நாம் தனித்திருக்கையில்………
சிறுவர் கதைகளும் சமூகநீதியும் – II
1
சமூகநீதி குறித்து ‘கனடா”வில் இருந்து பேசுகிறபோது, தவிர்க்கவே முடியாதது இந்நாடு உருவாக்கப்படுவதற்காக இங்கே நடந்த ஒடுக்குமுறைகள் குறித்தன ஆகும். இத் தேசத்தின் உருவாக்கத்திற்காக இந்நிலப்பரப்பின் பூர்வீகக்குடிகள்மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை, தேச உருவாக்கத்தின் ஆதாரத்தைத் (Foundation) தக்கவைப்பதற்கென அமைப்பியல்ரீதியாகவும் கொள்கை (Policy) அளவிலும் ஆழ ஊன்றி இன்றுவரை தொடரும் இனவழிப்பு, குழந்தைகளின் எலும்புகளையும் கொண்டிருக்கவே செய்கிறது.
கனடாவின் முதல் பிரதமர் மற்றும் தேசத்தின் தந்தை என வரலாற்றில் பதியப்பட்டவரும் சமகாலத்தில் இனப்படுகொலையின் சூத்திரதாரி என கட்டுடைக்கப்பட்டவருமான ஜோன் ஏ மக்டோனால்ட் பாராளுமன்றத்தில் கூறிய பிரபலமான மேற்கோளில் அவர் மிகவும் தெளிவாக தமது நோக்கத்தை முன்வைக்கிறார்: இக்காட்டுமிராண்டிகளது பிள்ளைகளுக்கான பாடசாலை அவர்களுக்கென ஒதுக்கப்பட்டவிடங்களில் அமைக்கப்படக்கூடாது, ஏனெனில் அப்படி அமைத்தால் அவர்கள் அவர்களது பெற்றோர்களாகிய காட்டுமிராண்டிகளுக்கு அருகில் இருப்பதுடன் அக் காட்டுமிராண்டி வாழ்க்கைக்குரிய பயிற்சியையும் சிந்தனையோட்டத்தையும்தான் இயல்புகளாய் கொண்டிருப்பார்கள். அவர்கள் என்னதான் எங்களது மேற்கத்தைய கல்வியை எழுதப் படிக்கப் கற்றாலும், எழுதப்படிக்கத் தெரிந்த ஒரு காட்டுமிராண்டிகளாகவே இருப்பர். இதனால் நாம் மிகவும் கவனமாக அவர்களது பெற்றோரின் சகவாசத்திலிருந்து அவர்களை விலக்கி அவர்களை வெள்ளையர்களான நமது பழக்கவழக்கங்களை தகவமைக்கவல்ல பயிற்சிக்கூடங்களில் போடவேண்டும் (1883).
இதன் காரணமாக, திட்டமிட்டு பூர்விகக்குடிகளது குடியிருப்புகளுள் கல்விசாலைகள் அமைக்கப்பட்டாமல், பெற்றோரிடமிருந்து பிள்ளைகள் பிரிக்கப்பட்டு, அவர்களை “காட்டுமிராண்டி” (Savage) தோற்றத்திலிருந்தும் பழக்கவழக்கங்களிலிருந்தும் மேற்கின் நாகரிகவான்களாக மாற்றுகிறோம் என்கிற போர்வையில், வலுக்கட்டாயமாக கத்தோலிக்க பள்ளி விடுதிகளில் தமது (மொழி, உடை, உணவு, பழக்கவழக்கங்களை அந்நியப்படுத்துவதூடாக) பண்பாட்டின் சகல கூறுகளிலிருந்தும் அகற்றப்பட்டார்கள். “killing Indian in the child” – ஒரு பிள்ளையிடமிருந்து அதன் பூர்வக்குடி அடையாளங்களைக் கொன்றால் அது தன்னாரவாரம் ஒரு வெள்ளை மனிதனின் சிந்தனைக்கு தகவமைத்துக்கொள்ளும் என்று செயற்பட்டார்கள். இந்நாட்டை கட்டியமைத்தலின் கொள்கைவகுப்பில் இதுவே முதன்மையானதாக இருந்தது.
2
ஐரோப்பியர்களின் வருகையின்முன் – கனடா ஒரு நாடாக எழுப்பப்படுமுன் (the Inuit, Beothuk, Algonquin, Iroquois, Sioux, Pacific Coast Indians, and Cordillera Indians என்கின்ற) ஏழு பிரதான பூர்வீகக்குடிகளுக்குடையதாய் இந்நிலம் இருந்தது. அதேபோல அறுபதுக்கு மேற்பட்ட தனித்துவமான மொழிகளும் இருந்தன. இன்றானால் எண்ணிவிடக் கூடியளவிலான அவர்களுடைய மொழிகளே எஞ்சியுள்ளன. ஆக 2019ஆம் ஆண்டுதான் கனடா பூர்விகரின் மொழிகளை பாதுகாக்கவும் புத்துயிர் அளிக்கவும் Indigenous Languages Act என்கிற சட்டத்தை சமர்ப்பித்தது.
ஐரோப்பியரின் வருகைக்கு முன், ஐரோப்பியரின் வருகைக்குப் பின் என ஒப்பிட்டுப் பார்த்தால்தான் வரலாற்றில் அழிக்கப்பட்டனதும் மக்களது அதற்கெதிரான எழுச்சியினதும் கதைகளையும் தெரிந்துகொள்ளமுடியும். இந்நிலத்தின் குடிகளை ‘நாகரிமானவர்களாக்க’ ஐரோப்பியர்களுக்குத் தெரிந்த வழியெல்லாம் தமது மொழியைக் கற்பித்தலும் ஒரேவிதமான சீருடை அணிவித்தலும் தலைமுடியைக் கத்தரித்தலும் கூடவே தமது மதம் சுமந்த பரிசுத்த வேதாகமமும் தான். இவையே நெறியற்ற அவர்களை நெறிப்படுத்தும் என பூர்வீகரது குழந்தைகள் திருடப்பட்டு அல்லது பலவந்தமாகவே பள்ளி விடுதிகளில் அடைக்கப்பட்டார்கள். இங்கே பல குழந்தைகள் அவற்றின் மேலாண்மையாளர்களாலும் தப்பிச் செல்ல முயல்கையில் வழியறியாத் திசைகளில் கடும்பனியிலும் கொல்லப்பட்டனர்.
இன்றுவரையில் அவ் அனுபவங்களைப் எதிர்கொண்டவர்களிடம் உள்ள அதன் எதிர்விளைவுகள் அக்குடிகளை துரத்துகின்ற தீராத்துயரத்தின் நினைவுகளாய் உளவியல் சிக்கல்களாக நிற்கின்றன – அவ் அனுபவம் அவர்களது வாழ்வை உடைத்து என்றென்றைக்குமாய் மாற்றிப்போட்டிருக்கிறது. அந்த வரலாற்றின் நினைவு, இன்னும் அந்த நினைவின் மனத்தாக்கம் (Trauma) உயிருடனிருக்கிற அந்த நரகத்தில் வசித்த அனைவரது உளவியலையும் மட்டுமன்றி அவர்களது கருவில் வளர்ந்த பிள்ளைகளிலும், பிள்ளைகள்தம் பிள்ளைகளிடத்திலும்கூட தலைமுறை தாண்டிய பெரும் மனத்தாக்கமாகத் (Inter-generational trauma) தொடர்கிறது.
இங்கே அவர்களுடைய காயங்களுக்கு மருந்தாக, அவற்றிலிருந்து தேறுவதற்கான பண்பாட்டு உற்பத்திகள் (cultural productions) தேவைப்படுகின்றன. ‘எனதிந்த மனத்தாக்கம் அடக்குமுறையாளர்களால் தரப்பட்டது, நியாயமற்றது. இது என்னுடைய தவறல்ல, இது அநீதி!’ இவை வாய்ப்பேச்சாக ஏனும் தரப்பட்ட ஹாப்பரின் (2008 பெப்ரவரி 13) பூர்விகர்மீதான பள்ளி விடுதி அக்கிரமங்கள் குறித்த பகிரங்க மன்னிப்பு கேட்கல் (Residential school apology) போல, அவர்களது தேறுதலுக்கான பயணத்திற்கான (Healing Journey) முதற் படிகளாகும். ஏனெனில் பாதிப்புக்குள்ளானவர்களை வன்தாக்குதல்களுக்குள்ளானவர்களை ஆற்றுப்படுத்த எதையும் கொண்டிராத சமூகங்களில் பாதிக்கப்பட்டவர்கள் நடந்தவை தமது குற்றமென குடி, போதை, அழிவுப்பாதையில் செல்லத் தலைப்படுவார்கள் – குற்றமிழைத்தவர்கள் அதற்கு பொறுப்பெடுக்காதபோது குற்றமிழைக்காதோரே தம்மைத் தண்டித்துக் கொண்டிருப்பார்கள் – தம்மைச் சூழ்ந்தவரைத் தண்டிக்கத் தலைப்படுவார்கள்.
துயரமான வகையில் பூர்வீகக்குடிப் பெண்கள் தமது ஆண்களாலும்தான் வன்முறைக்குள்ளாவதும் சிறுவர் துஷ்பிரயோகம் செய்யப்படுவதும் சமகாலத்தின் பெரும் துயரம். வீட்டு வன்முறைகளிலிருந்து தப்பிப்போகிற மிகச் சிறிய வயது ஆண்கள், பெண்களே பின்னர் காணாமல் போகின்றார்கள். குற்றத்தின் வலிமை அதுதான் – குற்றம் குற்றமற்றவர்களையும வன்முறைச் சுழற்சியில் (cycle of violence) தன்பக்கம் இழுக்கத் தலைப்படும். ஏலவே பூர்வீகக்குடிகளது ஒதுக்கப்பட்ட குடியிருப்புகளின் (reserve) வேலைவாய்ப்புகளின்மை, இளைஞர்களுக்கான உடல்-உள ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வளங்கள் இன்மை, இந் நிலைமைகள் தருகிற வெறுண்மையின் வடிகால்களாக போதை, குடிகளுக்கு அடிமையாக்கப்பட்ட மக்கள் சுயநினைவற்ற தன்நிலை இழந்த மனிதராக தாமும் வன்முறையாளர்களாகிறார்கள், இவ்வாறாகக் குற்றத்தின்பிடி இறுகுகிறது, ஓங்குகிறது.
3
கத்தோலிக்க பள்ளி விடுதிகளில் நிகழ்ந்தவற்றுக்கான தீர்வு ஒப்பந்தம் (Settlement Agreement) நிமித்தம் 2008 – 2015 காலவரையில் ஒருங்கமைக்கப்பட்டதே கனடாவின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு (The Truth and Reconciliation Commission of Canada). இக்காலப்பகுதியில் இவ்விடுதியால் பாதிக்கப்பட்டவர்கள் வந்து தமது கதைகளின் சாட்சிகளானதோடு தொடர்ச்சியான அவர்களுக்கு எதிரான செயற்பாடுகளைத் தடுக்கும் பரிந்துரைகளையும் ஈற்றில் இக் குழு தந்திருந்தது. இத்தகைய அநீதிகளை இழைக்காத ஒரு எதிர்காலத்தை நோக்கி செயற்படவென அக்குழு 94 அழைப்புகளை கனடிய அரசாங்கத்திடம் வழங்கியது. அவற்றை செயற்படுத்தமுன் மிக முக்கியமானதாக அது குறிப்பிட்டது என்னவெனில் “இது எப்படித் தொடங்கியது என்பதை நாம் ஒப்புக்கொள்ளாவிட்டால், இந்த இருண்ட கடந்த காலத்திலிருந்து நமது அடுத்த தலைமுறை எவ்வாறு முன்னேறும்’ என்பதே.
இதனாற்தான் இந்நிலத்தின் குடிகளுக்கு நிகழ்ந்தவற்றை அநீதியென ஒப்புக்கொள்வதோடு (acknowledgment) நல்லிணக்கத்திற்கான (reconciliation) முகாந்தரமாக பள்ளிகளது பாடத்திட்டங்களில் இவை குறித்து உரையாடப்படுவதும் முக்கியம் என்பது குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து பல துறைகளில் கனடாவில் ஏற்பட்ட மாற்றங்கள் – அரச பாடசாலைகளில் அது அமைந்துள்ள நகர் எந்தெந்தக் பூர்வீகக் குடிகளுக்கு சொந்தமானது, அமைவிடங்களின் காலனிய நில அபகரிப்பு அரசியல் என்பதைக் கூறல் உட்பட, காலம்தாழ்த்தியேனும் பாதிக்கப்பட்டோரிடம் ஹாப்பரின் தேசிய மன்னிப்புக் கோரல் வரை முக்கியத்துவம் வாய்ந்தவை தான்.
இந்தப் பின்னணியில்தான் இத்தகைய வரலாற்றினைக் கொண்ட மக்கள் – இன்றும் இந்நாட்டில் சென்ற காலங்களின் காயங்களோடு நெட்டி நிமிர்ந்து வாழ்கின்ற மறைமுக அடக்குமுறைகளை எதிர்கொள்கிறபோதும் அதைமீறும் எத்தனிப்புகளில் எழுச்சி பெறும் அவர்கள், தம் அழியும்/அழிந்த மொழியை மீட்டெடுத்தல் உட்பட தமது வரலாற்றினை பதிவு செய்யவும் வரும் தலைமுறைகளிடம் அவற்றின் பாதிப்புகளைப் பேசுதலின் முக்கியத்துவத்துவத்தையும் குறிப்பாக தமது சிறுவர்களை பயப்படுத்தாமல், அதே நேரம் காலனீய அடக்குமுறைகளில் தமது மனப்பாதிப்பை/தாக்கத்தை குறைக்காமல் அவற்றை எப்படி சிறுவர் நூல்களில் பதிவு செய்வது தொடர்பில் பல உரையாடல்களைச் செய்கின்றார்கள்.
அவ்வாறாக சிறுவர் நூல்கள் உள்ளடங்கலாக பூர்வீகரின் இலக்கியமானது தம்மக்களின் பல்வித தேவைகளை பூர்த்திசெய்வனவாக வெளிவந்தபடியிருப்பதுடன் இன்று அவை பொதுவெளியிலும் பரவல் அடைகின்றன (CBC தொலைக்காட்சியின் தயாரிப்பில் தற்சமயம் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் Trickster தொடர் பூர்வீககுடியினைச்சேர்ந்த எழுத்தாளர் Eden Robinsonஇன் அதே தலைப்பில் அமைந்த நாவலின் திரைவடிவம்). அத்துடன் முன்னம்போலன்றி அவை அச் சமூகங்களிலிருந்தே எழுகின்றன. (கனடா) ரொறன்ரோ பொதுநூலகத்தில் நூலகக்கணக்கு உடையவர்கள் மின்னூல்களாகவும் மற்றும் ஒலிநூல்களாகவும் வாசிக்கத் தகுந்தனவாய் இன்று – ரொறன்ரோ நூல் களஞ்சியத்துள் (https://toronto.overdrive.com/) – சிறுவர் கதைகள் உள்ளிட்டதான பல பூர்வீகர் வரலாற்றினை உள்ளடக்கமாகக் கொண்ட நூல்கள் படிக்கக் கிடைக்கின்றன. அவற்றிலிருந்து இரண்டு சிறுவர் நூல்கள், “When We were Alone” – “நாம் தனித்திருக்கையில்” மற்றும் “Will I See” – ‘நான் காண்பேனா” குறித்த அறிமுகங்களுடன் இவ் உரையாடலைத் தொடங்கலாம்!
When We were Alone (5இலிருந்து 8 வயதினருக்கானது)
சிறுமியொருத்தி பாட்டியுடன் தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருக்கிறபோது அவர் தொடர்பான பலவற்றை அவதானிக்க ஆரம்பிக்கிறாள். அவளுக்கு அவர் குறித்து அறியும் ஆவல் பிறக்கிறது. பாட்டியின் தலைமுடியின் நீண்ட பின்னல் தோட்டத்திலுள்ளதொரு கொடியைவிடப் பெரிதாகவும் அவருடுத்தும் ஆடைகள் அதியதி வண்ணங்களிலும் இருப்பதற்கான காரணங்கள் என்ன? அவர் கிறீ மொழியைப் பேசுவது ஏன்? சகோதரன் உள்ளிட்ட தனது குடும்பத்தினருடன் பலப்பல மணி நேரங்கள் செலவளிப்பவராக அவர் இருப்பது ஏன்?
சிறுமி இவை குறித்து பாட்டியிடம் கேட்கிற பொழுது அவர்களது கதை அங்கே தொடங்குகிறது. நீண்ட காலங்களுக்கு முன் தம்மிடமிருந்து எல்லாவற்றையும் எடுத்துக்கொண்ட அந்தக் கொடிய பள்ளி விடுதிகளில் தமது வாழ்க்கை எப்படி இருந்தது என்பது பேத்தியிடம் ஒவ்வொன்றாகச் சொல்லப்படுகிறது. பள்ளிவிடுதிகளில் பூர்வீகக்குடிக் குழந்தைகள்மீது நடத்தப்பட்ட மனிதஉரிமைமீறல்களைப் பேசும், இந் நாட்டின் உருவாக்க வரலாற்றில் மிகக் கொடியதொரு காலம் குறித்த கதைதான், ஆனால் அது இடர்காலங்களை மீறி எழுந்த அம்மக்களின் வலிமை குறித்த கதையும் ஆக அமைகிறது.
இவ்வாறாக ‘நாம் தனித்திருக்கையில்” என்கிற மிக இளையவருக்கான நூல், மிக கடினமான காலத்தை, அவர்களுக்குப் புரிகிற விதமாய் விபரிக்கிறது. பாலர் வகுப்பிலிருந்து – மூன்றாம் வகுப்புவரை என அட்டவணைப் படுத்தியிருந்தாலும் எழுத்தாளரின் சக கீறீ இன ஒவியரின் அழுத்தமான விளக்க ஓவியங்களுடன் இது பெரியவர்களையும் அசைக்கக்கூடிய கதை. குழந்தைகளுடன் மென்மையான தொனியில் கடந்த காலங்களின் துயர் வரலாறு பற்றின ஒரு உரையாடலைத் ஏற்படுத்த உந்தும் நூல். விடுதியின் கண்காணிப்புகளை கடும் கட்டுப்பாடுகளை எவ்வாறெல்லாம் மீறுவோம் என பாட்டி விபரிக்கின்ற பகுதிகள் ஒவ்வொன்றுமே நெகிழ்ச்சியூட்டுவனவாகவும் பொருந்தும் ஓவியங்களுடன் கவித்துவமாகவும் இருந்தன.
பாட்டி! ஏன் நீங்க கனக்க நிறங்களில உடுப்புப் போடுறனிங்க?” இவ்வாறு சிறுமி கேட்டாள். பாட்டி சொன்னார்: “ஏனென்டா பேத்தி... எனக்கு உனது வயதிருக்கும்போது எனது வீட்டில் எனது கிறீ (Cree) சமூகத்துடன் எனது நண்பர்களுடன் நான் வண்ணவண்ண ஆடைகளை உடுத்துபவளாக இருந்தேன். ஆனால் வீட்டிலிருந்து மிகத் தொலைவிருந்த, நாங்கள் போன அந்த 'அவர்களது' பள்ளி விடுதியில் - அவர்கள் எங்களிடம் வேறு ஆடைகளைத் தந்தார்கள். அங்கே எல்லாக் குழந்தைகளும் ஒரே மாதிரித்தான் உடுத்தியிருந்தார்கள். அத்துடன் தரப்பட்ட அந்த ஆடைகளுக்கு வண்ணங்கள் இருக்கவில்லை. நாங்கள் எல்லோரும் புயல் மேகங்கள்போல அங்கு குழுமியிருந்தோம். சிறுமி கேட்கிறாள்: 'ஏன் நீங்க அந்த உடுப்புகளத்தான் அங்க போட வேண்டியிருந்தது?' பாட்டி சொன்னார்: “நாங்கள் அவ்வளவு அழகான வண்ண ஆடைகளை அணிவது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. அங்கிருந்த அனைவரும் ஒரே மாதிரி இருப்பதுதான் அவர்களுக்கு வேண்டுமாயிருந்தது. எனினும், இலையுதிர்காலங்களில் சில பொழுதுகள் நாம் மட்டும் தனித்திருக்கையில்.... அந்த இலைகளும் பல வண்ணங்கள் கொண்டிருக்கும்.. நாம் அந்த இலைகளில் கிடந்து உருளுவோம்! அவர்கள் தந்த உடைகளின்மீது வண்ண இலைகளால் மூடுவோம்! - ஆம் நாம் மீண்டும் வண்ணமயமானவர்களாய் அப்போது மாறி விடுவோம்! இது எம்மை மகிழ்ச்சியிலாழ்த்தியது! ஆதலால்தான் பேத்தி, இப்போது நான் நிறைய வண்ணங்களையே அணிகிறேன்...”
இவ் உரையாடல்கள் தொடர்ந்தும் பூர்வீகக் குழந்தைகள் புதிய கலாச்சாரத்தை தகவமைப்பதை (assimilation) துரிதமான நடைமுறைப்படுத்த அவர்களது தலைமுடி வெட்டப்பட்டு தாய்மொழி பேசுதல் தடைசெய்யப்பட்டு ஐரோப்பிய சிறுவர்களைப்போல் “ஆக்கப்பட்ட” வரலாற்றை எளிமையான மொழியில் சிறுமியிடம் கடத்தி நிற்கின்றன. காணும்போது, ஆண்கள் விடுதிக்குப் பிரிக்கப்பட்ட சகோதரனைக்கூட தொட முடியாத – தொட்டு அன்பைத் தெரிவிக்க விடாத – விக்டோரிய கட்டிறுக்க விழுமியங்களையும் தொட்டுச் சென்று, தொடரும் பக்கங்களில் சமகாலத்தில் பாட்டி தலைமுடிவளர்ப்பது, இளமையில் பிரிக்கப்பட்ட சகோதரனுடன்… குடும்பத்தினருடன் அவருக்கிருக்கும் பட்சம் என்பன அவை தடைவிதிக்கப்பட்ட பின்னணியின் அரசியலுடன் உரையாடப்படுகின்றன. இவ் உரையாடல்கள் ஊடாக இந்த அடக்குமுறையின் நினைவுகள் குழந்தைகளுக்கும் கடத்தப்படுகின்றன.
Will I See? (16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கானது)
‘நாம் தனித்திருக்கும்போது’ ஒருவிதமான அமைதியைப் பேணுகிற கதையெனில் “நான் காண்பேனா” திகில் மிகுந்த கதை.
சில ஆண்டுகளுக்கு முன்பு படித்துக்கொண்டிருந்தபோது காணாமல்போகிற மற்றும் கொலை செய்யப்படுகிற (Missing and Murdered Indigenous Women) பூர்வீகப் பெண்களைப் பற்றிய ஆராய்ச்சி செய்துகொண்டிருந்த ஒரு பூர்வீகக்குடிப் மாணவியொருவர் காணாமல்போன செய்தியும், அவர் கொலைசெய்யப்பட்டு பின்னம் கண்டுபிடிக்கப்பட்ட செய்தியும் ஒரு மாணவியாய் மனதில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. ஒரு பெண் பெண்ணாகப் பிறப்பதில்லை பெண்ணாக ஆக்கப்படுகிறாள் என்றார் சிமோன் த பொவார் (Simone de Beauvoir). ஆனால் இங்கே ஒரு சமூகத்தில் பிறந்தவர்கள் தினமும் தமது சாவை பயந்திருத்தல் பிழைத்தலின் பெரும் பகுதியாகிற துயரமும், பெரும்பாலான சமயங்களில் அவர்களது பயமே நியமாகிவிடுவதும் கண்கூடாய் இருக்கிறது. அமெரிக்காவில் கறுப்பராய்ப் பிறப்பதுபோல, இப்பெருநிலப்பரப்பை தம் வசம் கொண்டிருந்த இக்குடிகளது இன்றைய நிலையும் மரணத்துடன் வாழ்தலாக இருக்கிறது.
அதை பிரதிபலிப்பதாய் “நான் காண்பேனா” என்கிற கதையில் வருகிற மே என்கிற பதின்மள் அவளது நகரத்தில் அவள் செல்லுகிற எத்திசையிலும் யாரினதோ நினைவுப்பொருட்களை கண்டெடுக்கிறாள். சுவடுகள் போல அவை பெருகுகின்றன. அவற்றால் ஆன மாலையொன்றை செய்து அணிகிறபோது அது புதுவித உலகை அவள்முன் திறக்கின்றது. அவை நினைவுப்பொருட்கள் அல்ல, குற்றம் நிகழ்ந்ததன் சாட்சியங்கள் என்கிற புரிதல் மெல்ல மெல்ல வாசகர்களிடமும் பரவுகிறது. இளம் வாசகர்களுக்கெனுகிறபோது கதைக்களத்தின் கனதி காரணமாக தமது பாரம்பரியமான நம்பிக்கைகளைக்கொண்டு மிகப் பூடகமாக நிகழ்-வன்முறை பேசப்படுகிறது. கறுப்பு வெள்ளை சித்திரங்களுள் இடையிடையே தெறிபட்டிருக்கிற சிவப்பு பூர்வீகக்குடிப் பெண்கள் எதிர்கொள்கிற பயங்கரங்களைக் குறிப்பதாக அமைந்திருந்தது.
நியமும் கனவும் கலந்ததுபோல தொடரும் கதையில் அப்பொருட்களை விட்டுச்சென்ற பூர்வீகக்குடிப் பெண்கள் எல்லாம் இறுதியில் எதிர்கொண்ட அந்த ஆபத்துமிகுந்த அனுபவத்தை அவளும் பெறுகிறாள். தெருவில் நடந்து செல்லும் அவளை காருக்குள் இழுக்கவரும் பேயினை அவள் தனது முழு விசையும் கொண்டு எதிர்க்கையில் தன்னிடம் அவர்களது நினைவுப்பொருட்களை கிடைக்கச்செய்த அவ்வாறான துர்அனுபவங்களில் பிழைக்காது போன பெண்களின் ஆன்மாவில் ஒரு பலமிருக்கிறதாக உணர்கிறார். அவர்களது ஆன்மா, அவளது யதார்த்தமாகவும் துர்மரணம் ஆவதிலிருந்து அவளைக் காப்பாற்றுவது போல அமைந்திருந்தது இக்கதை. அநீதியில் இறந்தவர்களுக்கு பலமிருக்குமானால் எவ்வாறு இவ்வுலகம் இன்னமும் அதில் திளைத்திருக்க முடியும்? இவ்வாறு மனம் நொந்துகொண்டாலும் அந்தப் பெண் பிழைத்துக்கொண்டாள் என்பது ஆறுதலாய்.
கடந்த பதிவில் குறிப்பிட்டதுபோல சிறுவர்களால் அன்பை உணர முடியுமெனில் துயரத்தையும் வெறுப்பையும்கூட நன்கு உணருதல் முடியும். அவர்களுடன் அவை பேசப்பட வேண்டும், அவர்களதான மொழியில். எம்மிடம் அவர்களுக்குரிய மொழியில்லையென்பது – தொடர் பயிற்சியூடாக நாம் கடக்க வேண்டியதான- எமது குறைபாடுகளில் போதாமைகளில் ஒன்றே தவிர வேறொன்றுமில்லை. சிறுவர்களுக்கெதிரான வன்முறைகளைக் கொண்டுள்ள சூழலில் அவற்றுக்குள் வாழ வேண்டியிருக்கின்ற அவர்கள் அதை நன்கறிந்திருக்க வேண்டியது அவர்களது உரிமை என்பதாலும் அவை சொல்லப்படவேண்டும். சொல்ல சொல்லத்தான் அநீதியை அவர்கள் இனம்காண்பார்கள். ஒருபோதும் அதனை ஏற்காதிருப்பார்களாக!!
டேவிட் ஏ.றொபேட்சன் (DAVID A. ROBERTSON): இளம் வாசகர்களுக்கான பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். நோர்வே ஹவுஸ் கிறீ நேஷனின் (Norway House Cree Nation) உறுப்பினர். இங்கு குறிப்பிடப்படுகிற When we were alone நூல் சிறுவர் இலக்கியத்துக்கான 2017 Governor General’s Literary Award பெற்றது. அவரது படக்கதைகள் (Graphic books) சகல வாசகர்களுக்குமானவை – சிரமமான விடயங்களை எளிமையான முறையில் சொல்லிவிடுகிற தன்மையைக்கொண்டிருக்கிற இவரது நூல்களது தொடர் பேசுபொருட்களாக காணாமல் போகும் பூர்விக்குடிப் பெண்கள், பள்ளிவிடுதி ஒடுக்குமுறைகள் உள்ளிட்ட பூர்விகக்குடிகளது சமகாலத்தைய, மற்றும் அறியப்பட்டாத வரலாற்றின் கூறுகளே இருக்கின்றன. இவர் கனடாவில் மானிரோவா மாநிலத்தில் வினிபெக் நகரத்தில் வசிக்கிறார்.
Posted on: September 25, 2021, by : admin
2 thoughts on “நாம் தனித்திருக்கையில்………”