Portable homes: உடல் உறுப்புகளுக்கு எழுதிய கடிதங்கள்

கடிதம் 01

அன்புக்குரிய எனது புன்னகையே....

எங்கு போய் விட்டாய்? உன்னைக் கண்டு நாளாகிவிட்டது. 
முன்பு நீ நாளாந்த நிகழ்வு. காலையும் மாலையும் உன்னைக் காணலாம். நாளைத் தொடங்குகிறபோது கண்ணாடியில், பின்னர் நண்பர்களுடன் உனது சிரிப்பு தொற்றாய் பரவுகின்றபோதும் இரவில் குட்டித்தம்பிக்கு பள்ளிவேலையில் உதவுகிறபோதம் என உன்னைக் காணலாம். ஒரு மோசமான நாளை எதிர்கொண்டவர்கள் உன்னைக் காண விரும்புவார்கள். நீயற்று அவர்களை ஒருபோதும் காண விரும்பியதில்லை நான்.

இப்போது நிறையப்பேர் அது எங்கு போனதென என்னைக் கேட்கிறார்கள். காணாமற்போன புன்னகைக்குப் பதிலாய் என் உதடு பிரிவதை 'உண்மையானதென” அவர்கள் ஏற்கவில்லை.  சும்மா காட்டத்தான் ஒரு பாவனை என தெரிந்து வைத்திருக்கிறார்கள். நீ திரும்பி வர வேண்டுமென கோரிக்கை விடுக்கிறேன். நீ போய் நீண்டகாலம் ஆகிவிட்டது. 

சில நாட்கள் கடினமானவை. சில மிக நீண்டன. சில நாட்களில் எமது கண்ணீரைக் கட்டுப்படுத்த முடிவதில்லை. சில நாட்களில் அது முடியும். எங்களால் முடிகிற அந்த நாட்களில்தான் நீ மிக மிக வலிமையானவள். இப்போது மிகக் கவனமாக மீளவும் உன்னை ஒழுங்குபடுத்திக் கொண்டிருக்கிறாய். உனது தோழர்களும் குடும்பத்தினரும் உனது பக்கம் நிற்கிறார்கள். 
எல்லோரும் உன்னைத் தேடுகிறார்கள். நீ திரும்ப வேண்டிய காலம் வந்துவிட்டது.
நாளை காலையில் உன்னை காண்பேன் என்று நம்புகிறேன்
நேசத்துடன்
உன்னுடைய நான்


(பக்.30 Portable Homes)

1

பாதுகாப்பு என்பது ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு அர்த்தத்தைத் தரக்கூடியது. திகிலூட்டுகிற இரவு வெளிச்சத்தில் ஆளரவமற்ற சந்துபொந்துகளினூடு மெதுவாய்…மிக மெதுவாய்… அடியெடுத்து வைக்கும் காலடிச்சுவடுகளைத் தொடருகின்ற கமராவை நாம் தொடர்வோம். இறுதியில் பருந்தாய் புது வேகமெடுத்து ஒரு அனர்த்தத்தை குறிப்பறிவிக்கிற கதறலோடு முடிவடைகிறதான திரைக்காட்சிகளில், பெண்களது படைப்புகளில் என – பாதுகாப்பின்மையானது வேலையிலிருந்து தாமதமாய் இரவில் வீடு திரும்புதல்களின் பாடுகள், எதிர்கொள் தொல்லைகள் பல தளங்களில் விவரிக்கப்பட்டிருக்கிறது. பகலொன்றும் எல்லோருக்கும் பாதுகாப்பை வழங்குவதில்லை என்கிறபோதும், இரவே பாதுகாப்பற்றது என்பதாக நம்பப்படுவதால் பாலியல் வன்முறைக்குள்ளான பெண்கள் குறித்த உரையாடல்கள் வீடுகளில் எழுகின்ற போதெல்லாம் எழும் “ஏன் அந்த நேரத்தில போனவை” “இரவில வீட்டில இருக்க வேண்டியதுதானே” என்பதான கேள்விகள் இன்றுமே உலகமெங்கும் நடைமுறையில் இருக்கிறது.

இதனால் திரைக்காட்சிகளில் முகமற்ற அந்நியனின் பின்தொடர்தலால் வேகமெடுக்கும் அபலைப் பெண்ணிற்காகப் பதைபதைப்புறுகிற பார்வையாளர் மனம் அவர்கள் பத்திரமாய் வீடு திரும்பிவிட வேண்டும் என்கிற எண்ணத்தையே தொடருகின்றது. இவையனைத்தும் திரும்புவதற்கான ஒரு இடம் – பாதுகாப்பான இடம் – “வீடு” என்கிற அடிப்படை நம்பிக்கையைக் கொண்டிருக்கின்றவை – அவ் எண்ணத்தை தொடருகின்றவை. இதன்படிக்கு, அவர்கள் வெளியில் வராது இருத்தல் எவ்வளவுக்கெவ்வளவு சாத்தியமோ அவ்வளவுக்கவ்வளவு அவர்கள் வீட்டில் பாதுகாப்பாய் இருப்பார்கள். பேசாமல் வீட்டினை ஒரு பங்கர் போல கிண்டி பாதுகாப்பாய் இப் பெண்களை குழந்தைகளை நாளை பாதிக்கப்படப் போகிறவர்களை ஆபத்திலிருந்து மறைத்து வைத்திருக்கும் இடமாய் ஆக்கிவிட்டால் என்ன? இப்படியான தீர்வுகள்தான் இருக்கும்.

இதற்கு முரணாக வருடாவருடம் மனிதர்கள் வீட்டை விட்டு ஓடுகின்றனர். சர்வ பாதுகாப்பு நிறைந்ததாக சொல்லப்படுகிற குடும்பங்களிலிருந்து தெருக்களில் வாழ்வதை அவர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள், தேர்ந்தெடுக்க தள்ளப்படுகிறார்கள். பொருளாதாரம், சமூகநலன்புரி திட்டங்களின் போதாமை வீடற்ற நிலைக்கான புறக் காரணங்கள் எனில், குடும்ப வன்முறை பாதுகாப்பற்று வீட்டினுள் வாழ முடியாமைக்கான முதன்மைக் காரணமாக இருக்கிறது. கனடாவில் ஒரு அறிக்கையின்படி 235,000 இற்கும் மேற்பட்ட மக்கள் வருடாவருடம் வீடற்றநிலையை அடைகிறார்கள். இதில் சிறுவர்களும் அடக்கம் (The state of homelessness in Canada, 2016).

இதை மனங்கொண்டால், பாதுகாப்பானது என நம்பப்படுகின்ற அந்த வீடுகள் பாதுகாப்பற்றவை எனில் தனதந்த வீட்டிலிருந்து ஒருவர் எங்கு தப்பிச் செல்வது என்கிற கேள்வி பாதுகாப்பு குறித்த – அனர்த்தத்தை தவிர்க்க வீட்டில் இருந்திருக்கலாம் என்கிற கதைகளின் – அபத்தத்தை அவரவர் முகங்களில் அறையக்கூடும்.

லிவ்விங்ஸ்மைல் வித்தியாவின் ஒரு கவிதையொன்று. முழுமையாக அக் கவிதை சாலையோர வீடுகள் குறித்து வியக்கும் ஒருவரது மனநிலையை ஏக்கத்தை பேசுகின்ற கவிதை. ஆனால் அதில் திடீரென்று இப்படியொரு வரியை அவர் எழுதியிருப்பார்: அவ்வீடுகளில் “துறுதுறு குழந்தைகள் பாதுகாப்புடன் இருக்கின்றனரா?” பயணத்தில் இலகுவாய் செல்வதற்கு, வாகனத்திலிருந்து இறங்கி நேரே நுழைவதற்கு, இனிமையுடன் தன்னை அழைக்க சாலையோர வீடொன்று தனது நண்பர்கள் யாரதாவும் இருக்கக்கூடாதா எனக் கவிஞர் ஏங்குகிற அத்தகைய வீடுகளில் அவற்றின் பாதுகாப்புக்கு என்ன குறைந்து விடக் கூடும்? திரைப்படங்களில், வீட்டு விளம்பரங்களில் அம்மா-அப்பா-இரு குழந்தைகள் எனக் காட்டப்படுகிற அழகிய குடும்பங்களில் குழந்தைகளின் பாதுகாப்புக்கு என்ன வந்தது? ஆனால் வியந்தவண்ணம் சாலையோர வீடுகளைப் பற்றிப் பேசுகிறபோதும் அது கவிதைசொல்லிக்கு சிறிது உறுத்துகிறது. அவ் வரியை அவ்விடத்தே செருகிவிடத் தோன்றுகிறது.

ஏன்? இதை எழுத்தாளரின் உள்ளுணர்வு எனலாமா?

‘மழை ஏன் வந்தது” (நிரூபா, “சுணைக்குது” (2005) என்கிற கதையில் ஒரு சிறுமி உறங்கப் போகிறாள். ஒரு மழைநாளில் தனது வீட்டு விறாந்தையில் அவள் தனது அம்மாவின் அருகில் துரே அப்பா அண்ணா மாமா என உறவுகள் படுத்திருக்க உறங்குகிறாள். வீட்டின் கதவு பூட்டப்பட்டிருக்கிறது. இடையில் அவளது உடலை அத்துமீறத் துணிகிற நபர் அங்கு படுத்திருக்கிற ஆண்களில் யாராகவும் இருக்கலாம் என்பது பேரச்சமூட்டும் யதார்த்தமாக அச் சிறுமிக்கு இருக்கிறது.

இந்தக் கதை குடும்பம் என கட்டப்படுகிற ஜனரஞ்சகக் கதைகளில் நாம் தினமும் வாசிக்கின்ற ஒன்று கிடையாது. அனேகமான கதைகளில் குடும்பம் வன்முறையாளர்களை பாதுகாக்கின்ற பங்காளியாகவே (complicit) அங்கு நிற்கும். எப்படி பாலியல் வன்முறைகளில் ஈடுபடுகிற இராணுவத்தினன் ஒருவன் இராணுவ கட்டமைப்பால் காப்பாற்றப்படுவானோ அதேபோல குடும்பங்களில் சிறுவர்கள், பெண்கள் மீதான வன்முறைகளை இழைப்பவர்கள் குடும்பங்களுள் இன்றியமையாதவர்களாக இருப்பதால் அவற்றை பேசாதிருக்குமாறு பாதிக்கப்பட்டவர்களே வேண்டப்படுவார்கள்.

இதனால் “நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்” மற்றும் குடும்பப் பாடல் தமிழ்சினிமா போற்றுதல்களை மீறியும் வெளிப்படையாகவோ அன்றில் நாசுக்காக.. மிக மிக நாசுக்காக… குடும்பங்களது வன்முறை சிறுபான்மையினரின் பிரதிகளில் பேசப்பட்டே வந்திருக்கிறது. பாலினய் சிறுபான்மைகளைப் பொறுத்தவரை புனைவுகளாகவல்ல மிக நெருக்கமாக வன்முறைகளை கண்டறிந்ததால் வந்த கவனத்திலிருந்து அவை பிறக்கின்றன.

குடும்பம் என்கிற அலகு உலகின் எந்த பண்பாட்டிலும் உடைக்க முடியாத அரண்களுடன் தாக்கம் செலுத்தும் பெரு நிறுவனமாய் நீண்டநெடுங்காலமாக போற்றிப் பாதுகாக்கப்படுகிறது. பிற்போக்குவாத குரல்கள் எழுகிற ஒவ்வொரு காலங்களிலும் ஒரு தேவாலயத்தைப் போலவும் ஒரு அரசாங்கத்தைப் போலவும் தனது பாத்திரத்தின் இடத்தை குடும்பமும் – புதிய சட்டங்களூடே சிறிதளவில் அவ்வவ்போது தன்னைத் தளர்த்திக்கொள்கிறபோதும் – அசைக்கமுடியாத ஆதிக்கத்தை எமது சமூகங்களின் சிந்தனைகளில் அது செலுத்துகிறது. தேசங்களை போர்களை கொண்டுசெல்ல ஒரு கட்டுப்படுத்தப்பட்ட இனஉற்பத்தி நிறுவனம் தேவை ஆகையால் அக்கட்டுப்படுத்தப்பட்ட அமைப்பாக குடும்பம் செயற்படுகிறது. புதிய மாற்றங்கள் எனில் இன்றைய நவீன குடும்பம் தனியே ஆண்-பெண் மாத்திரம் கொண்டதல்ல என்பதே. பால்புதுமையினரைக் கொண்ட குடும்பங்கள், பல்கலாச்சார கலப்பினைக் கொண்ட குடும்பங்கள். ஆகையால் வன்முறை தனியே பாதிக்கப்பட்டவராய் பெண்களை மட்டும் கொண்டதுமல்ல. இங்கே இந்தக் ஒற்றைத்தன்மையற்ற குடும்பங்களுள் யாராலும் வன்முறை இயற்றப்படலாம், ஏனெனில் வன்முறை அதிகாரம் சார்ந்தது, அது யாரிடம் அதிகாரம் உள்ளது என்பதால் தீர்மானிக்கப்படுவது. உறவுப் படிநிலையில் எவர் உயர் நிலையில் இருக்கின்றார் என்பதைப் பொறுத்ததும், இன்னொருவரை தனது அதிகாரத்தின்கீழ் ஒடுக்க விழையும் மனநிலையிலிருந்து வருவதும்.

Our bodies are filled with histories and identities, which overflow into the spaces between us. Histories and identities that change the way we look at each other and the way we look into the mirror. Together, we self-construct and self-destruct our bodies.

டexie Bean
The state of homelessness in Canada, 2016

2.

லெக்ஸி பீன் (LEXIE BEAN) இனால் தொகுக்கப்பட்ட __portable homes__ நூலின் தொகுப்பாளர் “நாம் பாதுகாப்பானதும் நெருக்கமானதும் என நினைக்கின்ற இடத்தினுள் நிகழ்கின்றவையே குடும்ப வன்முறை” என வரையறுக்கிறார். குடும்ப வன்முறைகளைக் கடந்து வந்தவர்களது படைப்புகளைத் தாங்கும் நூல், சுவாரசியமான வகையில் இது குடும்ப வன்முறைகளிலிருந்து தப்பியவர்கள் – உளரீதியாகவோ உடல்ரீதியாகவோ பாதிக்கப்பட்ட அல்லது தமக்கு உதவிய – தமது உடல் உறுப்புகளுள் ஒன்றைத் தேர்வு செய்து அதற்கு எழுதிய கடிதங்களைக் கொண்டதாய் அமைந்திருக்கிறது.

இந்த நீண்ட வாழ்வில், உடல் ஒவ்வொருவருக்கும் என்னென்னவாக எல்லாம் இரு(ந்திரு)க்கிறது?

கால்கள் இருக்கின்றன எனில், அவை வன்முறையிலிருந்து ஓடுவதற்கான வலுவை தந்திருக்கின்றன. பொருளாதாரரீதியாக வன்சூழலுள்ளேயே தங்கியிருக்க செய்யும் வறுமை அவ் வன்முறைக்குள்ளேயே வாழச் சொல்லுமானால், தாங்கிய வன்முறையால் உயிர் போகாதிருக்குமெனில், குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு மூளையானால் எமது நோவை மரக்க (numb) செய்துவிடுகிறது. உண்மையில் சக மனிதர்களைவிட உடல்தான் முதலில் வன்முறையை எதிர்த்து நிக்கிறது. எமது சமூகங்களில் வீடுகளுள் “சகித்துப் போ” “நெடுக அடிக்கிறதில்லைத்தானே’ இப்படியாய் சப்பைக் கட்டும், நிகழும் வன்முறைகள்மீதான இடையீட்டை செய்யாதவர்களைவிட உடல் உயிரைத் தாங்குகிறது, தக்கவைக்க போராடுகிறது.

வீட்டு/குடும்ப வன்முறை தமது வட்டங்களுள் நிகழ்ந்தாலும் அது குறித்த அனேகமானவர்களது நிலைப்பாடு “அது தனிப்ட்ட அவர்களது குடும்ப விசயம்” என்பதே ஆகும். உடல்ரீதியானவை மட்டுமன்றி உளவியல்ரீதியாகவும் நிகழும் குடும்ப வன்முறைகள் தனியே பாதிப்பது வன்முறைக்குள்ளாகிற ஒருவரை அல்ல. அது அதை எதிர்கொள்கிற அனைவரையும் பாதிக்கிறது. அதனால்தான் ‘குழந்தைகளுக்காக குடும்பத்துள் இருத்தல்” ‘பிள்ளைகளுக்கு அப்பா/அம்மா வேணும்” என்கின்ற வாதங்கள் இன்று அடிபட்டுப் போயிருக்கின்றன. பிள்ளைகளுக்குத் தெரியாமல் என நினைத்து இரவில் தலையணையுள் தம் முகத்தை அமத்தி அழுத பெற்றவரின் விம்மல்களை கேட்ட பிள்ளைகள் வழித்தடங்களை அழிவை நோக்கிச் செலுத்தியிருக்கிறார்கள். உடலின் காயங்கள் மாத்திரமல்ல சந்தோசமற்ற இரு மனிதர்களின் சேர்ந்திருத்தல், அதன் சிறு சிறு சமிக்ஞைகளை எந்த பெரிய மனிதர்களையும் விட பிள்ளைகள் அறிவார்கள். சிலவேளை ஒத்துப்போகாத இரு பெற்றோருக்குள் அவர்களுக்குள் மாறி மாறி கதைகாவி தந்திரங்கள் செய்து தமது தேவைகளை பூர்த்திசெய்பவர்களாகவும் (அப்படிச் செய்ய பெற்றோரால் பழக்கப்படுத்தப்பட்டவராகவும்) அதன் உளவியல் பாதிப்புகளாக பின்னாளில் அதையொத்த உறவுகளில் தேர்கிறவர்கள் தங்கிப் போகிறவர்களாகவும் அவர்களை ஆக்கவும் செய்யும், வேறெந்த நன்மையையும் அல்ல.

இந்த நூலின் பிரத்தியேக அம்ச்களில் ஒன்று பாலின சிறுபான்மையினர்/பால்புதுமையினரும் இதில் பங்களித்திருப்பதே. இது மிக முக்கியமானது. ஏனெனில் வன்முறை தனியே குறிப்பிட்ட குழுவின் இயல்பு அல்ல. அளவுகள் மாறுபடுமே தவிர ஒடுக்குபவர்கள், ஒடுக்கப்படுபவர்கள் சகலரும் ஏதோ ஒரு வகையில் இதை எதிர்கொண்டே இருப்பர். (Abuse is about power).

அதேபோல இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம் குறைந்த வருமானத்தினுள் வாழும் சமூகங்களிலிருந்து வரும் குரலும் உள்ளடக்கப்பட்டுள்ளது. வறுமை காரணமாகவும் உடல்சார் எல்லைகள்/இயலுமைகள் மட்டுப்படுத்தப்பட்டநிலை காரணமாகவும் வன்முறைச்சூழலிருந்து ஒரு பாதுகாப்பான இடத்துக்குச் செல்ல முடியாத நிலையிலிருப்பது அந்த சமூகங்களே.

இந்த நூலில் வன்முறையால் பாதிக்கப்பட்ட சிறு பிள்ளைகள் மற்றும் பெரியவர்கள் அனைவரும் தமதொரு உடலுறுப்புக்கு எழுதியவை,

“இந்த நூலினை பாதியில் வைக்கவோ

மீண்டும் அதை எடுத்துப் படிக்கவோ

யோசிக்காதீர்கள்.

இது கனதியான நூலல்ல,

மாறாக வன்முறையிலிருந்து தப்பியவர்கள் மனதை இறக்கி வைக்க ஒரு இடம்”

(““Do not be afraid to put this book down. Do not be afraid to pick this book up. This book is not heavy, but a release for those who have survived.”) என்கிற முற்குறிப்புடன் தொகுக்கப்பட்டிருக்கின்றன.

காணாமல்போன புன்னகைக்கு எழுதுகிறபோது,

“எனது புன்னகைகளே எங்கே போனீர்கள். மறுபடி எப்போது வருவீர்கள்” என்றும்;

விருப்பமற்ற, அத்துமீறும் தொடுகைகளை குறிப்பிட்டு,

“என் பெண் உறுப்புகளே – நீங்கள் வன்முறையை எதிர்கொண்டபோது இன்பத்தைத் துய்க்கும் என் வேட்கையும் ஆமையென சுருங்கிப் போயிற்று, அச்சத்தில்” எனவும்; எழுதும் குரல்களூடே கருமுட்டைக் குழாய்களை – அதன் பரிசுகளுக்குப் பயந்து

அகற்றிய பெண்ணையும் இக்கடிதங்கள்வழி அறிகிறோம். மேலும், குழந்தைகளுக்காக உறவில் இருந்தவர்கள். இருந்த உறவில் விருப்பமற்று பாலியல் வன்முறைக்குள்ளானவர்கள்… திரும்பிப் பார்த்து தமது பிழைத்திருத்தலை உறுதிசெய்தவற்றை நினைவுகூர்கிறார்கள்…

நெருக்கமான உறவுகளுக்கிடையில் வற்புறுத்தப்படுதல் ஊடாக நிதமும் நிகழும் வல்லுறவுகள் உட்பட அவற்றின் நுண்அரசியல்களுடன் பேசப்பட்டிருக்கிறது.

வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் தம்மீதான வன்முறையானது தமது தவறு, தாம் தமது தவறுக்கான தண்டனையாக அதைப் பெறுவதாக அதன் சூத்திரதாரிகளால் நம்ப வைக்கப்படுதலே அதன் குரூரமான இருப்பு ஆகும்.

அந்த நம்பவைப்பிலிருந்து மீண்டவர்கள் தமது இடது முழங்காலிடம், முலைகளிடம், முன்-கைகளிடம், தம்மை தாங்கும் அதிவிசேட பாதங்களிடம் பேசிக்கொள்கிறார்கள். அவை ஏனைய எவற்றையும் விடவும் அவர்களுக்கு வன்முறையைத் தாங்க இன்றியமையாதவையாக இருந்திருக்கின்றன.

இக்கடிதங்களை ஒருசேரப் படிக்கிற வாசகர்களிடத்தில் இவை எந்த அலைகளையும் ஏற்படுத்தாதும் போகலாம். இந்நூலின் நோக்கமே எழுதியவர்களது பாரத்தை இறக்கிவைத்தலை பிரதானப்படுத்தியதாக இருக்கிறது. போர்ச்சூழல் உட்பட வன்முறையின் பலதளங்களைக் கட

ந்தவர்களுக்கு வடிகாலாக வலிகளை எழுதித் தீர்த்தல் என்பதற்காக ஒரு இடமும் எவ்வளவு அவசியமானது என்பதை உணர்த்துகிறது.

உங்களுக்கு என்ன தோன்றுகிறது? வன்முறை மிகுந்த கடந்த காலத்தை கடந்தவர் எனில்

நீங்கள் உங்களின் எந்த உறுப்புக்கு எழுதுவீர்கள்?

என்ன கூறுவீர்கள்?

நன்றி?!

Posted on: December 26, 2021, by :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *