குருதியில் நீந்தும் மீன்கள்

ஆரினை நினைவிருக்கிறதா உங்களுக்கு? Turtles Can Fly படத்தின் திரைப்பாத்திரம் மட்டுமல்ல, போரின் கெடு நினைவுகளைக் களைந்துவிடத் தவிக்கும் ஒவ்வொரு தளிர்மனதினதும் பிரதிநிதி அவள். சிவப்பு நிற மீன்குஞ்சுகளை வளர்க்கும் ஆசைகொண்ட மனமும் போர் அசிங்கப்படுத்திய உடலைக் களைந்துவிடத் தவிக்கும் துயரும் கொண்டலைந்த பாத்திரம் அவள். போர் சிறியமனங்களில் நிரப்பும் வலிய ரணங்களைப் பேசும் படங்களில் Turtles Can Fly முக்கியமானது. எனக்குத் திடீரென அவளது ஞாபகங்களைக் கிளர்த்திற்று அண்மையில் பார்த்த SOUNDLESS DANCE / நிசப்த நடனம் என்கிற பிரதீபனின் சினிமா.

ஈழத்தில் உருவாக்கப்பட்ட சினிமாக்களில் சிங்களமொழிப் படங்கள் நிகழ்த்திய திரைமொழிப்பாய்ச்சலுடன் ஒப்பிடுகையில் தமிழ் மொழியில் செய்யப்பட்ட முயற்சிகள் நாடகீயமானவை அல்லது ‘நாங்களும் இருக்கிறோம்’ என்கிற வகைக்குள் அடங்கிப் போகிறவை. ஆனால் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களால் அதுவும் குறிப்பாக ஐரோப்பாவில் இருந்து வெளியாகிற குறும்படங்கள் தொழிநுட்பரீதியிலும், திரைமொழியிலும், கதைத் தெரிவுகளிலும் தனித்துத் துலங்குகின்றன. உண்மையில் ஈழத்தவர்களால் உருவாக்கப்படும் சினிமாக்களில் சகிக்கமுடியாமலிருப்பது வசன உச்சரிப்புத்தான். ஒரு பக்கம் கமல்ஹாசனையும் மணிரத்தினத்தையும் கரித்துக் கொட்டியபடி அவர்களைவிட மோசமாக இயல்பற்ற வசன உச்சரிப்பை எமது படங்கள் கொண்டிருந்தன, கொண்டிருக்கின்றன. ஆனால் ஐரோப்பாவிலிருந்து அதுவும் குறிப்பாக பிரான்சிலிருந்து வெளியான குறும்படங்கள், முழு நீளப்படங்கள் இயல்பான ஈழத்தமிழ்ப் பேச்சுவழக்கைத் திரையில் ஒலித்தன. அவை ஈழத்தமிழ்த் திரைக்கு புதிய வீச்சை அளிக்கின்றன.

அந்தப்படங்களின் வரிசையில் ஐரோப்பாவில் இருந்து ஈழக்கதைக்களனைக் கொண்டு வெளிவந்திருக்கும் மற்றுமொரு சினிமாவான பிரதீபனின் SOUNDLESS DANCE / நிசப்த நடனம் படம் பல்வேறு வகைகளிலும் முக்கியத்துவம் பெறுகிறது. அத்திரைப்படத்தின் அலையாத கதையும், நேர்த்தியான காட்சிகளும், கச்சிதமான காட்சித் தொகுப்பும், அது பேசும் சனங்களின் அரசியலுமாய்ச் சேர்ந்து பல்வேறு வகைகளிலும் அற்புதமான சினிமாவாக அது உருவாகி வந்திருக்கிறது.

“போர் இன்னும் ஓயவில்லை” என்பது பல்வேறு அர்த்தப்படுத்தல்களுக்குச் சாத்தியமான சொற்றொடர். போர் என்பதை வெற்றியாகவோ, தோல்வியாகவோ மட்டுமே அர்த்தம் கொள்ளும் வியாபாரிகளுக்கு அது ஓய்ந்துவிடக்கூடாது என்னும் தவிப்பு. அதனால் போர் இன்னும் ஓயவில்லை என்கிறார்கள். போரை நினைவுப்பரப்பிலிருந்து விரட்டிக்கொண்டிருக்கும் சனங்களுக்கோ அது திரும்பத்திரும்ப நினைவுகளுக்குள் நிகழ்ந்து கொண்டிருக்கும் தொலைத்து விடத்துடிக்கிற நினைவு, எவ்வளவு கழுவியும் நீங்காமல் நினைவுகளின் உறுத்திக்கொண்டிருக்கும் அசிங்கம். அதைப்போலவே போர் நிகழ்வதும் தனியே குண்டுகள் வீழ்ந்துகொண்டிருக்கும் நிலத்தில் மட்டுமேயல்ல அது சிவபெருமானுக்கு விழுந்த அடியைப்போல எல்லோர் முதுகிலும் விழுகிறது. போரினால் ஏற்படும் நன்மைகள் மட்டும் ஒரு சிலருக்குக் கிடைக்கிறது.

ஒருதலைப்பட்சமான கதைசொல்லல் போலியான பார்வைகளை உருவாக்கவல்லது என்பது உண்மைதான் ஆனால் அதனுடைய மெய்யான அர்த்தம் ஒர் மனிதனுடைய கதையைக் கொண்டு ஒரு சமூகத்தின் கதையைப் பிரதிநித்துவப்படுத்த முடியாது என்பதல்ல. ஈழத்தமிழ் சினிமா உருவாக்கிகளிடம் எல்லாவற்றையும் ஒரேயடியாகச் சொல்லிவிடவேண்டும் என்கிற ஓர் அவசியமற்ற தவிப்பிருப்பதாக தோன்றுவதுண்டு. ஈழத்தமிழர்களிடமிருந்து உருவாகும் படைப்புக்களின் ஆதாரமான பலவீனங்களில் ஒன்றாக அவர்கள் தமக்கு இதுவரை நிகழ்ந்துவிட்ட எல்லாத் துயரங்களையும் ஒரே கதையில், ஒரே திரைப்படத்தில், ஒரே படைப்பில் முன்வைத்துவிட விரும்புவதைக் குறிப்பிடலாம். அதாவது ஒரு சட்டி சோறு அவிந்திருப்பதைக் காட்டுவதற்காக சட்டியைக் கவிட்டுக்கொட்டுவது. குறிப்பாக சினிமாக்களில் இதை அவர்கள் நிகழ்த்தும்போது அந்தக் கதைசொல்லல் திரையில் ஒரு குழப்பமான விவரணச் சித்தரிப்பாக மாறுகிறது. திரைக்கதை இலக்கற்று அலைந்து சினிமா அதன் நோக்கத்தை நீங்கி, பார்வையாளரை வெருண்டோடச் செய்கிறது. கடைசியில் இரத்தச் சகதியிலும், ஒலத்திலும், கோவத்தாலும் திரை நிறைந்தாலும் அது உருவாக்க நினைக்கும் ஓர் கலைப்படிமத்தை பார்ப்பவர்களின் மனதில் அது எஞ்சிநிற்கச் செய்வதில்லை.

SOUNDLESS DANCE / நிசப்த நடனம் என்ற திரைப்படத்தின் மீது எனக்கேற்பட்ட உடனடி ஈர்ப்பே அது சிவா என்னும் ஒற்றை மனிதனின் கதையில் நின்றும் வழுவிச் செல்வதில்லை. ஆனால் அது அந்த ஒற்றை மனிதனின் கதையைச் சொல்வதன் வழியாக ஓர் இனக்குழுவின் குறிப்பிடத்தக்க ஒரு பகுதி மனிதர்கள் அனுபவித்த துயருழல் நாட்களைத் திரையில் நிகழ்த்திக் காட்டுகிறது. அதனாலேயே திரை ஒளியற்றுப் போனபின்னரும் மனதில் படைப்பின் பிரமிப்பாய், வாழ்வின் சாட்சியமாய் நமக்குள் எஞ்சி நிற்கிறது.

இத்திரைப்படத்தின் ஆரம்பக்காட்சியில் இலங்கை அரசுக்கெதிரான போராட்டங்கள் பிரான்சில் நடந்துகொண்டிருக்கும் பின்னணியில் ஈழத்திரையில் முதல்முறையாக ஒரு தமிழன் தன் குடும்பத்தை பொருளாதார ரீதியாக மேலுயர்த்துவதற்காகவும், வன்னியில் தொடர்ச்சியாக இருந்தால் இயக்கத்திற்கு போகவேண்டியோ அல்லது இயக்கத்தால் பிடித்துச் செல்லப்படவோகூடும் என்று அவனும் அவன் குடும்பத்தினரும் அஞ்சுவதால் ஏஜென்சிக்கு காசுகட்டி வெளிநாட்டுக்கு வந்திருக்கிற ஒருவருக்கும் அவருடைய மொழிபெயர்ப்பாளருக்கும் இடையிலான உரையாடல் ஒன்று இடம்பெறுகிறது.

ஆனால் அவனுடைய புலப்பெயர்வுக்கான உண்மைக் காரணங்களைச் சொல்வதால் மட்டும் அவனுடைய அகதிக்கோரிக்கை ஏற்கப்படாதென்றும், அது ஏற்கப்படவேண்டுமால் அவனுடைய உண்மைகளின் சிலபகுதிகளை நீக்கியும், சில பகுதிகளைப் புதிதாகச் சேர்த்தும் புரைதீர்ந்த நன்மைபயக்கும் பொய்களை அவன் சொல்லியாகவேண்டும் என்றும் சிவாவுடைய மொழிபெயர்ப்பாளர் அவனிடம் சொல்லும் போது சிவா குழப்பமடைந்து ‘ஆனால் நான் சொல்வதுதானே என்னுடைய உண்மை? இதற்குத்தானே அவர்கள் நீதியளிக்கவேண்டும்’ எனக் கேட்கிறான். இக் காட்சியின் வழியாக புலப்பெயர்வாழ்வின் ஆதாரமே தமக்கு நன்மையளிக்கும் என்று நம்பப்படும் பொய்களால் கட்டமைக்கப்பட்டதுதான் என்பதை வெளிப்படையாக அறிவிக்கிறார் இயக்குனர். இதுவரைக்கும் புலப்பெயர்வின் காரணங்களாகச் சொல்லப்பட்டுவரும் ஒற்றைப்படையான போர்க்கதைகளினின்றும் பிரதீபனின் சினிமா விலகி ஒரு கதையைச் சொல்கிறது. அத்தோடு ஒரு கேள்வியை நம்முன் வைக்கிறது. நாம் நமக்கு நன்மையளிக்கும் என்பதால் எப்படித் தீமைகளைக் கொண்டாடுகிறோம்? அல்லது அதுதான் இயல்பெனக் கடக்கிறோம்? இவை ஒருவகையில் நமக்கு ஒவ்வாமையளிக்கும் உண்மைகளாயிருப்பினும் அவை தானே உண்மை.

சிவா ஓர் சாமானியன், போரின் விளைவுகளை நேரடியாக அனுபவிப்பவன். அதை எப்படியாவது நிறுத்த முடியாதா என்று ஏங்குகிறான். ஆனால் போருக்கான காரணங்கள் அவனை மிஞ்சியதாக அவனது கட்டுப்பாட்டுக்குள் இல்லாதனவாக இருக்கின்றன. அவனளவில், இனவாதத்தினை எதிர்ப்பதனை விடவும், உரிமையின் பெயரால் அடையத்துடிக்கிற அதிகாரத்தை விடவும் பெறுமதியானது பிழைத்திருத்தலே.

‘இந்தச் சமாதானம் இப்படியே நிலைத்திருப்பதற்கு ஏதாவது செய்யமுடியாதா?” என்று சமாதான காலத்தில் விடுமுறையில் ஊருக்கு வந்திருக்கிற போராளி நண்பனிடம் கேட்கிற காட்சியிலாகட்டும், இறுதிப்போர்க் காட்சிகளைத் தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டே தியாகி-துரோகி, கிழக்கான்-வடக்கான் அரசியலைப்பேசித் தமக்குள் அறை நண்பர்கள் சண்டையிட்டுக்கொள்ளும் போது மனதில் போர்நிலம் மொய்க்க சிவா திணறும் காட்சியிலாகட்டும் வெளிப்படுவது மேற்சொன்ன இரண்டுக்கும் இடையில் நசிவுறும் எளிய சனங்களின் தத்தளிப்பும் திணறலும்தான். அதுதான் இந்தப்படம் நம்மிடம் சொல்ல நினைப்பது என நான் கருதுகிறேன். பற்றிக் யோகராஜன் அத்தத்தளிப்பையும், திணறலையும் தன் அருமையான நடிப்பின் வழியாக நமக்கு உருவாக்கி அளிக்கிறார்.

2009 விடுதலைப்புலிகளிற்கும் இலங்கை அரசிற்குமான இறுதி யுத்தம் நிகழ்ந்து கொண்டிருந்தபோது அது உலகம் முழுவதும் எதிரொலித்தது. இலங்கை இராணுவ இணையத்தளத்தில் முன்னோக்கிச் செல்லும் நீல அம்புக்குறிகளுக்குள் சிக்கிக் கொண்டிருந்த ஊர்ப்பெயர்களையும், தமிழ் இணையத்தளங்களில் சாவு எண்ணிக்கை அறிவிப்புக்களையும் வேறு வழியற்று பார்த்துக்கொண்டிருந்த ஒரு தமையனை, மகனை, எளிய மனிதனை பிரதீபனின் இயக்கமும், பற்றிக் யோகராஜனின் நடிப்புமாய்ச் சேர்ந்து நம்முன் நிறுத்துகிறது. வளர்த்தப்பட்டிருக்கும் உடல் குவியல்களின் புகைப்படங்களிலும், காட்சிகளிலும் பழகிய தோற்றமொன்றை, நேசத்துக்குரியவரின் கண்களைத் தேடிக்கொண்டிருந்த நம்முடைய பதற்றமான நாட்கள் மீளவும் திரையில் நிகழ்கிறது. சிவா என்னும் தனிமனிதனின் கதை நம்மில் அநேகருடைய கதையாகிறது. இச்சினிமாவை முக்கியத்துவப்படுத்துவதும் அதுவே.

போர் மனிதர்மீது ஏற்படுத்தும் உளவியல் தாக்கங்களை வெற்றிகரமாகக் காட்சிப்படுத்தியிருக்கிற சினிமா என்றளவிலும் இந்தப்படம் முக்கியமானது. சிவாவைத் துரத்திக்கொண்டிருப்பது எது? சிறிய வயதில் தங்கள் வீட்டின் மீது நிகழ்த்தப்பட்ட இலங்கை இராணுவத்தின் விமானத்தாக்குதலில் நிகழ்ந்த தம்பியின் இழப்பா? அந்த விமானக் குண்டுத்தாக்குதலில் தான்மட்டும் தப்பி தம்பியைக் காப்பாற்ற முடியாமல் போனது குறித்த அவனது குற்றவுணர்வா? அல்லது இப்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் போரிலிருந்து தன் குடும்பத்தைக் காப்பாற்றமுடியாத கையாலாகாத்தனமா? எது அவனை இத்தனை தூரம் திணறடிப்பது? அஞ்சி ஒடச்செய்வது? 2009ல் வீழ்ந்து கொண்டிருக்கும் குண்டுகளா இல்லை சிறிய வயதில் அவனது தம்பியின் உயிரைக் குடித்த பேரோசையா?

இத்தனை கேள்விகளும் திரையில் காட்சிகளாய் விரியும்போது நாம் நம்முடைய முற்றத்தில் விழுந்திருக்கும் மீன்களைக் கண்டு துணுக்குறுகிறோம். மீன் தொட்டிக்குள் மிதக்கும் உடல்களைக் குறித்து அஞ்சுகிறோம். குண்டுகள் துளைத்திருக்கும் பிளாஸ்டிக் கிரிக்கெட் துடுப்புக்குள் சிக்கிக்கொண்டிருக்கும் அந்த ஒற்றை மீனின் எஞ்சிய உயிரைக்காப்பதற்கு சிவா துடிக்கும் போது, அவனைப் போலவே நமது சுவரைத் திறந்துகொண்டு நாம் அவனருகில் செல்கிறோம். அவனது அருகில் குந்திக்கொண்டு போர் நிலத்தின் கூடாரத்திற்குள் உழலும் நம் குடும்பத்தினரை வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஏனெனில் போர் நமக்குள் நிகழ்ந்துகொண்டிருப்பதல்லவா? அவனுடைய பிறழ்வென்பது நம்முடையதும் அல்லவா? நம் முற்றத்திலோ, பள்ளியிலோ, விளையாட்டுத் திடலிலோ ஒரு முறை வீழ்ந்து வெடித்த குண்டு நம் நினைவுள்ளவரை வெடித்துச் சிதறிக்கொண்டேதானே இருக்கிறது. துவக்குகளின் முன் நிறுத்தப்பட்ட நம் காலத்தை, பொருந்தா இடங்களில் பொருத்திக்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்ட வாழ்வை மீன்களின் கண்கள் வழி ஒளிப்பதிவாளரும், இயக்குனரும் திரையில் நம்முன் விரிக்கின்றபோது இதுவல்லவா நம்முடைய சினிமா என்று தோன்றுகிறது.

ஆனால் இத்தனை முக்கியத்துவமிக்க சினிமாவை ஈழத்தமிழ்த் திரைச்சூழல் புறக்கணிக்கிறதோ என ஐயம் உருவாகிறது. வழக்கமாக ஈழத்தமிழர்களோடு தொடர்புடைய ஒன்று பொதுவெளியில் நிகழும் போது, சமூகவலைத்தளங்களின் காலக்கோடுகளை அது தொடர்பான செய்திகளால் நிரப்பித்தள்ளுவார்கள். அதுதான் ஈழத்தமிழர் வழமை. சுண்டுக்குழிப் பூவே பாட்டு யூ ரியூப்பில் ரிலீசானாலே நம்மவர் கலைகள், நம் கலைஞரை வாழவைப்போம், அப்படி இப்படியென்று இணையவெளி கதறும். கஞ்சாக்கடத்தி தண்டனை பெற்ற நாட்டுப்பற்றாளரைக் காப்பாற்றும் விண்ணப்பங்கோரலாக இருந்தாலும், காசுகுடுத்துச் சீட்டுப்பிடிச்ச பாட்டுக்கச்சேரி நிகழ்ச்சிக்கு ஓட்டுப்போடுவதென்றாலும் சரி, சினிமா வெளியீடு என்றாலும் சரி ( அது மரணமொக்கையாக இருந்தாலும்) ஈழத்தமிழர்கள் ஒரே மாதிரித்தான் டீல் பண்ணுவார்கள். அதாவது எங்கடயாள் சப்போட் பண்ணுங்கோ இது தான் அவர்களது கோரிக்கையாக இருக்கும். ஒரு hashtag இனை இன்ஸ்ரகிராம் அனுமதிக்கவில்லை என்றதுமே அழுது குழறி ஆர்ப்பாட்டம் பண்ணிய இனமல்லவா நாங்கள்? ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை முழுக்க முழுக்க ஈழப்போரைக் குறித்துப் பேசுகிற அதுவும் தமிழ்த்தரப்பின் பக்கம் மிக நெருக்கமாக நின்று பேசுகிற ஒரு முக்கியமான சினிமாவைக் குறித்து ஈழத்தமிழ்ச் சமூகத்தின் காலக்கோடு – முக்கியமாக புலம்பெயர்ந்தவர்களின் காலக்கோடு – ஒரு அசுமாத்தமும் இல்லாமல் இருப்பது சமகாலத்தின் ஆச்சரியம் தான். அதுவும் சினிமாவில் இயங்குகிற, முக்கியமாக குறும்படங்கள், முழு நீளப்படங்கள் என இயங்கியவர்கள், எந்தச் ஈழச்சினிமாவையும் தவறவிடாத சினிமா ஆர்வலர்கள் கூட இத்திரைப்படத்தினைப்பற்றி மூச்சும் காட்டவில்லை.

அதற்கு இத்திரைப்படம் பேசும் எளிய சனங்களின் அரசியல் காரணமாயிருக்கலாம். அது வழிபட மறுத்த ஆயுத அரசியல் காரணமாயிருக்கலாம்.

“போர் இன்னும் ஓயவில்லை” என்பது பல்வேறு அர்த்தப்படுத்தல்களுக்குச் சாத்தியமான சொற்றொடர். போர் என்பதை வெற்றியாகவோ, தோல்வியாகவோ மட்டுமே அர்த்தம் கொள்ளும் வியாபாரிகளுக்கு அது ஓய்ந்துவிடக்கூடாது என்னும் தவிப்பு. அதனால் போர் இன்னும் ஓயவில்லை என்கிறார்கள். போரை நினைவுப்பரப்பிலிருந்து விரட்டிக்கொண்டிருக்கும் சனங்களுக்கோ அது திரும்பத்திரும்ப நினைவுகளுக்குள் நிகழ்ந்து கொண்டிருக்கும் தொலைத்து விடத்துடிக்கிற நினைவு, எவ்வளவு கழுவியும் நீங்காமல் நினைவுகளின் உறுத்திக்கொண்டிருக்கும் அசிங்கம். அதைப்போலவே போர் நிகழ்வதும் தனியே குண்டுகள் வீழ்ந்துகொண்டிருக்கும் நிலத்தில் மட்டுமேயல்ல அது சிவபெருமானுக்கு விழுந்த அடியைப்போல எல்லோர் முதுகிலும் விழுகிறது. போரினால் ஏற்படும் நன்மைகள் மட்டும் ஒரு சிலருக்குக் கிடைக்கிறது. விசுவமடுவில் கஞ்சிக்கு வரிசையில் நின்ற பிஞ்சுடலினின்றும் பெருகும் குருதி ஐரோப்பிய, அமெரிக்க ஆயுதவியாபாரிகளின் மதுக்குவளைகளில் வயதால் மூத்த திராட்சை மதுவாய் நிரம்புகிறது. பின்னர் அது உறவுகளின் கொடுங்கனவாகிறது, சனங்களின் அன்றாடத்தை அமைதியிழக்கவைக்கிறது.

போர் நிலத்தில் ஒட்டிய வயிறொன்றின் பசியின் பெயரால், உரிமையின் பெயரால் திரட்டப்படும் நிதியும் உணர்வுப் பெருக்கும் வெளிநாடுகளில் அசையும் அசையாச் சொத்துக்களாக மாறுகிறது, உள்நாட்டில் ஓட்டரசியலாகப் பதவியாகப் பரிமளிக்கிறது. ஆனால் போர் விரும்பிகளோ இவற்றினாலெல்லாம் குற்றவுணர்வு கொள்வதில்லை. மாறாக அவர்கள் சாமான்யனின் அன்றாடங்களை மேலும் இயல்பற்றதாக்குவதற்காகக் கைகளைக் குலுக்கிக்கொள்கிறார்கள். பாலகரின் தலைக்கு மேல் குண்டுகளைப் போடுவதைக்குறித்தும் அவர்களது கைகளில் மேலும் பாரமான துவக்குகளைத் தருவதைக்குறித்தும் திட்டம் தீட்டுகிறார்கள். இந்த அரசியல் புரிதலே இப்படத்தினுடைய அரசியலாக நாம் கொள்ளமுடியும். படம் கஞ்சிக்கு வரிசையில் நிற்பவர்களின் குருதியால் தம் மதுக்குவளைகளை நிரப்புகிறவர்களிடமே நாம் நீதிகேட்டு நிற்கின்ற அபத்தத்தை சுட்டிக்காட்டுகிறது. மக்களே புலிகள் என்றும் புலிகளே மக்கள் என்றும் நாம் சொல்லும் போது அது சிங்கள அரசதலைவர்களின் குரலோடு ஒத்திசைவதைக் காது கொடுத்துக் கேட்கச் சொல்கிறது. அதனாலும் தான் SOUNDLESS DANCE / நிசப்த நடனம் இதுவரையான ஈழத்திரைப்படங்களில் நின்றும் தனித்துத் தெரிகிறது.

  • த.அகிலன்
Posted on: April 1, 2021, by :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *