சிறுவர் கதைகளும் சமூகநீதியும்

[Children’s Literature and Social Justice]

அறிமுகம்

எமைச் சூழவும் அனேகமான வன்முறைகள் குழந்தைகள், சிறுவர்களுக்கு எதிராக நடக்கின்றபோதும் செய்திகளாக அவர்கள்மீதான நினைக்கவியலா கொடுமைகளை நாம் அறிகின்றபோதும், ‘சிறுவர்கள் மிக மென்மையானவர்கள்-முதிர்ச்சியற்றவர்கள்’ என்றும் ‘கடினமான, துயரமானவற்றை அவர்களுடன் பகிரக்கூடாது’ என்பதும் பொதுவெளியில் தொடர்ச்சியான நம்பிக்கையாக இருக்கிறது. இதற்கு எதிர்மாறாக, குடும்பங்களுள் நடக்கிற சண்டைகள் – வெளிப்படையானதான உடல்வன்முறைகள் மட்டுமன்று அல்லாத உளவியல்ரீதியானவற்றையுங்கூட மெய்யுணர்கிறவர்களாக சிறுவர்கள் இருக்கிறார்கள். இரவில் தலையணையில் முகமழுத்தி வெளியில் கேட்காது அழுகிற தாயின் விசும்பலை அவர்களால் அதையாற்ற தங்களால் எதுவும் செய்யவியலாத இயலாமை தாக்க கேட்க முடியும். வீட்டில் பெற்றோர் ஓரொருவரின் சுயமதிப்பை தூற்றும் சொற் தகராறுகள் சிறுவர்களதும் சுயமதிப்பை வாழ்வு குறித்ததான பார்வையைப் பாதிக்கவே செய்யும்.

பயிர்ச்செய்கையில் பூச்சியைக் கொல்லும் கிருமிநாசினிகள் தம் உணவை எதுவும் செய்யாதென நம்ப வைக்கப்பட்டதுபோல, ஒரே கூரையின் கீழ், தம் நடத்தைகளில் தெறிக்கும் வன்முறையின் விசத்தன்மை தம் பிள்ளைகளை தாக்காதென்று பெற்றோர்கள் நம்புகிறார்கள். பிள்ளைகளால் உணரக்கூடிய தூரத்துள் எல்லாமே நடந்துகொண்டிருக்கையில் பெரியவர்கள் இருந்து கேட்கிறார்கள்: சிறுவர்களிடம் நாங்கள் எதைச் சொல்லலாம்?

சிறுவர்களாகிய அவர்களும் இந்த உலகத்தைச் சேர்ந்தவர்களே எனில் இந்த உலகின் அனைத்து கூறுகளையும் அறியும் தகுதியும் அவர்க்குண்டு. அது – அவர்களது மொழியில் புரிகிற வகையில் – சொல்லப்பட வேண்டியது என்பதே ஒரே நிபந்தனையாக இருக்கும். அவர்களது உலகுள் செல்வதற்கும் அவர்களது மொழியில் சொல்வதற்கும் – பள்ளியில் சொல்லிக்கொடுத்தாலும் வீட்டில் அவை தொடர்பில் கேட்கப்படுகிற கேள்விகளுக்கு பதிலுறுக்கவும் – உரையாடலைத் தொடரவும் பெரியவர்களுக்குத்தான் பொறுமையோ நேரமோ இல்லை. ஆதலால், சிறுவர்களுக்கு பாலியல் கல்வியா? வேண்டாம். இனவாதம் பால்வாதம் பற்றிய கல்வியா? திருநர்கள் குறித்தா? வேண்டாம். அவை அவர்களை அடையாளச்சிக்கலுக்குள் தள்ளிவிடும். குழப்பிவிடும். இவ்வாறு சொல்லி நகர்வது இருப்பதில் இலகுவான தேர்வாகி விடுகிறது.

வாழ்வதற்கான பொருளாதார நெருக்கடிகள் நெருக்கும் காலம் சவால்கள் நிறைந்ததே. உடலின் சக்தியை வேலையில் இழந்தவர்களாக உழைக்கும் வர்க்கப் பெற்றவர்கள் பிள்ளைகளை வளர்ப்பதும் களைப்பூட்டக்கூடிய பெரும் வேலையே. குறிப்பாக தனித்தாயாய் தனித்தந்தையாய் பிள்ளைகளை வளர்க்கும் ஒற்றைப் பெற்றோர் இரட்டிப்பு உழைப்பை வீட்டிலும் வெளியிலும் செய்ய வேண்டிய நிலையும் இருக்கிறது. பொருளாதாரம் உள்ளிட்ட அத்தகு அழுத்தங்களுடன் ஓடுகிறவர்கள் விழித்துப் பார்க்குமுன் பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களாகி விடுகிறார்கள். அவர்களது வளர்ச்சியில் தகுந்த இடையீடுகளுக்கான நேரத்தை பொருளாதார தேவைகள் தடுத்துவிடுகின்றன.

அத்தியாவசியமற்ற பொருட்கள், பரிசுகள் பிள்ளைகளுடன் செலவளிக்க முடியாத நேரத்திற்கான குற்றஉணர்வின் மாற்றீடாகுவதும், இரண்டு மூன்று வேலைகளுடன் எவ்வளவு கஸ்ரப்பட்டு வளர்த்தும் ஏன் தமது கஸ்ரம் தெரியாதவர்களாக அவர்கள் வளர்ந்துவிடுகிறார்கள் என வருந்துகிறதுமாய் வாழ்வு நகர்ந்துவிடுகிறது. உண்மையில் தாம் கஸ்ரப்பட்டதால் தம் பிள்ளைகளை கஸ்ரம் தெரியாமல் வளர்க்கிற தன்மை அதிகமதிகம் உண்டு. பெற்றோருடைய வேலையின் மதிப்பு, அவர்கள் வீட்டிலும் வெளியிலும் செய்கிற வேலையின் மதிப்பு என்பன பிள்ளைகளுக்கு வீட்டில் பொறுப்புகள் கொடுக்கப்பட்டு வளர்க்கப்படுவதூடாகக் கடத்தப்படுகிற ஒன்று. அவர்கள் வாங்க நினைக்கிற ஒரு அத்தியாவசியமற்ற விளையாட்டுப்பொருள், அதன் பெறுமதி, தமது பெற்றோரின் எத்தனை மணித்தியால வேலை என்பது முதல் வீட்டின் மாத வருமானம், செலவு வரை பிள்ளைகளுடன் சிறு வயதிலேயே எளிய கணக்குகள் ஊடாகப் பகிரப்படுகிறபோதே தாம் வளர்கிற சூழல் தொடர்பான அறிவை கொண்டவர்களாக, அதை விளங்குகிறவர்களாக, உழைப்பை மதிப்பவர்களாக அவர்கள் வளர முடியும்.

சொல்லுவது இலகுதான் என்றாலும், உழைக்கும் வர்க்கத்தினருக்கோ தினமும் மாறும் உலகின் புதுப்புது இழைகள் அவர்தம் பிள்ளைவளர்ப்பை பெரிதும் பாதிப்பவை. பூதாகரமாய் வளரும் வெறுப்பு அரசியல் (hate politics), இணையத்தின் ஆதிக்கம், அதற்கே உரிய கசடுகள், அவற்றின் மாறும் தன்மைகள் காரணமாக புதிய தலைமுறையைச்சேர்ந்த பெற்றோரால் கூட ஈடுகொடுக்க முடியாதபடி தம்மை தினம் புதுப்பித்துக்கொள்கின்றனவாய் இருக்கின்றன அநீதியைச் சாரும் சக்திகள்.

ஈழத்திலிருந்து இப் பூர்விகர் நிலத்துக்கான பெற்றவர்களது நீண்ட பயணத்தின் தடங்களை – தாம் வந்த வரலாற்றினை – அறியாதிருத்தல் ஒரு முழுமையற்ற தலைமுறையைத் தான் விட்டுச் செல்ல முடியும். குறிப்பாக சிறுபான்மை இனங்களாக, ஒவ்வொரு இனங்களினதும் வரலாற்றுக் கதைகள் அடுத்த தலைமுறையிடம் கடத்தப்படுவதும், பகிரப்படுவதும் பிரதானமானது. இங்கு கூறுவது முதல் வந்த மூத்தகுடி பெருமைக் கதைகளை அல்ல. அவையவை ஓர் இனமாக எதிர்கொண்ட அநீதிகளை அடக்குமுறையின் ஆழங்களைக் கூறும் கதைகளையே பகிருதலே தேவை.

கனடா போன்ற நூலகம் போன்ற பல இலவச வளங்கள் இருக்கக்கூடிய நாட்டில் அவற்றைப் பிள்ளைவளர்ப்பில் பயன்படுத்திக்கொள்வதுடன் எமது சூழலின் அரசியல்கள் தொடர்பில் நாமும் எம்மைப் புதுப்பித்துக்கொள்வதும் இயன்றளவு பிள்ளைகளுடன் தொடர் உரையாடல்களில் ஈடுபடுவதும் அதூடாகப் சுற்றியிருக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அக்கறை கொண்ட இச்சமூக மனிதர்களாக அவர்களை வளர்த்தெடுத்தலில் பங்குகொள்வதும் முக்கியமானது. இன்றும்கூட தானாய் எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யேதான், நாம் எப்படி அவர்களை வடித்தெடுக்கிறோமோ (modeling) அப்படித்தான் பிள்ளைகளும் வடிவம் பெறுவார்கள். வளர்தலில் பெரியவர்களின் நேர்மறையான இடையீடு அற்றுப் போகிறபோது வரலாறு தெரியாது சமூக அக்கறையற்ற தன்னலமான அரைஉயிர்களை உற்பத்திசெய்கிறவர்கள் ஆகிறோம். இப்படி வளர்கிறவர்கள், தாம் அன்றாடம் எதிர்கொள்கிற அவர்களுக்கெதிரான விடயங்களைக்கூட அடையாளங் காணத் தெரியாமலும் உருவாகுகிறார்கள்.

வளரிளம் பருவத்தினருடன் வேலைத்தளங்களில் இயங்குபவர்கள் ஒரு குறிப்பிட்ட முதிர்ச்சியான பருவத்தை அடைகிற பிள்ளைகள் தமது அடையாளங்களைத் தேடுவதும் அவைதொடர்பான வளங்களை வேண்டி நிற்பதையும் எதிர்கொண்டிருக்க முடியும். அங்கே அவர்களுடன் பகிரப்படுவது பெரும்பாலும் (சாதியம் போன்ற) பெருமைக்குரியன அல்லாத வெட்கப்படவேண்டிய கூறுகளே.

அவற்றைப் புறந்தள்ளிப் பார்ப்போமானால், எமது வாழ்வே கண்ணுக்குப் புலப்படாத பல அரசியல்களின் சங்கமம் என்கிறபோது ஒடுக்கப்பட்டவர்கள் அதற்கு அடங்கமறுத்தவர்கள் தமது கதைகளை அடுத்த தலைமுறைகளிடம் எவ்வாறு எடுத்துச் செல்வது? தம்மீதில் அழுத்தப்பட்ட வரலாற்றின் அநீதிகளை, இனப்படுகொலை அல்லது ஆணவக்கொலையை சிறுவர் உளவியலைப் புரிந்துகொண்டு எங்ஙனம் விளக்குவது? தமழர்களிடமும் ஊறித்திளைக்கும் இனவாத, சாதீய, கொடுமைகளை சமூக வேற்றுமைகளைப் பற்றி அவர்கள் புரிந்துகொள்ளத் தேவையில்லையா? அவற்றை எல்லாம் களையெடுத்து எறியாமல் ‘பின்னர் புரிந்து கொள்ளட்டும்” என விட்டுவிடலாமா?

கக்கூஸ்” (2017) என்கிற ஆவணப்படம் இந்தியாவில் துப்பரவு தொழிலாளர்களாக இன்றைக்கும் கையால் மலம் அள்ளும் நிலையில் வைக்கப்பட்டிருக்கிற மனிதர்களைப் பற்றியது. அத்தொழில் தொடர்பிலுள்ள அரசாங்கத்தின் அலட்சியத்தை, அதை செய்யும் ஒடுக்கப்படும் சமூகத்தினர் ஒரு அரசாங்க வேலைக்குரிய சலுகைகளைத் தானும் பெற முடியாமல் ‘பதில்ஆள்’களாக இடைத்தரகர்களால் அமர்த்தப்பட்டிருப்பதுமென பல பரிமாணங்களில் சாதிய அடக்குமுறைகளை அழுத்தமாகப் பேசிய ஆவணம். இத்தகைய படங்களில் பேசப்படுகிற விடயம் பெரியவர்களுக்கானது எனில், அத் தொழிலாளர்களின் குடும்பங்களைச் சேர்ந்த – அவற்றை கண்டு வளர்கிற சிறுவர்களை அது பாதிப்பதில்லையா? மேலும், குழந்தைத் தொழிலாளர்கள் குறித்தும் பாலியல் தொழிலுக்காகக் கடத்தப்படும் சிறுவர்களை வைத்தும் ஆவணப்படங்கள் உள்ளன; பலவும் பெரியவர்களது மனநிலையையே குலைக்க வல்லவை. அதனால் சிறுவர்களுக்கு கனதியானவையென தவிர்க்கப்பட வேண்டப் பட்டால், நாம் வாழும் இந்நிலத்தின் பூர்விகக் குடிகள் மீது நிகழ்ந்த இனப்படுகொலை வரலாறு குறித்து, சமகாலத்தில் காணாமற் போகும் பூர்விகக்குடிப் பெண்கள் பற்றி – சிறுவர் துஸ்பிரயோகத்துக்குள்ளாகுவது பற்றி – தேவாலய வளாகங்களில் இன்னமும் தோண்டப்படவேண்டிய சிறுவர் புதைகுழிகள் பற்றி யோசிக்க வேண்டும். எதைத் தவிர்க்கலாம்? எதைப் பகிரலாம்?

இந்த வடிகட்டல் எதிர்பார்ப்பு அத்தகைய அடக்குமுறைகளைத் தினமும் எதிர்கொள்ளுபவர்களுக்கு வெளியில் நின்று வருவது. இப் படங்களை எடுத்துவிட்டு அச்சூழலிலிருந்து அகன்றுவிடக்கூடிய படப்பிடிப்பாளர்களைப் போலவே, அடக்குமுறைகளை தவிர்க்க முடிகிற இடத்தில் இருக்கிற, ஒரு வெளியாளுக்குரிய சலுகையைக் கொண்டுள்ளவராய் (Outsider Privilege) ஒரு சாரார் இருக்க முடிவதையும் இப்போக்கில் காணலாம். அந்தக் குறிப்பிட்ட சாராரைப் போலன்றி சமூக ஏற்றதாழ்வுகளால் பாதிக்கப்படுகின்றவர்களுக்கு – அவர்கள் சிறுவர்கள் என்பதால் ‘சலுகை” காட்டப்படுவதில்லை. பாதிக்கப்படுவதும்கூட சிறுவர்களாக இருக்கின்றபோதிலும், அவற்றுக்கு வெளியில் இருப்பவர்களால், தமது பிள்ளைகள் அப்பாதிப்புகளை அறிவதற்குரிய வயது எல்லை அற்றவர்கள் என முடிவெடுக்கப்படுகிறபோது, இன்னொரு புறத்தில் அவர்களது பிள்ளைகளை ஒத்த பிள்ளைகள், அதை தவிர்க்கவியலா சமூக பொருளாதார பொறிகளுக்குள் சிக்குண்டவர்களாக இருப்பதானது, ‘நமக்கென்ன, அது அவர்களது பாடு’ எனுவது போலவும் இருக்கிறது.

ஏதொருபட்ட சமூக ஒடுக்குமுறைகளை எதிர்கொள்கிறவர்களைப் போலவன்றி அதற்கு வெளியிலிருப்பவர்களாக (பாதுகாப்பான தெரிவுகளை செய்யக்கூடிய சலுகையைப் பெற்றவர்கள்) வெறும் பார்வையாளர்களாக மட்டும் இருப்பதும் ஒருவகையில் குற்றமே. அத்துடன் குழந்தைத் தொழிலாளர், வறுமை போலவன்றி சிறுவர்மீதான உடல், உள, பாலியல் துஸ்பிரயோகங்களிலிருந்து யாரும் தூரத்தில் இல்லை – எந்த வர்க்கத்தை சேர்ந்தவரும் (அஃதால் எச்சலுகை பெற்றவரும்) அதிலிருந்து தப்புவதில்லை. ஆதலால்தான் சிறுவர்களை அரசியல் நீக்கம் செய்து தமக்கு நேர்கிறவற்றைக் குறித்துப் பேச முடியாதவர்களாக அவர்களை முடக்கிவிடாது, நாம் சமூக அநீதிகள் தொடர்பாக – ஒவ்வொரு வயதுக்குத் தகுந்து பேசும் ஆக்கங்களை முன்வைத்து – குழந்தைகள் உட்பட அனைவருடனும் படிப்பதுடன் பகிர்வதுடன்தான் அவைக்கெதிரான செயற்பாடுகளில் ஒன்றிணைவதும் எதிராக சிந்திப்பதும் மாற்றத்தை வேண்டுவதும் சாத்தியமாகும்.

1 2 3 4

Images Courtesy: Scenes from the documentary film “Children Underground” [2001]

Posted on: June 18, 2021, by :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *