
1.
தொலைத்த இடங்களிற்கே
மீண்டும் திரும்புகிறேன்
தொலைவுற்றவளே
நீ ஒரு
வெட்கங்கெட்ட
கெட்டிக்காரி
ஒவ்வொரு தடவையும்
ஏதோ ஒன்றைத் தவறவிடுதலில்
நிபுணி
இன்பம் தருபவளே
பெருஞ்சுகம் கொடுப்பவளே
உன் ஆன்மாவைக் குத்திக்
குருதி கொள்பவனைப்
போற்றுபவள்
குறி கொள்ளத் தயங்காதவள்
கருஞ்சுழித்த உதடுகள் கொண்டு
கன்னம் குழிந்து போனவள்
மாய்மாலக்காரி என்றெல்லாம்
புகழடைந்தவள்
சிதைபவற்றைப்பொருட்படுத்தாதே
உடைவிலும் ஒளிரக் கற்றுக்கொள்
0
2.
உனதுமுதுகில்
ஒளிக்கோடுகளில்லை
என்னாயிற்று?
விடுமுறையின்
அறைக்கதவுகள்
உவகையுடன் கிறங்கின
ஒளிபிழந்து சீறும்
அலைப்படுகையிலொரு
சருகென ஆடிற்று என் ஆன்மா
கடலுற்றகரையிலொரு தெப்பம்
செய்வதறியாதது
திகட்டலில்லை
என்னை
ஆடையாய்ப் புனைகிறான்
கருத்த
தோள்களினடியில்
லயிப்புற்றவள் மீது
வானமிறங்கியது
நீலஞ்சொட்ட
0
3.
இருளில் தொலைந்து போகாதே
தீக்கங்குகள் உருகிடும்
திசைகளெல்லாம்
தேடினேன்
ரௌத்திரம் இரணத்தை
உயிர்ப்பிக்கிறது
மன்னிக்கப்படுவது
கசப்பை உமிழ்கிறது
ஒளியிழந்து
இருள்மேவும்பொழுதுகளில்
சிறு மின்மினியின்
இடையறாத முணுமுணுப்பாக
காரிருள் பிளந்து
ஒளிர்கிறது சிறு கீற்று.
0
மைதிலி
மாசி 2018
Posted on: June 29, 2020,
by :
admin