது குடும்பங்கள் பிழைப்பதை உறுதிசெய்ய வேண்டியவர்களாக இருந்தோம்.
எமது ஆண்களின் கோபமும் ஆக்ரோசமும் எம்மீதுதான் தினமும் காட்டப்படுகிறது என்கின்றபோதிலும் நான் பலவேளை நினைப்பதுண்டு, கறுத்த ஆண்கள் அவர்தம் நனவிலி மனநிலையில் தாம் மீண்டும் மீண்டும் தோல்வியடைந்துகொண்டிருப்பது தொடர்பில் தம்மிடத்தே மிகுந்த வருத்தம் கொண்டுள்ளார்களோ என்று (இது ஒரு அனுமானம்தான்). ஏனெனில் அடிமைகளாய் இருந்தபோது கறுப்பின ஆண்கள் தமது பெண்கள் பாலியல் வன்முறைக்குள்ளானபோதிலோ மிக மோசமாகத் தாக்கப்பட்டபோதுகளிலோ பாராமுகமாக இருக்க வேண்டியிருந்ததோடு அவற்றை செய்த – தன் துணையின் பாலியல் தாக்குதலாளனையே – மரியாதையுடன் பார்க்க வேண்டிய இடத்திலும் இருந்தார்கள். (கறுப்பின ஆண்களும் பெண்களும் அடிமைமுறை நடப்பிலிருந்த வரலாற்றின், வன்செயல்பாடுகளின் உளவியல்ரீதியான பாதிப்புகளை இன்னும் கொண்டவர்களாயே உள்ளார்கள்).
சமகாலத்தில் பார்த்தால் சதா அவர்களது வீழ்ச்சியினை எதிர்பாத்திருக்கிற, அதற்கான வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்ற ஒரு அமைப்பின் முன் அவர்கள் பலமற்றவர்களாய் இருப்பதோடு அது அவர்களது வளர்ச்சியை தடைசெய்வதாயும் இருக்கிறது.
அதே நேரத்தில் கறுத்தப் பெண்களானால் தம்மீதான சகல இடர்களுக்கு மேலாலும் எழுந்துவருகிறவர்களாய் இருக்கிறார்கள். காயங்களை ஆற்றவல்ல கறுப்பினப் பெண்களின் மனோதைரியத்தை தமது ஈகோ காரணமாக பெறவியலாதவர்களான ஆண்கள் அதனைப் பொறாமையுடன் பார்க்கிறார்கள். அவர்களால் அதை எதிர்கொள்ளவோ சகித்துக்கொள்ளவோ முடியாததால் மிக மோசமான நச்சுத்தன்மையான ஆண்மையை (toxic masculinity) எம்மீது வெளிப்படுத்துகிறார்கள்.
அவர்கள் எம்மை மோசமான வார்த்தைகளால் அழைக்கவும், இன்றைய இணைய வெளிகளில் நாம் பகிரும் எமது படங்களை தாம் மீள்பதிவு செய்கையில் அவற்றின் கவர்ச்சித்தன்மையை முன்னிறுத்தி நாங்கள் கவனத்தை வேண்டும் விபச்சாரிகள் எனவும் மிகவும் கீழ்நிலையில் உள்ளவர்கள் எனவும் அன்றாடம் சொல்லி வருகிறார்கள்.
மறுபுறம் சந்தர்ப்பம் வாய்க்கையில் எல்லாம் எம்மை அதிபாலியல் நுகர்வுப்பொருள்களாய்க் காட்டுகின்ற வேலையை தொடர்ந்தும் செய்கிறார்கள்.
அத்துடன் எமது தோல் குறிப்பிட்ட நிறத்தில் இல்லாவிட்டால் நாம் குறைந்தவர்களாக மதிப்பிடப்படுகிறோம்.
சுயாதீனமானவர்களாய் இருப்பதற்கும் சார்ந்திருப்பவர்களாய் இருப்பதற்கும் இடையில் உள்ள – எமது ஆண்களுக்கு தமது குறைகளை கடந்து வர உதவக்கூடிய வகையான, அவர்களை அச்சுறுத்தாத ஒரு – மெல்லிய கோட்டை நாம் கண்டடையவில்லை எனில் எமது இருத்தல் எவ்வித தகுதியும் பெறுமதி அற்றது என்பதாய் (அவர்களால்) கூறப்படுகிறது.
அத்தோடு, யாரும் போய் ஏன் வெள்ளைஇனப் பெண்களை துணைகளாய்த் தேருகிறார்கள் என கறுத்த ஆண்களிடம் கேட்பின் எமது சுயாதீனமான போக்கும் எமக்கென அபிப்பிராயங்களைக் கொண்டிருக்கும் இயல்புமே எமது ஆண்கள் எம்மை விரும்பாமைக்கான காரணகர்த்தாக்களாகச் சொல்லப்படுகிறது.
இருந்தும் கூட பெரும்பான்மையான கறுத்தப் பெண்கள் இன்னமும் கறுத்த ஆண்களுடன் இருக்கவே விரும்புவதுடன், அவர்கள் குறைகளுடன் இருக்கின்றபோதிலும், அவர்கள்மீது அசைக்கமுடியாத அன்பினையும் மோகத்தையும் கொண்டவர்களாய் இருக்கிறார்கள். எப்படிப் பார்த்தாலும், கறுத்த ஆண்களது முதலாவது விசிறிகளாக இருப்பவர்கள் கறுத்தப் பெண்களாகிய நாங்கள்தான்.
ஆனால் எமது ஆண்களே எம்மை வெறுப்புடன் அணுகுகிறபோது எங்களுடைய விசிறிகளாக இருக்கப் போவது யார்? அன்றாடம் நாம் எதிர்கொள்ளும் போர்களில் எமக்கு ஆதரவு வழங்கப்போவது யார்?
Posted on: February 8, 2021, by : admin