பாலியல் வன்கொடுமைக் கலாச்சாரம் (rape culture) – prt 4
பகுதி 1, 2, 3, 4 (இறுதி)
நகைச்சுவைகளின் பங்கு
பாலியல் வன்முறை, துன்புறுத்தல் மற்றும் பெண்கள் மீதான துஷ்பிரயோகம் என்பன இவ்வாறு இயல்பாக்கப்பட்டு குற்றமற்றதாக ஆக்கப்பட்டிருப்பதில் நகைச்சுவை பெரும்பங்கு வகிக்கிறது. இதனால்தான் ஆண் நண்பர்களுக்குள் பகிரப்படும் பெண்கள் தொடர்பான மலின நகைச்சுவைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தல் பாலியல் வன்முறைக்கலாச்சாரத்தை எதிர்கொள்வதன் முக்கியமான சவாலாகும்.
உண்மை: பாலியல் வன்கலாச்சாரத்தைப் பற்றிய ஆண்களாகிய எமது பார்வை பல்வேறு காரணிகளால் நிர்ணயிக்கப்படுகிறது, மேலும் அது ஆண்களுக்குள் “சங்கேதக் குறியீடு” (bro code) மூலம் உறுதிப்படுத்தப்படுகிறது. இந்த குறியீடுகள் பால்வாதமாக போர்னோவாக, பெண்வெறுப்பு மற்றும் பாலியல் வன்முறையாக பிரதிநித்துவம் செய்யப்படுகிறது. இக் குறியீடுகளை ஆண்கள் செயற்படுத்துகிறபோது இவை அனைத்தும் பெரும்பாலும் ஆண்களுக்குள் சக ஆண்களால் பாராட்டப்பட்டு தட்டிக்கொடுக்கப்படுகின்றன. ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்ள திட்டமிட்டு, திட்டமிட்டதை கையாளுதலில் (manipulation) ஒரு ஆண் வெற்றிகரமாகச் செயல்படும்போது (பெரும்பாலும் மதுபானத்தை ஒரு வற்புறுத்தல் கருவியாகப் பயன்படுத்துவது உட்பட, அவரது சம்மதம்பெறாத குற்றச்செயலில் ஈடுபடுதல்) அவர் தனது வெற்றியைப் பற்றி ஒரு வேட்டையின் பெருமையுடன் தனது சக ஆண்களுடன் பெருமை பேசுவதைக் காணலாம். ஒரு வேட்டைக்குரிய பொருளாக சக மனிதர் உணரப்படுவதும் அது ஆண்களுக்குள் போற்றப்படுவதுமாக இந்த எதிர்மறையான சுழற்சி தொடருவதைக் காணலாம்.
ஆகவேதான் பாலியல் வன்முறையை சாதாரணமானதாக்குகிற நகைச்சுவை ஒருபோதும் ஏற்புடையதல்ல. உங்கள் நண்பர்கள் அவ்விதம் செய்கிறபோது அதை உடனடியாக ஆட்சேபனை செய்யுங்கள், இடையிட்டுத் திருத்துங்கள். மிக முக்கியமாக உற்ற நண்பர்களுக்குள் ஒருவரை ஒருவர் உங்களது செயல்களுக்கு வார்த்தைகளுக்கு பொறுப்பாளி ஆக்குங்கள்.
பாலியல் வன்புணர்ச்சியானது (Rape) ஒருபோதும் நகைச்சுவைப்பொருளல்ல. பாலியல் வன்முறை குறித்த நகைச்சுவைகள் பொதுப்புத்தியில் அவற்றை சட்டபூர்வமற்றதாக (குற்றமற்றவையாக) ஆக்குகின்றன. பொதுப்புத்தியில் பரவலாக்கப்படும் இந்த மனநிலையானது விருப்பமற்ற தொடுகையை (non-consensual touch) எதிர்கொண்ட பாதிக்கப்பட்டவர்கள் அது தொடர்பில் எதிர்த்துப் பேசவியலாதவாறு நிலமையை மேலும் மேலும் கடினமாகி வைத்திருக்கின்றது.
இன்னொருவரது வாழ்வையே நாசம்செய்யக்கூடியதொரு வன்முறை தொடர்பில் நகைச்சுவையாய்ப் பேசக் கூடிய நிலைமையிலிருக்கிற அத்தகு வன்முறையை எதிர்கொள்ளாத உங்களது இருப்பையும் (privilege) அதை எதிர்கொண்டவர்கள் மனவடுக்களுடன் வாழ்நாள் பூராவும் வாழ வேண்டியிருக்கிற நிலையையும் யோசித்துப் பாருங்கள். இதன் பின்னரும் நீங்கள் யாரையோ பாலியல் வன்முறை செய்தவருடனோ, இல்லை அதுகுறித்து பகிடி பேசுபவருடனோ நட்பாய் இருப்பீர்களாயின் ஏதொருவிதத்தில் நீங்களும் அக்குற்றங்களுடன் உடன்படுகிறீர்கள். அவ்வாறாக ஏலவே இருக்கிற பிரச்சினை தொடர்பில் எதையும் செய்யாத ஒருவராக நீங்களும் அப் பிரச்சினையின் ஒரு பகுதியாகிறீர்கள். பெண்களது மற்றும் சிறுபான்மையினரது உரிமைகள் மற்றும் விடுதலை குறித்த உண்மையான அக்கறை கொண்டவராக நீங்கள் இருப்பின் மெளனமாக இருக்கவோ உங்கள் வட்டங்களுள் இந்த மலின நகைச்சுவைகளைப் பொறுத்துக் கொள்ளவோ முடியாது அல்லவா?
தொடுகைக்கான ஒப்புதல் (CONSENT)
காதல் உறவிலிருப்பவர்கள் ஒருவருக்கொருவர் நெருக்கமானவர்களாக இருப்பினும், அவர்களுக்குள் நிகழக்கூடிய தொடுகைக்கு அது நிகழ முன்னம் சம்மந்தப்பட்டவர்கள் மிகத் தெளிவாக ஒப்புதல் தெரிவித்திருப்பது மிகவும் கட்டாயமானது (CONSENT IS MANDATORY). இது சாதாரண விடயம் போலவும் எல்லாருக்கும் தெரிந்ததுதானே என்பது போலவும் பட்டாலும் இந்த அடிப்படைக் கூறையே புரியாமைதான் பல வன்முறை நடத்தைளுக்கு இட்டுச் செல்கிறது. ஒருவரது சம்மதம் அல்லது ஒப்புதல் என்பதன் அர்த்தம் அது எந்தவொரு பலவந்தப்படுத்தல்களுமற்று சுயவிருப்பின் பேரில் தரப்படுவது – “voluntary agreement – என்பதே ஆகும்.
சம்பந்தப்பட்ட நபர்கள் தமது பாலியல் ஈடுபாடு குறித்து உறுதியளிப்பதற்கு, இன்னொருவரது தவறான கையாளுகை, பலம், வற்புறுத்தல் அல்லது ஏமாற்றுதல் இல்லாமல் முடிவெடுப்பதற்கான முழு சுதந்திரத்தைக் கொண்டிருக்க வேண்டும். ஒருவர் உங்களை விரும்பவில்லை என்றால், விரும்பவில்லைத்தான்.
பெண்கள் தம்முடன் பாலுறவுக்குக் கடமைப்பட்டிருக்கிறார்கள் என்று நினைக்கும் உரிமைப் பொறியில் அகப்பட்டுப் பலரும் தொலைந்து போவதாகத் தெரிகிறது.
ஒரு பெண் உங்களுடன் நெருக்கமானதொரு உறவில் இருந்தாலுமே கூட அவர் எதற்கும் உங்களுக்கு கடமைப்பட்டில்லை. கடமையின் நிமித்தம் நிகழ்வது ஒருமித்த உறவு அல்ல. உங்களைப்போலவே உங்களது துணையும் உறவிற்கான முன்னெடுப்பை விருப்பத்துடன் செய்கிறபோதே அது முழுமையான ஒப்புதல். இவை அனைத்தும் உடல் மொழிக்கும் பொருந்தும். வாய்மொழி ஒப்புதலுடன் கூடுதலாக, உங்கள் துணை உடல்மொழியில் விருப்பமின்மையை வெளிப்படுத்தினால்; அவர்கள் பதட்டமாகவோ அமைதியாகவோ ஈடுபாடற்று தெரிந்தால் அது ஒப்புதல் அல்ல. ஒரு பாலியல் சூழ்நிலையில் துணையின் உற்சாகத்தை அடையாளம் காண்பதில் உள்ள ஒரே சிரமம், நீங்கள் விரும்பும் நபரின் விருப்பம், உணர்வுகள் மற்றும் நல்வாழ்வில் உண்மையான அக்கறை உங்களுக்கு இல்லாதிருத்தலே ஆகும்.
பாதுகாப்பான சூழலை உறுதி செய்தல்
ஒடுக்குமுறைகளை எதிர்கொள்பவர்களைப் பொறுத்தவரை தனிப்பட்ட விருந்தோம்பல்கள் முதற்கொண்டு பொதுவெளிகள், ஊடகங்கள் அவர்களை அவமதிப்பனவாகவும் ஆதிக்க அரசியலை அவர்மேல் திணிப்பவையாகவும் உள்ளன. சக ஒடுக்கப்படுகிறவர்களாக பெண்களும் தமது சூழலின் பாதுகாப்பின்மையை எங்கும் எதிர்கொள்கிறார்கள். இரவில் வெளியில் செல்கிற அனேகமாக ஆண்கள் தமது பாதுகாப்புத் தொடர்பில் அச்சமடைதல் அரிதான நிகழ்வு. போர் சூழல், இனஒடுக்குறை மற்றும் துவேசம் காரணமாக வடஅமெரிக்காவின் பூர்விக, மற்றும் கறுப்பு ஆண்கள் எதிர்கொள்ளும் உயிராபத்து – இவற்றை விலக்கிப் பார்த்தால், எந்தப் பகுதியிலும் எந்த பயமுமற்று ஆண்களால் உலாவ முடியும். மேலும், ஆண்கள் சுயாதீனமாக இயங்குவதிலும் தமக்கானதைத் தேர்வு செய்யும் சுதந்திரத்திலும் அதீத உரிமைகொண்டவர்களாய் இருக்கிறார்கள்.
பாலியல் வன்கலாச்சாரம் காரணமாக உலகின் அரை சனத்தொகையினரான பெண்கள், ஆண்களுக்கு மாறான அனுபவத்தைக் கொண்டிருக்கிறார்கள். ஊபர் போன்ற வாடகைக்காரில் செல்வதோ, பூங்காக்களில் ஆள் நடமாட்டம் குறைந்த நேரங்களில் பயிற்சிக்காக ஓடச் செல்வதோ, உடற்பயிற்சியிடங்களில் பயிற்சி செய்யப்போவதோ, கார் தரித்திருக்கும் நிலக்கீழ் இடங்களில் தனியே நடப்பதோ, ரயில்நிலையங்களில் பின்னிரவில் பயணிப்பதோ, தனியே அலுவலகத்தில் வேலை செய்கிற போதுகளோ பெண்களைப் பொறுத்தவரையில் அச்சம் தரக்கூடிய அவர்கள் அன்றாடம் எதிர்கொள்கிற நிகழ்வுகளாய் இருக்கின்றன.
ஒரு இடத்திற்குப் போவதற்கு முன்னர் ஒரு பெண்ணானவர் தான் போகிற இடம், தான் சந்திக்கப் போகிற நபர், தனது பிரயாண வழிகள், அதில் தனித்திருக்க வேண்டிய போதுகள் தொடர்பின் தனது பாதுகாப்புக் குறித்துச் சிந்திக்க வேண்டியவராய் இருக்கிறார். இத்தகைய பிரச்சினைகள் நிச்சயமாக ஆண்களுக்குக் கிடையாது. அவர்கள் தேசாந்திரிகளாக அலைந்து திரிவதற்கும் தெருவில் பலாத்காரம் தொடர்பான பயமற்று படுத்து உறங்குவதற்கும் சுதந்திரம் இருக்கிறது.
நாங்கள் என்ன செய்யலாம்?
மாற்றங்கள் குறித்துப் பேசுகிறபோது பெரும்பாலானோர் அது வெளியிலிருந்து வரவேண்டியது என்கிற கண்ணோட்டத்தைக் கொண்டிருக்கிறார்கள். உண்மையாக நிலவரத்தை மாற்ற விரும்புகின்றவர்கள், தாம் அன்றாடம் காண்கிற பெண்களுக்கு தாமும் பகிர்கிற அவர்களது பொதுவெளியில் அவர்களுக்கான சங்கடங்கள் இடர்கள் போடப்படுகிறபோது, அதுகுறித்து மௌனமாக இருக்காமல்/கடக்காமல் அவற்றை எப்படி அகற்றலாம் என்பதைச் சிந்திக்கவும் பெண்களைச் சங்கடப்படுத்தாத பொதுவெளியை உருவாக்கச் செயற்பட வேண்டியவர்களாவார்கள்.
பாலியல் வன்முறைக் கலாச்சாரம் என்பது தனியே எமது சமூகத்துக்குரியது மாத்திரமன்று. எமது சமூகத்தில் சமீப காலங்களில் நிகழ்ந்த நிகழ்ந்துகொண்டிருக்கிற பல சம்பவங்கள் (பெண்ணொருவர் கொடூரமாக கொல்லப்பட்டமை உட்பட) இத்தகைய உரையாடல்கள் தொடரப்படுவதற்கான தேவையிருப்பதை உணர்த்துகின்றன. தவிர, இந்த கட்டுரையை எழுதுவதால் இந்த பாலியல் வன்கலாச்சாரத்திலிருந்து நான் விடுபட்டவன் என்பதல்ல, நானும் இக்கலாச்சாரத்தின் ஒரு பகுதியே. உங்களைப்போலவே நூற்றாண்டுகளாக எனக்குக் கற்பிக்கப்பட்ட ஒடுக்குமுறைகளின் வழிகளை மறந்து விடுதலைக்கான புதிய கற்றலை ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டியவராகவே நானும் இருக்கிறேன்.
தமிழ் ஆண்கள் வன்முறை மிகுந்த வரலாற்றினைக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் எமது வரலாற்றினதும், ஆணாதிக்க சமூகத்தை உறுதிசெய்யும் நச்சுத்தன்மையான எமது குடும்ப சூழல்களதும் ஜனரஞ்சக தமிழ் சினிமாவினதும் விளைபொருள்களே. நாங்கள் முதலில் சுயவிழிப்புணர்வு கொள்வதும் பெண்கள் குறித்த எமது மனநிலைகளை கேள்வி கேட்கவும் தொடங்கவேண்டும்.
பாலியல் வன்முறைகளுக்கு ஆளாகுபவர்களை நம் தாய்மார்கள் அல்லது சகோதரிகளுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது தேவையில்லை. அவர்கள் எம்முடன் எவ்வகையிலும் பிணைக்கப்படாதிருப்பினும் அவர்களுக்கான நீதி அவர்களது மனித உரிமையாகும். நீங்கள் உணர வேண்டியது: பெண்வெறுப்பு (misogyny) வரலாற்று ரீதியாக ஆண்மையுடன் பிணைக்கப்பட்டுள்ளது – ஆகையால், ஆண்களாகிய நாம், எது ஆண்மையென்பதை மறுபரிசீலிக்கத் தொடங்க வேண்டும். பெண்களை அடக்கிவைத்திருப்பதில் அல்ல அது தங்கியுள்ளது என்பதை உறுதி செய்ய வேண்டும். ஆண் மேலாதிக்கத்தின் பொதுவான கூறுகள் உலகளாவியது. பெண் குழந்தைகளை எவ்வாறு சரியாக நடத்த வேண்டும் என்பதை ஆண் குழந்தைகளுக்கு கற்பிப்பதில் தொடங்கி ஆண்களாகிய நாம் இக் கலாச்சாரத்தை எதிர்த்துப் போராட வேண்டும். சிறுவயதிருந்தே சிறுமிகள், பெண்கள் எப்படி ஆடை அணிய வேண்டும் என கட்டாயப்படுத்துவதற்குப் பதிலாக, சிறுமிகளை, பெண்களை பாலியல் பொருள்களாக அல்லாமல் சக மனிதர்களாகப் பார்க்க நம் பையன்களுக்குக் கற்பிக்க வேண்டியிருக்கும்.
எமது குடும்பங்களில் ஆண்களைக் கொண்டாடும் போக்கையும் (MALE GLORIFICATION) குறிப்பாக பாலியல் வன்கொடுமைகளைச் சாதாரணமானதாகப் (RAPE NORMALIZATION) பார்க்கும் போக்கினையும் எமது சமூகத்திலிருந்து இல்லாதொழிக்க வேண்டும். நாம் ஒருங்கிணைவதூடாக பாதிக்கப்பட்டோரைக் குற்றம் சாட்டுவதை நிறுத்தி பாதுகாப்பான சூழலை உறுதி செய்வோம். இங்கே, ஒருவரைப் பாதுகாப்பாய் உணரச் செய்தல் என்பது ஆபத்துக்களின் போது ஆபத்பாந்தனாகப் போய் காப்பாற்றுகின்ற வேலை அல்ல. மாறாக, ஆபத்துக்களை உருவாக்கும் சூழுலை நோக்கி விமர்சனங்களை எழுப்புவதும், அதை மாற்றும் வேலைகளை முன் எடுப்பதுமே. அனேகமான சமயங்களில், எமது கைகள் பாதிப்படைந்தவரை நோக்கி நீளாதிருந்தாலே போதும். தடைக்கற்கள் போடப்படாவிடில் பாதிக்கப்பட்டவர்கள் தமக்கான நீதியைத் அவர்களாகவே பெற்றுக் கொள்வார்கள். தொடர்ச்சியான ஆரோக்கியமான உரையாடல்களூடாகவே நாமனைவரும் வன்முறைகளுக்கெதிராக இணைந்து கொள்ள முடியும்.
மூலம்: அறிவொளி
விரிவாய்: பிரதீபாதி
Posted on: July 20, 2021, by : admin