பாலியல் வன்கொடுமைக் கலாச்சாரம் (rape culture) – prt 3

சிறுபான்மையினருக்கெதிராக இழைக்கப்படும் எந்தக் குற்றங்களும் தண்டனைக்கு அப்பாற்பட்டதாக ஆக்கப்படுவதும் குற்றவாளிகளுக்கு தண்டனையிலிருந்து விலக்கு (impunity) வழங்கப்படுவதும் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டெழுந்து வருதலுக்கான சாத்தியத்தைத் பின்னடைய செய்து விடுகிறது. அந்தவகையில் பாலியல் வன்முறைக் கலாச்சாரம் பல வகைகளிலும் பெண்களையும் பாலியல் சிறுபான்மையினரையும் தொடர்ந்தும் சமுதாயத்தில் மிகக் கீழ்நிலையில் வைத்திருக்க உதவுவதோடு அவர்களின் முன்னேற்றங்களிற்கான பெரும் தடையாக பின்னணியில் இயங்குகிறது. இக் கலாச்சாரத்தின் குணஇயல்புகள் பெண்கள் சிறுபான்மைகளுக்கெதிரான சகல வன்முறைகளதும் ஊற்றுக்கண்களாகப் பார்க்கப்படுதல் வேண்டும்.

மேற்கில் வளர்ந்துவரும் இன்சல் (InCel /involuntary celibate) – ‘விருப்பமற்ற பிரம்மச்சாரிகளது – இயக்கமும் சரி, நாம் குறிப்பிட்ட ஆண்-பெண் உறவுகளுள் வன்முறையைச் சாதாரணமானதாகச் சித்தரிக்கும் தமிழ் சினிமாப் பாடல்களும் சரி அடிப்படையில் ஒத்த சிந்தனையைப் பகிர்கின்றன. தாங்கள் தயாராக இருந்தும் தமக்கு பெண்களுடனான உறவு கிடைக்கவில்லை என்பதால் தமது விருப்பமற்ற பிரம்மச்சாரியத்திற்கு தம்மைப் பாக்காத பெண்களையே குற்றவாளிகளாக்கும் போக்கும் மிகுந்த மனித அழிவைத் தரும் சம்பவங்களாக வெடிக்கின்றன.

இது எத்தகைய அபாயகரமான மனநிலை எனில் ஒருவர் தன்னை காதலிக்க மறுப்பதை, அல்லது ஒருபோது தன்னைக் காதலித்தவர் பிறகு உறவை முறிப்பதை, பிரிந்து செல்வதை, ஒருவள் தன்னுடன் உடறுறவு கொள்ள விரும்பாமையை அவரவரது தேர்வு செய்யும் ஜனநாயக உரிமையாகப் பார்க்க மறுக்கின்ற போக்கே. மாறாக, ஒருவள்(ன்) தன்னை வெறுக்கவோ தன்னிடமிருந்து பிரிந்து செல்லவோ, தன்னுடன் உறவுகொள்ள மறுக்கவோ அவருக்கு இடமில்லை எனும், அவர்கள் தம்மை காதலித்தே ஆகவேண்டும், பெண்களுக்கு விருப்பமற்றுப் போயினும் தொடர்ந்தும் தம்முடன் இருந்தே ஆக வேண்டும் அது அவர்கள்மீதான தமது உரிமை என எண்ணும் தன்னுயர்வு மனப்பாங்கே இங்கே இத்தகைய ஆண்களை இயக்குகிறது. விருப்பமில்லாமலும் ஒருவர் தன்னுடன் உறவிலிருக்க வேண்டுமெனும் சிந்தனை தன்னை முன்னிருத்தியது. தனது விருப்பத்தை விரும்பாத இன்னொருவரில் திணிப்பது. இன்னொருவருடன் சேர்ந்து செய்கிற எந்தவொரு விடயத்திலுமே இந்தத் திணித்தல் ஏற்றுக்கொள்ளவியலாதது. ஆனால் பெண்-ஆண் உறவென வருகிறபோது விரும்பாத ஒன்றை செய்ய விரும்பாமை – அதை மறுத்தல் என்பது ஒருவரது தார்மீக உரிமை என்கிற அடிப்படையே இங்கே பலராலும் புரிந்துகொள்ளப்படாது ஆட்டம் காண்கிறது. உயிருள்ள சக மனிதரை தமது உடமைகளில் ஒன்றாய் உணரும் உடமை மனப்பான்மையிலிருந்தே அவரது தேர்வு புறந்தள்ளப்பட்டு உரிமையாளரின் தேர்வே முக்கியப்படுத்தப்படுகின்ற மனோநிலை பிறக்கிறது. பணம், நகை பொன்ற சொத்துக்களைப்போல உயிருள்ள பெண்ணுடலுக்கும் ஒருவர் உரிமையாளராகிவிட முடியாது என்பதே இங்கே புரிந்துகொள்ளப்படுவதில்லை.

2018, ரொறன்ரோ, கனடா: 
25 வயதான அலெக் என்பவர் தனது வாடகை வாகனத்தை ரொறன்ரோவின் துரிதகதியிலான வீதியொன்றின் மக்கள் கூட்டதை நோக்கி செலுத்தி பத்துப் பேர் வரை மரணமடைந்திருந்தனர், பதினான்கிற்கும் மேற்பட்டோர் காயமுற்றனர்.  விசாரணையில் அவரது தாக்குதலில் பலியானோர் பெரும்பாலும் பெண்களே என்பதும் அவர் அவர்களைத்தான் குறி வைத்தார் என்பதும் தெரியவந்தது. அவரது காரணம் தனக்கு விரும்பின பெண்கள் கிடைக்கவில்லை என்பதால் தான் பிரமச்சாரியாக இருக்க வேண்டியிருக்கிறதே என்கிற கோபம்தான். எனக்குக் கிடைக்கவில்லை ஆகவே உயிர்வாழும் உரிமை உனக்குக் கிடையாது என்கிற உளவியல். அனால் ஆண் மற்றும் பெண் இன்சல்கள் குறித்த ஆராய்ச்சிகளைச் செய்த ஆய்வாளர்கள் பெண் இன்சல்கள் ஆண்களுடன் ‘ஒருவரது தோற்றமே சக துணையைத் தேர்வதில் பிரதான பாத்திரமாக இருக்கிறது’ போன்ற எண்ணங்களில் பொதுவான குணஇயல்புகளைப் பகிர்வதாக ஒத்துக்கொள்கிறார்கள்.  ஆனால் அவர்கள் வேறுபடுகிற முக்கிய புள்ளி அவர்கள் தமக்கு ஆண் நண்பர்கள் கிடைக்கவில்லை என்று ஆண்களைப் போல ஆபத்தான வகையில் தமது கோபத்தைக் காட்டவில்லை. பதிலாக, தங்களை விரும்பாத ஆண்களை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள். தாம் விரும்பப்படாமை என்பது தொடர்பிலான தமது கோபத்தை பெண் இன்சல்கள் தம்மிலேயே காட்டுவதையும் ஆண்கள் அதை பொதுவில் தம்மை நிராகரிக்கும் பெண்களில் காட்டுவதையும் ஆண்-பெண் இன்சல்கள் தொடர்பான ஆராய்வில் கவனிக்கவேண்டிய முக்கிய வேறுபாடாகக் குறிப்பிடுகிறார்கள்.  இதுமட்டுமன்று அமெரிக்காவில் கடந்தகால்ஙகளில் நடந்த துப்பாக்கிச்சூடுகள் பெருவாரியாக பெண் வெறுப்பினை மற்றும் பெண்ணின் மறுப்பினை ஏற்றுக்கொள்ளவியலாத ஆண் உளவியலிலிருந்தே  வந்திருக்கின்றன.

பெண்ணுடல் பெண்ணினுடையது. ஆகவே பெண்ணுடல் தனக்கான தேர்வுகளை செய்கிற உரிமைகளையும் தன்னிடத்தே கொண்டிருக்கிறது. ஆனால் ஒவ்வொரு சமூகங்களும் தமது கலாச்சாரங்களில் பெண்களை, சிறுபான்மைப் பாலினங்களை ஆண்களுக்கு அடுத்த நிலையிலுள்ளவர்களாய் அதிகாரப்படிநிலையில் வைத்திருக்கின்றன. அவர்கள் தொடர்பான முடிவுகளையும் குடும்பங்களுள் இருக்கிற ஆண்களும், உடல் தொடர்பான இனப்பெருக்க, கருத்தடை உரிமைகள் தொடர்பான முடிவுகளை அரசியலில், நீதித்துறையில் அதிக விகிதத்திலிருக்கிற ஆண்களும் எடுத்துக் கொள்கிறார்கள். இப்படியாக ஆதிக்கங் கொண்டதாக சமூகக் கட்டமைப்பு இருக்கிறபோது, நீங்கள் ஒரு ஆணாக இருக்கின்ற பட்சத்தில், நீங்கள் உணர்ந்துகொள்ள வேண்டியது நீங்களும் இந்தக் கலாச்சாரத்தின் ஒரு பகுதியே.

அனைவரும் பொறுப்பாளிகள்

ஆம், பலவகையிலும் ஆணாக இருப்பதென்கின்ற ஒன்றே உங்களையும் தன்னிச்சையாக நச்சுத்தன்மை வாய்ந்த இந்தப் “பாலியல் வன்முறைக் கலாச்சாரத்தின்” ஒரு பகுதியாக்கி விடுகிறது. தனிப்பட்டரீதியில் நீங்கள் ஒரு பாலியல் வன்முறையாளராக இல்லாதபோது பொத்தாம் பொதுவாக இப்படிச் சொல்வதானது குற்றம்சாட்டுகின்ற தொனியில் உங்களைத் தாக்குவதாகத் தோன்றும். இதனால் ‘எல்லா ஆம்பிளையளும் இப்பிடி இல்லைத்தானே’ ‘ஓரிருவர் செய்கிற பிழைக்கு ஏன் எல்லாரையும் இழுக்கிறிங்க’ போன்றவாறான குரல்களை ஒருசேரக் கேட்கவும் முடியும். உடனடியாக அவ் எண்ணம் சரியாகப் படலாம். ஆனால், பெண்கள் தொடர்பாகச் சமூகத்தில் பின்னப்படுகிற பிற்போக்குத்தனங்களில் உங்களது இதுவரைகால் இடையீடுகள் என்ன, பெண் என்பதால் மாத்திரம் தாம் பாலியல்ரீதியாக எப்போதும் துன்புறுத்தப்படலாம் என்கிற அச்சத்தோடு இந்த உலகத்தை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருப்பது யாரினால், போன்ற கேள்விகளை கவனம் கொண்டால் ஆண்களாகிய நாம் எமக்கு சௌகரியமாக இருக்கிற இவ் உலகத்தில் எதையும் மாற்றியமைக்கவோ மறு சீரமைக்கவோ தேவையற்று குளிர்காய்ந்து கொண்டிருக்கிறோம், ஆணுக்குத் தோதான உலகின் பயனை அனுபவிப்பவர்களாக, என்பது வெளிப்படையாய் தெரியும்.

பாலியல்ரீதியான துன்புறுத்தல்களால் பாதிக்கப்படுபவர்கள் தனியே பெண்கள் இல்லையென்றாலும் இங்கே மிக முக்கியமாக நாம் காணத் தவறுகின்ற விடயம், முறையிடப்படுகிற பாலியல் குற்றங்கள் குறித்த புகார்களில் பெரும்பான்மையானவை ஆண்களால் செய்யப்பட்டவையே.

ஐக்கிய அமெரிக்க நீதித்துறையின் கணிப்பீட்டின்படிக்கு 90வீதமான பாலியல் வன்கொடுமை குற்றங்களில் ஆண்களே தாக்குதலாளர்களாகவும் பெண்களே பாதிக்கப்பட்டவர்களாயும் இருக்கிறார்கள். அதேபோல கனடிய கணிப்பீடுகளிலும் குறிப்பிட்ட சாராரே பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்படுபவர்களாக வகைப்படுத்தப்படுகிறார்கள். இதில் ஒருவரது பாலினம் பெரிய பங்கு வகிக்கிறது. ஆண்களுடன் ஒப்பிடுகிறபோது பிற வன்முறைகளைவிட பெண்களே பாலியல் வன்முறைகளால் அதிக பாதிப்புக்குள்ளாகிறார்கள். இக் கணிப்பீடுகளின் தரவுகளின் அடிப்படையில், வன்முறைத் தாக்குதல்களால் பாதிக்கப்படுபவர்களில் (ஆண்களுடன்) கிட்டத்தட்ட சரிக்கு சரிபாதி பாதிக்கப்பட்டவர்களாய் பெண்கள் இருந்தனர், ஆனால் பொலிசில் முறையிடப்பட்ட பாலியல் வன்கொடுமைசார் குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்கள் எனப் பிரித்துப் பார்க்கையில் கிட்டத்தட்ட 85 வீதமானோர் பெண்களாக இருந்தனர்.

வளர்ந்த நாடுகளில் பெண்களுக்கு என்னதான் பிரச்சினை இருக்கப்போகிறது எனும் அனுமானங்களுக்கு மாறாக பெண்களுக்கெதிரான வன்முறைகள் ஐக்கிய அமெரிக்க, கனடிய சூழலிலும் பெரும் அளவில் இருக்கவே செய்கின்றன. இங்கே பெண்கள் தம் வாழ்நாளில் பல்வேறு தடவைகள் இத்தகைய வன்முறைகளால் பாதிப்படைகிறவர்களாக இருக்கிறார்கள்.

2021, மார்ச் மாதம், பேரிடர் காலம், லண்டன்:  

நண்பரின் வீட்டிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது காணாமல்போன பெண் தொடர்பாக லண்டனில்  நடந்த அமைதியான எதிர்ப்பூர்வலங்கள் பொலிசாரினால் மிக மோசமான வன்முறையூடாக எதிர்கொள்ளப்பட்டதையிட்ட செய்திகளை வாசித்திருப்பீர்கள். குறிப்பாக பொலிஸ் அதிகாரி ஒருவர் அதில் சம்மந்தப்பட்டிருக்கலாம் என்கிற சந்தேகங்கள் எதிர்ப்பு நிகழ்வுகளில் எழுப்பப்பட்டிருந்ததும் பொலிஸ் அடாவடித்தனத்தக்கான காரணம். சமீபத்தில் நிகழ்ந்த விசாரணை முடிவுகளின்படி சம்மந்தப்பட்ட பொலிஸ் அதிகாரியே காணாமல் போன மார்க்கெட்டிங் நிர்வாகி சாரா எவரார்ட்டை கடத்தி பாலியல் வன்முறைக்குள்ளாக்கி பின் கொலை செய்தது உறுதியானது.  சற்றே தொலைவில்  ஒரு வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டது அந்த இளம்பெண்ணின்  உடலே என்பதும் அடையாளம் காணப்பட்டது. இந்த கொலையும், லண்டன் போன்ற பெருநகரங்களிலும் நீண்டகால பிரச்சினையை அம்பலப்படுத்துவதாகவே அமைகிறது.  வீட்டிலோ அல்லது பொது இடங்களிலோ, பல பெண்கள் பாதுகாப்பாக இல்லை. என்பதுடன் பொதுவெளிகளில் பெண்களதும் சிறுபான்மை பாலினங்களதும் இடம் என்னவாக இருக்கிறது, போன்ற கேள்விகளை எழுப்பியது.  Reclaim the Streets She walked home.. எனும் எதிர்ப்பூர்வலக் கோசங்கள் தெருக்களை நிறைக்கும் மற்றுமொரு சம்பவம். 

பல வகைகளிலும் பாலியல் வமுறைக் கலாச்சாரம் தொடர்வதற்கான காரணகர்த்தாக்களாக ஆண்களே இருப்பதை புரிந்துகொண்டால் உலகின் சகல ஆண்களையும் இக் கலாச்சாரத்தின் ஒரு பகுதியே என்பது மிகைக் கூற்றல்ல என்பது புரியும். உங்களது தகப்பன் – சகோதரன் – கூட்டாளிகள் – கூட வேலை செய்பவர்கள், அனைவரும் இக்கலாச்சாரத்தின் ஒரு பகுதியே!

பாலியல் வன்கொடுமைகள் பற்றிப் பேசுகிறபோது, பெரும்பாலும் இத்தகைய வாதங்களை முன்வைக்கிறார்கள்: “பெண்களும் பொய் சொல்லக்கூடும்தானே? அல்லது அவர்கள் உண்மையையும் மிகைப்படுத்தலாம் அல்லவா?” “எல்லாத்துக்கும் இரண்டு பக்கம் என்று இருக்கிறது. ஒரு பக்கம் சொல்றதை மட்டும் நாங்க எடுத்துக்கொள்ளக்கூடாது அல்லவா?” இவை பல சமயங்களில் நியாயமான வாதமாகவும் படலாமெனிலும் அது தரவுகளின் அடிப்படையில் உண்மையல்ல.

விதிவிலக்குகள் வேறு, தரவுகள் தருகிற யதார்த்தம் வேறு. நாங்கள் வரலாற்றுரீதியாகவே இதை புரிந்துகொள்ளவும், பாலியல் வன்கொடுமைகள் என வருகிறபோது பெண்கள் பொய் கூறுவதில்லை என்பதையும் முதலில் ஏற்றுக்கொள்ளவும் வேண்டும். இவை தொடர்பாக இருக்கின்ற புள்ளிவிபரங்களின் அடிப்படையிலேயே பேச முற்பட வேண்டும். பாலியல் வன்கொடுமைகளைப் பேசுவதால் பல சமூகங்களில் – எங்களது தமிழ்ச்சமூகம் உட்பட – பெண்களுக்கே ஆண்களை விட இழப்பதற்கு நிறைய உண்டு என்பதை நினைவில் கொள்ளுதல் முக்கியம்.

வன்முறையின் பின்னான தமது மனக்காயத்தை (trauma) பேச வெளிக்கிடுகிற பிள்ளைகளிடம் பாலியல் சார்ந்த எவற்றையும் பொதுவில் பேசாத சமூகமொன்றிலிருந்து வருகிறவர்களாய் தமிழ் பெற்றோரும் ‘யாருன்னை திருமணம் செய்வார்கள்’ என்பது உட்பட அதைப் பேசாமலிருக்கச் செய்வதிலேயே மும்மரம் காட்டுவார்கள். குறிப்பாக நெருங்கிய குடும்ப அங்கத்தவர்களால் அவ் வன்முறை நிகழ்ந்திருக்குமானால் அதை மறைப்பதையும் குடும்பங்கள் செய்யத் தயாராக இருக்கும். இதன் காரணமாக, தன்னுடன் தவறாக நடந்துகொண்ட உறவினர் ஒருவரைப் பாதிக்கப்பட்டவர் தொடர்ந்தும் குடும்ப நிகழ்வுகளில் காணவேண்டியிருப்பதால், கொடுநினைவின் நினைவூட்டல்கள் (triggers) தொடர்ந்தும் அவரது மனநிலையைப் பாதிக்கக்கூடிய நிலமையே இருக்கும். இங்கே காப்பாற்றப்படுவது குற்றத்தை இழைத்த ஆட்களே.

அதனால்தான் எல்லா ஆண்களையும் இத்தகைய கலாசாரத்தின் ஒரு பங்காளியாக அல்லது அதன் ஒரு பகுதியாகப் பார்ப்பது குற்றஞ்சாட்டுவதுபோல தொனித்தாலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியது. இத்தகைய போக்குகளுக்கு எதிரான ஆதரவைத் தர விரும்புகிற நபராக நீங்கள் இருப்பின் – இப்படியானதொரு மோசமான நிலைமை இன்னுமின்னுமேன் தொடர்கிறது, ஏனிதைத் தொடர்கிறார்கள் என்பது தொடர்பில் உங்களுடைய கோபத்தை வெளிக்காட்டுங்கள். இதைத் தொடர்வதில் அல்லது இல்லாதொழிப்பதில் உங்களுடைய பங்கு என்னவாக இருக்கிறது என்பதைச் சிந்தியுங்கள்.

(தொடரும்)

Posted on: July 20, 2021, by :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *