பாலியல் வன்கலாச்சாரம் (rape culture) – 2
இதற்கு மிக மிகப் பழகிப்போன உதாரணம் ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிறபோது அவள் போடுகிற ஆடை, அவளது நடவடிக்கைகள் என்பனவற்றை பாலியல்வன்கொடுமையாளனின் கவனத்தை ஈர்த்ததற்கான சாட்டுகளாகக் கூறப்படுவதைக் கூறலாம்.
ஒரு கொடுமை நிகழ்கிறபோது யாரும் அதைக் கொடுமை என சொல்லத் தயங்கக்கூடாது. ஆனால் இங்கே ஒரு பெண்மீது பாலியல் வன்முறைகள் பிரயோகிக்கப்படுகிறபோது சமூகம் அதனை நியாயப்படுத்தத் தயாராகிறது; நியாயப்படுத்தும் அனுமானங்களைச் செய்கிறது. அதனூடாக கொலையாளர்களுடன் பாலியல் வன்கொடுமை செய்பவர்களுடன் ஒத்திசைகிறது. ஒத்திசைவதூடாக அவர்களை பாதுகாக்கிறது.
அவ போட்ட உடுப்புக்கு இது நடக்காட்டித்தான் ஆச்சரியம்
ஒழுங்கான நடத்தை இல்ல
இத்தினமணிக்குப் பிறகு ஏன் வெளிய போகோணும்
உண்மையில் வன்முறையாளர்களுக்கும் இக்காரணங்களுக்கும் சம்மந்தமில்லை என்பதை பெண்கள் தாம் வன்முறைக்குள்ளானபோது போட்டிருந்த ஆடைகளை காட்சிப்படுத்திய கண்காட்சி ஒன்று இலகுவில் உடைத்துவிடும் (பார்க்க படம்: ஆறு வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்குள்ளானபோது போட்டிருந்த ஆடை – Source: boredpanda). பாலியல் வன்முறையாளர்கள் தேர்ந்தெடுக்கிற நபர் அவரது ஆடை காரணமாகவோ நடத்தை காரணமாகவோ அன்றி அவர் ஒரு பாலியல் வன்முறையாளரிடம் மாட்டிக்கொண்டதாலேயே அது நிகழ்கிறது. இருள்நிறைந்த வீதியில் தனித்து நடக்கின்ற பெண் மட்டுமே இப்படி மாட்டிக்கொள்ள முடியும் என்கிற எண்ணத்தை பெரும்பாலானோர் கொண்டிருக்கிறார்கள். ஆனால் 6 வயது சிறுவர் வீதியில் மட்டுமா மாட்டிக்கொள்ள முடியும்? பாலியல் வன்முறைகள் பெண்களுக்கு எதிராக சிறுவர்களுக்கு எதிராக பாலியல் சிறபான்மையினருக்கு எதிராக பாதுகாப்பானது என (குடும்பங்கள் – பாடசாலைகள் – திருத்தலங்கள் உட்பட) நம்பப்படுகிற இடங்களில், பாதுகாப்பானவர் என நம்பப்படுகிறவர்களாலும்தான் நடந்தேறுகிறது. தவறான அனுமானங்களை செய்வதூடாக குற்றவாளிகளுக்கு சாட்டுக்கள் தருவதை நிறுத்தி, இந்த உண்மையை மறுபடி மறுபடி நாம் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது.
000
அவர் இத்தகைய பொதுப்போக்கினைக் கொண்டிருக்கிற பாலியல் வன்கொடுமைக் கலாச்சாரத்தினால் இன, நிற, மொழி, எந்த வேறுபாடின்றி எந்த சமூகத்தைச் சேர்ந்த பெண்ணாக இருந்தாலும் பாதிப்புக்குள்ளாகிறார். அவர் தனக்கொரு அநீதி நடக்கிறபோது அதை பொதுவில் பேசவியலாதவாறு அவரை பொறுப்பெடுக்கச் சொல்லும் சமூகத்தின் கண்டனம் தொடர்பில் சதா அச்சப்படவேண்டியிருக்கிறது. அந்தளவுக்கு குற்றத்தை அதைத் தொடுத்தவர்மீது போடாது பாதிக்கப்பட்டவரைத் தாக்கும் தன்மை இங்கே மிகச் சாதாரணமானதாக ஆக்கப்பட்டுள்ளது.
00000
மற்றொன்று, ஜனநாயகம் என்பது சேர்ந்திருக்கும்போது உரிமைகள் கிடைக்காவிடில் விருப்பின்மைகள் ஏற்பட்டால் பிரிகின்ற தேர்வு எனில், இது தனியே நாடுகளுக்கு மட்டும் பொருந்துவதல்ல. மனிதர்களும் விரும்பாத, வன்முறைமிகுந்த உறவுகளில் இருந்து விலகிச் செல்லும் உரிமைகளை கொண்டவர்களாக இருப்பதே நாகரிக சமூகத்தின் வடிவம்.
அதனால்தான் பிரிந்துபோகும் உரிமை குறித்த புரிதல்களோ, குறைந்தபட்ச சமூகப்பொறுப்போ அற்று “அடிடா அவளை! வெட்ரா அவளை” எனும் பாடல்களை ஒத்த கலாச்சார உற்பத்திகள் திரைப்படம், பாடல், இலக்கியங்களை நிறைக்கின்றன. இது ஏலவே இருக்கிற வெறுப்பை அடர்த்தியாக்கி, பெண் வெறுப்பாய் விடலைப்பருவ ஆண்களிடமிருந்து தொடங்கி பூதாகரமாகி யாரையும் பழி(லி)வாங்க திரிகின்றது.
இங்கே அப்படியானதொரு வெறுப்பிடமிருந்து வெடிக்கும் ஒரு பெண் மீதான வன்முறையானது மற்றப் பெண்கள் மீதும் தடைக்கற்களாக விழுகிறது. பெரும்பாலான பெண்களும் சிறுமிகளும் பாலியல் வன்கொடுமைகள் குறித்த அச்சத்திலேயே தம் வாழ்நாள் முழுவதையும் கழிக்கிறார்கள். இது பெரும்பாலான ஆண்களுக்கு யதார்த்தம் கிடையாது. பாலியல் வன்கொடுமைகள் ஆண்களுக்கும் நடக்கக் கூடியதே (குறிப்பாக சிறைகளில், யுத்தகாலத்தில் போர்க்கைதிகளின்மீது, மேட்டுக்குடியினரின் தேவைகளுக்காக) என்றாலும் ஒரு குறிப்பிட்ட நேரத்தைக் கடந்தபிறகு தெருவிலே நடக்கிற அவர்கள், தான் ஒரு பெண்ணால் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாகலாம் என்கிற அச்சத்துக்குள்ளாவது மிகவும் அபூர்வமானதாக இருக்கும். அதனாற்தான் “ஆண்களுக்கும்தானே நடக்கிறது” என உரையாடலை திசைதிருப்புவதற்குப் பதிலாக நாம் யார்மீதும் வன்முறை திணிக்கப்ப்டா சமத்துவ உலகையையே விரும்புகிறோம் என்பதையும் சமகாலத்தைய பெரும்பான்மை யதார்த்தம் ஆணாதிக்க கட்டமைப்பு காரணமாக பெண்களுக்கும் பாலியல் சிறுபான்மையினருக்கும் எதிரானதாக இருக்கிறது என்பதை ஒத்துக்கொண்டு உரையாடலைத் தொடங்க வேண்டும்.
- தொடரும்
- பகுதிகள் 3, 4, 1