வாழ்க வாழ்க
by இமையம், க்ரியா (2020)
“வாழ்க வாழ்க” தேர்தல் பிரச்சாரத்திற்காக கட்சியின் கிளைச்செயலாளர் ஆளுக்கு 500 ரூபாய் பேசி ஆட்களைத் திரட்டித் தனது தலைவியின் கூட்டத்துக்கு வானில் ஏற்றிச் செல்வதும் அங்கு நடக்கின்ற கூத்துக்களையும் வைத்து எழுதப்பட்ட – குறுநாவல் (novella) என வகைப்படுத்தியிருந்தாலும் – ஒரு நெடுங்கதை (novelette) எனலாம்.
‘ஆடு மாடு ஏத்திக்கிட்டு போற மாதிரி’ அவர்கள் அங்கு கொண்டு வரப்பட்டாலும் பெரிய கட்அவுட்கள், தேர்தல் பிரச்சாரத்திற்கெனவே பெருந்திரளான மக்கள் குமிழ என மரங்கள் தறிக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டிருந்த மைதானம், அப்படியொரு கூட்டம், கண்டு வேனில் ஏறியபோதிருந்த உற்சாகம், உச்சிவெயிலில் நீண்ட நேரமாகியும் தலைவி வராமல் காத்திருக்க நேர்கையில் மெல்ல கரைகிறது. சிறுநீர் கழிக்க இடமின்றி தொண்டை தண்ணி வத்தும் வெயிலில் தவிக்கையில் “பத்து ஊர் நீட்டுக்கு கட்அவுட்டு பேனர்ன்னு வச்சவங்க பொட்டச்சிங்க ஒதுங்கி நின்னு மூத்திரம் ஓடுறதுக்கு ரவ எடம் வைக்கலியே” “நடுத்தெருவில மூத்திரம் விடுற பயலுகளுக்கு என்ன தெரியும் பொட்டச்சியோட கஸ்ரம்” என வைகிறார்கள்.
மற்றொருபுற் ‘நீ எப்படி எங்களுக்கு சரிசரமா நடுவுல வந்து ஒக்காரலாம்’ என இன்னொரு பெண்ணுடன் சாதிச் சண்டையும் வந்துவிடுகிறது. ஏற்கனவே உள்ளிருக்கும் வேறுபாடுகள் முறுகலாகி பிரச்சினைகள் கொதிநிலையை அடைவதும், இப்படியான எந்த சிரமங்களுமின்றி மிக இலகுவாக தலைவி கெலிகொப்ரரில் வந்து இறங்கியதும் கூட்டத்தில் ஏற்பட்ட அல்லோலத்தில் ஆண்கள் பெண்களுக்கிடையே தடுப்பாகக் கட்டப்பட்டிருந்த சவுக்குக் கட்டைகள் விழுந்து நான்கைந்து பேர் பலியாகிறார்கள்.
‘தேர்தல் கூட்டத்தில் நான்கு பேர் பலி!’ இவ்வாறு சாதாரணமாக படித்துக்கடந்த செய்திகளின் பின்கதைச் சுருக்கமாக இந்நெடுங்கதை விரிகிறது. யாருடையவோ அதிகார வெற்றி -தோல்விக்கு எளிய சனங்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறார்கள் என்பதும், கட்சிகள் அவ்வாறு மக்களைப் பயன்படுத்தவும் சனநெரிசல் தொடர்பாக உரிய முன்பாதுகாப்பு நடவடிக்கைகள் செய்யாது பலியாடாக்கவும் செய்கின்றன என்பது அடிமட்டப் பெண்களின் தணிக்கையற்ற உரையாடல்களூடாக வாசகர்களிடம் கடத்தப்பட்டிருக்கிறது.
பொதுவாக தமிழக தேர்தல் குறித்த மேல்மட்டத்து உரையாடல்களில் அடிமட்ட மக்கள் குறித்த ஒரே மாதிரியான கற்பிதம் வெளிப்படும்: ‘காசு வாங்கீற்று வாக்கு போடுபவர்கள்” “ரீவி கொடுத்தால் வாக்குப் போடுவார்கள்.” அவை படித்தவர்கள் எனப்படுபவர்களது உயர்வுமனச்சிக்கலின் (superiority complex) வெளிப்பாடுதான். தேர்தலை தமது தேவைகளுக்கு சாதகமாய்ப் பயன்படுத்திக்கொள்ளும் எளிய ஏழை மக்களது பேரம் (negotiation) பேசும் சக்தி, வாக்குறுதிகளை மட்டுமே வழங்கும் தேர்தல்காலத்தில் அவ் வழங்குநர்களிடம் மக்கள் தம் நலனின் பொருட்டு எடுத்துக்கொள்ளும் சிறிதளவு அதிகாரம். இங்கே இந்தக் கதை மருமகனின் பொறுப்பற்றதனத்தினால் கடும் காய்ச்சலில் உழலும் பிள்ளைக்கு மருத்துவம் பார்க்கவியலாது திரியும் மகளுக்காய் வருந்தி தனது பேரப்பிள்ளையை வைத்தியரிடம் கொண்டு செல்ல அந்த 500 ரூபாய் உதவுமென கட்சி பிரச்சராரக் கூட்டத்துக்கு போக சம்மதிக்கிற வயதான பெண்ணிடம்தான் தொடங்குகிறது. அவரில் தொடங்குவதூடாக மேல்மட்டங்கள் காணமறுக்கும் சமூக பொருளாதார காரணிகளைக் கோடிட்டுக் காட்டுவிடுகிறது. தொலைக்காட்சி, மற்றும் இன்ன பிற பொருட்களை வாங்கும் வசதி கொண்டவர்கள், அவ் வசதி பெற்றிருக்காத மக்கள் -தேர்தல் காலங்களில் – அவற்றைப் பெறக்கூடிய பேரம் பேசும் சக்தியைப் பயன்படுத்துகிறார்கள். வசதி கொண்டவர்களுக்கு இது அற்பத்தனமாய்த் தெரிகிறது. எளிய மக்களின் சமூக பொருளாதார காரணிகளை புறந்தள்ளுபவர்கள் தமது மேல்மட்டங்களில் அத்தியவாசியமற்ற தேவைகளை அடைவதற்கு எண்ணற்ற சமரசங்களை பேரங்களை செய்வது அவர்களை ஒருகாலும் உறுத்துவதுமில்லை.
கதையில் தமது பிரச்சாரத் தேவைக்காக கட்சி உறுப்பினர்கள், மரங்களைத் தறித்தல், சூழலை நாசமாக்குதல், தற்காலத்தை மட்டுமே கவனம் கொள்ளும் முன்னோக்கற்ற அலட்சிய/அதிகார பேராசைப் போக்கு என்பனவும் சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.
‘என்னதான் இருந்தாலும் திமிரெடுத்த ஆம்பிளைகள கால்கள்ள விழவைச்ச கெட்டிக்காரி’ என வந்திருந்தவர்கள் மெச்சுகிற இடங்களில் தலைவி ஜெயலலிதாவாகத் தெளிவாக சித்தரிக்கப்பட்டாலும் தமிழ்நாட்டின் எந்த பெரும் கட்சியின் அரசியல்வாதிகளுக்கும் தேர்தல் நடப்புகளுக்கும் பொருந்துகிற யதார்த்தமாகவே முழுக்கதையும் இருக்கிறது.
Posted on: June 10, 2021, by : admin