தாய்மை மற்றும் காமம்

(Tamil Intro to Gemma’s article “Motherhood”)

பாலுணர்வு என்பதே குற்றமாகப் பார்க்கப்படும் சமூகங்களில் வயதானவர்களின் காமம், பெண்களின் – குறிப்பாக தாய்மார்களின் – காமம் என்பது இல்லாத ஒன்றாக கணிபடும் பேசாப்போருளே.

ஜெமா தனது இக் கட்டுரைத் தொடரில் தான் ஓர் திருநராக மாறும் காலப்பகுதியின் (transition period) தன்-அனுபவங்களைத் தனது பயணத்திற்கேயுரிய பிரத்தியேக தன்மைகளுடன் பகிர இருக்கிறார். அதன் முதற்படியாக தாய்மை தொடர்பான அவரது அனுபவம் இங்கே.

பல சமூகங்கள் தாம் தாய்மையைப் போற்றுவனவான ஒரு பூச்சை தம்மீது பூசிக்கொண்டிருப்பினும் எமது பஸ்களில் ரயில்களில் பிரயாணங்களில் நாம் ஒவ்வொருவரும் எதிர்கொள்ளும் தனித்தாய்கள் பிள்ளைகளுடன் மல்லுக்கட்டுகையிலோ, குடும்பங்களாய் வருபவர்களது குழந்தைகள் வீறிட்டு அழுகையிலோ நம் சூழலில் எழும் முகச்சுளிப்புகளும் தலையாட்டுதல்களும் சத்தத்துக்கு எதிரான புறுபுறுத்தல்களும் அறிவித்துவிடும் அதிலுள்ள போலித்தனத்தை.

கருவை அழித்தல் குற்றமாக்கப்பட்டு, தாய்மை உட்பட அதுபோன்ற பல மரபான பாத்திரங்கள் கொண்டாடப்பட்டாலும் தனிப்பட்ட வாழ்வில் “அது உன்ர பாடு” “நீயாச்சு உன்ர பிள்ளையாச்சு” என்பதாக ஹாயாய் இன்னொருவரின் தலையில் பொறுப்பைத் துறந்துவிட்டு திரிதலே ஆதிக்கவாதிகளது இயல்பாக இருக்கிறது. அது தமக்கு சௌகரியத்தை வழங்குவதால், வசதியாய் இருப்பதால், அந்த ஏற்பாட்டை அப்படியே வைத்தவாறு பொறுப்பெடுக்காது திரிதல் இலகுவாகிறது.

இத்தகையதொரு பின்புலத்தில் இப்பெண்களின் காமத்தை சகல ஜீவராசிகளையும் போலவே அதற்கான அவர்தம் உரிமையை எப்படிப் பேச முடியும்?

ஆண்-பெண் என அமையும் எதிர்பாலீர்ப்பாளர்களாலான குடும்பங்களுள் (heterosexual families) படும் பாடுகளையே பேச கடினமென்கிறபோது, பெற்றோர் ஆதலில் தாய்மை அடைகையில் பாலியல் சிறுபான்மையினர் அனுபவிக்கும் எதிர்கொள்ளும் சவால்கள் இன்னுமதிகம்.

திருநர்கள் பெற்றோர் ஆகிறபோது அவர்கள் குறித்து ஏற்கனவே இருக்கிற பாரபட்ச எண்ணங்கள் (stereotypes) அவர்களது பெற்றோர் என்கிற பாத்திரத்திலும் விழுந்து தெறிக்கின்றன. பாலியல்ரீதியாகப் பேணப்படும் பொதுவிதிகளை மீறுபவர்கள், பெரிதாய் பேசுகிறவர்கள், ஆகையினால் குழந்தைகளுக்குப் பக்கத்திலிருக்கும் தகுதியற்றவர்கள், பிள்ளை வளர்ப்புக்குத் தேவையான முதிர்ச்சியற்றவர்கள்(?) எனவெல்லாம் பொதுப்புத்தி அவர்கள் குறித்த பாரபட்ச சிந்தனைகளை வெளிப்படுத்துகையில் பெற்றோராய் தமது அனுபவம், பிள்ளைகளாய் தமது அனுபவம் என தமது உண்மைகளை மறுபடி மறுபடி உரத்து பேச வேணடியவர்களாய் திருநர்களும் ஏனைய பாலியல் சிறுபான்மையினரும் இருக்கிறார்கள். இல்லாவிடில் அவர்கள் குறித்து அவர்கள் என பொதுப்புத்தியில் பின்னப்படுபவையே உண்மையென நிலைத்துவிடும் அபாயமுண்டு.

‘ஆண்-பெண் திருமணம் உருவாக்கும் குடும்பம் என்கிற ஒற்றைத்தன்மையான அமைப்பானது அறத்தை மீறாத பல காதல் உறவுகளைக் கொண்டிருக்கிற (polyamoury) ஒரு குழந்தைக்கு பல்வேறு பெற்றோர்கள் இருக்கக்கூடிய சாத்தியங்களை, பிற குடும்ப வடிவங்களை நிராகரிக்கிறது. சொத்து, அரசு, இராணுவம் ஆகியவற்றுக்கான ஒரு கருவியாகும் வாரிசு மற்றும் சொத்துடமையை முன்னிறுத்திய எதிர்பாலுறவு குடும்ப அமைப்பானது தனது நோக்கங்களில் தெளிவினைக் கொண்டது. அரசு இராணுவத்தை நிர்வகிக்க தமது பலத்தினை தொடர்ந்தும் கொண்டு செல்ல, உற்பத்தி தேவைக்கு என தேசங்களுக்கு திருமணத்தால் கட்டுப்படுத்தப்பட்ட ஆண்-பெண் உறவுகள் கட்டாயமானவை. அத்தகைய கட்டுப்படுத்தல் இல்லையெனில் பிள்ளைகளை பெறுவதற்குரிய ஒரு நிரந்தர அமைப்பு இல்லாதுபோய்விடும். ஆதலால் ஏனைய சிறுபான்மைகளது சந்தடி சலசல்கள்; அரசுக்கு மினக்கெட அவசியமற்றவையும்.

ஆண்-பெண்” திருமணம், அதன் வாயிலான வாரிசுகள் என்கிற ஏற்பாட்டையுடைய குடும்பத்துக்கு மாற்றுகள் ஏற்படாதவரை ஆண்-பெண், பெண்-பெண், ஆண்-ஆண், ஒருவர்-பலர், திருநர், வளர்ப்புப் பெற்றோர்கள் என வெவ்வேறு வடிவங்களை உள்ளடக்காதபோது அக் குடும்ப மாதிரிக்கு மாற்றான வாழ்வுமுறைகளைக் கொண்டிருப்பவர்கள் புற்ககணிப்புக்குள்ளாவதும் தொடரும்.

அவற்றை எதிர்த்து வாழ முடிகிற திருநர்கள், தம் பிள்ளைகளது வகுப்புகளைச் சேரந்த சக குழந்தைகள் தம்மை அவர்களுடன் காண்கிறபோது தமது சராசரிகளை மீறிய தோற்றத்திற்காகவும் உரத்த இருப்பிற்காகவும் தமது பிள்ளைகளை தண்டிக்க முயல்வரோ அவர்கள்மீது வெறுப்பை உமிழ்வரோ என அச்சப்படுவதை ஜெமா தனது அனுபவத்தில் பதிவு செய்கிறார். பல தாய்களையுடைய தங்களுடைய இருப்பை, தாம் வளர்க்கும் பிள்ளையை அது பாதிப்பதை, அதை ஒழுக்கமற்ற வெறுப்புக்குரிய (மரபான) குடும்பத்தை அவமதிக்கும் சூழலின் விளைபொருளாக பார்க்கக்கூடிய யதார்த்தத்ததை பதிவு செய்கிறார்.

குறிப்பாக, பலவகையிலும் சிறுபான்மையினராய் இருப்பதால் சிறு குழுக்களாக இயங்குகிற திருநர்கள் போதிய வெளி ஆதரவு அற்றவர்களாக தனிமைப்படுத்தப்பட்டு(ம்) இருப்பார்கள். மிக நெருக்கமான குடும்ப அங்கத்தவர்கள் மற்றும் நெருக்கமான நபர்களாலேயேகூட புரிந்துகொள்ளப்படாமல் இருப்பதே அவர்களது யதார்த்தமாக இருக்கிறபோது அவர்கள் பெற்றோராகுதலின்போது மற்றவர்களது ஆதரவின்றியே அதை கொண்டு செல்ல வேண்டியிருக்கும். திருநர் எதிர்கொள்ளும் சவால்களை நன்கறிந்தவர்களான பெண்களிடையேயும் திருநங்கை மற்றும் சிறுபான்மைப் பாலினங்களது தாய்மாரை எதிர்கொள்ளவும் ஆதரவு வழங்கவும் தயக்கமிருக்கிறது.

சுதந்திரம் பெற்ற மனிதர்கள் சுதந்திரமாக தமது இருப்பைக் கொண்டாடியபடி வாழவே விரும்புவார்கள்.

சமகாலத்திலும் சென்ற காலங்களைப் போல பச்சோந்திகளாய் இவ் அமைப்பினுள் அதன் விதிகளுக்கமைய ஒளிந்துமறைந்து ‘களவாக’ தமது வாழ்வை வாழ வேண்டியிருப்பதை கிஞ்சித்தும் விரும்பார்கள். திருநர்களது உரத்த இருப்பும் அத்தகையதே. குறிப்பாக திருநங்கைகள் தாம் தமது இருப்பை அடையாளங்கண்டு உரிய மாற்று சிகிச்சைகளுக்குட்பட்டு தமது அடையாளத்தை பெறுகிறபோது அதுவரைகால் தாம் மறைவாய் ஏங்கியிருந்த அதன் வெளிப்படைத்தன்மையை சுதந்திரமாக அனுபவிக்கவே விரும்புகிறார்கள்.

‘உண்மையில் தமது உடல் தொடர்பாக சுயாதீனமாக எண்ணங்களை, வெளிப்பாடுகளைக் கொண்டிருக்கிறவர்களுக்கு இவ் எதிர்பாலுறவை மையப்படுத்தும் மற்றும் ஆண் ஆதிக்க சூழலில் இடமில்லை. இதனால் மட்டுப்படுத்தப்பட்ட தோழமைகளையும் தனிமைப்படுத்தப்படுதலையும் திருநர் தம் வாழ்வில் எதிர்பார்க்க முடியும். சுதந்திர வெளிப்பாடுகளுடனான தமது இருப்புத் தொடர்பில் யாருக்கும் பதில் சொல்ல விரும்பாதவர்கள் இதனால் கடும் ஆட்சேபனைக்கு உள்ளாகிறார்கள்.

சுதந்திரம் பெற்ற மனிதர்கள் சுதந்திரமாக தமது இருப்பைக் கொண்டாடியபடி வாழவே விரும்புவார்கள். சமகாலத்திலும் சென்ற காலங்களைப் போல பச்சோந்திகளாய் இவ் அமைப்பினுள் அதன் விதிகளுக்கமைய ஒளிந்துமறைந்து ‘களவாக’ தமது வாழ்வை வாழ வேண்டியிருப்பதை அவர்கள் கிஞ்சித்தும் விரும்பார்கள். திருநர்களது உரத்த இருப்பும் அத்தகையதே. குறிப்பாக திருநங்கைகள் தாம் தமது இருப்பை அடையாளங்கண்டு உரிய மாற்று சிகிச்சைகளுக்குட்பட்டு தமது அடையாளத்தை பெறுகிறபோது அதுவரைகால் தாம் ஏங்கியிருந்த அதன் வெளிப்படைத்தன்மையைச் சுதந்திரமாக அனுபவிக்கவே விரும்புகிறார்கள்.

இங்கே ஜெமா மிகத்தெளிவாக எழுதுகிறார் “பாலியல்ரீதியாகச் சுதந்திரமாக நான் இருப்பதென்பது என்னை என் தாய்மையுணர்ச்சியிலிருந்தோ என் பிள்ளை மீதான அன்பிலிருந்தோ விலக்கிவிடுகிற ஒன்று அல்ல. பாலுறவு என்பது தாய்மார்களுக்குமுரியதே. பிள்ளை பெற்றவர்கள் என்பதால் அவர்கள் தமக்குப் பிடித்த விடயங்களைச் செய்வதிலிருந்தோ தடையற்று தம்மிருப்பை வெளிப்படுத்துவதிலிருந்தோ விலகிப் போக வேண்டியதில்லை. எந்த வயதிலும் தாங்கள் விரும்புகிற நபராகத் தங்களை வைத்திருக்கிற உரிமை யாவருக்குமுண்டு. தனது தாய் விரும்பியதைச் செய்தவாறு தன்னம்பிக்கையுடன் இருக்கும்போதே அதை அவதானிக்கிற பிளளைகளும் தமக்கான தன்னப்பிக்கையைப் பெறுவார்கள். முக்கியமாக அவர்கள் இளம் பதின்மராக மாறுகிறபோது தமதான உறவுகளையும் ஆரோக்கியமான வகையில் அணுகுவார்கள், தேருவார்கள். மேலும், அவர்கள் வளர்ந்து வருகையில் தம்மை அவர்கள் சிலவேளை திருநராகவோ சமபாலுறவாளராகவோ அடையாளங் காணக்கூடும். அப்போது நாம் செய்ய வேண்டியதும் எவ்வித நிபந்தனையுமின்றி அவர்களை ஏற்றுக்கொள்வதே.”

Posted on: September 25, 2021, by :

1 thought on “தாய்மை மற்றும் காமம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *