— பெனி — (சிறுகதை)

a short story by Mordecai Richler in Tamil Translation

1941: கூதிர் காலம். பெனி வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்டபோது இராணுவத்திற்கு தனதொரு மகனைத் தரவேண்டியிருந்தால் அது பெனியாகவே இருந்திரட்டும் என்று அவனது அப்பா கார்பர் முடிவெடுத்திருந்திருந்தார். அவன் அவ்வளவு விபரமில்லாத ஆள் என்பதால் தேவையில்லாத அலுவல்களில் தன்னை நுழைத்துக்கொள்ள மாட்டான். அதனால் தன்னைக் பாத்துக்கொள்வான், தன்ர பெடியன் பெனி தன்னைக் கவனித்துக்கொள்வான் என்று நினைத்தார். பெனியின் அண்ணன் அபே “இவன் திரும்பி வரேக்க எனக்கெண்டு மெக்கானிக் கடை போட்டிருப்பன், சத்தியமா அப்ப நான் அவனுக்கு வேலை தரக்கூடிய ஒரு இடத்தில இருப்பன்” என்று அறிவித்தான்.

பெனியிடம் இருந்து ஒவ்வொரு கிழமையும் காயிதம் வரும். ஒவ்வொரு கிழமையும் கார்பர் தம்பதிகள் செயின்ற் ஏர்பேயின் வீதியில் வளர்ந்த ஒரு பெடியனுக்குக் கட்டாயம் தேவையானவையான சலாமி, ஊறின கெண்டை மீன், ஸ்ரூடல் ஆகிய நல்ல சாமான்களை ஒரு பார்சலாய் அவனுக்கு அனுப்பி வைப்பார்கள். எப்படி இந்த சாப்பாட்டுப் பார்சல் எப்போதும் எப்போதும் மாறாதோ அப்படியே பெனியின் காயிதமும் எப்போதும் மாறாது. போர்டன் முகாமோ அல்டர்சொற் முகாமோ நோர்மான்டியோ ஹொலந்தோ எங்கிருந்து வந்தாலும் அவனது காயிதம் “நீங்கள் எல்லோரும் நலமாகவும் சுகமாகவும் இருப்பிங்க எண்டு நம்புறன்” என்று தொடங்கி, “கவலைப்படாமல் இருங்கள். எல்லாருக்கும் என்ர வந்தனங்கள். பார்சலுக்கு நன்றி” என்று முடிந்திருக்கும்.

ஐரோப்பிய யுத்தத்திலிருந்து பெனி வீடு திரும்பியபோது தம் மூத்தபிள்ளை திரும்பியபோது கோலாகலப்படுத்திய சாப்பிரோ தம்பதிகள் போலெல்லாம் கார்பர் தம்பதிகள் வழமைக்கு மீறிய ஆரவாரப்படவில்லை. அவனை இரயில் நிலையத்தில் சந்தித்தனர். அத்தோடு இரவு சின்ன விருந்தோம்பல் ஏற்பாடு செய்திருந்தனர்.

திரும்பவும் பெனியைக் கண்டதில் அபேக்கு நல்ல சந்தோசம். “பெனி பிறகென்ன! நீ அந்தமாதிரி!” இதேயேதான் அந்த மாலையில் முழு நேரமும் ஒரே சொல்லிக்கொண்டிருந்தான். அப்பா கார்பர் “நீ திருப்பி தொழிற்சாலைக்கெல்லாம் போகத் தேவையில்ல.. உனக்கு உன்ர பழைய வேலை தேவையில்லை. அபேக்கு நீ அவன்ர கராச்சில உதவியா இருக்கலாம்” என்றார்.

“ஓம், சரி” என்றான் பெனி.
‘இருக்கட்டும், இருக்கட்டும். அவன் ஓய்வெடுக்கட்டும்.” என்றார் தாயார் திருமதி கார்பர். ‘ஒரு இரண்டு கிழம அவன் வேலை செய்யாட்டி இப்ப என்ன நடந்திரப்போகுது?”

இதற்குள் “டேய் இவன் ஆர்த் சேகல் இராணுவத்தில இருந்து வந்தோண்ண எனக்கு சொன்னவன் இத்தாலியில நாலைஞ்சு சுவீட் காப் சீகரட் வைத்திருந்தா காணும், என்னவும் வேண்டலாமாமே, இது உண்மையாடா அல்லது அவன் எனக்கு புலுடா விட்டவனா?” அபே அங்கலாய்ப்பாய் கேட்டான்.

பெனி டிஸ்சார்ஜ் பண்ணப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டது அவனது காலுள் இருக்கிற வெடிதுண்டினால் தானேயன்றி ஐரோப்பாவில் யுத்தம் முடிவடைந்து விட்டதால் ஒன்றும் அல்ல. நடக்கையில் அவனொன்றும் அவ்வளவாய் நொண்டவில்லை என்பதோடு அவன் தான் காயப்பட்டதைப் பற்றியோ யுத்தத்தைப் பற்றியோ யாருடனும் பேசவில்லை என்பதால் யாரும் அவனில் ஏற்பட்டிருந்த மாற்றத்தை முதலில் கவனித்திருக்கவில்லை. யாருமே கவனிக்கவில்லை என்பதை மயேர்சனின் மகள் பெல்லாவைத் தவிர யாரும் கவனிக்கவில்லை என்றே கொள்ள வேண்டும்.

மயேர்சன் செயின்ற் ஏர்பெயினிலுள்ள போப்ஸ் சீகரட் அன்ட் சோடாக் கடையின் உரிமையாளர். அங்கு கிழியல்களாலான ஒரு பழைய குசினிக் கதிரையிலிருந்துகொண்டு அச் சுற்றப்புறத்தின் ஆண்களுடன் சீட்டு விளையாடியபடி வாரத்தின் எந்த நாட்களிலும் நீங்கள் அவரைக் காண முடியும். அவருடைய கண்கள் கண்ணாடியை ஒத்தவை. கூட விளையாடுபவர்கள் யாரும் பந்தயம் கட்டத் தயங்கின், அக்கண்ணாடிக் கண்களை எடுத்துக் கூர்தீட்டி ஒரு பார்வை பார்ப்பார், அது யாரையும் அச்சுறுத்த மறந்ததில்லை. அவரது மகள் பெல்லா கல்லாவில் இருப்பாள். அவளுக்கு பிறவியிலேயே வளைந்த பாதமும், தலைமுடியென மண்ணிறத்தில் ஒரு எலிவாலும் கூடவே இன்னும் கொஞ்சம் கூட முடி அவளது முகத்திலும் இருந்தது. அவளுக்கு வயது ஆக 26தான் என்கிற போதும் காலத்துக்கும் அவள் ஒரு திருமணமாகாத குமராகத்தான் இருப்பாள் என்பதே எல்லோரதும் ஏகோபித்த எண்ணம். அதை விடுத்தால், அவள்தான் – அவள் மட்டும்தான் – போரிலிருந்து திரும்பியபிறகு பெனி மாறிவிட்டதை கவனித்த ஒரே ஒருத்தி. அவன் பொப்ஸ் சீகரட் அன்ட் சோடா கடைக்கு வந்த முதல் முதல் நாளே அவள் அவனிடம் கேட்டுவிட்டாள் “என்ன பிரச்சினை பெனி?” பதிலாக அவன், ‘எனக்கொண்டுமில்ல” என்றான்.

பெனி, ஒரு குள்ளமான, மெல்லிய சின்ன ஆள். நீண்ட ஒடுங்கிய முகம் அவனது. சதா எச்சிலூறுகிற வாய் மற்றும் ஏதோ வகையில் கோணலான மென்கரும் விழிகள். கவனத்தை உறுத்துகிற பென்னாம் பெரிய கைகள். அவற்றை பிற பார்வைபடாது தனது பொக்கற்றுகளுக்குள் ஒளித்து வைத்திருக்கவே அவன் விரும்பினான். அதுமட்டுமன்று முழுமையாகவே எங்கும் யாரதும் பார்வைபடாது இருப்பதையே முடியுமானவரை அவன் வேண்டியது போலிருந்தது. கதிரைகளுக்குப் பின்னாலோ, ஒளி குறைந்த மின்விளக்குகளுக்குக் கீழவோ யாரும் அவனை கவனித்துவிடாத இடங்களிலுமே பிற கண்காணாதபடிக்கு அவன் நின்றான்.

உயர் பள்ளியில் இவன் 9ஆம் வகுப்பு சித்தியடையாதபோது மதிப்புக்குரிய அவனது வகுப்பாசிரியர் – திருவாளர் பேர்க்கின்ஸ் அவர்கள் – அவனிடம் வீட்டுக்கு ஒரு குறிப்பு கொடுத்து அனுப்பினார். அதில் இவ்வாறு எழுதியிருந்தது: “பெஞ்சமன் ஒரு நல்ல மாணவன் கிடையாது. ஆனால் நாட்டின் ஒரு நல்ல பிரஜைக்குரிய சகல குணாம்சங்களும் அவனிடமிருக்கிறது. மிகவும் நாணயமானவன், வகுப்பில் அதிகவனம் செலுத்துபவன், ஒரு கடின உழைப்பாளி. அவனுக்கு ஏதேனும் தொழில் கற்றுக்கொடுக்க நான் பரிந்துரை செய்கிறேன்.’
தனது மகனின் ஆசிரியர் எழுதியதைப் படித்ததும் கார்பர் தன் தலையை ஆட்டியவாறு அந்த கடிதத்தை கசக்கிக்கொண்டு கூறினார் ‘தொழிலோ?’ – தொடர்ந்தும் தனது பெடியனை நோக்கி தலையை அதிருப்தியுடன் ஆட்டியவாறு “தொழிலோ?” என்றார். தனது தடித்த குரலில் “உனக்கொரு தொழிலும் வருமோ” என்றவர், “சாப்பிரோட பெடியன் டாக்குத்தரா வருவான்” என்றார் தொடர்ந்து.
சாப்பிரோட பெடியன் என்றார் திருமதி கார்பர்.

அந்த குறிப்பை பின்னம் பெனி மீட்டெடுத்து, மடிப்புக்களை சமன்படுத்தி அவனது பொக்கற்றுக்குள் வைத்திருந்தான். பக்குவமாக அங்குதான் அது பிறகிருந்தது.

மொன்றியலுக்கு திரும்பிய மறுநாளே பெனி தனக்கு இரண்டு கிழமை எல்லாம் விடுமுறை தேவையில்லை என முடிவெடுத்துவிட்டு உடனேயே அபேயின் கராச்சுக்கு வந்துவிட்டான். இது அபேக்கு பெரிதும் திருப்தியூட்டியது.
“நீ முந்தியைவிட நிறைய முதிர்ச்சியானவனாகிவிட்டாய்”
“இது நல்லது. உலகத்தில உனக்கொரு பெறுமதியை இது குடுக்கும்” என்றெல்லாம் அபே பாராட்டி சொன்னான். இரவும் பகலும் அபே மிகக் கடினமாக உழைத்தான். பெனி இருப்பது தனது தொழிலுக்கு ஒரு மேலதிக வளர்ச்சியை வழங்குமென நம்பினான். ராக்ஸி ஓட்டுநர்களுக்கு அவன் கூறிவதுண்டு “அது என்ர குட்டித் தம்பி பெனி” “நாலு வருசம் தரைப்படையில இருந்தான். அதிலும் இரண்டு வருசம் களத்தில நிண்டவன். உங்களிட்ட சொல்றதுக்கு என்ன, இவன் ஆள் ஒரு வலிய போராளி!”

முதல் இரண்டு கிழமை அபே பேனியோடு நல்ல திருப்தியாய் இருந்தான். தகப்பனுக்கும் நிலவரத்தை ஒப்புவித்தான் “ஆள் கொஞ்சம் மெதுமெதுவாத்தான் வேலை செய்யிது. மெக்கானிக்கில பெரிய கெட்டித்தனம் இருக்கிறதாவும் தெரியேல்ல. ஆனா வாறஆக்களுக்கு அவன நல்லாப் பிடிச்சிருக்கு. மெதுமெதுவா தொழில் பிடிபட்டிரும் அவனுக்கு.”

பிறகுதான் அபே ஒவ்வொன்றையும் கவனிக்கவாரம்பித்தான். யாவாரம் மந்தமாகிறபோது அதைப் பாவித்து கடையைத் துப்பரவு செய்வதையோ நிலுவையில் இருக்கிற பிற அலுவல்களைப் பார்ப்பதையோ விடுத்து, கடையின் ஒளிகுறைந்த மூலையொன்றில் பெனி தன் கைகளை மடியில் இறுக்கிக்கட்டிக்கொண்டு நடுங்கியவாறு குந்திக்கொண்டிருப்பான். தனது சகோதரன் அப்படி நடந்துகொள்வதை முதன்முதல் கண்ட அபே, “என்னடா பிரச்சினை உனக்கு, காய்ச்சல் குணமா இருக்குதா” எனறுதான் கேட்டான்.
“இல்ல. எனக்கொண்டுமில்ல”
“வீட்டை ஏதும் போப்போறியோ?”
“இல்ல.”

அதன் பிறகு, எப்போது மழை பெய்தாலும் – அந்த வேனிற்காலம் நிறையவே மழை பெய்தது – பெனியை கடையில் எங்குமே காண முடியாது. இது அபேயைக் கடுங்கோபத்தில் ஆழ்த்தியது. இதுவே தொடர்ந்தது, கடுமையாக இடிமழை பெய்த நாளொன்றில் அபே மலசலகூடத்தை திறக்க முடியன்றபோது அது பூட்டப்பட்டிருந்ததை காணும்வரை. “பெனி’ அவன் கத்தினான். “நீ உள்ள இருக்கிறது எனக்குத் தெரியும். உடனடியா வெளிய வா.”

பெனி பதில் ஒன்றும் சொல்லவில்லை. எனவே அபே கடையின் பொதுத் திறப்பை எடுத்துக் கொணந்து திறந்தான். அவன் அங்கே தன் முழங்காலில் முகம் புதைய ஒரு மூலையுள் ஒட்டியவாறு அந்தக் குளிரிலும் நடுங்கியவாறு வியர்வை முகத்தில் வடிந்தவாறிருக்கும் பெனியை கண்டான்.
“மழை பெய்யுது” என்றான் பெனி.
“பெனி, ஒழும்பு. என்னடா பிரச்சினை”
“அங்கால போ. மழை பெய்யுது”
“நான் டாக்குத்தர போய் கூட்டியண்டு வாறன் பெனி”
“இல்ல வேண்டாம். அபே தயவுசெய்து அங்கால போ”
“ஆனா பெனி..”

உள்ளே ஏதோ உடைந்துவிட்டதுபோல, பெனி வேகமாக குலுங்க ஆரம்பித்தான். பிறகு, அது நின்ற பிற்பாடு, வாய் திறந்து தொங்க ஒன்றும் புரியாதவனைப்போல அபேயைப் பார்த்தான். “மழை பெய்யுது” என்றான்.
அடுத்த நாள் காலையில் கார்பரைக் காணப் போனான் அபே. “இவனோட என்ன செய்யிறதெண்டு எனக்குத் தெரியேல்ல” என்றான்.
“யுத்தம் அவனை கெட்ட நிலமையில கொணந்து விட்டுட்டுது” என்றார் திருமதி கார்பர்.
“மற்றப் பெடியங்களும்தான் போருக்குப் போனவங்கள்” என்றான் அபே.
“சாப்பிரோட பெடியன்” திருவாளர் கார்பர் தொடங்கினார் “அவன் ஒரு இராணுவ உயரதிகாரி”
பெருமூச்சுடன் “சாப்பிரோட பெடியன்” என்ற திருமதி கார்பர் சொன்னார்: “இவனுக்கு ஒரு விடுப்புக் குடு அபே. அவன் மாட்டன் எண்டாலும் பிடிவாதமா சொல்லிக் குடு. அவன் நல்ல பெடியன்தான். நல்ல இடத்தில இருந்து வந்தவன்.”

பெனிக்கோ தனது விடுப்பை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று தெரியவில்லை. எனவே வெகு தாமதமாய் எழுந்து பொப்ஸின் சீகரட் அன்ட் சோடா கடைக்குப் போவான். அங்கு திரிவதையே வழக்கமாக்கிக் கொண்டான். “எனக்கிது சுத்தமா பிடிக்கேல்ல பெல்லா” மயேர்சன் சொன்னார், “இவன் இங்க திரியிறது எனக்கு நானே கான்சர் வேணும் எண்டிறது போல.”
“நிட்சயமா அவனுக்கு ஏதோ மனப்பிரச்சினை இருக்கு” பிரஸ்தாபித்தான் மயேர்சனது சீட்டாடிகளில் ஒருத்தன். பெல்லாவுக்கு பெனி இருப்பது பிடித்திருந்தது. கொஞ்ச நாட்களுக்குப் பிறகு மயேர்சனும் முறையிடுவதை நிறுத்திவிட்டார். “பெடியனுக்கு சீரியஸா சிலவேளை அவளோட (விருப்பம்) இருக்கலாம்” அவர் கூறினார். “அவளிட கால்பிரச்சினைக்கும் முகத்தில இருக்கிற எல்லாத்துக்கும் நான் தேர்ந்தெடுக்கிற நிலமையில எல்லாம் இல்ல. அத்தோட அந்த கூபர்மானிட பெடியனப்போல இவனொண்டும் கிரிமினல் எண்டு இல்லத்தானே”
பதிலுக்கு, “சொன்னதை திருப்பி எடு, கூபர்மானிட பெடியன் சந்தர்ப்பங்கால பாதிக்கப்பட்டவன். அவன் யாரோ – தெரியவே தெரியாத அந்நியனிட சூட்கேசப் வலும் பத்திரமா பாத்துக்கொண்டிருந்தவன், பொலிஸ் வரேக்க” என்றான் இன்னொரு சீட்டாடி.

ஒன்றாயிருக்கும்போது பெல்லாவும் பெனியும் அவ்வளவாய் ஒன்றும் பேசவில்லை. அவள் ஆடை பின்னிக்கொண்டிருப்பாள் – இவன் சீகரட் பத்திக்கொண்டிருப்பான்.

பெனி அவள் நொண்டிக்கொண்டு கடையில் நகர்வதை உள்ளூர ஏக்கத்துடனும், கிளர்ச்சியுடனும் அமைதியாகப் பார்த்துக்கொண்டிருப்பான். வகுப்பாசிரியர் திருவாளர் பேர்க்கின்சினது குறிப்பு இன்னமும் அவனது பொக்கற்றுக்குள் இருந்தது. அவ்வப்போது அவள் பின்னுவதை நிறுத்தி நிமிர்ந்து அவனைப் பார்ப்பாள்.
“கோப்பி குடிக்கோணும் போல இருக்குதோ?” என்று கேட்பாள்.
“இல்லை எண்டு சொல்ல மாட்டன்” அவன் சொல்லுவான்.


மாலையில் ஒரு ஐந்து மணிபோல அவன் எழும்புவான், பெல்லா சுத்திக்கொண்டு கல்லாவுக்கு வந்து ஒரு கட்டு சஞ்சிகைகளை அவன் வீடு கொண்டு செல்லக் கொடுப்பாள். அவன் இரவிரவாய் அவற்றை வாசித்துவிட்டு மறுநாள் காலை புத்தம் புதுசுபோல கொண்டு வருவான். பிறகு தனது கைகளையோ கீழ்த்தரையையோ பார்த்தவாறு அவளுடன் கடையில் இருந்துகொண்டிருப்பான்.

ஒருநாள் மாலை ஐந்துமணிபோல் வழமைபோல் வீடு செல்லாது அவன் பெல்லாவுடன் மேல்மாடிக்கு சென்றான். அதைப்பார்த்துக்கொண்டிருந்த மயேர்சன் புன்னகை பூத்தார். தன் கூட்டாளிகளில் ஒருவனிடம் திரும்பி “எனக்கொரு பெடியன் இருக்குமெண்டா, பெனிய விட திறமான ஆளா இருக்குமா என்ன” எனவும், அவன் “நடக்கமுன்னமே இவன் கட்டிற கோட்டையைப் பார்” என்றான் நக்கலாய்.

பெனியின் விடுமுறை மேலும் வாரக்கணக்காய் இழுவுண்டது. ஒவ்வொரு காலையும் பொப்ஸ் சீகரட் அன்ட் சோடாவில் உட்காருவதும் ஒவ்வொரு மாலையும் பெல்லாவுடன் மாடிக்குச் செல்வதும், சீட்டாடுபவர்களை கடக்கின்றபோது அவர்களுக்கு பின்னால் அவர்கள் அடிக்கும் சிலேடைக் கதைகளை கேட்காததுபோல நகர்வதும் வழக்கமானது. ஒருநாள் மாலை பெல்லா மயேர்சனை சீட்டாட்டத்தின் இடையே மாடிக்கு அழைத்ததுடன் இது முடிவுக்கு வந்தது.
“நாங்கள் திருமணம் செய்ய முடிவெடுத்திருக்கிறோம்” அவள் அறிவித்தாள்.
“அப்படியானால் உனக்கு எனது முழு சம்மதமுண்டு” என்றார் மயேர்சன்.
“வாழ்த்துக்கள் அப்படி ஏதும் சொல்ல மாட்டிங்களா?” பெல்லா கேட்கவும், “உன்ர வாழ்க்கை இது” என்று மயேர்சன் சொன்னார்.

எந்த உரைகளும் இன்றி அவர்களது திருமணம் மிக எளிமையாக யூதர்களின் கோயிலில் நடந்தது. விழா முடிந்த பிறகு அபே தனது இளைய சகோதரனின் முதுகில் விளையாட்டாக ஒரு தட்டுத் தட்டி “பெனி, அந்த மாதிரி… பெனி டோய் நீ அந்த மாதிரி” என்றான்.
“நான் வேலைக்குத் திரும்பி வரவா” என பெனி கேட்கவும் “ஓ.. வா வா.. நீ பழையபடி பெனி ஆகிட்டாய், எனக்கு நல்லாத் தெரியுது.”

ஆனால் இந்த சம்மந்தத்தில் தனது தகப்பனுக்கு திருப்தி இல்லை என்பதை பெனி அவதானித்தான். கார்பரின் கூட்டாளிகள் வாழ்த்துத் தெரிவித்த ஒவ்வொரு தடவையும் தோள்களைக் குலுக்கியவாறு அவர் சொன்னார் “சாப்பிரோட பெடியன் சேகல் குடும்பத்தில கட்டியிருக்கிறான.;”
“சாப்பிரோட பெடியன்” சொன்னார் திருமதி கார்பர்.

பெனி பழையபடி கராச்சுக்குத் திரும்பிப் போனான். ஆனால் இம்முறை அவன் மிகக் கடினமாக உழைக்கத் தயார்நிலையில் போனதால் அபே திருப்தியானான். “அதுதான் என்ர சின்னத்தம்பி பெனி” மெனக்கெட்டு ராக்சி ஓட்டுநர்களிடம் சொன்னான். “கலியாணங் கட்டி ஆறு கிழம கூட இல்ல, அவன்ர மனுசிக்கு வயித்தில ஒண்டு வளருது.. சொல்றன் கேளுங்க, ஆள் வேகமான ஆள்”

தான் கடினமாக உழைக்கவேண்டுமென்கிற மனஉறுதி மாத்திரமல்ல அவ்வப்போதில் பெனி கொஞ்சம் சிரிக்கவும் செய்தான். பெல்லாவின் உதவியுடன் எதிர்காலத்தை திட்டமிடலானான். ஆனால் எப்போதும் ஒருகால் – கடையில் கொஞ்சம் யாவாரம் மந்தமாகிற போதுகளில் – கடையின் இருள்நிறைந்த மூலையில் தன்னை இறுக்கியவாறு ஒரு கதிரையில் பெனி உட்கார்ந்திருப்பான்.

அவன் வேலைக்குத் திரும்பி ஒரு மூன்று அல்லது நான்கு மாதங்கள் இருக்கும். பெல்லா அபேயுடன் கதைக்கப் போனாள். அவள் செயின்ற் ஏர்பெயின் இல் உள்ள தங்களது வீட்டுக்கு திரும்பியபோது அவளது முகம் வெற்றிக்களிப்பிலும் பூரிப்பிலும் பொங்கியிருந்தது. “உனக்கொரு நல்ல சேதி கொணந்திருக்கிறன்” – அவள் பெனியிடம் சொன்னாள்.
“மவுன்ற் லோயலில அபே இன்னொரு கடை போடப்போறானாம். நீதான் அத நடத்தப் போறாய்”
“ஆனா எனக்கது விருப்பமில்ல. எனக்கு எப்படி கராச்ச நடத்திறதெண்டெல்லாம் தெரியாது”
“நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து நடத்துவம்”
“அதவிட நான் அபேயோட இருக்கிறததான் விரும்புவன்”

தமது குழந்தையின் எதிர்காலத்தை தாம் திட்டமிட வேண்டுமென்று பெல்லா விளங்கப்படுத்தினாள். தனது மகன் எக்காரணம் கொண்டும், இந்த சீகரட் அன்ட் சோடாக் கடையின் மேல்மாடியில் ஒரு நல்ல சவர் குளியலறைகூட இல்லாத வீட்டில் வளரக்கூடாது. அவளுக்கு ஒரு குளிர்சாதனப்பெட்டியும் வேண்டியிருந்தது. தாம் காசு சேமித்தால் அவர்கள் கார் வாங்கவும் முடியும். கூடவே, அடுத்த வருடம் பிள்ளை பிறந்த பிறகு தேவையானளவு காசு சேமித்தால் தான் தன் காலை சரிப்படுத்திக்கொள்ள அமெரிக்காவிலுள்ள கிளினிக்குக்கு போக முடியும் என்றும் சொன்னாள். “நான் டொக்ரர் சாப்பிரோட்ட நேற்று போனனான். பொஸ்ரனில் இருக்கிற கிளினிக் ஒண்டில தினமும் தினமும் அதிசயங்கள நடத்திக்கொண்டிருக்கினம் எண்டு அவர் எனக்கு நம்பிக்கை தந்தவர்”

“அவன் உன்ன பரிசோதிச்சவனா” பெனி கேட்டான்.

“அவர் சரியான நல்ல மனுசன். சில ஆக்களப் போல லெவல் காட்டிற ஆள் இல்ல தெரியுமா”
“என்னோட படிச்சவன் எண்டிறது அவனுக்கு ஞாபகமிருக்கா?”
“இல்ல”
அதிகாலை மூன்று மணிக்கு பெல்லா முழித்தபோது தலையை முழங்காலில் புதைத்தவாறு தரையில் நடுங்கிய நிலையில் பெனியைக் கண்டாள். “மழை பெய்யுது” “இடி முழக்கமா இருக்கு” என்றான்.
“யுத்தத்தில சண்டை பிடிச்ச ஒரு ஆம்பிள ஒரு சின்ன மழைக்கெல்லாம் பயப்பிடேலாது” அவள் சொன்னாள்.
“ஓ பெல்லா…பெல்லா…பெல்லா” இவள் அவனது தலையைக் கோத முயன்றாள். ஆனால் அவன் வேகமாய் அவளிலிருந்து தூர விலகினான்.
“டாக்குத்தர கூப்பிட ஆள் அனுப்பட்டா?”
அவன் கிலுங்கிச்சிரித்தவாறு கேட்டான்: “சாப்பிரோட பெடியனையா?”
“ஏன் வேணாம்” அவள் கேட்டாள்.
“பெல்லா”
“பெல்லா.. பெல்லா” அவன் சொன்னான்.
“நான் பக்கத்தில யாரையும் டாக்குத்தர கூப்பிடச் சொல்லப் போறன்… அப்பிடியே இருங்க. அசையாதிங்க, இந்தா இப்ப வாறன்” என்றுவிட்டுப் போனாள். ஆனால் அவள் வந்தபோது, அவன் போய்விட்டான்.

காலயில் ஒரு எட்டுமணி போல மயேர்சன் வந்தார். அவருடன் கார்பர் தம்பதியும் இருந்தார்கள். ‘செத்திட்டானா?” பெல்லா கேட்டாள்.
“சாப்பிரோட டாக்குத்தர் பெடியன், வலு கெதியா உயிர் போயிட்டுது எண்டான்”
“சாப்பிரோட பெடியன்” திருமதி கார்பர் சொன்னா.
“கார் சாரதியில பிழையில்ல’ என்றார் மயேர்சன்.
“அது தெரியும்” என்றாள் பெல்லா.

o

தமிழில்: பிரதீபாதி

Art work: Call of Death | Käthe Kollwitz (1867–1945)

Posted on: October 25, 2021, by :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *