மாதவிடாய் இன்மை சில குறிப்புகள்
குன்னிமுத்து நாவல்
1.
தமிழக கேரள எல்லையில் அமைந்ததான நிலப்பரப்பில் நிகழ்ந்தவற்றை ஒரு காலகட்டத்தின் பதிவாக மனித மனங்களின் உள்ளேயும் அவர்களது பொது அரசியல் வெளியிலும் என அகமும் புறமுமாக பரந்து விரிந்து நகர்கிறது குமாரசெல்வாவின் ‘குன்னிமுத்து” நாவல் (2012, காலச்சுவடு). அந் நிலப்பரப்பில் இந்துத்துவாவின் எழுச்சி, பொதுவுடமை அரசியல், பெந்தகோஸ்து/மத அரசியல் என கதை நிலைகொண்டிருக்கிற பன்முக சூழலை உள்வாங்கி சுவாரசியமாக எழுதப்பட்டிருக்கிறது. குறிப்பாக கதைப்புலத்தின் நிலப்பரப்புக்குரிய பல்லாயிரம் வழக்குகள், ரசிக்கத்தக்க உவமைகளுடன் நாவலில் தமிழ் முழுமையாக மலையாளம் போலவே தொனிப்பதும், நாவலில் பல இடங்களில் (ஓர் உதாரணமாக (இருமாமலிருப்பதற்கு) ) சீக்கரட் புகையிழுப்பதை ‘பூனை பாலைக் குடிப்பதுபோல” குடிக்கணும் என சொல்வது போன்ற தருணங்களில்) அவ்விபரணங்கள், எழுதுகிற விடயங்களை ரசித்து அவதானித்த கதைசொல்லியிடமிருந்து வருகின்றவை என்பதைக் வெளிப்படுத்தியதுடன் அவரது இலாவகமான மொழியின் சொற்செறிவை வெளிப்படுத்துவாக அமைந்திருந்தன.
எனினும் பிரதியில் பேசப்படுகிற புற அரசியலைப் பற்றியன்றி, அது பிரதானமாக கொண்டு சுழலும் பெண்ணின் பாத்திரப்படைப்பை அதன் அரசியலை முன்வைத்து சிலவற்றை இந்நூல் பேச உந்துகிறது.
மானுட இயக்கத்துக்கான மையமாம் உயிரை உற்பத்தி செய்யும் பெரும் சக்தியைப் பெண்ணுடல் கொண்டிருப்பதனால் அவர்தம் வாழ்வின் முக்கிய நிகழ்வுகளாக முதல் குருதி, மகப்பேறு, தாய்மை கொண்டாடப்படுகிறது. இதனால் அனேகமான சமூகங்களில் இவை கொண்டாட்டத்துக்குரியதாகுவது இயல்பே என்றாலும் உயிரியல்ரீதியாகக் கருவறையைக் கொண்டிருக்காதவர்கள் இந்த இனப்பெருக்கத்தை மையமாகக் கொண்ட உலகிற்கு உகந்தவர்கள் அல்லாதவர்களாகப் பார்க்கப்படும் வன்முறையும் இதன்கூடவே நிகழ்கிறது. இங்குதான் கருவறை இருந்தும் கர்ப்பமடையவியலாதவர்கள், கர்ப்பமடைவதைத் தம் தேர்வாய் கொண்டிராதவர்களை பொதுச்சமூகத்தல் இருந்து விலக்கி வைக்கும்/பார்க்கும் – அவர்கள் வெளிஆள்கள் ஆகும் – போக்கும் தொடங்குகிறது. அல்லது கருவறையைக் கொண்டவராக இருந்தும் அவளது உடலில் மாதாந்தம் குருதி வெளியேற்றம் நிகழாவிட்டால் அவள் என்னவாக ஆகிறாள்?
மாதவிடாய் இன்மை தொடர்புடையதாய் குழந்தை நட்சத்திரங்களாய் பிரபலமாயிருருந்த திரைநட்சத்திரங்களது மாதவிடாயைத் தள்ளிப்போட அவர்தம் பெற்றோரால் மருந்துகள் கொடுக்கப்படுவது பற்றியும் குடும்பங்களுள் ‘சாமத்தியப்பட’ பிந்தும் சிறுமிகள் குறித்தும் கிசுகிசுக்கள்வழி பெரிதும் கதைகள் உலாவிக் கேட்டதுண்டு. பாலகுமாரனின் நாவலொன்றிலும் கனவுநாயகியாகப் பிரபலமாகிவிட்ட நடிகை இன்னும் முதல் குருதி காணாதவளாக படைக்கப்பட்டிருந்தது ஞாபகம். குன்னிமுத்து நாவலில் முக்கிய கதாபாத்திரம் (நாவலாசிரியர் முன்னுரையில் குறிப்பிடுவதுபோல, சுந்தரியென்றோ வேறு பெயர்களோ இருந்தாலும், ‘வளமை இல்லாதவளுக்கு பெண் என்ற அந்தஸ்து இருக்கட்டும், மனித உயிர் என்ற அடையாளத்தை தரவே உலகம் மறுக்கிறது’ – இதனால்)- ‘இருளி’ என்பதே இறுதியில் பேராய் நிலைத்துவிட்ட – அப்படியாகப்பட்ட பெண்தான்.
எமக்கு குன்னிமுத்து என்றாலே எமது சிறுவங்களில் ஒருவித அச்சவுணர்வுடனும் ஈர்ப்புடனும் நாம் பின்கோடிகளில் பத்தைகளில் கண்டெடுத்த குண்டுமணிகள்தான் மனதில் நிற்கின்றன. கருஞ்சிவப்பில் கண்போல கறுப்பாய் ஒரு புள்ளியுடன்- காதுக்குள் போய்விடும் என அம்மா பயமுறுத்திய ஆனால் அதனழகில் நாம் தவிர்க்கவியலாது கவரப்பட்டு, பொறுக்க சொல்லும் அக் குண்டுமணிகள் இங்கு இருளிக்கு தகப்பனை இழந்தபோது அவர் கொல்லப்பட்டபோது தெறித்த குருதியைப் போலவும் ருதுவாகும் பெண்ணின் குருதியை – வளமையை – நினைவூட்டுகிறதாகவும் நாவலில் எழுதப்படுகிறது.
அவள் அனுபவிக்கும் ஒடுக்குமுறை என்பது – அவளது உடலை வைத்து நிகழும் – அவள் குறித்த முன்கற்பிதங்களும் அதன் பயனாக தவறாக நடத்தப்படுதலுமாகிறது. இங்கே என்றும் கருத்தரிக்க முடியாத பெண் கட்டிப்போட(?!) முடியாத அச்சத்தைக் கணவனுக்குத் தருகின்றவள் ஆகிறாள். தனதான அவளதுடல் தனக்கு விசுவாசமாய் உள்ளதென்பதைக் நிரூபிக்கும் முகமாக உறவு கருவடைதலில் முடியாதபோது, தானில்லாதபோது அல்லது தனக்கு தெரியாமல் அவள் வேறு ஆண்களுடன் உறவு வைத்துக்கொண்டால் அதை எப்படியறிவது? இக்குழப்பம் கிடந்து குழப்புகிறது. எத்திப் பிழைக்கும் படுகள்ளனான கணவன், வெவ்வேறு ஊர்களில் வெவ்வேறு உறவுகளில் திளைத்து திரிகின்றபோதும் அவனது மனைவியான இருளி அவனால் தனது தகப்பனை இழந்து, சுகதுக்கங்களை இழந்து தேய்கிறாள். அவளை அண்டி அவனே பிழைக்கிறபோதும் அவள்தான் பிழைப்பதாகவும் வசைசொல் கேட்டே வாழ்கிறாள். அவனுக்குப் பிறகும் இலகுவில் அவளை எதுக்கும் தட்டிப் பார்க்கலாம் என்றுதான் ஆண்கள் யோசிக்கிறார்கள். அவள் கர்ப்பம் தரிக்க வாய்ப்பில்லை என்பதால் கூடுதல் வசதி என்பதாலும். தன்னில் எந்தத் தவறுகளும் அற்ற ஒரு வெகுளியுமான அவள் வசதியாய் அவ்வையைப் போல சீக்கிரம் கிழவியும் ஆகிவிடுகிறார் (ஆக்கப்படுகிறார்?). ஈற்றில் ஏமாற்றியும் பிற பெண் நாடியுமே வாழ்ந்த அவரது கணவரின் மகளைவேறு தனதென வளர்க்கிறார். அவர் மட்டுமல்ல அவரது மகளும்கூட பாலியல் இன்பத்தை தாமே விரும்பி அடைவதுக்குப் பதிலாக, அது ஆண்களது காமத்துக்குப் பலியாகிற, அவர்கள் அத்துமீறப்படுகிற செயலாக மட்டுமே அமைந்துவிடுகிறது. அதை அப் பெண்கள் முன்னெடுத்துப் பெறுகின்றதாகச் சமூகம் அமைந்தில்லை.
2.
மாதவிடாய் இன்மையைப் (Amenorrhea) பொறுத்தவரையில் – 15 வயதிற்குள் – பூப்படையாத பெண் என்கிற அடிப்படையில் – எனில் பிறகு அடையலாம், அதனால் அவர்களுடன் அல்லது அவர்கள் உடலுறவு வைத்துக் கொண்டால் அவர்கள் கரு உருவாக முடியாதவர்கள் என்பதல்ல என்பதை ஒட்டிய – கர்ப்பம், கர்ப்பமடைதல் என்பதைச் சுற்றியே தகவல் களஞ்சியங்களில் தகவல்கள் இன்னும் பகிரப்படுகின்றன. அல்லது மாதவிடாய் நிற்கின்ற காலத்தைச் சேர்ந்த பெண் எதிர்கொள்ளும் மாதவிடாம் இன்மை (மாதவிடாய் நிறுத்தம்/menopause) குறித்தது, கர்ப்பமடைந்த பிறகான மாதவிடாய் இன்மை குறித்ததாய் இருக்கின்றன. வேறு தகவல்களைப் பொறுத்தவரையில் மாதவிலக்கே வாழ்நாளில் காணாத ஒருவரின் பாலுணர்வு (உள்ளதா) என்பது தொடர்பில் எதுவுமில்லை. அதனால்தான் இருளியின் மீது வன்முறையைச் சொற்களால், உடலால் ஏற்படுத்த முயன்றவர்களுக்கு வாய்த்திருந்த காமத்தின் தெரிவுகள்கூட இருளிக்கு இந்நாவலில் இல்லை. மாதவிடாய் இன்மை காமம் இன்மைக்குச் சமமென எங்கும் தரவுகளில்லை. ஆதலால் இது 60 வயதுக்குப் பின்னும் இருக்கக்கூடிய (ஆண் புனைவுகளில் இல்லாத) பெண்ணின் காமத்தை போலவே இல்லாத ஒன்றாக (இருந்தும் இல்லாத ஒன்றாக) இருக்கிறது.
சமூகத்தில் பேணப்படும் அசமத்துவங்கள் பிற்போக்கு அரசியல்கள் ஏற்படுத்தும் சமநிலையற்ற சமூகங்கள் எமது புறச்சூழலில் எவ்வாறு அனர்த்தங்களை நிகழ்த்துகின்றனவோ அவ்வாறே மனித உடலும் இயங்குகின்றது. இயற்கையைப்போலவே உடலியக்கத்துக்கு ஹோர்மோன்களது சமநிலை மிக முக்கியம். பல்வேறு சுரப்பிகள் இச் சமநிலையப் பேண இயங்குகின்றன. சுரப்பிகளது சமநிலை குலைகிறபோது அது உடலைப் பாதிக்கின்றது. ஆண்களைப் போலல்லாது ருதுவடைதல், மாதாந்தக் குருதி, கர்ப்பம் ததரித்தல், பிள்ளைப்பேறு என பெண்ணுடல் பல்வேறு மாற்றங்களுக்கு உட்படுவதால் சமநிலையை பேணுகிற சுரப்பிகள் சரியாய் இயங்கமறுக்கிறபோது உடல், உளபாதிப்புகளை அடைகிறவர்களாக இருக்கிறார்கள்.
இனப்பெருக்க உறுப்புகளிலுள்ள சிக்கல்களோ ஹோர்மோன் சமநிலையைப் பேணும் சுரப்பிகளில் ஏற்படக்கூடிய சிக்கல்களோ கூட இந்நிலைமக்கு வழிவகுக்கலாம். கர்ப்பப்பை வளர்ச்சிக் குறைபாடும் அதுசார்ந்த காரணங்களினாலும் நடக்கலாம். இவற்றில் ஏதேனுமொன்று காரணத்தால் நிகழக்கூடிய மாதவிடாய் இன்மை இருளிக்கு வாய்த்திருக்கலாம்.. உரிய மருத்துவ உதவிகள் கிடைக்கிறபோது சரியாகக் கூடியதாகவும் இருந்திருக்கலாம். என்றாலும் பெண் உடல்சார் அறிவு இன்னமும் மருத்துவ உலகில் பால்வாதக் கண்ணோட்டத்தில் அமைந்திருப்பதால் அவர்களது உடலின் பிரச்சினைகள் அசட்டை செய்யப்படுவதும் வாழ்நாள் பூராவும் அப்பிரச்சினைகளுடனே இருந்து மடிவதும் யதார்த்தமாகின்றது. இருளியைப் பொறுத்தவரை அவளது யதார்த்தம் எவ்வித கவித்துவ நீதியையும் கொண்டிராததாகவே நாவலில் அமைந்திருக்கின்றது.
00
Posted on: December 26, 2021, by : admin