செவ்விந்தியர்கள் தாங்கிக்கொள்கின்றவை போன்று…

என் மனதினில்
பெண் தற்பாலீர்ப்பாளர்கள்
செவ்விந்தியர்களைப்போல தான்
நிறையவும் அவர்களைத்தான் ஒத்திருக்கிறார்கள்
 
பூர்வீகர்கள் இனக்குழுக்களாக வாழ்ந்தவர்கள்
அவர்களுக்கென 
குடி நிலங்கள் சொந்தமாயிருந்தன
அது பூமியென்று அழைக்கப்பட்டது
பலமுறை அவர்கள் கொன்று குவிக்கப்பட்டனர்
எனினும்
புற்களைப் போலவும்
மேகக்கூட்டங்களைப்போலவும்
எப்போதும் அவர்கள் திரும்பி வந்தார்கள்

மறுபடியும் கொன்றொழிக்கப்பட்டார்கள்
பூமியினிடத்திலும் ஒருவருக்கொருவரும்
அக்கறைகொண்டிருப்பதும் பகிர்ந்து வாழ்வதும்
ஒரு நல்ல விடயமென்றே 
அவர்கள் கருதியிருந்தார்கள்

அவர்கள் குதிரை ஓட்டினாரக்ள்
நிலவில் பாடினார்கள்
ஆனால் 
அவை நீண்டகாலங்களின்
முன்னம் நிகழ்ந்தவை 
அவற்றை நான் அறியேன்
இன்றானால் பெண் தற்பாலீர்ப்பாளர்கள்
அவர்களுடன் இருக்கையில்
நான் செவ்விந்தியருடன் இருப்பதாக 
என்னை உணர வைக்கிறார்கள்
 
ஏனெனில் அவர்கள் கசப்புமிகு
சாட்சிகளாக இருக்கிறார்கள்
ஏனெனில் 
நகரங்களிலும் கிராமப்புறங்களிலும் 
அவர்கள்
ஒவ்வொருநாளையும்
விரக்தியுடனும்
சிரித்தவண்ணமே வாழ்ந்தார்கள்.


ஏனெனில்
இப் பூமி அவர்களை ஒளித்துவைத்திருக்கிறது
ஏனெனில்
அவர்களுக்கு நிலவைத் தெரியும்.
அதன்முன்னில் ஒன்றுகூடியிருந்துதான் 
மரணத்தின் கண்களில் 
அவர்கள் உமிழ்கிறார்கள்

சொல்லப்போனால் 
சில பேர்
தங்களைப் பற்றி கொண்டிருக்கிற 
ஒரு கருத்துருவம்தான்
செவ்விந்தியர் என்பதும்
பெண் தற்பாலீர்ப்பாளர் என்பதும் 
சில பெண்கள் 
தம்மைப்பற்றிக் கொண்டிருக்கிற கருத்துருவம்தான்
நாம் இப்போது வாழுகின்ற 
இந்த இடமும் ஒரு கருத்துருவமே.

ஏனெனில் 
வெள்ளை மனிதன் மீதி எல்லாவற்றையும்
எம்மிடமிருந்து எடுத்துவிட்டான்
எமது தகப்பன் சகலவற்றையும் எடுத்துவிட்டான்

அந்த கருத்துருவமானது உங்களை 
தொடர்ந்தும் நகர்த்திச் செல்லும்
அது
உங்களது பிரியமானவர்களை பின்னால் கட்டி 
இழுத்தவாறும்...
பிள்ளைகள் சிலவேளை 
கீழ்நிலைக்கோ 
மலையுச்சிக்கும் அப்பாலோ சென்றுவிடலாம் 
அனால் அது (இறவாது) இருந்துகொண்டிருக்கும்
செவ்விந்தியர் தாங்கிக்கொண்டிருக்கிறவை போன்றதான
அந்தக் கருத்துருவம்...

உங்களது முழுக் கிராமத்தையும் தன்னுடன் 
அது எடுத்துச் செல்லக்கூடும்
ஒவ்வொரு செங்கல்லாக
அல்லது கற்களை விட்டுவிட்டு
இன்னொரு இடத்தில்
இன்னொரு கிராமத்தைக் கட்டுவதற்கு
மேலும் கற்களைக் கண்டடையலாம்

செவ்விந்தியர்களைப்போல 
பெண் தற்பாலீர்ப்பாளர்களுக்கும்
மிகச் சொற்பமான... மிகமிகச் சொற்பமான
வேறு இடங்களே போவதற்கு இருக்கின்றன

ஆகவேதான் 
இக்கருத்துருவம் பற்றி அறிவதும்
அதை நினைவில் வைத்திருப்பதும்
அல்லது பழசொன்றை அம்பலப்படுத்துவதும்
தாம் யார் என்பது பற்றிய கருத்துருவத்தை
நினைவில் சுமந்தவாறு 
எப்படி மனிதர்கள் 
பயணித்தார்கள் என்பதும்
முக்கியமானதாக ஆகின்றன

பெண் தற்பாலீர்ப்பாளர்கள் போல 
செவ்விந்தியர்களும் 
இதை எப்போதும் செய்வார்கள்

தற்பாலீர்ப்பாளர்களுக்கு சாவைப் பற்றியும்கூட
சகலதும் தெரியும்
அத்துடன் 
எல்லாம் காற்றுக்கு சொந்தமானது
என்பதும்.

தமது
மறதியின் காரணமாகவும்
விரக்தியின் காரணமாகவும்
செவ்விந்தியர்களைப்போல அவர்களும்
ஒருவருக்கொருவர் மோசமாகவே நடந்துகொள்வார்கள்

ஆகவே பெண்  தற்பாலீர்ப்பாளர்கள் செவ்விந்தியர்கள்தாம்.
ஏனெனில்
(தமது)
காயங்களாலும்
பயங்கரங்களாலும்
குற்ற உணர்ச்சிகளாலும்
இரத்தத்தாலும்
அவமானத்தாலும்
காணாமல் போவதை சரிவரச் செய்யாத
காணாமல் போதல்களாலும்
எல்லோரும் எல்லோருடனும் சம்மந்தப்பட்டிருப்பார்கள்

எப்போதும் வெளியேறுகிறவர்களாக
நாம் இருக்கின்ற போதும்
ஒருபோதும் நாம் 
தூர போய்விடுவதில்லை
ஏனெனில்
எம்மிடமிருக்கிற ஒரே வீடு
பரஸ்பரம் 
ஒருவருக்கொருவராய் இருக்கிற நாம் மட்டுமே.
மீதி அனைத்தையும் அவர்கள் 
எம்மிடமிருந்து அபகரித்து
தமது காலனிகளாக்கி விட்டார்கள்
நாம் யார் என்கிற கருத்துருவம் ஒன்றே
இன்று நமக்கு சொந்தமானதாக இருக்கிறது


எனக்கு பெண் தற்பாலீர்ப்பாளர்கள் 
செவ்விந்தியர்களை நினைவுபடுத்துகிறார்கள் 
செவ்விந்தியரைப் போலவே 
தற்பாலீர்ப்பாளரும் அழிந்துபோய்விட வேண்டியவர்கள்
அல்லது மறக்கப்படவேண்டியவர்கள்
அல்லது 
அனுதினமும் குடிபோதையிலோ
உடைந்து சிதறுண்டவோ 
தாம் போகாவிட்டால்
தமக்கு என்னாகும் என்பதை நினைவுறுத்தி
ஏதுமற்ற எங்கோவோரிடம்
போய்த் துலைய வேண்டியவர்கள்

என்றாலும்
அவர்கள் அப்படி ஒன்றும் செய்து விடுவதில்லை
மிக மோசமானது நடக்கின்றபோதும்
அதை அவர்கள் நினைவில் வைத்தவாறும்
தொடர்ந்தும் அங்கிருக்கவே செய்கிறார்கள்

ஏனெனில் 
நிலவுக்கு நினைவிருக்கிறது
சூரியனுக்கும்தான்
நட்சத்திரங்களுக்கும்தான் நினைவிருக்கிறது
அத்துடன் பிடிவாதமானதும் விடாப்பிடியானதுமான
இப்பூமியின்
புற்களுக்கும்தான் 
ஃ
மூலக்கவிதை Original Poem: Some Like Indians Endure (தமிழில்: பிரதீபாதி)

கவிஞர் Poet: Paula Gunn Allen (1939-2008)

நியூ மெக்சிகோவில் பிறந்த போலா கன் அலென் தாய்வழியில் Laguna பூர்வீகஅடியையும் தகப்பன்வழியில் ஐரோப்பிய மற்றும் அரேபிய அடியையுமென பல்லின பாரம்பரியங்களைக் கொண்டவர். புதிய பூர்வீகக்குடி எழுத்தாளர்களைப் பொறுத்தவரை தம்மைப் பாதிக்கிற ஆளுமைகள் பங்களிப்புகளில் ஒருவராக இன்று பெருமதிப்புடன் குறிப்பிடப்படுகிற கவிஞர், நாவலாசிரியர், புலமையாளர். நியூ மெக்சிகோவில் வளர்ந்தமையால் தாயின் Pueblo பண்பாட்டின் நேரடி அனுபவமும் தாக்கமும் அவரிடம் உண்டு. குறிப்பாக பெண்ணை மையப்படுத்திய அவர்களது பண்பாட்டின் தாக்கம் அவரது பல கவிதைகளில் உண்டு. அவரது ஆய்வுகளிலும் காலனியவாதிகள் அனேகமாக பெண் மைய கட்டமைப்பைக் கொண்டிருந்த பல அமெரிக்க பூர்வீகக்குடிகளை தமது ஆணாதிக்க சிந்தனை மரபின்படி தவறாக கணித்தார்கள் என்பதையும் குறிப்பாக பூர்வீகக் குடிப் பெண்கள் பலவித அரசியல் தலைமைப்பண்புகளுடன் பதிவிகளில் இருந்ததை கண்டுகொள்ளவில்லை என்பதையும் குறிப்பிட்டிருக்கிறார். இவரது கலாநிதிப்பட்டம் அமெரிக்க குறிப்பாக பூர்வீகர்கள் குறித்த கல்வி ஆய்வை மையப்படுத்தியது. 1999இல் இவர் ஓய்வுபெறும்வரை கல்வித்துறை உட்பட பல்வித தளங்களில் பங்களிப்புகளை வழங்கியவர், தான் ஈடுபட்ட துறைகளில் பேராசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார்.

சொற்கள் Words:

ஜிப்சி (gypsy), நீக்ரோ (negro) போன்று றெட் இந்தியன் (red indian) என்கிற சொல்லும் சமகாலத்தில் சம்மந்தப்பட்ட இன மக்கள் குறித்த (முறையே நாடோடிகள், கறுப்பினர்கள், பூர்வீகக்குடியினர்) பொதுவில் பாவிக்கும் வசைச்சொற்களாக (racial slur) மேற்கில் கணிப்பிடப்படுகிறது. கறுப்பின பாடகர்கள் நீக்ரோவை ஒத்த சொல்லான ‘நிகர்’ (nigga) என்கிற சொல்லை பாடல்களில் பயன்படுத்துவதும் நீண்ட காலமாக சம்மந்தப்பட்ட இனங்களின் அறிவுஜீவிகள் கலைஞர்களால் விமர்சிக்கப்படுவதோடு, குறிப்பாக அம் மக்கள் அல்லாதவர்கள் அதைப் பயன்படுத்துவது மிகவும் கவனத்துடன் அவதானிக்கப்படுகிறவும் ஒன்று. 1981இல் எழுதப்பட்ட இக்கவிதையில் பூர்வீகக்குடியினரைக் குறிக்கக் கவிஞர் பயன்படுத்தும் சொல் மூலத்தில் ‘இந்தியர்” என்பதே (செவ்விந்தியரல்ல). ஆனால் இந்தியர் என்பதோ, அமெரிக்க-இந்தியர் என்பதோ (‘அமெரிக்க பூர்வீக இந்தியர்’ என்பதோ) தமிழில் யாரைக் குறிப்பிடப்படுகிறது என்பது தொடர்பில் மயக்கம் ஏற்படுத்தக் கூடியது. அத்துடன் பூர்வீகரை குறிக்கையில் காலனியவாதிகளது தேசமான அமெரிக்காவை அவர்களது பெயரின் முன்எச்சமாக எழுதுவதும் கருத்தியல்ரீதியாக உறுத்தக்கூடியது.

இன்று தமிழில் மேற்குறிப்பிட்ட இத்தனை சொற்களும் பாவனையிலிருக்கிறபோதும் அவை எமது நிலங்களுக்கு அந்நியமான இனக்குடிகளைக் குறிப்பது ஆகையால் வசைச் சொற்களாக புழக்கத்தில் இல்லை. என்கிறபோதும், பொருத்தமற்ற, அந்தந்த இனங்கள் விரும்பா காலாவதியான சொற்களைக் களைதலே எவ் மொழிக்கும் சிறப்பு. இங்கே இக்கவிதையில் கவிஞர் ‘இந்தியன்’ என பூர்வீகர்களைக் குறிப்பதாலும் அதே சொல்லை பயன்படுத்தும் பொருட்டு (அச்சொல் இன்னும் அமெரிக்காவில் பூர்வீக இந்தியர்களால் பாவனையிலிருப்பதாலும்) பூர்வீகர் என்கிற சொல்லோடு இங்கே தமிழில் குழப்பத்தைத் தவிர்க்க ‘செவ்விந்தியர்’ என்பதும் பயன்படுத்தப்படுகிறது.

இக்கவிதை பெண் சமபாலீர்ப்பாளர்கள் மற்றும் அமெரிக்க பூர்வீர்கள் ஆகிய இரண்டு ஒடுக்குமுறைக்குள்ளாகிறவர்களை ஒப்பிடுவதூடாக ஒடுக்கப்படுபவர்கள் தம் அனுபவங்களின் ஒத்தத் தன்மைகளை அடையாளங்கண்டு அவற்றூடாக ஓதோருவரை நன்கு புரிந்துகொண்டு நேசசக்திகளாக மாறவும் ஒருங்கிணைந்து போராடவும் முடியும் என்பதையும் உணர வைக்கிறது.

Posted on: October 5, 2021, by :

1 thought on “செவ்விந்தியர்கள் தாங்கிக்கொள்கின்றவை போன்று…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *