வலியின் சுரங்கள்

அது ஒரு வசந்த காலமென்று என் நினைவுகள் சொல்லிக்கொண்டிருந்தன. மனித வாழ்வின் அலாதியான கணங்களை நேசிக்கும் ஒருத்தியாக அடுத்த கட்டத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்தேன்.

பொருத்தங்கள் பொருந்திப்போனதென்றனர். மனங்கள் விலக்கப்பட்ட வெறுமைகளுக்குள் கால்களை வைக்கின்றேன் என்பதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை.

யதார்த்தங்களைத் தோற்கடித்து, நிதானங்களைத் தட்டிப்பறிக்கும் போதைக்குத் துணைபோகும் ஒருவனை நியாயப்படுத்த அங்கு பலர் தயாராக இருந்தனர். ஆனால் என்னுடைய நியாயங்களைக் கேட்க எந்தச் செவிகளும் இரங்கவில்லை.

அவன் தந்த காயங்களை மனதிலும் உடலிலும் காவியவாறு தெருத் தெருவாக அலைந்தேன் ஆதரவு தேடி.

சின்னச் சின்ன என் புன்னகைகளும் கலைந்துகொண்டிருந்தன…. எல்லாவற்றையும் சகித்துப்போகும் பெண்ணாக இருக்கும்படி குடும்பமும், சமூகமும் என்னைத் எச்சரித்தன. வாழ்வில் எஞ்சியிருக்கும் கணங்களை அழகாக்கி வாழவே ஆசைப்பட்டேன். ஆம்! ஒரு கோழிக்குஞ்சைப்போன்று என் கைகளில் தவழ்ந்த வாழ்க்கையை நான் வாழ்ந்துவிட ஆசைப்பட்டேன்.

என் துணிச்சல் அவர்கள் கௌரவத்தை அச்சுறுத்தியிருக்க வேண்டும்,
என் துணிச்சல் காலங்காலமாகக் காவி வந்த அவர்கள் வீரத்திற்குச் சவாலாக இருந்திருக்க வேண்டும்.
“ஊரில் இருந்து பொம்பிளை எடுத்தால் அடக்கொடுக்கமாய் இருப்பாள் என்று நினைச்சால் பாருங்கோ உவள! ஆடிக்கொண்டு திரியிறாள்.”
“இப்ப எல்லா இடமும் பெண்டுகள் இப்பிடித்தான் ஒரே மாதிரித்தான். அடக்க ஒடுக்கமே இல்லை.“

பழிச்சொற்களை வீசி என்னை வீழ்த்திட முயன்றனர்.

நான் வீழாதிருந்தேன்.

என்னைத் தாங்கிக்கொள்ள புதிய உறவொன்று பிறந்தது தூரதேசத்திலிருந்து. என் முடிவுகள் தீவிரமாகின. புது நேசத்தின் இருத்தல் நீடித்தது. கொடியன தவிர்த்தல் உறுதிபெற்றது.

தாங்கா நெஞ்சு தலைதூக்கியாடியது. அது வாள்கொண்டலைந்தது.
வஞ்சகத்தின் உண்மை நிலையறியாத பூஞ்சையாகி நின்றேன்.

ஒரு நொடியில் என் உடல் துண்டுதுண்டாக்கப்பட்டது! மானுடப் பண்புகொண்ட நாகரீகமே வாள் வெட்டில் வீழ்ந்து கிடந்தது. மனித குலத்தின் கொடூரப் பண்புகள் குருதியாக வழிந்தோடியது…..

000 000 000

ஒரு கொடிய மிருகம் சப்பித் துப்பிய இறைச்சித் துண்டைப்போன்று வேற்று உலகொன்றில் வீசப்பட்டிருந்தேன்!

நொருக்கப்பட்ட என் உணர்வுகளின் வலிகளை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

கிழித்தெறியப்பட்டிருந்த என் ஆத்மா “விடுதலை விடுதலை” என்று அலறிக் கொண்டிருந்தது….

நான் ஒரு பெண்ணென்பதால் என் வாழ்வை வெட்டிச் சாய்த்தீர்கள். என்னைப் பிளந்துபோட்ட பின்னரும் உங்களின் கொலைவெறி ஓயவில்லை.

நான் ஒரு பெண்ணென்பதால்தான்….!

உங்களின் பார்வையில்…..

எனக்கு உணர்வுகள் இல்லை!
எனக்கெனத் தனி ஆசைகள் இல்லை!
எனக்கெனத் தனி முடிவுகள் இல்லை!
எனக்கெனத் தனி அடையாயமே இல்லை!
ஆம்! உங்கள் பார்வையில் நான் ஓர் பெண் மட்டுமே!

நொருக்கி வீசப்பட்ட என் உணர்வுகளைக் கூட்டி அள்ளி என் மரணத்தையாவது வாழ எத்தனித்தேன். மீண்டும் மீண்டும் கொலைவெறிகொண்டு என்மீது பாய்ந்தீர்கள்.

ஆம், மானுடப் பண்புகொண்ட நாகரீகமே வாள் வெட்டில் வீழ்ந்து கிடந்தது.

மனித குலத்தின் கொடூரப் பண்புகள் குருதியாக வழிந்தோடியது…..

000 000 000

நீங்கள் புனிதமானவர்கள். எச்சில் புளிக்கப் புளிக்கப் பேசுவதே உங்கள் பொழுதுபோக்கு….. அன்று பிளந்தெறியப்பட்ட என் மேனியிலிருந்து கசிந்த இரத்தத்தின் கடைசித் துளிகள் காயும்வரையிலும் நீங்கள் என்னைப் பற்றிப் பேசிக்கொண்டுதானிருந்தீர்கள். அனுதாபமாகவும், கோபமாகவும்…. கேவலமாகவும்….. ஆம்! என் மரணத்தைக்கூட நீங்கள் வாழவிடவேயில்லை.

அன்று என் உடல் தீயிடப்படும் கடைசி நிமிடம்வரையில்கூட அவசர அவசரமாக
என்னை நசித்துத் துப்பினீர்கள் எலும்பற்ற உங்கள் நாவினால்.

“அவள் சரியான வாய்காரி. அதுதான் அவன் அடிச்சவன்.”
“அவள் சரியான தேவடியாள். அதுதான் அவன் சாத்து சாத்தெண்டு சாத்தினவன்”
“அவள் ஒரு வேயன்னா….அதுதான் அவன் அவளை வெட்டினவன்… அவளின்ர பச்ச குத்தின கை துண்டு துண்டாப் பறந்திதாமெடா……”

“ஹீ…. ஹீ…. ஹீ…..”

000 000 000

அன்று என் உடல் தீயிடப்படும் கடைசி நிமிடம்வரையிலும் அதற்குப் பின்னரும் என்னைச் சப்பித் துப்பினீர்கள்….

நீங்கள் சற்று வித்தியாசமானவர்கள். எழுதுவதே உங்கள் முழுநேர பொழுதுபோக்கு!

“அவள் பாவம். உவனப்போல ஆட்களச் சுட்டுத்தள்ளவேணும். ஆனால்..”

“அவள் பாவம். உவனப் பிடிச்சுப் பொலிசில குடுக்கவேணும்…ஆனால்….“

“அவள் பாவம். உவங்களைப்போல ஆட்கள விட்டிட்டுப்போனால்தான் சரி.? ஆனால்….”

ஆனால்….. ஆனால்…… ஆனால்…… ஓ… புதுமையானவர்களே! உங்கள் எழுத்துக்கள் உள்பெட்டிகளிலும், இரகசிய வெளிகளிலும் தொடர்ந்தன….

“…ஆனால்… உனக்குத் தெரியுமே? அவளும் மோசமாம். இன்னொருத்தனோட……”

“ஆனால் உப்பிடியும் ஏதாவது செய்யத்தான் வேணும். அப்பதான் சில பொம்பிளையளும் திருந்துவினம்.”

“ஆனால்…எண்டாலும் மச்சான்…..என்னதான் பிரச்சினை இருந்தாலும்……உன்ன விட்டிட்டு இன்னொராளை உன்ர ஆள் பிடிச்சால் நீ சும்மா விடுவியோ?”

இப்படியாக உங்கள் முதுகெலும்பற்ற நாக்கள் அசைத்துகொண்டிருக்கையில் உங்கள் சீழ்படிந்த மனங்கள் நாறிக்கொண்டிருந்ததை நீங்கள் உணரவில்லையா?

ஆம்…..நல்லவர்களே! இவ்வாறு நீங்கள் பேசிக்கொண்டிடிருக்கையில் உங்கள் குதங்களைச் சொறிந்து பின் தலைகளிலும், வாய்களுக்குள்ளும் வைத்தீர்கள்.

000 000 000

பதினெட்டு மாதங்கள் உருண்டுவிட்டபின் நான் உங்களிடமிருந்து முழுமையாகத் தொலைந்து போயிருக்கின்றேன்.
இந்த வெற்று லோகத்தில் என் மரணம் மட்டும் நிட்சயமாகி வாழ்ந்துகொண்டிருக்கின்றது…..ஆம், கிழித்துபோடப்பட்ட ஆத்மாவின் வலியுடன்….!
“விடுதலை! விடுதலை!”

பாவம் நீங்கள்!
நாள் முழுவதும் ஓயாத வேலை உங்களுக்கு.

முகநூலில் படங்களைப் புதுப்பிப்பதிலும், லைக்குகளை எண்ணுவதிலும் உங்கள் நாள் திருப்தியடைந்துவிடக்கூடும், எந்தப் பெண்ணோடு யார் தொடர்புகளை வைத்துக்கொண்டிருக்கின்றார், எந்தப் பெண்களின் மார்புகௌல்லாம் பெரிதாவோ அல்லது சிறிதாகவோ இருக்கின்றது என்பதைப் பற்றிப் பேசுவதிலோ அல்லது எந்தப் பெண்ணை எப்போது குறிவைத்து அடிக்கலாமென்பதிலோ உங்கள் கவனம் செலவாகிக்கொண்டிருக்கின்றது……

பாவம் நீங்கள்!
உங்கள் நேரங்கள் வேகமாக மரணிப்பது பற்றி நீங்கள் கவலைகொண்டு அழுது குளறுகிறீர்கள்.

புனிதமானவர்களே!
வித்தியாசமானவர்களே!

நான் உங்கள் ஞாபகங்களிலிருந்து மறைந்துபோனது பற்றி எந்த அக்கறையுமே இல்லை. ஆனால் உங்கள் புளிச்சல் வாய்களில் கடித்துத் துப்ப இன்னும் ஏராளமான பெண்களின் கதைகளை வைத்திருப்பீர்கள்.

அன்பான நெஞ்சங்களே! உங்களிடம் நான் கேட்டுக்கொள்வதெல்லாம் இதைத்தான். குதங்களைச் சொறிந்தபின் உங்கள் கைகளைக் கொஞ்சம் கழுவிக்கொள்ளுங்கள்.

என் வாழ்வை பறித்தவர்கள் நீங்கள்.

என்னைப்போன்ற பெண்களை இனியாவது வாழவிடுங்கள் என்று உங்களிடம் நான் ஒருபோதும் கெஞ்சப்போவதில்லை….ஏனெனில்…..

நாம் பெண் என்பதால்…..

நான் உங்களிடம் ஒருபோதும் கெஞ்சப்போவதில்லை.

ஆம்! நாம் பெண் என்பதால் மட்டுமே.

==நிரூபா==

(ரொறன்ரோ, கனடாவில் தர்ஷிக்கா என்கிற ஈழப் பெண்ணொருவர் 11.09.2019ல் பொதுவெளியில் அவரது முன்னாள் கணவரால் வெட்டிக் கொலைசெய்யப்பட்டார். அதனையொட்டியே இது எழுதப்பட்டது)
Posted on: April 12, 2021, by :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *