Remembering Nawal el Saadawi
Writing about Truths in the World that Lies
நவால் எல்-சாதாவி: பொய்களைப் பரப்புகிற உலகத்தில்
உண்மைகளை எழுதுதல்
Solidarity between women can be a powerful force of change and can influence future development in ways favourable not only to women but also to men. – Nawal El Saadawi [October 1931 – March 2021]
இலட்சியப் போராட்டங்களில் ஈடுபட்ட பெருவாரியானவர்களது மரணக் குறிப்புகள் கட்டாயம் அவர்தம் இளமைக்காலத்தின் சமூக பங்களிப்புகளையே மைய்யங் கொண்டிருக்கும். மூத்த தலைமுறையினர் ‘எங்கட காலத்தில’ என தாம் இளைஞர்களாய் இருந்த ஒரு காலத்தின் கதைகளையே கூறிக் கேட்கலாம். இதன்படிக்கு, இன்று அவர்களுடயதாய் அல்லாது போயிற்றா அல்லது அவர்களே தங்களை இன்றைக்கான வேலைத்திட்டங்களிலிருந்து விலக்கி தமக்குத் தாமே பதிவிஓய்வு பெற்றுக்கொண்டனரா என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது. ஆனால் அவர்கள் வேறொரு காலத்தின் நாயகர்களாய் வலம் வருவார்கள். சர்வதேச கவனிப்பைப் பெற்ற எகிப்தின் பன்முக ஆளுமையான நவால் எல் சாதாவியைப்பொறுத்தவரை அவர் வாழ்ந்த காலம் முழுவதும் அவரதாகவே இருந்தது. அவர் தனது 20களில் எவ்வாறு சமூக மாற்றத்திற்காக உழைத்தாரோ அதேபோல 80களிலும் தனதுழைப்பை சமூக மாற்றத்திற்காகக் கொடுத்துச் சென்றவர்.
1931இல் எகிப்தில் Kafr Tahla எனும் சிறுகிராமத்தில் 9 பிள்ளைகளில் இரண்டாவதாக பிறந்த சாதாவி ஓர் எழுத்தாளர்; பெண்ணிய செயற்பாட்டாளர்; சமூகநீதிக்கான போராட்டங்களின் ஒருங்கிணைப்பாளர். நாவல்கள், சுயசரிதங்கள், நாடகங்கள், அபுனைவுகள், சிறுகதைகள் என அறுபதுக்கும் மேற்பட்ட இவரது நூல்கள் நாற்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்ப்பாகியுள்ளன. உலகின் பல்வேறு பல்கலைக்கழங்களில் கௌரவ கலாநிதிப்பட்டங்கள், North-South Prize (2004, Council of Europe) Inana International Prize (2005, Belgium), Sean MacBride Peace Prize (2010, International Peace Bureau) போன்ற சர்வதேச விருதுகள், பிரதமபேச்சாளராக பல நாடுகளிலிருந்தும் அழைப்புகள் – இவை அவரது இறுதிவருடங்கள் வரை தொடர்ந்தவை. அரபு உலகில் நவீன பெண்ணிய இயக்கத்தை முன்னெடுத்த முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுபவர்; ஐரோப்பிய மைய சிந்தனையில் இருந்து “எகிப்தின் சிமோன் த பொவ்வார்” எனவும் அழைக்கப்பட்டார்.
ஒரு மருத்துவரும் மனநலநிபுணருமான இவர், தொடர்ந்தும் பல பேசாப்பொருள்களை தனது புனைவுகளில் உரையாடல்களில் உரைகளில் பேசியவர். கொலைக்குற்றத்தின்பேரில் மரணதண்டனைக்காகக் காத்திருக்கும் பாலியல் தொழிலாளி ஒருவரது கதையைக் கூறுகிற “சூனியப்புள்ளியில் பெண்” என்கிற பிரபலமான நாவல் பலமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது (தமிழில்: லதா ராமகிருஷ்ணன், உன்னதம் வெளியீடு, 2008). இந் நாவலில் ஒரு பாலியல் தொழிலாளியின் கதையைக் கூறுகிற அவர் அதூடாக எகிப்தில் (எங்குமே) எளிதில் பேசப்படாத பாலியல் தொழில் தொடர்பான விவாதங்களையும் எழுப்பினார். அவரது சக்திவாய்ந்த எழுத்து நசீர் காலத்துக்குப் பின் வந்த இரண்டு சர்வாதிகாரிகளையும் பயமின்றி விமர்சித்தது. சடாற்றினால் (Muhamed anwar el sadat (1970 – 1981)) ஆரம்பித்து வைக்கப்பட்ட நியோ லிபரல் கொள்கைகள், எகிப்தின் பொருளாதார, சமூக, பண்பாட்டு தளங்களில் எவ்வாறான விளைவுகளை ஏற்படுத்தின என்பதை அவர் தொடர்ந்தும் விமர்சித்தும் எதிர்த்தும் எழுதினார். அடுத்து வந்த நீண்ட சர்வாதிகார ஆட்சியான முபாரக்கின் (Honi mubarak (1981 – 2011) காலத்திலும் அவர் தீவிர விமர்சகராகவும் எதிர்ப்பாளராகவும் தனது வாழ்வை சமரமற்று வாழ்ந்தார்.
அத்துடன், பெருவாரியான ஆபிரிக்க மற்றும் மத்தியகிழக்கு நாடுகளில் நடைமுறையிலுள்ள சிறுவயது பெண் பிறப்புறுப்புச் சிதைப்பு (Female genital mutilation (FGM)), பாகுபாடான குடும்பச் சட்டங்கள் போன்றவை பிரதானமாக அவரால் பேசப்பட்டன. மூன்றாம் உலகத்தைச்சேர்ந்த பெண்கள் FGM உள்ளிட்ட தாம் எதிர்கொள் ஒடுக்குமுறைகளைப் பேசுகிறபோது அல்லது ஒரு கறுப்பின பெண் தமது சமூகத்திலுள்ள பெண் ஒடுக்குமுறையைப் பேசுகிறபோது மேற்குலகால் அது உள்வாங்கப்பட்டு “உங்களை பீடித்திருக்கிற காட்டுமிராண்டு கலாச்சாரத்திலிருந்து உங்களை நாம் விடுவிக்க வருகிறோம்” என திருவாய் மலர்வதற்கும் – குறிப்பாக அரபு நாடுகளுக்கு எதிரான வேலைத்திட்டங்களைக் கொண்டிருக்கிறவர்களுக்கு – வாகாகப் போய்விடும் வாய்ப்பு எப்போதும் இருந்துகொண்டேயிருப்பதால் அதற்கான பதிலையும் சதாவி பல சந்தர்ப்பங்களில் தந்திருக்கிறார். மற்றவர்கள் பாவித்துவிடுவார்கள் என்றபடியால் எங்களுடைய தவறுகளை பொதுவெளியில் பேசக் கூடாது போன்ற வாதம், ஈழ அரசியலிலும் விமர்சனங்கள் வைக்கப்படுகிறபோது தொடர்ந்தும் சொல்லப்பட்டுவந்த ஒன்றே. மற்றவர்களுக்குப் பயந்து விமர்சனங்களை வைக்காதுபோனால் நாம் ஒடுக்குமுறைகளை, குற்றங்களை, தவறுகளை இழைப்பவர்களுக்கு பலம் கொடுத்தவர்களாய் ஆவோம் என்பதை வசதியாக மறந்துவிடுவதும் இப்போக்கினை வரிப்பவர்களுக்கு இலகுவாக இருக்கும். அதற்கான பதிலாக சதாவி “(இவற்றை பேசாதிருத்தல் முடியாது). ஒடுக்குமுறைகளின் பாதிப்புகளை உணர்ந்த பெண்ணியர்கள் அதன் ஆபத்துகனைப் பொறுத்தவரை (கிழக்கோ மேற்கோ) நாம் அனைவரும் ஒரே படகில் இருக்கிறோம் என்பதையும், பெண்கள் மீதான ஒடுக்குமுறை உலகளாவியது என்பதையும் உணர்வார்கள்” என்று கூறினார்.
சதாவியை ஒத்த பெண்ணியவாதிகளால் விமர்சிக்கப்பட்ட முக்காடு அணிதல் போன்ற விடயங்களை இன்று – எங்கும் பரவும் முஸ்லிம் மக்களுக்கெதிரான வெறுப்புக்கு அது துணை போகாமல் இருக்க வேண்டுமானால் – ஒற்றைப்படையாக அன்றி அவற்றின் பின்னணியோடுதான் பார்க்கவும் விவாதிக்கவும் முடியும். இன்று முஸ்லிம் சனத்தொகையினர் குடிபெயர்ந்தள்ள நாடுகளில் முக்காடு அணிதல் என்பது எதிர்ப்பு சின்னமாகவும் வேறொரு வடிவம் எடுத்துள்ளது. ஐரோப்பிய நாடுகளிலும், கனடாவில் கியுபெக் மாநிலத்தில் போடப்பட்ட அதற்கான தடை போன்ற நிகழ்வுகளின்மீதான கவனக்குவிப்பின்றி அவற்றுக்கு வெளியில் இருந்து அது தொடர்பாக நாம் பேச முடியாது. முஸ்லிம் மக்கள் குடிபெயர்ந்துள்ள இடங்களிலே அரசின் இத்தடைச்செயற்பாடுகள் எதிர்ப்புக்குள்ளாகிறபோது, அவர்கள் தலைமுறைகளாய் பிறந்து வளர்ந்து வாழ்ந்துவருகிற அவர்களதுமான இந்தியா போன்ற நாடுகளிலோ தீவிரமாக முஸ்லிம்களின் மத கலாச்சார அடையாளங்கள் தாக்கப்படுவதை தடைசெய்யப்படுவதை காண்கிறோம். ஒரு நாட்டில் காலம்காலமாக நிலைகொண்டுள்ள இனங்களில் ஒன்றை அவ்வாறு தனிமைப்படுத்துவதும் அந்த நிலத்தைச் சேர்ந்தவரல்லர் என ‘அந்நியராக்குவதும்’ அத்தகைய ஒடுக்குமுறைகளை எதிர்கொண்ட (ஒடுக்குமுறைகளின் எந்த வடிவத்தையும் எதிர்க்கிற) எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாத/கூடாத ஒன்றே.
சதாவியின் தலைமுறையினரைப் பொறுத்தவரையில், தனது இனத்தில் – ஏனைய இனங்களைப் போலவே – குறிப்பிட்ட ஆடைக் கலாச்சாரத்தை பெண்ணிடம் மட்டும் எதிர்பார்க்கப்பட்டபோது அதை தொடர்ச்சியாக அவர் எதிர்த்து வந்தார். மேற்கத்தைய பெண்ணியத்துக்கோ கீழைத்தேயங்களை விடுதலை செய்ய வருகிற ஏகாதிபத்திய சிந்தனைகளுக்கோ அவர் தனது உண்மையை வளைத்துப் பேச விரும்பவில்லை. அத்துடன் மத அடிப்படைவாதமானது இஸ்லாத்தில் மாத்திரமன்றி சகல மதங்களிலும் பரவலாக உள்ளதுடன் பூதாகரமாய் வளர்ந்துவருகிறது என்பதை அவர் திடமாக நம்பினார். பெண் உடலை மூடச் சொல்வதையும் (மேற்கில்) உற்பத்தியாகும் உடைகளில் பெண்களிடம் எதிர்பார்க்கப்படும் ஆடைக்குறைப்பையும் ஒரே நாணயத்தின் (ஒரே மனநிலையின்) இரு பக்கங்களாகவே அவர் கண்டார். ஒரு பெண் கவர்ச்சிகரமான ஆடைகளைப் போடுவதோ முக்காடு போடுவதோ அவரவர் சுதந்திரம். இங்கு பிரச்சினை சுதந்திரம் குறித்த எமது கருத்தாக்கம்தான். ஆண்கள் முக்காடு போடவோ ஆடைக்குறைப்புக்கோ எவராலும் ஊக்குவிக்கப்படுவதில்லை; உடையை வைத்து அவர்களது குணநலன்கள் மதிப்பிடப்படுவதில்லை. இதனால்தான் எங்கு அது ஒடுக்குமுறையாக இருக்கிறதோ அதைப் பேசுவது முக்கியமானதாக இருக்கிறது. “என்னை விடுதலை செய்யமுன் உங்களை முதலில் விடுதலை செய்துகொள்ளுங்கள்! பிரச்சினையே இதுதான், எனக்கு பல – Gloria Steinem, Robin Morgan போன்ற –அமெரிக்க பெண்ணியவாதிகளுடன் இது குறித்து சண்டை வந்திருக்கிறது. நான் அவர்களுடன் இருந்தபோது பலரும் அவர்களது துணைவர்களால் ஒடுக்கப்படுவதை கண்கூடாகக் கண்டிருக்கிறேன். அவர்கள் தாங்கள் அவ்வாறு ஒடுக்கப்பட்டவாறு, எங்களை விடுதலை செய்ய வந்தார்கள்!” மேற்கத்தைய ரட்சகர்களை நோக்கி சதாவியோ திடமாக அவர்களது இரட்டை நிலைப்பாட்டின் முரணையே பேசினார். மேலும் அவர் உள்ளூர் மற்றும் சர்வதேச ஒருங்கிணைவிற்கே (global and local solidarity—she coined the term “glocal”) அழுத்தம் கொடுத்தார். அவர் குறிப்பிட்டது, மேற்கத்தைய பெண்ணிய செயற்பாட்டாளர்கள் தமது அரசாங்கங்களை எதிர்ப்பதூடாக ஏனைய நாட்டுப் பெண்களின் போராட்டத்தில் இணைய முடியும் என்பது. ஏனெனில் ‘தமது நலன்சார் நிகழ்ச்சிநிரல்களுடன் பிற நாடுகளை ஆக்கிரமிப்பதும் காலானியாக்குவதும் ஊடாக உங்களுடைய அரசாங்கங்கள்தான் எங்கள் வாழ்க்கையில்- தலையிடுகின்றன.’ அத்துடன் அவர் விடுதலை பெற்றுத் தருவது அல்லது ‘உதவுவது’ என்கிற சொற்களை விரும்பவில்லை. “யாரும் யாருக்கும் உதவ முடியாது. எகிப்தில் எங்களுக்கு யாரும் உதவி இருக்க முடியாது – நாங்கள் தனித்தே எமது புரட்சியைச் செய்தோம், நாங்களே எங்களுக்கு விடுதலை பெற்றுத் தந்தோம். தொண்டு (charity) அடிப்படையிலான உதவிகளில் எனக்கு நம்பிக்கை கிடையாது. நான் சரிசமமான கருத்து மற்றும் தகவல் பரிமாற்றம் என்பவற்றையே நம்புகிறேன்.”
அறிமுகம்
சதாவியை உருவாக்கிய பின்னணியைப் பார்த்தோமானால் அவரின் தந்தைவழி பாட்டி வாசிப்பறிவற்றவர், ஆனால் அவர்களது கிராமத்தில் பிரச்சினைகளை மற்றவர்கள் அவரிடத்தில் கொண்டுவருகிற அளவுக்குத் தலைமைத்துவப் பண்புகளை அவர் கொண்டிருந்தார். அவரது தாயார் 16 வயதில் திருமணமானபோதும் தனது அபிலாசைகளை இழக்காதவராக, தனது குறுகிய வட்டத்துக்குள்ளும் தான் நினைப்பதை செய்துகொண்டே இருந்தவராக இருந்திருக்கிறார். அவரது தகப்பனார் தனது நாட்டின் சர்வாதிகாரிகளை எதிர்த்ததோடு, பிரித்தானிய காலனியாக்கத்துக்கெதிராக போராடியவராகவும் இருந்திருக்கிறார். தகப்பனார் அவருக்கு சுயமரியாதையையும் கல்வி கற்றலையும் அனுமதித்தபோதும், சதாவி சிறுவயதிலிருந்தே தனைச் சூழவும் இருந்த ஆண்-பெண் பாகுபாடுகளை உணர்ந்ததோடு, அதையிட்டு கோபங்கொண்டவராகவும் இருந்தார். வளர வளர அதற்கெதிரான எதிர்ப்புணர்ச்சியும் அதிகரித்தது. எனினும் பல வகைகளில் தனது துணிச்சலும் எதிர்ப்புக்குணமும் தனது பாட்டி, தகப்பன், தாய் போன்றவர்களிடமிருந்தே வந்தது என்கிறார்.
பெண்களது பாலியல் உணர்வுகள், தெரிவுகள் தொடர்பில் இன்றுமே உலக சனத்தொகையில் தம்முடன் சரிபாதிக்கு இருக்கிற உயிரியாக அன்றி ‘வியித்திர ஜந்து’வாகவே கணிக்கப்படுகிற (இவை குறித்துப் பேசப்படுகிறபோது பாராட்டியோ தூற்றியோ திரிகின்ற)/ விமர்சிக்கப்படுகிற சூழலில், 1931இல் பிறந்த நவால் மிக எளிதாக 1950களில், அவரது இருபதுகளில் அவை பற்றி துணிச்சலாக எழுதியவராக இருக்கிறார். சுயவரலாற்றுத்தன்மைகள் நிறைந்த “பெண்வைத்தியரின் ஞாபகங்கள்” [1958, Memoirs of a Woman Doctor] என்கிற அவரது முதல் நாவலிலேயே தௌிவாக கல்வியில், திருமணத்தில், தமக்கான துணைத் தேர்வில் பெண்களது உரிமைகள், தேர்வு, மணமுறிவு, மறுமணம் பற்றியெல்லாம் பேசப்பட்டிருக்கிறது. ஆச்சரியத்துக்கு இடமின்றி அவர் அதன் அசல்பிரதியைப் பிரசுரத்துக்கு அனுப்பியபோது அந்நாவலின் பக்கங்களில் ஓர் இளம்பெண்ணினது பாலுணர்வு குறித்து பேசப்படுகிற பக்கங்கள் தணிக்கைக்குள்ளாகி காணாமல் பொய்விட்டன். தணிக்கைக்குப் பின் எஞ்சிய பகுதிகளுடன் பிரதி பிரசுரமானது. எமக்குக் வாசிக்கக்கிடைக்கிற ஜோய்ஸின் A Portrait of the Artist ஒத்த எண்ணற்ற ஆண்களது வயது வருதல் புனைவுகள் போலன்றி, பெண்களது அனுபவங்கள் அரிதாகவே கிடைக்கின்றன. சதாவியினது இப்பிரதியும் ஒரு பெண்ணினுடைய வயதுக்கு வருதல் (coming of age) அனுபவத்தினைக் கொண்ட பிரதி எனலாம்.
இன்றும் அவரது அந்த நாவலை வாசிக்கிற ஒருவர் அவரது அசாதாரண பயணத்தையும், வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் அவர் தனக்கு எவ்வளவு தூரம் உண்மையாக இருந்திருக்கிறார் என்பதையும் கண்டுணர முடியும். தன்வரலாற்று வடிவத்தில் அமைந்திருந்திருக்கிற போதும் அவர்முன் அன்றிருந்த (இன்றுமிருக்கின்ற) அதி சக்திவாய்ந்த விடயங்களான வர்க்கம், பாலினம் சார் சிக்கல்களை நூல் நுட்பமாகத் தொட்டுச் சென்றிருந்தது. எகிப்தில் மட்டுமல்லாது இன்றும் உலகளாவிய பிரச்சினைகளாக இருக்கிற பாலின பாகுபாடு மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகள் பற்றிய சுருக்கமான சித்தரிப்பை அந்நாவல் கொண்டிருக்கிறது. ஒரு வைத்தியரான கதைசொல்லியின் குறுகியகால திருமணம், அதன் முறிவு, மன ஓட்டங்கள், ஆத்மார்த்தமான துணைக்கான ஏக்கம், தேடல், கண்டடைதல் என கதை பயணிக்கிறது. இறுதியில் விருந்தொன்றில் தற்செயலாகக் கண்டடைந்த துணையுடன் ஒரு வீட்டிற்கு நோயாளியைப் பார்க்க அவர் ஒரு வருகை-வைத்தியராக போகிறார். அங்கு நோயால் பீடிக்கப்பட்ட ஒரு வறிய குடும்பத்தவரிடம் நோய் குறித்த நிலவரங்களைக்கூறிய பிற்பாடு, அவர் விடைபெறும்போது நோயால்பீடிக்கப்பட்ட மெலிந்த வறிய கரங்கள் அவரிடம் கட்டணமாய் ஒரு நாணயத்தை நீட்டுகின்றன. அந்தக் கணத்தில் அவர் முதன்முதலாக தன் வாழ்நாளில் தான் எதிர்கொண்ட பாரபட்சங்களை எல்லாம் மீறி அதிர்ந்து வெட்கித்துப்போய் நிற்கிறார். இவ்வளவு நாளும் பணம் வசூலிக்கிறபோது உறுத்தாது, அதுவே யதார்த்தம் என பின்தொடர்ந்துகொண்டிருந்த மனம், அக்கணத்தில் மருத்துவத்தின் பாகுபாட்டை அவரது முகத்தில் அறைகிறது. இன்னொருவரின் பிரசன்னத்தில் அது நிகழ்ந்ததாலோ என்னவோ அவரது நிர்வாணத்தை அவர் தரிசித்தவராய் அக்கணத்தில் ஸ்தம்பித்துபோய் நின்று விடுகிறார். இத்தனைகாலமும் இந்த வறிய மனிதர்களிடம் பணம் வசூலிப்பது தொடர்பில் ஏன் ஒன்றும் தோன்றாதிருந்தது? ஒரு பெண்ணாகக் கண்ட பாகுபாடுகள் தொடர்பில் விசனமுற்றிருந்த நான் பொதுச்சேவையாக அனைவருக்கும் இலவசமாக இருக்கவேண்டிய மருத்துவம் விற்கப்படுவது தொடர்பில் கேள்வியற்றவளாய், இதோ இவர்கள் வறுமையில் தோய்ந்த ஒளியற்ற கண்களுடன் என்னிடம் இந்த நாணயத்தை நீட்டுகிறபோது இதுகாலும் அதை வேண்டிக்கொண்டு நகர்ந்தவளாய் எப்படி இருந்தேன்? இவ்வாறு அவர் ஞானம்பெறுவதே கதையின் உச்சமாக இருக்கும்.
பல வகைகளில் சாதாவியின் முதல் குறுநாவலே அவர் வாழப்போகின்ற வாழ்வின் மையப்புள்ளிகளை சுட்டி விட்டது என்றே தோன்றுகிறது. குறுநாவலில் நாயகி எவ்வாறு தனிப்பட்ட ஆத்மார்த்தமான உறவைத் தேடுவதையும் தான் தேடியது அப்படியானதாக அமையாதபோது விலகுவதையும் தனது உரிமை என உணர்ந்தாரோ அதேயளவு ஓர்மம் பொதுவாழ்க்கையிலும் அவருக்கிருந்தது. சடாற் போன்ற அவரது காலத்தின் சர்வாதிகாரிகளுக்கு முன்னால் தைரியமாக பேசக்கூடியவராகவும் பல புரட்சிகர போராட்டங்களின் ஒருங்கிணைப்பாளருமான அவர், அவரது வாழ்நாளில் எகிப்தின் ஏனைய சர்வாதிகார ஆட்சிகளை எதிர்த்து அதற்காய் சிறை சென்றவராகவும் இருந்தார். அத்துடன் தனிப்பட்ட வாழ்க்கையில் 80களிலும் தனது திருமணத்தை ரத்துச் செய்ய தயங்காதவராகவும் இருந்தார். ‘அவர் உண்மையற்றவராக இருந்தார். அதனால் அவரை விவாகரத்து செய்கிறேன்’ என 80 வயதுக்குப் பிறகு தமிழில் யாரும் சொன்னால் சிரிப்பார்கள். ‘எங்கட பண்பாடு அப்படியல்ல’ என அடிக்கடி தங்களை சொறிந்துகொள்கிற எமது சமூகத்தின் உயர் புரிதலே ‘சாகப்போகிற வயதில இதெல்லாம் தேவையா” “இவ்வளவு காலம் வாழ்ந்தாச்சு. இனியென்ன இருக்கப்போறது கொஞ்சக் காலம்தானே.. இப்பிடியே இருந்து சாவம்” என்பதாகவே இருக்கும்.
காதலித்து ஒரு துணையைத் தேருவது என்பது மறுக்கப்பட்டிருக்கிற காலத்தில் வாழ்ந்த ஒருவருக்கு காதலித்தவரை திருமணம் செய்வதற்கும் அவருடன் வாழ்வதற்கும் அக்காலத்தில் பெரும் பிரயத்தனப்பட வேண்டியிருந்தது. சதாவியை ஒத்த புரட்சிகர இயக்கங்களில் இருந்தவர்கள் அல்லது புரட்சிகர சிந்தனை முறைமையை வரித்துக்கொண்டவர்களுக்கும் தமக்கான காதல் துணையைத் தாமே தேடிக்கொள்வதும் அவர்களை மணமுடிப்பதும் என்பது பெரிய புரட்சிகர செயற்பாடாக இருந்தது. ஏனெனில் காதலோ சுயாதீனமான துணைத் தேர்வோ குறிப்பாகப் பெண்களுக்கு அன்று அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை (இதொன்றும் நூற்றாண்டுக்கு முந்தைய யதார்த்தமன்று, இன்றும் சாதியரீதியாக ஒடுக்கப்பட்டவர்களது நிலையும் இதுவே என்பதையும் நினைவுபடுத்திக்கொள்ளலாம்.)
காதல் மற்றும் திருமணங்கள்
சதாவி மூன்றுமுறை விவாகரத்து செய்துகொண்டவர். சதாவியின் காலத்தில் மட்டுமல்ல இன்றும் இது ஒரு பெண்குறித்து – சமயத்தில் ஆண்கள் குறித்தும் கூட- எங்கும் அசாதாரணமாகவே பார்க்கப்படக்கூடியது. திருமணத்துக்கு வெளியிலான உறவுகள் எக்காலத்திலும் இருந்திருக்கின்றன. அவற்றை அவ்வாறே வைத்தவண்ணம், நேர்மையற்று திருமணத்துள் இருப்பது சாதாரண விடயமாகப் பார்க்கப்படும். மாறாக, மறைத்து, இன்னொருவரை ஏமாற்றி வாழ்வதை விரும்பாமல், தமக்கு நேர்மையாக வாழ விரும்புகிறவர்கள் எப்போதும் சமூகத்தின் நெருக்கடிகளுக்கு உள்ளாகுவது மிகச் சாதாரணம்.
சதாவி தனது திருமண உறவுகளைப் பற்றி இவ்வாறு பகிர்கிறார்:
“எனது முதல் கணவர் ஒரு சிறந்த மனிதர், மருத்துவக் கல்லூரியில் எனது சக ஊழியர். அவர் அற்புதமான மனிதர், என் மகளின் தந்தை. அவர் ஆங்கிலேயர்களுடன் போரிட சூயஸ் நகருக்குச் சென்றதால், நான் அவரைத் திருமணம் செய்து கொள்வதை என் தந்தை விரும்பவில்லை. ஆனால் பின்னர் [சூயஸுக்குப் பிறகு] கொரில்லா போராளிகள் காட்டிக் கொடுக்கப்பட்டனர், அவர்களில் பலர் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலமைகள் அவரை மனம் உடையச் செய்தன. அவர் போதைக்கு அடிமையானார். நான் அவரை திருமணம் செய்து கொண்டால், அவர் தனது போதைப் பழக்கத்தை நிறுத்தலாம் என்று என்னிடம் கூறப்பட்டது, ஆனால் அவர் அதைச் செய்யவில்லை. அவர் என்னை கொல்ல முயன்றார், அதனால் நான் திருமணத்திலிருந்து வெளியேறிவிட்டேன்.”
அதற்கடுத்த திருமண முறிவு ஒரு கட்டிறுக்கமான ஆணாதிக்க சிந்தனைகளை உடைய ஒருவருடனும், அதன் பிறகு “எனது மூன்றாவது கணவர் [Sherif Hetata], எனது மகனின் தந்தை, மிகவும் சுதந்திரமான மனிதர், முன்னர் சிறையில் அடைக்கப்பட்ட ஒரு மார்க்சிஸ்ட். நான் அவருடன் 43 ஆண்டு காலம் வாழ்ந்தேன். அப்போதெல்லாம் நான் எல்லோரிடமும் சொன்னேன்: பூமியில் உள்ள ஒரே ஒரு ஆண் பெண்ணியவாதி இவர்தான் என்று. பின்னர் நான் அவரையும் விவாகரத்து செய்ய வேண்டி வந்தது. அவர் ஒரு பொய்யர். வேறு பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தார். ஓ! இந்த ஆணாதிக்க சமூகத்தில் மனிதர்கள் அனைவரும் சிக்கலானவர்கள்தான். அவர் பாலின சமத்துவம் பற்றி புத்தகங்கள் எழுதினார், பின்னர் தனது மனைவிக்கு நேர்மையற்றவராக இருந்தார்.”
ஷெரிப் ஹடாடா, A Daughter of Isis (1999), Walking Through Fire (2002), My Life, Part III (2001) போன்ற சதாவியின் தன் வரலாற்று நூல்களின் மொழிபெயர்ப்பாளர், மற்றும் யனவரி 2011 எகிப்து புரட்சி உட்பட பல புரட்சிகர முன்னெடுப்புகளில் சதாவியுடன் ஒன்றாக வலம்வந்தவர். அவர்கள் ‘இலட்சிய தம்பதிகள்’ எனும் பிம்பத்துடன் உறவுநீர்த்துப்போனபின்னும் அத்தகு பாவனைகளுடன் வாழும் பலரைப் போலும் தொடர்ந்தும் வாழ்ந்திருக்கலாம். சதாவி, தனது இளவயதில் எப்படி தனது பிள்ளைகளுக்காக என்று யாருடனும் வாழ – பொருந்தா உறவுகளில் நிலைக்க – நிர்ப்பந்திக்கப்படவில்லையோ, அல்லது அந்த நிர்ப்பந்தங்களை அவர் ஏற்றுக்கொள்ளவில்லையோ, அதுபோலவே தனது இறுதி காலங்களிலும் அவர் தனக்கு உண்மையுள்ளவராக நேர்மையீனத்தில் உடைந்தவற்றை திரும்பிப் பார்க்க விரும்பாதவராகவே இருந்திருக்கிறார். இதனால்தான் மேற்கத்தைய நேர்காணலொன்றில் “ஒரு விவாகரத்தான பெண்ணாக எகிப்தில் இருப்பது சிரமமானதா” என்கிற கேள்விக்கு அவரால் சிரித்தவாறு பதில்கூற முடிந்தது – “நீங்கள் ஒரு சாதாரண பெண்ணாக இருந்தால் சிரமம் தான். நானோ அசாதாரணமானவள். மக்கள் என்னிடம் எல்லாவற்றையும் எதிர்பார்க்கிறார்கள்!” (“If you are an ordinary woman, it is. But I’m very extraordinary. People expect everything of me”).
கல்வி, சமூகநீதிக்கான பயணம், மற்றும் அதற்கான விலைகளும்
மேலே குறிப்பிட்டது போல, சொந்த வாழ்வில் அவரது நிலைப்பாட்டைப்போலவே அவரது பொதுவாழ்வின் கொள்கைளும் இறுதிவரையான நம்பிக்கைகளும் சமூகத்தின் அனைத்து பாகுபாடுகளுக்கும் எதிரானதாவே இருந்தன. எப்படி அவரது முதல் நாவலில் ஒரு இளம் பெண் வைத்தியர் வறுமையின் முன் தன் தொழிலின் பாகுபாடுகள் தொடர்பில் வெட்கித்து நின்றாரோ சமத்துவமின்மைக்கு எதிரான பொறிகளும் அவரிடத்தில் அங்கே தோன்றிவிட்டன. சமூகநீதி இயக்கங்களுடனான இறுதிவரையான அவரது பயணம் அதையே நிரூபித்தது.
‘பள்ளியில் கற்கும் கல்வி மட்டும் ஆட்களுக்கு அறிவைத் தருவதில்லை. பகுதி பகுதியான அறிவை வேண்டுமானால் அது தரலாம். ஒரு முழுமையான, உண்மையான அறிவை அல்ல. என்னை எடுத்துக்கொண்டால் நான் மருத்துவ கல்லூரி பட்டதாரி. அரசியல் பொருளாதாரம் தொடர்பாக அறியாமை உடைய பல மாணவர்கள் அங்கிருக்கிறார்கள். அது ஒரு இதய அறுவைச் சிகிச்சை நிபுணராக இருக்கலாம், உளவியல் நிபுணராக இருக்கலாம். ஒவ்வொன்றையும் ஒவ்வொரு தனி நிபுணத்துவங்களாக பிரித்து யாருமே எல்லாவற்றிலும் சிறந்தவர்களாய் இல்லாமல் ஆக்கிவிட்டது (So one is only good at one thing). ENT நிபுணர் ஒருவருக்கு இதயத்தைப் பற்றி ஒன்றும் தெரியாது இருக்கலாம். இந்தக் கல்வி அமைப்பில் நீங்கள் நல்ல வைத்தியராக வரலாம் ஆனால் கூடவே பெண்கள்மீதான ஒடுக்குமுறை பற்றியோ, ஏழ்மை குறித்தோ அறியாதவராக, ஒரு தன்முனைப்பான நபராகவும் இருப்பீர்கள்’ இவ்வாறாகக் கல்வி அமைப்புத் தொடர்பான விமர்சனங்களைப் பதிவு செய்திருக்கிறார்.
மருத்துவ கல்லூரியில் அவரது ஆரம்ப காலங்களில் ஆண் சடலங்களை பரிசோதனை செய்கிற ஆய்வு கூடங்களில் ஒரு பெண்ணாக (ஆண் உடலைப்) பார்ப்பது தொடர்பான சங்கடங்கள் சக மாணவர்களால் அவரிடம் எதிர்பார்க்கப்பட்டன. அவ்வாறான சூழலிருந்து 1955இல் வைத்தியராக (பிரத்தியேகமாக மனநலமருத்துவத்தில் நிபுணத்துவத்துடன்) அவர் பணியைத் தொடங்கினார். 1963இல் அவர் director general for public health education ஆக நியமிக்கப்பட்டார். ஆனால் அவரது அரசியல் நடவடிக்கைகள் அப்போதே அவருக்கெதிராக வேலை செய்யத் தொடங்கிவிட்டன. அவர் பதிப்பித்த Women and Sex (1972) என்கிற தொடர் நூல்கள் பெண் உடல்களுக்கெதிரான நடந்துகொண்டிருந்த – ஒரு வைத்தியராய் அவர் எதிர்கொண்ட – வன்முறைகளைப் பகிரங்கப்படுத்தின. அதில் பெண் உறுப்பு சிதைப்பு ( female circumcision – கிளிற்றோறிஸ் ஐ அகற்றும் சடங்கு) பற்றியதாக மட்டுமன்றி பெண்ணின் ‘கன்னித்தன்மையில்’ மையங்கொண்டுள்ள சமூகத்தின் கொடிய சடங்குகளை பற்றியும் அவற்றில் பேசப்பட்டிருந்தது. குழந்தைகளது உறுப்பினை circumcision செய்கிற அதே மருத்துவச்சிகளே (midwives) திருமண இரவில் பெண்ணின் கன்னித்திரையின் (hymen) இருத்தலை உறுதிசெய்கிறவர்களாகவும் இருந்தார்கள்.சதாவி பணியாற்றிய கிராமத்தில் அவர்களது கன்னித்தன்மை கேள்விக்குள்ளாக்கப்பட்டு, திருமணத்துக்குமுன் அதை இழந்துவிட்டார்கள் என குற்றஞ்சாட்டப்பட்டு, “ஆணவக் கொலைகளுக்கு” ஆளாகவிருந்த பெண்களை அவரிடம் பரிசோதனைக்கு அழைத்து வந்தார்கள். அவர்களைப் பரிசோதனை செய்தபோது அவர்கள் இன்னமும் கன்னிகள்தான் என்பதை சதாவி உணர்ந்ததுடன், அவர்கள் ஆண்மைகுறைவுகள்ள மற்றும் வேறு பெண்ணைப் பார்க்க விரும்பிய ஆண்களால் பலிஆடுகளாக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதையும் கண்டார். இதுபோன்ற அனுபவங்களே சீற்றத்துடன் அவரது நூலில் பதிவுசெய்யப்பட்டிருந்தன. இதனூடு பொதுமக்களை இந்தச் சடங்குகள் தொடர்பில் அறிவூட்டவும், அதற்கெதிராக விழிப்புணர்வு பெற்று அதை அடியோடு இல்லாமல் செய்யவும் அவரெடுத்த முயற்சி அது. பதிலாக, சதாவியின் நடவடிக்கைகள் மூர்க்கமானதாக எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், நூல் உடனடியாக தடை செய்யப்பட்டது. சுகாதார அமைச்சில் அவரது பதவியும் பறிக்கப்பட்டது. மூன்று வருடங்கள் முன்னர் அவர் நிறுவிய சுகாதார (al-Sihha / Health) சஞ்சிகையும் மூடப்பட்டது. இதற்கெல்லாம் பணியாத அவர், அரசுசாரா அமைப்புகளை தொடர்ந்தும் தனித்தோ தோழர்களுடன் இணைந்தோ நிறுவிக்கொண்டே இருந்தார். மிக முக்கியமானவை “மனதிலுள்ள திரையை அகற்றுதல்” (“lifting the veil from the mind”) என்கிற கோசத்துடன் அறியப்படுகிற அவர் நிறுவிய Arab Women’s Solidarity Association மற்றும் Arab Association for Human Rights ஆகிய அமைப்புகள் ஆகும்.
சதாவியைப் பொறுத்தவரை எல்லாமே ஒன்றுடன் ஒன்று தொடர்புடையனவாக (intersecting) இருந்தன. அவர் தனது பெண்ணிய முன்னெடுப்புகளையும் ஏனைய சமூக பாகுபாடுகளுக்கு எதிரான செயற்பாடுகளையும் வேறு வேறாகப் பார்க்கவில்லை. அவரைப் பொறுத்தவரையில் வீட்டு வன்முறைகள் என்பன தனியே அரசியல் மற்றும் பொருளாதார ஒடுக்குமுறையுடன் மட்டுமல்லாமல், வரலாறு மற்றும் மதத்தின் திரித்தல், இணங்க வைத்தல், மோசடிகள் ஆகியவற்றுடனும் தொடர்புடையது என்பதை அவர் அறிந்திருந்தார். வர்க்கம், ஆணாதிக்க சமூக அமைப்பு, காலனித்துவம் ஒன்றோடொன்று தொடர்புடைய ஒடுக்குமுறைகள் என்பதையே அவரது பெரும்பான்மையான செயற்பாடுகள் வெளிப்படுத்தின.
(ஆக்கிரமித்து/கையகப்படுத்தி வைத்திருக்கும்) அதிகாரங்களையோ வளங்களையோ அவற்றை வைத்திருக்கிற யாரும் விட்டுத்தர விரும்பர். “குடும்பங்களிலுள்ள ஆண்களுடனோ முதலாளித்துவத்துடனோ – இதுதான் எல்லோரதும் போராட்டம். இது அதிகாரம் தருகிற சக்தி சம்மந்தப்பட்டது. அதிகாரசக்திகளை நீங்கள் கட்டுரைகளாலோ சொற்களாலோ மாற்ற முடியாது. அவர்கள் தமது சொந்த தேர்வாக அதிகாரத்தை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். அது வீட்டிலிருக்கிற கணவனாக இருந்தாலும் சரி யாராக இருந்தாலும் சரி, அதிகாரத்தை அதிகாரத்தால் தான் அகற்ற முடியும். மக்கள் ஒருங்கிணைந்து வீதிக்கு வந்து தமது அதிகாரத்தை – சக்தியை – காட்டியதால் மட்டும்தான் முபாராக் ராஜினாமா செய்தார். வீதிக்கு வந்தவர்கள் சில நூறு பேர்தான் எனில் அவர் ஒருகாலும் போயிருக்க மாட்டார். ஆனால் 20 மில்லியன் மக்கள், முழு தேசமும், வீதிக்கு வந்தது. அவருக்கு வேறு தேர்வு இருக்கவில்லை. அதிகாரசக்திகளை நீங்கள் குறைந்த வலுவைக் கொண்டு அழிக்க முடியாது. அறிவும் ஐக்கியமும் (Knowledge and unity) மக்களின் கைகளில் பெரும் அதிகார சக்தியாகும்.”
சதாவி தனது விமர்சனத் தாக்குதல்களிலிருந்து யாரையும் விட்டு வைக்கவில்லை. அத்துடன் அதற்கு விலை கொடுக்கவும் தயாராக இருந்தார். அவரது நூல்கள் பலவும் தடை செய்யப்பட்டன, அவர் சிறைப்பிடிக்கப்பட்டார், வெளிநாடுகளில் புகலிடம் கோரினார் . பற்பல கொலை அச்சுறுத்தல்கள் அவருக்கிருந்தன – இஷ்லாமிய அடிப்படைவாதிகளின் கொலல்லப்படவேண்டியோர் பட்டியலிலும் இருந்தார். மதவிரோத குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்ற விசாரணைகளுக்கு ஒன்றுமாற்றி இன்னொன்று என ஏறி இறங்கினார். விசாரணைகள்அவரது கணவரையோ குடும்பத்தினரையோ கூட விட்டுவைக்கவில்லை. இவை எதனாலும் அவரது எதிர்ப்புக் குரலை நிறுத்த முடியவில்லை. ஆனால் அவரது பெயர் ‘மரண பட்டியல்’ ஒன்றில் சவுதி பத்திரிகை ஒன்றில் பிரசுரமானபோதும், ‘நவால் எல் சதாவி கொல்லப்பட வேண்டும்’ என்பது தொழுகை அழைப்பில் கூறப்பட்டபோதும், அவரது கணவரின் வேண்டுகோளுக்கிணங்க அவர் மேற்கத்தைய நாடுகளில் புகலிடம் கோரினார். அதன் பின் பல வருடங்கள் அனேகமாக அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளில் பல்கலைக்கழகங்களில் கற்பித்தவாறு, வாழ்ந்தார். மூன்று பகுதிகளாக வெளிவந்த அவரது சுயசரிதத்திலும் கற்பித்தல் மற்றும் விருந்தினர் உரைகளிலும் அவரெதிர்கொண்ட போராட்டங்களைப் பதிவு செய்திருக்கிறார்.
நாடு திரும்புதல்
அந்நிய நாடுகளில் தொடர்ந்து அவரால் தஞ்சமடைந்து வாழ முடியவில்லை. சதாவி 1996இல் நாடு திரும்பினார். அங்கு முபாரக் இன்னமும் எகிப்து ஒரு சர்வாதிகார ஆட்சி அல்ல என்று சொல்லிக்கொண்டிருந்தார். அத்துடன், “முபாரக், இது ஜனநாயக நாடு, தன்னை எதிர்க்கலாம் என்று காட்ட சிலபேருக்கு காசுகொடுத்து எதிர்க்க வைத்தார். அது வெறும் கண்துடைப்பு . ஆகவே 2004 வாக்கில்நான் அவரை எதிர்த்து நிக்க முடிவெடுத்தேன். நான் அறியப்பட்ட நபராக இருந்ததால் அரசாங்கம் அச்சமடைந்தது. நான் பொதுசந்திப்புகள் நடத்தி வந்த எனது கிராமத்துக்குப் பொலிஸை அனுப்பி ஒவ்வொரு வீடு வீடாகப் போய் அவர்களை அச்சுறுத்தினார்கள். உதாரணத்துக்கு நீங்கள் ஒரு ஆசிரியர் எனில் உங்கள் வேலை போகும், சிறையில் போடுபோம், என்றெல்லாம் அச்சுறுத்தலாகக் கூறப்பட்டது. அப்போதுதான் நான் தேர்தலை பகிஷ்கரிக்கப்போவதாக அறிவித்தேன்.”
“2009இல் நான் நினைத்ததைவிட வெகுசீக்கிரத்தில் மாற்றங்கள் வரும் என்கிற எண்ணம் எனக்கு வரத் தொடங்கியது. அப்போது வீடு எனது நூல்களை வாசிக்கிற இளைய தலைமுறையினரால் நிரம்பியது. தத்துவம், இலக்கியம், அரசியல் தொடர்பில் விவாதிக்க அவர்கள் தினமும் எனது வீட்டுக்கு வந்தார்கள். சிறு சிறு எதிர்ப்பு ஊர்வலங்கள் தொடங்கின. முதலில் முபாரக்கின் மகனிற்கு எதிராக – ஜனாதிபதி பதவியும் மன்னர் காலத்தில் போல முபாரக்குக்குப் பிறகு மகனுக்குப் போகலாம் என்பதால்- அது தொடங்கியது. சிறிது சிறிதாக புரட்சி குறித்த கருத்தாக்கம் முளைவிடத் தொடங்கியது. நாங்கள் Tahrir சதுக்கத்துக்கு நகர்ந்தோம்!”
2011 Egyptian revolution
சடாற்றின் காலம் தொட்டு எகிப்து முற்போக்கான மாற்றங்களற்றுப் பின்தங்கியிருந்தது. இதையே சதாவி ஒருமுறை “நாங்கள் நூற்றாண்டுகள் பின்தங்கி இருக்கிறோம்” எனக் குறிப்பிட்டார். சடாற்றின் அரசு இஸ்ரேல் மற்றும் அமெரிக்க பிரத்தானிய அணிகளுடன் கைகோர்த்து, அவர்களது நிகழ்ச்சிநிரல்களுக்கமைய இயங்குவதையே செய்துவந்தது. சொல்லப்போனால் விடுதலை அடைந்த பின்னும் பல வகைகளில் காலனித்துவத்தின் எச்சசொச்சங்களால் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கிற நாடாகவே எகிப்து இருந்திருக்கிறது.
ஊழல் மற்றும் பொருளாதார தேக்கத்திற்கு எதிராக ருனீசியாவில் தொடங்கி அரபு உலகை பாதித்த Arab Spring வந்தபோது – எகிப்தில் சதாவி இளைய தலைமுறையினருடன் எழுச்சியில் இணைந்தார். அவரை ஆதர்சமாக பார்த்த, அவரை வழிகாட்டும் சக்தியாக மதித்த பெண்கள் ஆண்கள் மாணவர்கள் அங்கு அவரைச் சூழ்ந்தார்கள். Tahrir சதுக்கத்தில் ஒரு மூத்தோளாக அவர் அவர்களுடன் முகாமிட்டு இருந்தார். புரட்சியின் திட்டமிடல்களில் அல்லது முன்ஆயத்தங்களில் அவரது பிரசன்னம் இன்றியமையாததாக இருந்தது. அந்த அனுபவங்கள் அவரது பிந்தைய நேர்காணல்களில் இவ்வாறு பதிவாகின:
“புரட்சியை நான் எதிர்பார்த்தேன். ஆனால் 20 மில்லியன் மக்கள் தெருவுக்கு வருவார்கள் என்பதை எதிர்பார்க்கவில்லை. எனது சிறுவயது முதலே இது பெருங் கனவாக இருந்தது. ஒருநாள் இல்லையென்றால் ஒருநாள் எகிப்து மக்கள் விழிப்படைந்து காலனித்துவத்துக்கும் அடிமைத்தனத்துக்கும் எதிராக எழுவார்கள், அதை நான் பார்க்கவேண்டும். சிறுவயது முதற்கொண்டு நான் பல எதிர்ப்பூர்வலங்களில் பங்குபற்றியவள். மருத்துவ கல்லூரியில் படிக்கிறபோது King Farouk இற்கு எதிராக பின்னர் பிரிட்டிஷ் காலனியாக்கத்துக்கு எதிராக, நசீருக்கு, பின்னர் (என்னை சிறைக்கு தள்ளிய) சடாற்றுக்கும் எதிராக, பின்னர் என்னை புகலிடத்துக்குத் தள்ளிய முபாராக்குக்கு எதிராகவும் நின்றிருக்கிறேன். நான் நிறுத்தவே இல்லை. அது ஒரு கனவு போல இருந்தது. 2011 யனவரி: அது (கடந்த காலத்தின்) சிறு சிறு புரட்சிகள் திரண்டு உருவானதாகும்.”
ஆனால் வழக்கம்போல புரட்சிக்குப் பின் பெண்கள் ஓரங்கட்டப்பட்டனர். “நாங்கள் கடும்கோபத்தில் இருந்தோம். புரட்சியின் ஒவ்வொரு படியிலும் நாங்கள் பங்கெடுத்திருந்தோம். ஆனால் அது முடிந்தபின் நாங்கள் முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டோம். அரசியலமைப்பு குழுக்கள் அனைத்தும் முதிய ஆண்களையே கொண்டிருந்தது, எனவே இளையோரும் கோபத்திலிருந்தனர். ஆனால் நாங்கள் எகிப்திய பெண்கள் யூனியனை ( Egyptian Women’s Union) மீண்டும் நிறுவி இரவு பகலாக ஒருங்கிணைத்து வருகிறோம். அரசியலமைப்பை மாற்றவென உருவாக்கப்பட்ட அனைத்துக் குழுக்களிலும் ஒவ்வொரு மட்டத்திலும் 35 சதவீத பெண்கள் பங்கேற்பைக் கோருகிறோம். அத்துடன் மதச்சார்பற்ற அரசியலமைப்பு, மதச்சார்பற்ற குடும்பக் குறியீடு மற்றும் சட்டத்தின் முன் முழு சமத்துவம் ஆகியவற்றையும் வேண்டுகிறோம். “
இப் புதிய அரசியல் ஒழுங்கு பாலினம் தொடர்பான விடயங்களில் எவ்வாறு பாதிக்கப்போகிறது என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். முதலாவதாக உங்களுக்கு பொருளாதார சுதந்திரம் தேவை. பொருளாதார சுதந்திரம் இருக்கிறபோது உங்களது துணைவர் உங்களைத் தவறாக நடத்தினால் நீங்கள் அவரை விவாகரத்து செய்யலாம். பிறகு இது ஒரு வைரஸ் போல மற்றப் பெண்களையும் தாக்கும். பின்னர் பெண்கள் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக ஒருங்கிணையவும் பேசவும் தொடங்குவார்கள். உங்களுக்கு ஒரு கூட்டு சக்தி தேவை. அதனால்தான் நாங்கள் எப்பொதும் ஒருங்கிணைத்தல்கள் செய்வதோடு, தொடர்ந்தும் கருத்துப் பரிமாற்றங்களில் ஈடுபடுகிறோம்.ஆனால் இதனால்தான் [எகிப்தின் முன்னாள் முதற்பெண்மணிகள்] Suzanne Mubarak and Jehane Sadat போன்றவர்கள் எகிப்திய பெண்கள் யூனியனை முன்பு தடை செய்தார்கள். ஒருங்கிணைதலுக்கு என்றொரு பெரும் பலம் இருக்கிறது.”
புரட்சியைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டியவையாக “நான் எதிர்பார்க்கின்றவை, யனவரி 2011 புரட்சியைத் தொடர்ந்து ரூனீசியா எவ்வாறு பெண்களுக்கும் சொத்தில் சமஉரிமை கொடுக்கும் சட்டமாற்றங்களை முன்னெடுத்ததோ அதேபோல பிற அரபு நாடுகளாலும் அது உள்வாங்கப்படவேண்டியது என்பதுடன், சமத்துவம் சொத்துரிமையில் மாத்திரமன்று அது வம்சாவழி (lineage), திருமணம், விவாகரத்து என்வற்றிலும் எதிரொலிக்க வேண்டும். மதம், பாலினம், வர்க்கம் அல்லது எதன் பேரிலும் – இருக்கவேண்டிய பாரபட்சமற்ற போக்கு விவாதங்களுக்கு அப்பாற்பட்டதாக ஆக்கப்படவேண்டும்” என்பனவே.
இவை நடக்கும் என்பது தொடர்பில், “எனக்கு இளையோரிடத்தில் முழு நம்பிக்கை இருக்கிறது. நான் அவர்களுடன்தானே இருந்தேன் Tahrir சதுக்கத்தில்? இன்றும் எனது வீட்டில் அவர்களுடன் எப்போதும் தொடர்ச்சியாக விவாதங்கள் செய்து வருகிறேன், அவர்களிடமிருந்து எப்போதும் கற்றுக்கொள்ள இருக்கிறது. வயதானவர்களான நாம் எப்போதும் இளையவர்களுக்கு ஒரே அறிவுரை கூறுபவர்களாக இல்லாமல், சமமான கருத்துப் பரிமாற்றங்களில் ஈடுபடுபவர்களாக இருக்க வேண்டும்” அதில்தான் வளர்ச்சி இருக்கிறது.
உமக்கு மரணமில்லை!
எல்லா மொழிகளிலும் தம் காலத்தை முந்திப் பேசியவர்களே இன்றும் பலவித புது சிந்தனைகளை விதைத்தவர்களாக நினைவுகொள்ளப்படுகிறார்கள். புலமைச்சூழலிலோ வெவ்வேறு துறைகளிலோ எங்கும் அவர்களை நாம் அடையாளங் காணலாம். அவர்களிடமிருந்து சாதாவி மாறுபடுகிற இடம் அவர் தனியே எழுத்தாளராக மட்டும் இருக்கவில்லை என்கிற ஒன்றுதான். அவர் வாழ்ந்த தனது 89 ஆவது வயதுவரை புரட்சிரமான இயக்கங்களுடன் தொடர்புகளிலிருந்தவர். அவரது வீடு மாணவர்கள் வந்து கலந்து பேசிக் கலையும் இடமாக இறுதிவரை இருந்திருக்கிறது.
இத்தகைய செழுமையான வாழ்வை துணிகரமாய் வாழ்ந்து மடிந்ததாலேயே மத்திய கிழக்கு மற்றும் அதற்கும் அப்பால், நாவல் எல் சாதாவி என்ற பெயர் அலட்சியம் செய்யமுடியாத ஒன்றாக ஒலிக்கிறது. அவரது வாழ்நாளிலும் அவர் இறந்த பிறகும் அவர் பல்வேறு வேறுபட்ட உணர்வுகளை ஒவ்வொருவரிடத்திலும் உருவாக்குகிற ஆளுமையாகவே இருக்கிறார். பலர் அவரை நேசிக்கிறார்கள், அவரால் ஆகர்சிக்கப்படுகிறார்கள், மரியாதை கொள்கிறார்கள், போற்றுகிறார்கள் (அவரது ஆதரவாளர்களால் எகிப்தில் Nawal El Saadawi forum என்கிற ஒரு விவாதத்தளமே அமைக்கப்பட்டிருக்கிறது. அதனூடாக கைரோ நகரிலும் பிற நகர்களிலும் தொடர்ச்சியாக அவரது நூல்கள் விரிவான விவாதத்துக்குள்ளாகின்றன.) அவரது கருத்துக்கள் தொடர்பிலும் அதிகாரத்தை வணங்காத அவரது எதிர்ப்புமனநிலையிலும் ஆத்திரமும் வெறுப்பும்கொள்ளத்தக்கோரும் எங்கும் உள்ளனர். சனாதனமான மத, வர்க்க நலன்களை கட்டிக்காப்பவராக அவர் ஒருபோதும் இல்லாததால் இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.
சதாவியை ஒத்த முற்பொக்கு ஆளுமைகளை வாசிக்கையில் – சமகாலத்தின் பிற்போக்குநிலைகளை கடக்கவியலாது அல்லது கடக்கத் தத்தளிக்கும் தலைமுறைகளுக்கு அது மலைப்பையே ஏற்படுத்த முடியும். அவர்களைப் பொறுத்தவரையில், 1930களில் பிறந்த ஒரு பெண் 1950களில் தனது சனாதனமாக சூழலில் இவ்வளவு எதிர்ப்புணர்வுடன் போர்மனதுடன் எவ்வாறு இருந்திருக்க முடியும் தொடர்ந்து இயங்கியிருக்க முடியும் என்பதே பெரும் ஆச்சரியம்தான். குறிப்பாக ஆண்-பெண் வேற்றுமைகளை அவரவர் சமூக பாத்திரங்களை தெளிவாக எழுதிவைத்திருக்கிற கடைப்பிடிக்கிற மத, சமூக கட்டுக்களைக் கொண்டிருந்த சூழலில் அவர் எவ்வாறு அதற்கெதிராய் நிற்கின்ற தனது மனதைரியத்தைப் பெற்றிருக்க முடியும், அதற்கு ஓய்வு தராது கடைசிவரை அதை கைக்கொண்டிருக்க முடியும்? ஆச்சரியமான வகையில் சதாவியின் பல கதைகளில் பெண் பாத்திரங்கள் இலட்சியப்பாத்திரங்களாக எல்லாம் இல்லை. அவர் ‘நினைக்கிற’ ‘கனவு காணுகிற’ ஒரு ‘இலட்சிய’ உலகத்தைப் பிரதிபலிக்கின்ற பாத்திரங்களாக இல்லை. அவர்கள் அக் காலத்திலையே வாழ்பவர்களாக அதற்கெதிராக அதன் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக நடப்பவர்களாக அவர்களும் அக் காலத்தின் யதார்த்தமாகவே அவரது கதைகளில் இருக்கிறார்கள். அவற்றை எழுதியவர் மத, அரசியல், சமூக அதிகாரங்களால் போடப்பட்ட சகல எல்லைகளையும் தினாவெட்டுடன் தயக்கமற்றுக் கடந்தவராகவும், அவர் தனது உரிமைகளை வேண்டுவதில் எவ்வித மன்னிப்புக்கோரலுமின்றி எடுத்துக்கொண்டவராகவும் இருந்தார், அந்த உண்மையே அவரது பிரதிகளிலும் காணக்கூடியதாக உள்ளது. ஒரு தசாப்தங்களுக்கு முன்னம் ராகூர் சதுக்கத்தில் நிகழ்ந்த பெரும் எழுச்சியைப்போல எகிப்து இனியும் மாற்றங்களுக்காய் கிளர்ந்தெழுகிற ஒவ்வொரு தருணங்களிலும் சதாவியை ஒத்தவர்களது வழிகாட்டலின் எதிரொலிகள் நிச்சயம் இருந்துகொண்டே இருக்கும்.
-பிரதீபாதி–
Posted on: April 19, 2022, by : admin