சரண்யா கவிதைகள்

வருத்தமில்லை


உறவுக்கான நம்பிக்கைகள் அனைத்துமே 
சாகடிக்கப்பட்டு விட்டன. 
பொய்கள் ஊற்றி வளர்க்கப்பட்ட உறவு மரம் 
வெந்து கருகிவிட்டது
மீண்டும் 
நீண்டு மலர்ந்த கனவுகள்
நொடிப் பொழுதில் மறக்கடிக்கப்பட்டது. 
மனிதநேயம் 
உயர் சிந்தனை 
நுண்ணிய உணர்வு 
எல்லாமே வெறும் வார்த்தைகளாகி
உண்மை அர்த்தங்களை இழந்து
வேறு வடிவத்தில் நட(ன)மாடுகிறது
உறவுக்கான அகராதி 
உனக்கும் எனக்கும் 
வேறு வேறு அர்த்தங்களையே காட்டுகிறது, 
புரிகிறது. யாரை நோவது? 
0


அதுவரை


தேவையற்ற காகிதமாய் சுருட்டி எறிந்து விட்டாய்
குறி தவறியதால் 
குப்பைக் கூடைக்குள் போகவில்லை,
தவறிய குறிக்கு நன்றி
அல்லது உனது நிதானமின்மைக்கு. 
இயந்திரத்துக்குள் போய் உருக்குலைந்து
உருவிழந்து வராதது உன்னால் தான். 
இன்று பெருவெளியில் நான்
எவன் காலுக்குள்ளும் மிதிபடவில்லை,
அழியவில்லை.
வெளிக்காற்றின் அதிவேகத்தில்
அடிபட்டுச் சுழல்கிறேன், பறக்கிறேன்.
வேகக் குறைவில் 
காற்றின் அமைதியில்
காலத்தின் மாற்றத்தில்
மீண்டும் தரைக்கு வர
தனிமையிலோ எவரின் பிடிக்குள்ளோ.
அதுவரை
சுதந்திர வெளியில்
சிட்டுக் குருவியாய். 
0


விதவை

எழுத்து இலக்கம் தெரிந்து
ஆசையாய் வைத்த பெயரை
விதவையாய் கைம்பெண்ணாய் 
மாற்றியது யார்? 
எட்டுப் பொருத்தம்,
சுப நேரம், மந்திரங்கள் எல்லாம்
அதன் விளக்கங்கள் போல் 
இல்லாமலே போயிற்று
எப்போதோ வரும் முதுமையை
ஒளவையார் போல்
இப்பவே
இருபத்தெட்டு வயசிலையே
வலிந்து 
வரமாய்க் கேட்கிறேன். 
ஆண் நட்பு, உடுத்தும் உடை, 
இயல்பான சிரிப்பு
எல்லாமே வேசைத்தனமாம்...
தாரமிழந்தவள் - தரமிழந்தவள்
அகராதிப் பொருளும் திரிபடைந்ததே(ன்)
வக்கிரங்களையும்
விரசங்களையும்
நெற்றிப் பொட்டிலும் கட்டும் சீலையிலும் 
ஒளித்து வைக்கும் 
கலாச்சாரப் போர்வைகள்.
திருமணம், கொண்டாட்டம், 
முன்னின்று நடத்தியவள்
முழுவியழம் கெட்டுவிடும் 
முன்னுக்கு வந்தாலே.

எந்த மாற்றமும் இல்லாமலே 
எனக்கு 
எத்தனை கேலிகள், கேள்விகள்
வசைகள், திணிப்புக்கள்,
ஆணென்றால் மறுமணம் 
கணமும் சாவது பெண்களா? 
முஸ்லிம் பெண்ணானால்
மதமே வழிவிடும், மறுமணத்திற்கு.
மனித தேவையை மறுக்கும்
எனது மதம் எதற்கு? 
இளமை உணர்வை 
தனிமைத் தகிப்பை
உடலின் வேதனையை
யார் கேட்பார், எவர் தணிப்பார்? 
ஒரே நாளில் ஒரு பெண் மரத்துப் போவாளா? 
எல்லாம் மறந்து போவாளா...
0

புகைப்படம்: கௌசலா

Posted on: April 7, 2022, by :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *