பாலியல் வன்கலாச்சாரம் – Rape culture -1
ஈழப்போராட்ட வரலாற்றில் எடுத்ததற்கெல்லாம் வன்முறையால் பதில் காணத் துடித்த ஒரு காலம் ‘கொலைக்கலாச்சாரம்’ பெருகிய காலம் என்று குறிப்பிடப்பட்டது. அக்காலத்தில் தெருக்கம்பங்களிலும் வீதியோரங்களிலும் கொலைகள் பழகிப்போய் அவைக்கு காரணங்கள் சொல்வதும் போகிற போக்கில் நிகழ்ந்தது.
‘அவ கனக்க கதைச்சவா” அதனால.
‘அவன் துரோகியாத்தான் இருப்பான்” அதனால.
‘ஒற்றனா இருந்திருப்பான்’ அதனால.
காலப்போக்கில் இவ்வாறான சாட்டுகளை கொலை செய்தவர்கள் அல்ல அதைக் கண்டவர்களே சொல்லும் நிலை வந்திருந்தது. கொலையுண்டவர்கள் வந்து சொல்லப்போவதில்லை என்பதால் “அப்படியாகத்தான் இருக்கும்” என்கிற எண்ணமும், அப்படியாகத்தான் இருந்தாலும் இது சரியான முறையா எனக் கேட்காத தன்மையும் வளர்க்கப்பட்டது. அவர்கள் அப்பாவிகளாய் இருப்பின் அது தமது மௌனத்தை கேள்வி கேட்கும் என்பதாலும் இந்தப் பார்வையாளர்கள் அவர்களுக்கு அப்படியானதொரு ஸ்தானத்தை வழங்க மறுத்தனர். அவர்கள் அப்பாவியாக இல்லாவிட்டாலும் கூட கொல்லும் உரிமை எவருக்கும் இல்லை என்பதை – வன்முறையை நியாயப்படுத்துகிற ஓட்டத்தில் – குறிப்பிடும் தேவையும் அங்கிருக்கவில்லை. இவ்வாறாய் மானுட மேன்மைக்கு எதிரான கொலைகள் அக்காலத்தைய அச்சமூக மனங்களுள் சாதாரணமானதாக ஆக்கப்பட்டிருந்தன. இவற்றினூடாக தனக்குப் பிடித்த பெண்ணைக் கவர்ந்தவனை, மனம் பிறழ்ந்தவரை, தனது உறவினர் நேசிக்கும் சாதியரீதியாய் ஒவ்வாதவரை என தம்மிலிருந்து வேறுபட்டவரை, சாதிய பாலின என பழிவாங்கல்களை, மறைமுகமாய் விடுதலையின் பேரில் நிகழ்த்திடவும் முடிந்தது. ஏலவே வன்மம் மிகுந்திருந்தவர்கள் தமது வேட்டை மனோநிலைக்கு இரைகளாக சக மனிதர்களை வேட்டையாடத்தான் களங்கள் தரப்பட்டிருந்தன. அப்படிக் களங்கள் வழங்கப்படுகிறபோது ஏற்கனவே சமூகத்தில் இருக்கிற ஏற்றதாழ்வுகளது உளவியலும் ஆயுததாரிகளையும் இயக்கியது.
Fast forward to 2021. நாகரிக உலகின் ஒரே குறிக்கோள் நகைச்சுவையாக என்கிறபோதும் வடிவேலு சொல்வதுபோல “பேச்சு பேச்சா இருக்கணும்’ என்பதாகவே இருக்கிறது. இருக்கிறதா என்பதல்ல ஆனால் முன்னோக்கிய உலகில் நாம் கொலைக் கலாச்சாரத்திற்கு ஒருமித்த அனுமதியோ இடமோ தர முடியாது. இங்கே சட்டம் ஒழுங்குகள் எப்போதும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு சார்பாக இருப்பதில்லை என்றாலும் அதை நோக்கிய நகர்வும் அதற்கான வேலைகளை செய்யவும் சமூகநீதியை நிலைநிறுத்தவும், சமத்துவம் வேண்டும் செயற்பாட்டாளர்கள் எப்போதும் இருந்தார்கள், இருப்பார்கள். வலியவரே வெல்கிற உணர்வை ஏற்படுத்தும் சமத்துவமற்ற சூழலில் அதுவே ஒரே நம்பிக்கை.
மேற்குறிப்பிட்ட கொலைக் கலாச்சாரத்தை பற்றிய ஒரு சித்திரம் உங்கள் மனதுள் வருகிறபோது அதை ஒத்ததே பாலியல் வன்கொடுமைக் கலாச்சாரமும் என்பதை இலகுவில் விளங்கிக் கொள்ள முடியும். எப்படி கொலைக் கலாச்சாரம் கொடியதோ அதை ஒத்ததே பாலியல் வன்கொடுமைக் கலாச்சாரமும். எனினும் கொலை கலாச்சாரம் போல வெளிப்படையாக சிரச்சேதங்கள் இதில் நிகழ்வதில்லை என்பதாலும், சிறுபான்மையினர்மீதான பாலியல் வன்முறைகளைத் தூண்டும் இதன் பாதிப்பு மறைமுகமானது என்பதாலும், இதைப் புரிந்துகொள்ளுதல் பலருக்கும் இன்றுமே சிரமமானதான ஒன்றாக இருக்கிறது. குறிப்பாக பாலியல் வன்முறைகள் தொடர்பான அறிமுகம் பெரும்பாலும் சினிமாவின் ஊடாக மனதில் பதிந்தவை – ஒரு நீலப்பட காட்சி போல உடையை அகற்றுகிறபோது பெரிதுபடுத்திக் காட்டிவிட வேண்டிய பெண்ணுடலின் அங்கங்களையே மையப்படுத்தியவை. இங்கே ஒரு வன்முறையன்றி வதைக்குள்ளாகும் மனிதரைப் பற்றியதாகவன்றி அச்செயலை கிளுகிளுப்பாகப் பார்க்கும் ஒரு மனநிலையே அதனூடாக வளர்க்கப்பட்டிருப்பவை.
அதனால்தான் அறிமுகக் கட்டுரையில் அறிவொளி குறிப்பிடுவதுபோல: பாலியல் வன்கொடுமை அல்லது வன்முறைக் கலாச்சாரம் (Rape Culture) என்பது ஒரு சமூக கட்டமைப்பாகும், அங்கு பெண்களுக்கு எதிரான பாலியல் வல்லுறவு உட்பட இதர பாலியல் வன்கொடுமைகள் இயல்பாக்கப்பட்டிருக்கின்றன. அதனால்தான் பாலியல் வன்கொடுமைக் கலாச்சாரம் என்பது பாலியல் வன்முறையைப் பற்றியது மட்டுமல்லாது அது பாலியல் வன்முறையாளர்களைப் பாதுகாக்கும் சமூக நிறுவனங்கள் மற்றும் கலாச்சார இயல்புகளைப் பற்றியது ஆகும். அதாவது பாலியல் வன்கொடுமைகளைச் செய்பவரை விடுத்து அதற்கு உள்ளானவர்களை குற்றம்சாட்டும், அதை நியாயப்படுத்தும் எம் கலாச்சார இயல்புகளைப் பற்றியதும் ஆகும்.
- தொடரும்
- பகுதி 02